Tuesday, May 02, 2006

6. THE ALCHEMIST

புத்தகத்தை வெளியிட்டோர் : Harper Collins Publishers, New Delhi (இந்தியாவில்)
புத்தகம் வெளியான ஆண்டு : 1988 ( எந்த மொழி என்று தெரியவில்லை)
1993 (ஆங்கிலத்தில்....)
1998 (இந்தியாவில்)
புத்தகத்தின் விலை : 195 ரூபாய்கள்
--------------------------------------------------------------------------------
வெகு சில ஆங்கிலப் புத்தகங்களையே படித்த அனுபவமுள்ள நான், இந்தப் புத்தகத்தை விமர்சனம் செய்ய தகுதியானவன் என்று எனக்கு தோன்றவில்லை. என்றாலும் எனக்குப் பிடித்துப் போய்விட்ட இந்தப் புத்தகம், என் போன்ற ரசனை உள்ளவர்களுக்கும் பிடிக்கும் என்ற நம்பிக்கையில் புத்தகத்தைப் பற்றிச் சில கருத்துகளை மட்டும் எழுதுகிறேன்.

புத்தகத்தை எழுதியவர், Paulo Coelho. ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தவர் Alan R. Clarke.

Paulo Coelhoவைப் பற்றி....
-------------------------------------



















பிரேசிலில் வாழ்ந்து வருகிறார். தத்துவார்த்தமான கதைகளை எழுதி பெயர் பெற்றவர். இன்னும் தெரிந்துகொள்ள விரும்புபவர்கள் இங்கே செல்லவும்....
http://www.paulocoelho.com.

புத்தகத்தைப் பற்றி.....
-----------------------------
















இது ஒரு நாவல். எந்த காலத்திய கதை என்பது சொல்லப்படாத, தேவைப்படாத ஒன்று. கொஞ்சம் யதார்த்தத்தை மீறி, தத்துவங்களோடு பின்னிப்பிணைந்து செல்லும் கற்பனைக்கதை இது.

ஸ்பெயின் நாட்டில் வாழும் ஒரு ஆடு மேய்க்கும் சிறுவன், தன் கனவில் வந்த புதையலைத் தேடி எகிப்தில் இருக்கும் பிரமிடுகளுக்குச் செல்கிறான். இதுதான் கதையின் சுருக்கம். ஆனால் 176 பக்கங்களுக்கே நீளும் இந்தக் கதைக்குள் மனித வாழ்க்கையையே அலசி ஆராய்ந்து விடுகிறார் ஆசிரியர்.

ஒவ்வொரு பகுதியை முடிக்கும்போதும் எத்தனையோ கேள்விகள், எத்தனையோ பதில்கள், நமக்குள். விடை தெரிந்திராத பல கேள்விகளுக்கு விடைகள் கிடைக்கும் அதே வேளையில் பல புதிய கேள்விகளும் கருக்கொள்கின்றன.

தன் பயணத்தின்போது அந்தச் சிறுவன் சந்திக்கும் வித்தியாசமான மனிதர்கள் அவனைப் பல விதத்திலும் பாதிக்கிறார்கள், நம்மையும்தான். இடையில் வரும் மாயாஜாலம் போன்ற பகுதிகளைக் கொஞ்சம் பொறுத்துக்கொள்ளத்தான் வேண்டியிருக்கிறது.

இதைப் படித்த பிறகு பாதுகாப்பான, அமைதியான, ஆபத்துகளற்ற, சுவாரஸ்யங்களற்ற நம் வாழ்க்கை முறை மீது கோபமே ஏற்படுகிறது. நம் மீது திணிக்கப்பட்ட இந்த விஷயங்களிலிருந்து மீண்டு வருவது எந்த அளவுக்கு சாத்தியமோ தெரியவில்லை.

யதார்த்தத்தை மட்டுமே விரும்பும் வாசகர்களுக்கு இந்தப் புத்தகத்தில் அதிகமாக எதுவும் கிடைத்துவிடாது என்றும் சொல்லலாம். ஆனால், கொஞ்சம் கற்பனையை ஓரமாகத் தள்ளிவிட்டு உள்ளிருக்கும் விஷயங்களை மட்டும் பாருங்கள். இதிலிருந்து உங்களுக்குக் கிடைக்க நிறைய இருக்கிறது.

-சேரல்

1 comment:

Suka said...

கொஞ்சம் நம்மை சிந்திக்கத் தூண்டும் புத்தகம். 'destiny' என்ற ஆங்கில வார்த்தையின் மிக நீண்ட சொற்பொருள் இந்தப் புத்தகம்.

சேரல், மிக்க நன்றி. வெகுநாளாக இதைப் பற்றி எழுத வேண்டும் என நினைத்துக் கொண்டிருந்தேன். நியாபகப் படுத்திவிட்டீர்கள்.

சுகா