Sunday, August 05, 2012

94. அலகிலா விளையாட்டு


உலகம் யாவையும் தாமுள வாக்கலும்
நிலை பெறுத்தலும் நீக்கலும் நீங்கலா
அலகிலா விளையாட்டுடையார் அவர் தலைவர்
அன்னவர்க்கே சரண் நாங்களே
- கம்பராமாயணத்தின் முதல் பாடல்

-------------------------------------------------------------------------
புத்தகம் : அலகிலா விளையாட்டு (புதினம்)
ஆசிரிய‌ர் : பா.ராகவன்
வெளியீடு : இலக்கியப்பீடம் பதிப்பகம்
முதற்பதிப்பு : 2005
விலை : 60 ரூபாய்
பக்கங்கள் : 166 (தோராயமாக 36 வரிகள் / பக்கம்) 
சிறப்பு : இலக்கியப்பீடம் இதழ் நடத்திய அமரர் திருமதி ரங்கநாயகி அம்மாள் நினைவு நாவல் போட்டியில் 2003ம் ஆண்டுக்கான பரிசு பெற்ற சமூகப் புதினம்
-------------------------------------------------------------------------

தேடல். மனித வாழ்வின் இருப்பிற்கான ஒரே ஆதாரம் தேடல் என்ற செயல். விடிந்தால் உத்தியோகம், தேதிக்குச் சம்பளம், வேளைக்குச் சாப்பாடு, விழுந்து புரளத் துணை, சிரித்துக் காட்ட குழந்தை குட்டி, அவ்வப்போது சந்தோசம், அளந்து அளந்து பூரிப்பு, கஷ்டமே வந்தாலும் ஆற்றிக் கொள்ள யாரோ ஒருவரின் மடியோ தோளோ, அது, இது என்று தேடப் பணிக்கப்படும் மனிதனுக்கு, இம்மை மறுமை என்று இன்னொரு வாழ்க்கையும் இருப்பதாக சொல்லி, என்றுமே அழியாத ஆன்மா, அனைத்திலும் விளையாடும் பரம்பொருள், அது, இது என்று இன்னும் தேடச் சொல்கிறது ஆன்மீகம். வாழ்வின் பல்வேறு படிநிலைகளில் இப்படி எதையெதையோ தேடித் தேடி, சில தேடல்களுக்கு என்றைக்குமே தீர்வு கிடைப்பதில் என்று தெளிந்து, மரணத்தைத் தேடி இமயமலை வந்திருக்கும் 70+ வயது முதியவர் ஒருவர் தன்னிலையில் த‌ன் கதை சொல்வதே இப்புதினம்.

இரண்டு வேளை சோறாவது கிடைக்கும் என்ற பட்சத்தில், திருச்சினாப்பள்ளி பிராமணச் சிறுவன் ஒருவன் திருவையாற்றில் வேதப் பாடசாலையில் சேர்க்கப் படுகிறான். அவனும் கால் வயிறு உணவு, கால் வயிறு நீர், கால் வயிறு காற்று என்று வேதம் கற்றுக் கொண்டதைக் காட்டிலும் பசியை ஜெயிக்கக் கற்றுக் கொள்கிறான். தொழிலதிபர்கள் புண்ணியம் என்ற பெயரில் செய்யும் பணவுதவியில் அப்பாடசாலையை நடத்திவரும் வாத்தியாரின் குடும்பம் அடுத்தடுத்து பல சோதனைகளைச் சந்திக்கிறது. வாத்தியார் நம்பிய வேதத் தத்துவங்கள் அவரைக் கைவிட்டு விடுகின்ற‌ன. அவர் நம்பிய பரம்பொருள் அவரைப் பொருட்படுத்தவில்லை. அவர் நம்பிய மனிதர்களும் அவரது கன‌வுகளை உதாசீனப்படுத்தி விடுகிறார்கள். தகப்பனுக்கு நிரந்தர வேலை கிடைத்து மூன்று வேளைச் சாப்பாடு உத்தரவாதம் ஆனபின் பாடசாலைக் குடுமிக்கு விடை கொடுத்துவிட்டு கிராப்பு வைத்து வழக்கமான பள்ளிக் கூடத்திற்குச் செல்கிறான்.

படித்த வேதம் வாத்தியாரின் குடும்பத்தை நடுத்தெருவில் கொண்டுவந்து நிறுத்தி இருப்பதைப் பார்த்து வருந்துகிறான். தன்னை வாழ்வித்துக் கொண்டிருக்கிற ஒருவனைப் பொருட்படுத்தாமல் உதைத்துத் தள்ளிய வேதம் என்ற‌ ஆன்ம தத்துவத்துக்கு அப்படியென்ன முக்கியத்துவம்? தன்னைப் பொருட்படுத்துபவனைப் பொருட்படுத்தாத ஒரு விசயம் எப்படி உயர்வானதாக இருக்க முடியும்? மனிதன் நம்பிக்கை வைக்கிற விசயங்களே அவனைக் கைவிடும் என்றால் வாழ்வுக்கான பற்றுக்கோடுதான் என்ன? தீவிரமான நம்பிக்கைகள் நம்ப முடியாதவற்றைச் சாதிக்கும் என்கிற நவீன மனவியல் கண்டுபிடிப்புகளின் அர்த்தம் என்ன? இப்படி நாத்திகத்திற்கும் ஆத்திகத்திற்கும் இடைப்பட்ட நிலையில் ஆன்மா பரம்பொருள் என்று தேட ஆரம்பிக்கும் அவன், அரசாங்க வேலை துறந்து மெட்ராஸ் திருவையாறு திருவானைக்காவல் மைசூர் ஹௌரா கயா என்று சுற்றி இமயமலையைக் கிட்டத‌ட்ட எழுபதாம் வயதில் அடைகிறார். தன்னைச் சுற்றி நடக்கும் விசயங்கள் எல்லாவற்றையும் தன்னையே மையமாக வைத்து சிந்திக்கும் அவரின் வாழ்க்கைதான் இப்புதினம். வாழ்க்கையின் அர்த்தமே வாழ்ந்து தீர்ப்பது என‌ எல்லாவற்றின் வசத்திலும் தன்னை அளித்துவிட்ட ஒருவரின் கதையிது. இலக்கை அடையுமுன் வற்றிவிடக் கூடிய இயல்புள்ள சிற்றோடையின் பயப் படபடப்பு சொல்லும் படைப்பிது.

'அலகிலா விளையாட்டு' புதினம் யோசிக்க வைக்கும் இலக்கிய வகையைச் சார்ந்தது. புத்தகத்தின் முன்னுரையும் இதைத் தான் சொல்கிறது. இப்புதினத்தில் கதை சொல்வது என்பது கதைசொல்லியின் யோசிப்பே. இந்து வேதங்கள் அவற்றையே நம்பி இருப்பவர்களை ஏன் காப்பதில்லை என பதிமூன்று வயதில் யோசிக்க ஆரம்பிக்கிறார். வேதங்கள் உயர்ந்தவைகள் என்றால் கஞ்சிக்கு வக்கற்றவர்கள் மட்டுமே அதைப் படிக்க வருவதேன் என யோசிக்கிறார். தேசம் துண்டாகி தனது சித்தாந்தத்தில் தோற்றுப் போன காந்தியைப் பார்த்தபின், கொஞ்சம் மிஞ்சியிருந்த தத்துவங்களின் மீதான நம்பிக்கையைக் காமராசரின் தேர்தல் தோல்வியோடு தூக்கி எறிகிறார். பவுத்தப் பிக்குகளின் நட்பு கிடைத்தபின், உருவமே இல்லாத ஆன்மாவும், தொப்பையும் வில்லும் வாளும் வேலும் வைத்திருக்கும் பரம்பொருளும் தேவைதானா என யோசிக்கிறார். வாழ்க்கைக்கு உதவக் கூடியதாகத் தத்துவங்கள் இல்லாதபோது யுகம் யுகமாக ஏன் கட்டிக் கொண்டு அழ வேண்டும் என யோசிக்கிறார்.

புத்தருக்கு ஞானமும் காந்திக்கு அகிம்சையும் போல ஒவ்வொருவருக்கும் ஆன்மா என்பது பொருள் வேறு. அவரவர் சித்தாந்தங்களில் பரம்பொருள் என்ற ஒன்றைத் தேடி அலைந்து, அதை அடைந்தார்களா இல்லையா என்பதை வைத்து அவரவர் சித்தாந்தங்களை எப்படி நாம் அளக்க முடியும்? பரம்பொருளை அடைந்த நிலையை அளக்கும் நிரந்தர அளவுகோல்தான் என்ன? மற்றவர் பரம்பொருளை அடைந்தாரா இல்லையா என்றே சரியாகத் தெரியாதபோது அவர்களின் சித்தாந்தங்களை அளக்க நாம் யார்? கஞ்சிக்கே வழியில்லாத போது சித்தாந்தங்களைக் கட்டிக் கொண்டு திரிவதில் ஏது பயன்? எல்லாம் துறந்தவர்களுக்கே வாழ்வியல் தத்துவங்கள் புரியாத போது சாமானியன் அவற்றைக் கடைப்பிடிக்க எப்படி எதிர்பார்க்க‌ முடியும்? வாசகனையும் கூடவே யோசிக்கச் சொல்கிறார்.

நான் ரசித்தவை:
பாத்திரம் -> லங்கிணி பூரணி
ப‌குதி -> கோபால கிருஷ்ண ஹெக்டேயின் குருகுலத்தில் இருந்து வெளியேறும் நிகழ்ச்சி
சிந்தனை -> 1) பலனை எதிர்பார்க்காத சேவை என்ற போர்வையில் கல்வியைக் கூட வியாபாரமாக்கி விட்டதை மைசூரில் சாடும் பகுதி 2) ஒரு புத்தப் பிக்குவுடன் கயாவில் நடக்கும் விவாதம் இப்படி: புலனடக்கம், கொல்லாமை, திருடாமை, கயமைத்தனம் இல்லாமை என்று நல்லொழுக்கக் கோட்பாடுகளைச் சாஷேயில் போட்டுக் கொடுத்து விட்டார்கள். யதார்த்த வாழ்வில் பொருள் தொலைத்த வெறும் லட்சியவாதக் கோட்பாடுகள். காலத்தின் வெறிப் பாய்ச்சலில் இந்தச் சொற்களுக்கெல்லாம் அர்த்தம் இருக்கிறதா என்ன இப்போது? ஓட‌ ஓட விரட்டும் வாழ்வெனும் அசுரப் பிசாசின் பிடியிலிருந்து தப்பிக் கொண்டே இருக்க ஒழுக்கங்களல்ல; ஒழுக்க மீறல்களே பெரும்பாலும் தீர்வாக அமைந்து விடுகிறது. சராசரி மனிதனுக்குத் தத்துவங்களைக் காட்டிலும் தீர்வுகளே முக்கியமாக இருப்பதைத் தயவு செய்து குறை கூறாதீர்கள்.

ஆத்திகம் நாத்திகம் இந்து பவுத்தம் வேதம் காதல் நடைமுறையியல் என்று எல்லா சித்தாந்தங்களுக்கு உள்ளேயேயும் சென்று திரும்புகிறது புதினம். நமது தனிப்பட்ட‌ சித்தாந்தங்களைக் கொஞ்சம் ஒதுக்கி வைத்துவிட்டு, ஏன் அப்படி சிந்திக்கவில்லை - இது தவறு - அது பாதி தவறு என்று எதிர்வாதம் சொல்லாமல் இன்னொருவன் சிந்தனையுடன் உள்ளது உள்ளபடி சேர்ந்து பயணிக்க நீங்கள் தயார் என்றால், குளிர் முதல் மரணம் வரை உங்களை வசப்படுத்த‌ 'அலகிலா விளையாட்டு' இருக்கிறது.

- ஞானசேகர்

Saturday, August 04, 2012

93. CRIME AND PUNISHMENT


It is in just such stupid things clever people are most easily caught. The more cunning a man is, the less he suspects that he will be caught in a simple thing. The more cunning a man is, the simpler the trap he must be caught in.

-------------------------------------------------------
புத்தகம் : Crime and Punishment (குற்றமும் தண்டனையும்)
ஆசிரியர் : Fyodor Dostoyevsky (பியோதர் தஸ்தயெவ்ஸ்கி)
மொழி : ஆங்கிலம்
வெளியீடு : இந்தியாவில் Wilco Publishing House
முதற்பதிப்பு : 1866
விலை : 235 ரூபாய்
பக்கங்கள் : 527 (தோராயமாக 38 வரிகள் / பக்கம்)
-------------------------------------------------------
மனிதர்களை இருவகைகளாகப் பிரிக்கலாம். சாதாரணமானவர்கள் அசாதாரணமானவர்கள். தான் எடுத்துக் கொண்ட காரியத்தில் வெற்றிபெற எதிர்வரும் எல்லாத் தடைகளையும் தகர்த்தெறியும் உரிமை அசாதாரணமானவர்களுக்கு உண்டு. அக்காரியம் சில சமயங்களில் மொத்த மனித சமூகத்திற்கே நன்மை தரக் கூடியதாகவும் இருக்கலாம். நியூட்டனும் கெப்ளரும் தான் எடுத்துக் கொண்ட காரியத்தில் முனைப்புடன் இருந்திருந்தாலும், குறுக்கே வந்த நூற்றுக்கணக்கானவர்களையும் தள்ளிவிட்டு முன்னேற வேண்டி இருந்திருக்கிறது. அவர்கள் அப்படி செய்திருந்திருக்காவிடில் அவர்களின் கண்டுபிடிப்புகள் மனித சமூகத்திற்குக் கிடைத்திருக்க வாய்ப்பில்லாமல் போயிருக்கும். அதற்காக‌ நியூட்டன் தெருவில் வருகிறவர் போகிறவர்கள் எல்லோரையும் கை கால்களை வெட்டி குற்றங்கள் செய்யவில்லை. ஆனால் நெப்போலியன் உட்பட வரலாற்றின் பெரும்பாலான ஆட்சியாளர்கள் அடிப்படையில் மாபெரும் குற்றவாளிகளே. தத்தம் முன்னோர்கள் புனிதமாகக் காத்துவந்த விதிகளை உடைத்தெறிந்து தமது கொள்கைகளைப் பரப்புவதற்காக எதையும் செய்யத் துணிந்தார்கள்; தனது வெற்றியை அப்பாவி மக்களின் இரத்தத்தால் எழுதினார்கள். நன்றாக உற்றுக் கவனித்தால், மனித சமூகத்தின் மீட்பனாகக் காட்டிக் கொண்டவர்கள் எல்லாரும் மிகக் கொடூரமான படுகொலையின் பிணக்குவியலில் இருந்து எழுந்து வந்தவர்களே.

சிறந்த மனிதர்களும் சாதாரண மனிதர்களில் இருந்து கொஞ்சமேனும் வேறுபட்டவர்களும் மனிதயினம் விரும்பாத ஏதேனும் குற்றம் செய்தவர்கள். இல்லாவிடில் அந்த நிலைக்கு அவர்களால் வரவே முடியாது. சாதாரணமானவர்கள் எல்லாம் சட்டத்திற்கு உட்பட்டு வாழவும் கட்டுப்பாட்டுடன் வாழவுமே பிறந்தவர்கள். அசாதாரணமானவர்கள் சட்டத்தை மீறவும் அழிக்கவுமே பிறந்தவர்கள். எந்த அளவிற்கு வீரியமான குற்றமோ அந்த அளவிற்கு அவர்களின் நோக்கமும் வீரியமாய் இருக்கும். சில நேரங்களில் அதனால் அவர்கள் இரத்தத்தின் மேல் நடைபோட வேண்டி இருக்கிறது. அசாதாரணமானவர்கள் தங்களுக்கான தனிப்பட்ட உரிமைகளென அவர்கள் செய்யும் காரியங்களைப் ப‌ல நேரங்களில் சக மனிதர்கள் ஏற்றுக் கொள்வதில்லை. அவர்களைத் தண்டிக்கிறார்கள்; கொன்றும் விடுகிறார்கள். குற்றவாளிகள் என ஒதுக்கப்பட்ட அதே அசாதாரணமானவர்கள் அடுத்த சில தலைமுறைகளின் சிலரால் வழிபடும் அளவிற்கு உயர்ந்தும் இருக்கிறார்கள். சாதாரணமானவர்கள் தற்காலத்திற்கு உரியவர்கள். அசாதாரணமானவர்கள் எதிர்காலத்திற்கு உரியவர்கள். சாதாரணமானவர்கள் உலகை ஓரிடத்தில் பத்திரமாகப் பாதுகாத்து வைக்கிறார்கள். அசாதாரணமானவர்கள் உலகை அதன் இலக்கை நோக்கி நகர வைக்கிறார்கள்.

குற்றங்களின் பின்னணியில் இருக்கும் உளவியலையும் தர்மங்களையும் நியாயப்படுத்தும் இப்படி ஒரு கட்டுரையை ஒரு பத்திரிக்கையில் எழுதிய, இப்புதினத்தின் நாயகன் இரஸ்கோல்நிகோவ் (Raskolnikov) ஓர் ஏழை வாலிபன். 19ம் நூற்றாண்டில் செயின்ட் பீட்டர்ஸ்பர்க் நகரில் சட்டம் படிக்கிறான். சொந்த ஊரில் இருக்கும் தாயும் சகோதரியும் தான் ஒரே சொந்தம். ஏழ்மையில் தவிக்கும் தாயையும் அதே ஏழ்மையைக் காரணமாக வைத்து ஒரு பொருத்தமற்ற கல்யாணத்திற்குக் கட்டாயப் படுத்தப்படும் சகோதரியையும் காப்பாற்ற முடியாமல் தவிக்கிறான். 'எல்லாருக்கும் ஒரு விடிவுகாலம் வரும்' என்று சட்டைப் பைக்குள் கைவிட்டுக் கொண்டு காத்திருக்க விரும்பாமல் தனது வறுமை தாண்ட ஏதாவது செய்யத் துடிக்கிறான். அதுவரை வெறும் கோட்பாடுகளாக அவன் சிந்தனையிலும் பத்திரிக்கைகளிலும் இருந்து கொண்டிருந்த விசயங்களைச் செயலாக்க நினைக்கிறான். பணம் அதிகம் இருக்கும் இடத்தில் இருந்து எடுக்க முடிவு செய்கிறான். தான் நெப்போலியனைப் போல் அசாதாரணமானவன் என உணர்கிறான். கொலையும் செய்ய துணிகிறான்.

ஒரு கொலையும் செய்து விடுகிறான். முதல்முறை செய்வதால் கதவைப் பூட்டிச் செய்ய மறந்து விடுகிறான். அதைத் தற்செயலாகப் பார்த்ததற்காக இன்னொரு கொலையும் செய்கிறான். யாருக்கும் தெரியாமல் தப்பி வந்த பிறகுதான், தான் செய்த கொடூரத்தை உணர்கிறான். உடல் ஒத்துழைக்க மறுக்கிறது. அடிக்கடி உடல்நலம் குன்றிப் போகிறான். அன்றாடச் செயல்களில் வினோதம் தலைதூக்குகிறது. யாருக்கும் புரியாத புதிராக வலம் வருகிறான். சுற்றி இருப்பவர்களின் நடவடிக்கைகளில் சந்தேகப்பட்டு, தான் சந்தேகப்படப் படுகிறோமோ என சந்தேகப் படுகிறான். அவர்கள் எல்லாம் தன்னைத் தானாகவே குற்றத்தை ஒத்துக் கொள்ள வைக்க‌ சதி வேலைகளில் ஈடுபடுவதாக நினைக்கிறான். அவனாக காவலர்களிடம் சரணடைய விரும்பும் போதெல்லாம் சூழ்நிலைகள் தடுக்கின்றன. தான் தவறென சொல்லும் கொலை என்ற செயலைச் செய்தவன் இரஸ்கோல்நிகோவ் என்று மனிதயினம் கண்டுபிடித்து தண்டித்ததா? இல்லை அசாதாரணமானவனாகவே இரஸ்கோல்நிகோவ் வாழ்ந்து போனானா என்பதே மிச்சக் கதை. குற்றமும் தண்டனையும் மனத்திலும் உடலிலும் தொடர்ந்து துரத்துவதே புதினத்தின் கரு.

'கொலைகாரனை நாம் வெறுக்கிறோம்; நமக்குள் இருக்கும் கொலைகாரனை ஞாபகப்படுத்துவதால்' என்று சொல்வார் மதன், 'மனிதனுக்குள்ளே மிருகம்' புத்தகத்தில். எல்லோருக்குள்ளும் இருக்கும் அந்தக் கொலையுணர்வை 'யுத்தம் செய்' திரைப்படத்தில் டாக்டர் யூதாஸ் காரியோத் சொல்வதுபோல், நீதி நியாயம் தர்மம் என்று சொல்லி சமூகம் நம்மை அமைதி காக்கச் சொல்கிறது. பின்னாளில் நினைத்து நினைத்து வருத்தப்படும் கொடுந்துயரம் தவிர்க்கவே, பெரும்பாலான குற்றங்களைச் செய்யத் தூண்டப்பட்டும் நாம் உடனே செய்து விடுவதில்லை. இரஸ்கோல்நிகோவின் அப்படிப்பட்ட‌ மனத் தவிப்புகளை மிக விளக்கமாக சொல்கிறது புதினம். இளைஞன் ஒருவனின் உளவியலைப் ப‌திவு செய்வதால், புதினம் முழுதும் விவரணைகளின் நீளம் அதிகம்.

கதையில் வரும் அனைத்து மாந்தர்களும் ஏதோ ஒரு வகையில் சில நாட்கள் நினைவில் தங்கிப் போகும் அளவிற்கு வித்தியாசமானவர்கள். எப்போதுமே இரஸ்கோல்நிகோவைச் சந்தேகப்படுவது போலவே நடந்து கொள்ளும் காவல்துறை அதிகாரியும் அவரது சகாக்களும். உடம்பு சரியில்லாமல் கிடக்கும் அவனைப் பார்க்கும்போது கூட, 'குற்றமும் நோயும் சிலேடைகள்' என்று துப்பறியும் பாணியிலேயே பேசுவார்கள். கள்ளுக்கடையில் பார்க்கும் குடிகாரக் கிழவன். அவன் வீட்டில் இருக்கும் அவனது இரண்டாவது மனைவி. அவளது கட்டாயத்தால் விபச்சாரியாக வாழ்ந்து வரும் முதல் மனைவியின் மகள் சோனியா. நாயகனின் சகோதரியை மணமுடிக்க நிச்சயித்துப் போன ஒருவன். அவனுடன் எப்போதுமே முறைத்துக் கொண்டு திரியும் நாயகன். இரஸ்கோல்நிகோவின் கொலைகளுக்காக கைது செய்யப்படும் ஓர் அப்பாவி.

நான் ரசித்தவை:
பாத்திரம்: கதாநாயகி சோனியாவை விபச்சாரத்தில் தள்ளும் அவளது தகப்பனின் இரண்டாம் மனைவி Katerina Ivanovna Marmeladova. பியோதர் தஸ்தயெவ்ஸ்கிக்குப் பிடித்த பாத்திரமும் இவள்தான்.
ப‌குதிக‌ள்: 1) இரவில் குடிபோதையில் நிதானம் தெரியாமல் தள்ளாடும் பெண்ணொருத்தியைக் இரஸ்கோல்நிகோவ் காப்பாற்ற போய், ஒரு காவல்காரனிடம் பணத்தைப் பறிகொடுக்கும் நிகழ்ச்சி 2) இரஸ்கோல்நிகோவின் சகோதரியைச் சாமர்த்தியமாக ஒரு தனியறைக்கு அழைத்துப் போனவனிடம் இருந்து தப்பிக்க, அவள் போராடும் நிகழ்ச்சி.
வரிக‌ள்: இரஸ்கோல்நிகோவின் கனவொன்றை இப்படி விவரிக்கிறார் ஆசிரியர்.
The whole world was condemned to a terrible new strange plague that had come to Europe from the depths of Asia. All were to be destroyed except a very few chosen. Some new sorts of microbes were attacking the bodies of men, but these microbes were endowed with intelligence and will. Men attacked by them became at once mad and furious. But never had men considered themselves so intellectual and so completely in possession of the truth as these sufferers, never had they considered their decisions, their scientific conclusions, their moral convictions so infallible. Whole villages, whole towns and peoples went mad from the infection. All were excited and did not understand one another. Each thought that he alone had the truth and was wretched looking at the others, beat himself on the breast, wept, and wrung his hands. They did not know how to
judge and could not agree what to consider evil and what good; they did not know whom to blame, whom to justify. Men killed each other in a sort of senseless spite. They gathered together in armies against one another, but even on the march the armies would begin attacking each other, the ranks would be broken and the soldiers would fall on each other, stabbing and cutting, biting and devouring each other. The alarm bell was ringing all day long in the towns; men rushed together, but why they were summoned and who was summoning them no one knew. The most ordinary trades were abandoned, because every one proposed his own ideas, his own improvements, and they could not agree. The land too was abandoned. Men met in groups, agreed on something, swore to keep together, but at once began on something quite different from what they had proposed. They accused one another, fought and killed each other. There were conflagrations and famine. All men and all things were involved in destruction. The plague spread and moved further and further. Only a few men could be saved in the whole world. They were a pure chosen people, destined to found a new race and a new life, to renew and purify the earth, but no one had seen these men, no one had heard their words and their voices.

நான் ஆங்கிலத்தில் இப்புத்தகத்தைப் படித்துக் கொண்டிருந்த நேரத்தில் தற்செயலாக எனக்கு வேண்டப்பட்ட விரோதி ஒருவரும் தமிழில் படித்துக் கொண்டிருந்தார். ஆங்கில மொழிப்பெயர்ப்பில் வார்த்தைகள் அவ்வளவாக ஒட்டவில்லை எனக் குறை சொன்னேன். இணையத்தில் சிலதளங்களும் இதைத்தான் சொல்கின்றன. இரஷ்ய மொழியில் மிக வேகமாக ஏற்பட்டுப் போன மாற்றங்களை அதற்குக் காரணமாகச் சொல்கின்றன. உதாரணமாக புத்தகத்தின் பெயரிலேயே இருக்கும் குற்றம் என்ற வார்த்தைக்கு இணையாக ஆசிரியர் உபயோகப்படுத்தி இருப்பது 'குற்றத்தைத் தாண்டுதல்' என்பது போன்றது. எடுத்தோம் கவிழ்த்தோம் என்று படிக்கும் சிலருக்கு இப்புதினம் போன்ற மிக நீண்ட விவரணைகள் சலிப்பூட்டலாம். இவ்விரு தடைகளைக் கொஞ்சம் சகித்துக் கொண்டால், குற்றமும் தண்டனையும் பக்கத்தில் வந்து வந்து விலகி விலகி ஓடும் அலைகடல் விளையாட்டை உங்களாலும் ரசிக்க முடியும்.

அனுபந்தம்:
----------
பியோதர் தஸ்தயெவ்ஸ்கியின் The Idiot என்ற புதினத்தின் ஒரு பாத்திரத்தில் ஈர்க்கப்பட்டு, சண்முகராஜா என்ற தனது பெயரை மாற்றிக் கொண்டவரை இயக்குனர் மிஷ்கின் என்று சொன்னால் நமக்கெல்லாம் தெரியும்.

- ஞானசேகர்