Sunday, March 16, 2014

125. இந்தியாவில் குற்றங்களும் மத நம்பிக்கைகளும்

Religion is opium of masses.
- Karl Marx
----------------------------------------------------------------------------------------------------------------------------------
புத்தகம்: இந்தியாவில் குற்றங்களும் மத நம்பிக்கைகளும்
ஆங்கிலத்தில்: Crime and Religious Beliefs in India
ஆசிரியர்: அகஸ்டஸ் சோமர்வில்
தமிழில்: மா.வெற்றிவேல்
வெளியீடு: சந்தியா பதிப்பகம் (http://www.sandhyapublications.com/)
முதல் ஈடு: 2012
பக்கங்கள்: 224
விலை: 170 ரூபாய் 
வாங்கிய இடம்: New Book Lands, வடக்கு உஸ்மான் சாலை, தியாகராய நகர், சென்னை (http://www.newbooklands.com/)
----------------------------------------------------------------------------------------------------------------------------------
1931ல் Crime and Religious Beliefs in India என்ற ஆங்கில நூல் அகஸ்டஸ் சோமர்வில் என்ற ஆங்கிலேயரால் வெளியிடப்பட்டது. ஒரு சராசரி இந்தியனின் மனம் சமய நம்பிக்கைகளாலும் மூடப் பழக்க வழக்கங்களாலும் கட்டப்பட்டிருப்பதையும், இந்தியச் சமூகத்தில் நடக்கும் குற்றங்களின் பின்னணியில் உள்ள சமய நம்பிக்கைகளின் உளவியலையும் பதிவு செய்த புத்தகம் அது. அதன் தமிழ் மொழியாக்கமே 'இந்தியாவில் குற்றங்களும் மத நம்பிக்கைகளும்'. இன்று இந்தியா என்பதற்கு ஒவ்வொருவரும் ஒவ்வோர் அர்த்தம் சொல்வது போல், ஆசிரியர் காலத்திலும் வேறு அர்த்தம் என்பதால், இப்பதிவு முழுவதும் இந்தியா என்று வரும் இடங்களில் இந்தியத் துணைக்கண்டம் என்று புரிந்து கொள்க. 80 ஆண்டுகள் கடந்துவிட்டாலும் மாற்றம் ஒன்றும் பெரிதாக நிகழ்ந்துவிடவில்லை என்பதால், கிரிக்கெட்டில் யாருக்குக் கைத்தட்டக் கூடாது என்றும், வாடகை வீடு முதல் நாடாளுமன்றம் வரை யார் குடியேற வேண்டும் என்றும் பெரும்பாலும் மதம் வைத்து தீர்மானிக்கும் இத்தேசத்தின் கடந்தகால நிகழ்கால எதிர்கால குற்றங்களுக்கும் மத நம்பிக்கைகளுக்கும்  உள்ள தொடர்பு  எல்லோருக்கும் வெளிப்படையாகவே தெரியும் என்பதால், நான் சிற்சில உதாரணங்கள் சொல்லி நிரூபிக்க வேண்டிய முயலாமல் நேரடியாக புத்தகத்திற்குள் போகிறேன். மொத்தம் 17 கட்டுரைகள். மத நம்பிக்கைகளின் பின்னணியில் சமூகத்தில் நடக்கும் குற்றங்களாக ஆசிரியர் உதாரணப்படுத்தும் பல குற்றங்களை, இப்பதிவின் எளிய புரிதலுக்காக ஐந்து வகைகளில் அடக்குகிறேன்.

முதலாவது பாலியல் தொழில் என்ற பெயரில் பெண்கள் மேல் திணிக்கப்படும் வன்கொடுமை. கன்னித் துறவிகள், அந்தப்புர கணிகைகள் என்ற பெயரில் காலங்காலமாக இம்மண்ணில் விபச்சாரம் புனிதப்படுத்தப்பட்டு பாரம்பரியமாகத் தொடர்ந்து வருவதைச் சுட்டிக் காட்டுகிறார். கிமு காலத்தில் ரிக் வேதம், அர்த்தசாத்திரம், மனுஸ்மிருதி போன்ற நன்னெறி நூல்களும், கிபி காலத்தில் காமசூத்திரமும் சமூக அங்கீகாரத்துடன் ஊக்குவித்ததைக் கூறுகிறார். இதன் தொடர்ச்சியாக உருவான தேவதாசி முறை; 'தேவதாசி வீட்டுத் தூசு கூட தெய்வீகமானது' என்பது போன்ற அன்றாடச் சொல்லாடல்கள்; பிராமணீயத்தின் மோசமான தலைமையகமான மெட்ராஸ் நகரத்தில் மிகமிக மோசமாக இருந்த தேவதாசிகளின் நிலை; திருக்கழுக்குன்றம் போன்ற பகுதிகளில் குடும்பத்தில் மூத்த பெண்ணைக் கோயிலுக்கு நேர்ந்து விடும் கொடுமையான வழக்கங்கள் இருந்ததையும் கண்ணுற்ற ஆசிரியர் சொல்கிறார். 

Unhappy India என்ற புத்தகத்தில் இதுபோன்ற கொடூரங்களை லாலா லஜபதி ராய் எழுதியிருப்பதையும், டாக்டர் முத்துலெட்சுமி (பல 'முதல்'களுக்குச் சொந்தக்கார‌ரான இவரும் எங்கள் மாவட்டம்) அவர்கள் மெட்ராஸ் சட்டமன்றத்தில் நேர்ந்து விடுதல் தடைச்சட்டம்  மசோதாவை 1930ல் அறிமுகப்படுத்தியதையும் உதாரணமாகச் சொல்லி இந்தியர்களின் எதிர்ப்பையும் பதிவு செய்கிறார் ஆசிரியர். மாதவிலக்கான பெண்கள் மூன்று நாட்கள் ஒதுங்கியே இருக்க அந்தப்புரத்தில் தனியறை இருக்கும். அப்பாரம்பரியத்தைக் காக்கும் புரட்சியாக, முந்தைய கர்நாடக அரசு கிராமங்களுக்கு வெளியே கட்டடங்களைக் கட்டிக் கொடுத்தது. வழக்கம் போல, அத்திட்டத்திற்கும் மஹிலா என்ற வார்த்தையுடன் இந்தி மொழியில் ஒரு பெயர். 

இரண்டாவது போதை மருந்துப் பழக்கம். மது, அபின், கோக்கைன், ஹஷீஷ், இந்தியன் ஹெம்ப் (கஞ்சா) போன்ற போதை மருந்துப் பழக்கங்கள் பற்றியும், அவை சட்ட விரோதமாகக் கடத்தப்படுவது பற்றியும் சில கட்டுரைகள் பேசுகின்றன. இவற்றிற்கும் மத நம்பிக்கைகளுக்கும் என்ன சம்மந்தம் என்று நீங்கள் கேட்கலாம்? கங்கை நதிக்கரையில் ஒரு தெய்வீக மகரிஷியின் மூலம் அபின் பிறந்த கதை, 6 பக்கங்களுக்கு இருக்கிறது. சாராயத்தை விருப்பப் பானமாகக் கொண்ட சில மத நம்பிக்கைகளின் புராணக் கதைகளையும் பட்டியலிடுகிறார். உச்சி முதல் பாதம் வரை கள்ளாபிஷேகம் செய்யப்படும் சில கடவுளர்களைச் சொல்கிறார்.

மூன்றாவது கடவுளைப் பற்றிய‌, கடவுளின் எதிரியான பேய் / பிசாசு / சாத்தான் பற்றிய மூட நம்பிக்கைகள். சாமிகள் மேல் மரியாதை இல்லாமல் மண்ணுருண்டைகள் எரிந்து வழிபடுதல் போன்ற வினோத வழக்கங்கள்; சில ஆபத்தான காலங்க‌ளில் பூர்வீகச் சாமியைச் தற்காலிகமாக கைவிட்டுவிட்டு, வேறு சாமியையோ பேய்களையோ வழிபடுவதையும் சுட்டிக் காட்டுகிறார். இன்றும் அம்மை நோய்க்கு மருத்துவமனை போகாமல் நம் மக்கள் என்ன செய்கிறார்கள் என்று உங்களுக்கே தெரியும். 'துஷ்ட தேவதைகளை அமைதிப்படுத்த நடத்தப்படும் அனைத்துப் பரிகாரங்களும் தோற்றுப் போனால் மட்டுமே, இந்த வானுயர்ந்த மலைகளை உருவாக்கிய கடவுளை வணங்குவோம்' என்பது நேபாள மக்களின் வாதம். 'பேய் அனைத்து வண்ணங்களையும் ஆடையாக உடுத்திக் கொன்டு ஏதோவொரு மலைச் சுனையிலிருந்து நீர்ப்பருகும் காட்சிதான் சாதாரணமாக மழைக்காலத்தில் காணப்படும் வானவில்' - இப்படி நம்புவது வேறு யாருமில்லை, புத்த மதத்தின் ஒரு பிரிவான நாடோடி லாமாக்கள். புத்த மதத்தின் ஒரு பிரிவினருக்காக மனிதக் கபாலங்கள் இந்தியாவில் இருந்து கடத்தப்படுவதை ஏற்கனவே The Red Market புத்தகத்தில் இத்தளத்தில் எழுதி இருக்கிறேன்.

நான்காவது கடவுளைக் கையில் எடுத்தவர்கள் / கடவுள் விற்பவர்கள் செய்யும் வினோத மற்றும் மூட வழக்கங்கள். பேயோட்டிகள் மற்றும் பாம்பு வைத்தியர்களின் இன்றும் தொடரும் வினோதப் பழக்கங்களையும் சடங்குகளையும் அன்றே பட்டியலிட்டிருக்கிறார் ஆசிரியர். ஏதோவொரு மகாமுனிவரின் கண்ணிமைகளை அலங்கரித்த பிங்களன் என்ற நாகப்பாம்பின் மூலம் உண்டாக்கப்பட்ட அரிய நடனமென்ற பெயரில், இன்றும் கல்கத்தாவின் சோனாகச்சி சிவப்பு விளக்குப் பகுதியில் வாடிக்கையாளர்களைக் கவர ஆடப்படும் பிங்கள நடனம் பற்றிக் குறிப்பிடுகிறார்.  உயிருடன் புதைக்கச் சொல்லி அடம்பிடிக்கும் சாமியார்களை அடிக்கடி செய்திகளில் இன்றும் காணலாம்.  ஒரு சாமியார் சொன்னதற்காக அரசாங்கமே சமீபத்தில் புதையல் தேடியதல்லவா?

ஐந்தாவது மதத்தின் பெயரால் நடக்கும் உயிர்ப்பலிகள். மகாபாரதப் போரில் வெல்ல அரவானைப் பலி கொடுத்தது போல, இன்றும் தொடரும் கங்காசாகர் திருவிழா பற்றி சொல்கிறார். ஏதோவொரு தெய்வத்தின் கோப‌த்தைத் தணிப்பதற்கோ, மந்திர சக்திகளைப் பெறுவதற்கோ, புதையல் கிடைக்கவோ, பாலமோ கட்டடமோ வெற்றிகரமாகக் கட்டப்படவோ குழந்தைகள் இன்றும் நரபலி கொடுக்கப்படும் சம்பவங்கள் நடக்கத்தான் செய்கின்றன. 3000 ஆண்டுகளாக இந்தியாவில் வழக்கில் இருந்த‌, கைம்பெண்களைக் கணவனுடன் உயிருடன் எரித்த சதி என்னும் உடன்கட்டை ஏறும் கொடூரத்தையும் சொல்கிறது இப்புத்தகம். இப்படி உடன்கட்டை ஏறப்போன ஓர் இளம்விதவையைக் காப்பாற்றி திருமணம் செய்து கொண்ட, ஓரு ஆங்கிலேயர் கல்கத்தாவில் பிரபலம். ஜாப் சார்னாக் (Job Charnock) என்ற அவர்தான் கல்கத்தா என்ற நகரை நிறுவியவர்.

இந்தியா என்பது இந்தி பேசும் இந்துக்களின் நாடு என்ற பொதுவான கருத்து வெளிநாட்டவர்களுக்கு உண்டு. ஆனால் எந்த நம்பிக்கைகள் எந்த மதத்திற்குச் சொந்தமானவை என ஆசிரியர் தெளிவாகச் சொல்லி இருக்கிறார். இந்து இஸ்லாம் புத்தம் போன்ற மதங்கள் இவற்றில் அடக்கம். கிறித்தவ மதம் காலனியாதிக்கத்திற்குப் பல நூற்றாண்டுகளுக்கு முன்னரே இந்தியாவிற்குள் வந்துவிட்டாலும், ஆசிரியர் ஆங்கிலேயர் என்பதால் கிறித்தவ மத நம்பிக்கைகள் மூலம் நிலவும் குற்றங்கள் பற்றி ஏதும் சொல்லவில்லை. மேலை நாட்டவர் என்ற முறையில் கீழை நாட்டு நம்பிக்கைகள் அனைத்தையும் கீழ்த்தரமாகப் பார்க்கும் சில வரிகள் ஆங்காங்கே தென்படுகின்றன. நாம் பெருமையாகச் சொல்லும் ஒத்துழையாமை இயக்கத்தின் வெற்றியைக் கூட கிண்டல் செய்திருக்கிறார். இவை நீங்கலாக, நல்ல புத்தகம் இது.

என்ன தம்பி, சதிக்குற்றம் வரை சொன்ன நீங்கள் சாதிக்குற்றம் பற்றி ஒரு வார்த்தை கூட சொல்லவில்லையே? இவ்வாறு மத நம்பிக்கைகளால் இழைக்கப்பட்ட குற்றங்கள் அனைத்திலும் பெரும்பாலும் தாழ்த்தப்பட்டவர்கள் என்று ஒதுக்கி வைக்கப்பட்ட கீழ்சாதிக்காரர்கள் தான் அதிகம் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள் என்பதையும் ஆங்காங்கே ஆசிரியர் குறிப்பிடுகிறார். அடுத்த புத்தகத்தில் நிறைய பேசலாம்.

- ஞானசேகர்
(http://jssekar.blogspot.in/)

Saturday, March 15, 2014

124. வெயில் மற்றும் மழை

----------------------------------------------------------------------------------------------------------------------------------
புத்தகம்: வெயில் மற்றும் மழை (சிறுகதைகள்)
ஆசிரியர்: மீரான் மைதீன்
வெளியீடு: அன்னை ராஜேஸ்வரி பதிப்பகம், பெரம்பூர், சென்னை
முதல் ஈடு: திசம்பர் 2007
பக்கங்கள்: 196
விலை: 90 ரூபாய் 
வாங்கிய இடம்: New Book Lands, வடக்கு உஸ்மான் சாலை, தியாகராய நகர், சென்னை (http://www.newbooklands.com/)
----------------------------------------------------------------------------------------------------------------------------------
இஸ்லாமிய மக்க‌ள் பற்றி படித்தறிய சென்ற வருடம் சில புதினங்களும் சிறுகதைத் தொகுப்புகளும் வாங்கினேன். அவற்றில் சிலவற்றைப் பற்றி இதே தளத்தில் எழுதியும் இருக்கிறேன். மீரான் மைதீன் அவர்களின் 'ஓதி எறியப்படாத முட்டைகள்' புதினம் பற்றி மட்டும் எழுதவில்லை. அப்புதினம் பற்றி நான் எழுதிய பதிவு எனக்கு திருப்தியாக இல்லை என்பதாலும், வேலைப்பளுவினாலும் எழுதவில்லை. இதே காரணங்களால் நான் எழுதாமல் விட்டுவிட்ட இன்னொரு புத்தகம், எஸ்.ராமகிருஷ்ணனின் நெடுங்குருதி. இஸ்லாமிய மக்களின் அன்றாட உரையாடல்களில் இடம்பெறும் பல வார்த்தைகளை எனக்கு அறிமுகப்படுத்திய புதினம் 'ஓதி எறியப்படாத முட்டைகள்'. ஒரே ஊருக்குள் இருக்கும் இரு இஸ்லாமிய குடும்பங்கள் மூலம், அரபு நாடுகளில் வேலை பார்க்கும் கனவுடன் வலம் வரும் ஏழைகளின் மனவோட்டத்தை அற்புதமாக விளக்கும் புத்தகம். நடிகைகள் ராதாவும் அம்பிகாவும் வந்து போகும் பகுதிகளைச் சில நண்பர்களிடம் சொல்லிச் சிரித்திருக்கிறேன். மீரான் மைதீன் அவர்களின் மற்ற புத்தகங்கள் ஏதாவது படிக்க வேண்டும் என்ற ஆவலில் தேர்ந்தெடுத்த புத்தகம் தான் இது.

வெயில் மற்றும் மழை. 18 சிறுகதைகளின் தொகுப்பு. 4 அல்லது 5 கதைகள் தவிர மற்றவை அனைத்தும் இஸ்லாமிய மக்களைப் பற்றிய கதைகள். 13 கதைகள் எனக்குப் பிடித்திருந்தன. 'ஓதி எறியப்படாத முட்டைகள்' மூலம் எனக்கு ஏற்கனவே நாகர்கோவில் வட்டார இஸ்லாமிய வழக்குச் சொற்கள் பரிட்சயம் என்பதால், இந்தமுறை பதிவாக எழுதும் அளவிற்கு எளிதாகிவிட்டது. ஒவ்வொரு சமூகத்திலும் இருக்கும் மூட நம்பிக்கைகள் போல, இஸ்லாமிய சமூகத்தினரிடையே இருக்கும் சில மூட நம்பிக்கைகள் பற்றி 'தங்கக்கால்' 'வல்லினம்' போன்ற கதைகள் பேசுகின்றன. ஒவ்வொரு மதத்தினரும் தத்தம் மதம் சொல்லும் கட்டளைகளை ஏதாவதொரு சந்தப்பத்தில் தெரிந்தே மீறுவதைக் 'குனிவு' என்ற கதை சொல்கிறது. எல்லாச் சமூகமும் பெண்ணை ஓர் அடிமையாகவே வைத்திருக்க விரும்புவதையும், அதை எதிர்க்கும் சில பெண்கள் இருப்பதையும் 'வல்லினம்' என்ற கதை சொல்கிறது. 'படிப்பு வராத பயலுவளெல்லாம் யானை விட்டயச் சமுட்டுனா படிப்பு வரும்' என்று யானை விட்டைக்கு அடித்துக் கொள்ளும் 'நன்றி மீண்டும் வருக' என்ற கதை.

கவர்னர் என்ற பதவியைக் கடுமையாக விமர்சிக்கும் சொற்ப இந்தியர்களில் நானும் ஒருவன். கவர்னர்கள் பற்றி இந்தியர்கள் பெரும்பாலும் ஆர்வம் காட்டுவதில்லை என்பதால், நான் பள்ளிக்கூடம் போய்க் கொண்டிருந்த‌ காலத்தில் தமிழ்நாட்டில் கவர்னராக இருந்த ஒருவரைப் பற்றி தெரியாதவர்களுக்காக ஒரு சிறு அறிமுகம் தருகிறேன். எம். பாத்திமா பீவி. இந்திய உச்ச நீதிமன்றத்திற்கு நியமிக்கப்பட்ட முதல் பெண் நீதிபதி. ஆசியாவிலேயே மிக உயர்ந்த நீதிமன்றத்தின் நீதிபதியாக பதவியேற்ற முதல் பெண்மணி என்ற பெருமை உடையவர். 1997 முதல் 2001 வரை தமிழ்நாடு ஆளுநராக இருந்தார். அவர் கவர்னராக இருந்த போது, தங்கள் ஊரின் தர்ஹாவிற்கு வரப்போகும் நாளை எதிர்நோக்கி இருக்கும் ஓர் ஊரின் பரபரப்பைச் சொல்லும் 'கவர்னர் பெத்தா' கதை அருமை.

ஒரு பள்ளித் தலைமையாசிரியைக்கும், வாசலில் கடை வைத்திருக்கும் பாட்டிக்கும் இடையே நடக்கும் பனிப்போர் பற்றி ஒரு கதை. தலையணை இல்லாமல் சென்னை வாழ்க்கையின் நெருக்கடியைச் சித்தரிக்கும் ஓர் உதவி இயக்குனரின் கதை. கல்லூரி சார்பாக நடைபெறும் நாட்டு நலப்பணித் திட்டம் ஒன்றில் ஓர் இஸ்லாமிய மாணவனுக்கும், ஒரு பெந்தெகொஸ்து கிறித்தவ மாணவிக்கும் இடையே வந்து போகும் காதல் போன்ற ஏதோவொன்றைச் சொல்லும் ஒரு கதை. சவங்களைக் கிடத்தி வைக்கும் ஒரு பெஞ்சி, ஒரு சைக்கிள், ஓர் ஆட்டுக்குட்டி போன்றவைகள் மேல் சாதாரண மனிதர்கள் காட்டும் அன்பைப் பற்றி சில கதைகள். 'மஜ்னூன்' என்ற கதையை இன்னும் கொஞ்சம் மெருகேற்றி இருந்தால் சிறப்பாக இருந்திருக்கும்.

நான் மிகவும் ரசித்த கதைகள்: பெஞ்சி, கொழும்புக் குதிரை, கவர்னர் பெத்தா, குனிவு, முகாம்

- ஞானசேகர்

Sunday, March 02, 2014

123. DEBT - The first 5000 years

(இப்பதிவிற்குப் பொருத்தமான மேற்கோளும் ஆரம்பப் பத்தியும் தந்தமைக்கும், ஆங்காங்கே சில தகவல்கள் சேர்த்து இப்பதிவிற்கு இவ்வடிவம் தந்தமைக்கும் நண்பர் ஞானசேகருக்கு நன்றிகள்)

தனது தந்தையின் கடனைத் தீர்க்காத ஆண்மகன், மறுபிறவியில் நாயாகவோ அடிமையாகவோ அல்லது பெண்ணாகவோ பிறக்கிறான். 
- மனு தர்ம சாத்திரம்
If a man does not pay his father's debt, in his next life he is born as a dog, a slave or a woman.
- Manusmrti
(நன்றி: Struggle for Gender Justice புத்தகம்)
----------------------------------------------------------------------------------------------------------------------------------
புத்தகம் : DEBT - The first 5000 years 
ஆசிரியர் : டேவிட் கிரேபர் (David Graeber)
வெளியீடு : மெல்வீல்லெ ஹவுஸ் (Melville House)
பக்கங்கள் : 534
விலை : ரூபாய் 500
----------------------------------------------------------------------------------------------------------------------------------
மனிதகுலம் தனது பரிணாமப் படிகளில் ஏறும்போது, சில‌ காலங்க‌ளில் நாலுகால் பாய்ச்சலில் ஓடுகிறது. சில காலங்களில் குழம்பிப் போய் அப்படியே நிற்கிறது. இரண்டையும் ஒரு சேர சந்தித்துக் கொண்டிருக்கும் விசித்திரமான காலம் இந்த 21ம் நூற்றாண்டு. எழுத்தாளர் பெருமாள் முருகன் சொல்வது போல, நம் முன்னோர்கள் யாரும் குறியை மூடிப் புணர்ந்ததில்லை. கவிஞர் மகுடேசுவரன் சொல்வது போல, ஒரு கட்டடத்தில் இருந்து வெளியேறி இன்னொரு கட்டடத்தில் நுழைவதையே ஆயுள் செயலாகக் கொண்டு யாரும் இருந்ததில்லை. ஆனால் ஒரு கிழவன் கேட்டதற்காக, உபரி நிலங்களை எல்லாம் நிலமற்ற விவசாயிகளுக்குப் பகிர்ந்து கொடுத்த ஆச்சரியத்தை இதே தேசம் கண்டு 65 ஆண்டுகள் கூட ஆகவில்லை. இந்தப் பரிணாமம் என்ற மாயநிலையைத் தாண்டிப்போய், நின்று திரும்பிப் பார்த்தால்தான் புரிந்து கொள்ள முடியும் என்பதால், மனிதகுலம் முழுவதும் ஆங்காங்கே விதைக்கப்பட்டு இன்று பரவிக் கிடக்கும் மாய‌ சித்தாந்தங்கள் பல. இந்த 21ம் நூற்றாண்டு தனது சித்தாந்தங்களை மனிதகுலத்தின் பொதுப் புத்திக்குள் திணித்து வைக்கப் பயன்படுத்தும் ஊடக‌ங்களில், இப்பதிவிற்குச் சம்மந்தப்பட்ட சில சித்தாந்தங்கள் எப்படி திரிக்கப்பட்டு நியதிகளாகப் பதிவு செய்யப்படுகின்றன என்று இரு உதாரணங்கள் பார்க்கலாம்.

1. ஒரு பிரபல தமிழ்த் தொலைக்காட்சியில், மக்கள் நேரடியாகப் பங்கேற்று விவாதிக்கும் ஒரு நிகழ்ச்சியில் ஒருவர் பேசினார். ரொம்ப காலமாக நம் சமுகத்தில் இருந்த ஒரு methodologyக்குப் பேரு பண்டமாற்று. நாம ஒரு பொருள் கொடுப்போம். அதுக்கு இணையா ஒரு பொருளக் கொடுப்பாங்க. அப்படித்தான் ரொம்ப காலம் வரைக்கும் இருந்திச்சு. அதுக்கடுத்து என்னாச்சின்னு கேட்டா, எல்லா நேரத்திலேயும் பொருள கொடுத்தே பொருள் வாங்கிக்கிட்டு இருக்க முடியாதுன்னு எல்லாத்தையும் தூக்கிட்டு இங்கிருந்து அங்க அங்கிருந்து இங்க போக முடியாதுன்னு சொல்லிட்டு, ஒரு பொருள் கண்டுபிடிச்சாங்க அதுக்கு பேரு காசு.
2. நூறுநாள் வேலைத்திட்டம், ரேஷன் அல்லது மானியம் போன்றவற்றால் மக்கள் சோம்பேறிகள் ஆவதாகவும் ஊழல் பெருகுவதாகவும், தடையற்ற சந்தை (free market) பாதிக்கப்படுவதாகவும் முகநூலில் நண்பர் ஒருவர் கூறினார். அதனால் பொருளாதாரம் 10ம் வகுப்பிலேயே பாடத்திட்டத்தில் சேர்க்கப்பட வேண்டுமென‌ அறிவுறுத்தினார். 

முதல் உதாரணம் காசு பற்றியது; அடுத்த உதாரணம் தடையற்ற சந்தை பற்றியது. பள்ளிக்கூடங்களில் பக்கத்து எண்ணில் இருந்து கடன் வாங்கிக் கழிக்க ஆரம்பித்த‌தில் இருந்து தொன்று தொட்டு கற்றுத் தொடர்ந்து வரும் கருத்து என்பதால், முதல் உதாரணத்தைப் பெரும்பாலானவர்கள் ஏற்றுக் கொள்வதுண்டு. விலையில்லா அல்லது இலவசம் என்ற வார்த்தைகளால் கீழ்த்தரமாகப் பார்க்கப்படும், பொது விநியோகத் திட்டம் (PDS = Public Distribution System) பற்றிய சமூக அடிப்படைத் தேவை அறியாத சிறுபிள்ளை யாரோ சொன்னதென்று இரண்டாம் உதாரணத்தைத் தூர‌ விலக்கும் என்னைப் போன்றவர்கள் சிலரும் உண்டு. அம்பானிகளுக்கும் டாட்டாக்களுக்கு கொடுக்கும் மானியங்கள் பற்றியோ, 'சன்டேன்னா ரெண்டு' என்று ஏழை இந்தியனை வெறும் கவர்ச்சியின் வாடிக்கையாளானாகவே வைத்திருக்கும் அவர்களின் தொழில் தர்மம் பற்றியோ கேள்விகள் கேட்காமல், தனது வன்மத்தையெல்லாம் ஏழைகளின் மீதே அச்சிற்றறிவாளர்கள் காட்டுகிறார்கள் என நான் மேலும் கூறுவேன்.

மக்களோடு இன்று நன்கு கலந்துவிட்ட தீபாவளி வெள்ளைக்காரனுக்குச் சற்று முன்னால் வந்த ஒரு சித்தாந்தம் என்றோ, கம்பர் முதல் கபீர்தாசர் வரை கண்டிராத‌ ஓர் இடத்திற்கு யாரோ சிலர் ரசீது வைத்திருப்பதாக விதைக்கப்பட்ட சித்தாந்தம் சமீபத்தியது என்றோ ஆராய்ச்சியாளர்கள் சொன்னால் பலரும் நம்பத் தயாரில்லை. தமிழ்ப் புத்தாண்டையே 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை நாம் மாற்றிக் கொண்டாடுகிறோம். அப்படியானால் கையில் காசில்லாதவன் கடவுளானாலும் கதவைச் சாத்தும், பணத்தின் மீது கட்டப்பட்ட இவ்வுலகத்தின் கதை?  Cash என்ற வார்த்தை சீன மான்டரின் மொழியில் இருந்து வந்தது. Cash காசு பணம் துட்டு Money எல்லாவற்றிற்கும் மூலமாகப் பண்டமாற்று முறையைச் சொல்கிறோம். சந்தை வந்தது என்கிறோம். பின்னாளில் கடன் வட்டி வரி கிஸ்தி Tax வந்தது என்கிறோம். பணம் பரவலாக்கப்படும்போது தடையற்ற சந்தை தடையுறுகிறது என்கிறோம். நான் ஏற்கனவே சொன்னது போல், பரிணாமப் படிகளில் கொஞ்சம் திரும்பிப் பார்த்து, இச்சித்தாந்தங்கள் மனிதகுலத்தில் பல்வேறு காலங்களில் எப்படி பரிணாமம் பெற்றன என ஆராய்ந்தால்? பண்டமாற்று, தடையற்ற சந்தை போன்ற சித்தாந்தங்கள் மனிதகுலத்தின் பொதுப் புத்தியில் மிக மிகச் சமீபத்தில் திணிக்கப்பட்ட சித்தாந்தங்களாக இருந்தால்? புத்தகத்திற்குள் போகலாம்.

Anthropology. தமிழில் மானிடவியல் என்பது மனித இனம் பற்றிய கல்வித்துறை. மனித குலத்தைச் சமூக-பண்பாட்டு நிலையிலும் உயிரியல் நிலையிலும் கடந்த கால மக்களையும் சமகால மக்களையும், அதாவது எல்லாக் காலத்து மக்களையும் எல்லா இடங்களின் மக்களையும் ஆராயும் பரந்த விரிந்த இலக்குடையதாக ஒன்றாக விக்கிபீடியா விளக்குகிறது. மானிடவியல் ஆய்வாளரான ஆசிரியர் டேவிட் கிரேபர்  இடதுசாரி சிந்தனையுள்ள கலகக்காராகவும் களப்பணியாளராகவும், நம் காலத்தில் வாழும் மிகச்சிறந்த அறிவுஜீவிகளில் ஒருவராகவும் அறியப்படுகிறார். Occupy Wallstreet போராட்டங்களைப் பற்றி வலைத்தளங்களில் வாசித்துக் கொண்டிருந்த வேளையில் போராட்டத்தில் பங்குபெற்றவ‌ர்களில் முக்கியமானவராகவும், போராட்டத்தில் ஈடுபட்ட பல்வேறு அமைப்புகளை மக்கள் மன்றத்தின் மூலம் ஒருங்கிணைத்ததில் பெறும் பங்காற்றியவராகவும் ஆசிரியரைப் பற்றி அறிய நேர்ந்தது. இவருடைய இப்புத்தகம் இந்நூற்றாண்டின் மிகச்சிறந்த புத்தகங்களில் ஒன்றாக அறியப்படுகிறது.
(http://www.wikipedia.org)
ஆம். பண்டமாற்று, தடையற்ற சந்தை என்ற இரு சித்தாந்தங்களும் தவறு என்று மானிடவியல் ஆய்வின் மூலம் விளக்குவதே இப்புத்தகம் என்று எடுத்துக் கொள்ளலாம். எடுத்துக் கொள்ளலாம் என்று கூறுவதற்குக் காரணம், இப்புத்தகம் இவ்விரண்டையும் தாண்டி மனித வரலாற்றின் பல்வேறு காலங்களின் பல விசயங்களை உள்ளடக்கியது. மீண்டும் இவ்விரு விசயங்களையே எடுத்துக் கொள்வோம். இவை ஒன்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளின் மக்கள் விவாதங்களின் விளம்பர இடைவேளைகளில் கண்டிபிடிக்கப்பட்டு, முகநூலில் Like செய்து பின்பற்றுபவர்களின் எண்ணிக்கையை வைத்து உண்மையாகிப் போன சித்தாந்தங்கள் அல்ல. நம் பாடப் புத்தகங்களிலும், பொருளாதாரத்திலும் அடிக்கடி சொல்லப்படும் உதாரணங்கள் தான் இவை. இவை பொய் என்றால் பல கேள்விகள் எழுகின்றன.
Free Market என்று ஒன்று கிடையாதென்றால் Market? 
Market என்று ஒன்று கிடையாதென்றால் பணம்? 
பணம் என்று ஒன்று கிடையாதென்றால் பண்டமாற்று? 
பண்டமாற்று என்று ஒன்று இல்லாமல் எப்படி தேவைகள் பூர்த்தி செய்யப்பட்டன? 
இப்படி பல்வேறு கேள்விகளை எழுப்புவதோடு மட்டுமில்லாது அதற்கான விடைகளையும் பணம் உருவாவதற்குக் காரணமாக இருந்த கடனின் வரலாற்றையும் மானிடவியல் ஆய்வின் மூலம் விளக்குவதே இப்புத்தகம். DEBT - The first 5000 years. முதல் 5000 ஆண்டுகளில் கடன்.

மொத்தத்தில் முதலாளித்துவ‌ சிந்தனைகளின் அடித்தளத்தைக் கருத்தியல் ரீதியாக மானிடவியல் ஆய்வின் மூலம் தகர்க்கிறது இப்புத்தகம். முதலாளித்துவத்தின் மீதான ஒரு வன்மாக இல்லாமல் ஒரு அறிவார்ந்த விவாத‌த்தை (intellectual discourse) முன்னெடுத்துச் செல்லும் நோக்கிலும், பணம் கடன் இவற்றின் வரலாற்றைப் புரிந்து கொள்ளும் நோக்கிலும் எழுதப்பட்டிருப்பது இப்புத்தகத்தின் சிறப்பு. இப்புத்தகத்தைப் பற்றி எழுதும் போது 5000 வருட வரலாற்றில் ஒரு வாசகருக்கு எப்பகுதிகளை எடுத்துக் கூறுவது, அதை எப்படி கோர்வையாகச் சொல்வது என்ற சிக்கல். அதைத் தவிர்ப்பதற்காக கோர்வையாக இல்லாமல் போனாலும் ஒரு சில பகுதிகளை மட்டும் கூறிவிட்டு மிச்சத்தை வாசகரின் வாசிப்பிற்கே விட்டு விடுகிறேன். பண்டமாற்றிலிருந்து பணம், பணத்திலிருந்து கடன் உருவாகியதாக பொருளாதாரப் புத்தகங்கள் குறிப்பிடுகின்றன‌. மானிடவியல் ஆய்வின்படி பண்டமாற்று நிகழவில்லை; மாறாக கடன் சொல்லி வாங்கிக் கொள்வதே நடந்திருக்கிறது. உதாரணமாக, பிரேம் என்பவ‌ருக்குப் பானை தேவைப்பட்டால், பானைகள் தயாரிக்கும் சேகரிடம் பேச்சுவாக்கில் தன் தேவையைக் கூறுவார். அன்றோ மறுநாளோ சேகர் பானையைப் பரிசாக வழங்குவார். பிறகு என்றைக்காவது சேகருக்குத் தேவையேற்படும் போது பிரேம் பரிசாக வழங்குவார். அது ஒரு மாதம் கடந்தோ, ஒரு வருடம் கடந்தோ கூட இருக்கலாம். அதேபோல் வாங்கிய பொருளுக்கு அதிகமாகவோ குறைவாகவோ கொடுக்க வேண்டும். அதே அளவு திருப்பிப் கொடுக்கப்பட்டால் உறவு முறிந்ததாகப் பொருள்படும். ஆக ஒரு சமுகத்தில் ஒருவருக்கொருவர் எப்போதும் கடன்பட்டவராகவே இருக்க வேண்டும். 

அதே காலகட்டத்தில் பணமாக செம்பு கம்பிகள், வாசனை திரவியங்களுக்குப் பயன்படும் மரக்கட்டைகள் பயன்படுத்தப் பட்டிருக்கின்றன. அவற்றை வைத்து நீங்கள் சந்தையில் பொருள் வாங்க முடியாது. மாறாக அவை தீர்க்க முடியாத கடனைக் குறிக்கவே பயன்பட்டிருக்கின்றன. உதாரணமாக, ஓரு பெண்ணைத் திருமணம் செய்துகொள்ள அவளுடைய பெற்றோருக்கு 40 செம்பு கம்பிகளையோ அல்லது ஆடு மாடுகளையோ கொடுக்க வேண்டும். இது வரதட்சணை போல் அல்லாமல் அவர்களுடைய‌ பெண்ணுக்கு இணையாக தன்னால் எதையும் கொடுக்க இயலாது; நான் தீர்க்க முடியாத கடன்பட்டிருக்கிறேன்; அதன் அடையாளமாக இதைப் பெற்றுக் கொள்ளுங்கள் என்பதே ஆகும். அதேபோல் குழந்தை பெற்றாலும் பெண்ணுக்குத் தீர்க்க முடியாத கடனை உணர்த்துவதற்காக ஏதாவது கொடுக்க வேண்டும்.
(http://www.wikipedia.org)

விஞ்ஞான அறிவியல் பெண்ணின் குரோமசோமில் இருந்து தான் ஆண் உருவானாதாகச் சொல்கிறது. குழுக்களாக ஓரிடத்தில் தங்கி வாழ மனிதயினம் ஆரம்பித்த போது, ஆண் வேட்டையாடப் போயிருக்கிறான்; பெண் குழுத் தலைவியாக இருந்திருக்கிறாள் என்று வரலாற்று அறிவியல் சொல்கிறது. தாய்வழிச் சமூகங்களாகத் தான் மனிதயினம் நாகரீகப் பாதையில் அடியெடுத்து வைத்திருப்பதாக மானிடவியலும் சொல்கிறது. இன்றும் தாய்வழி சமூகத்தைப் பின்பற்றும் பழங்குடியினரிடையே வரதட்சணையும், பணமீட்டும் வெறியும், பெண்விரோதக் குற்றங்களும் இல்லாததைக் காணலாம். சந்தையும் பணமும் உருவான பின்பு, தாய்வழி சமுகமாக இருந்தது தந்தைவழி சமுகமானது. எது ஒரு பெண்ணுக்கு இணையாக எதையுமே த‌ன்னால் கொடுக்கமுடியாது என்று உணர்த்தியதோ, அது ஒரு பெண்ணின் விலையாகிப் போனது. இந்த இடத்தில் விவிலியத்தில் வரும் நெகேமியா கதையில், கடன் வாங்கிய தகப்பனை விட்டுவிட்டு மகளைத் தூக்கிச் செல்வதின் காரணத்தைச் சிந்திப்பது அவசியம் என்கிறார் ஆசிரியர். பல்வேறு புராணங்களில் இது போன்ற கதைகள் இருந்தாலும்,  இதைச் சாதாரணமாக ஆதிகாலம் முதல் இப்படித்தான் நடந்திருக்கிறது என்று சொல்லிவிட்டுப் போகமுடியாது. ஏனென்றால் இந்தப் பழக்கம் இடையில் வந்துசேர்ந்ததுதான். கடனிற்காகப் பெண்ணை அல்லது பிள்ளைகளை விற்பதென்பது சந்தையும் பணமும் வந்த பிறகு தான் நடந்தேரியது. அதாவது, 'கடன்பட்டார் நெஞ்சம் போல் கலங்கினான் இலங்கை வேந்தன்' என்று கம்பராமாயணம் சொன்னாலும், கடன் என்ற சொல்லுக்கு இலங்கை வேந்தன் காலத்தில் இருந்த அதே அர்த்தம், கம்பர் காலத்தில் கண்டிப்பாக இல்லை. நம் காலத்து மீட்டர் வட்டியும், EMIம் கம்பர் காலத்தில் இல்லை.

சந்தை எப்படி உருவாகியது என்பதற்கு நாம் ஏன் வரி செலுத்த ஆரம்பித்தோம் என்பதை உணர்ந்து கொள்வது அவசியமானது. பெரும் படைகளைப் பராமரிப்பதின் சிக்கலை உணர்ந்த மன்னர்கள், படை வீரர்களுக்குத் தங்கத்தையோ வெள்ளியையோ காசாகக் கொடுத்துவிட்டு மக்களிடம் அதை வரியாக செலுத்த வேண்டுமென்று உத்தரவு பிறப்பித்தனர். விளைவு, சந்தை உருவாக்கம். வரி செலுத்துவதற்கான காசைப் படைவீரர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்தால் தான் பெறமுடியுமென்ற நிலை உருவானது. எங்கெல்லாம் மாநிலங்கள் / மாகாணங்கள் உருவானதோ அங்கெல்லாம் சந்தையும் பணமும் உருவானது. மாநிலங்கள் / மாகாணங்களுக்குக் கீழ் வராத தேசங்கள் அனைத்தும் தாய்வழி சமுகமாகவும், சந்தையும் பணமும் இல்லாத சமுகமாகவும் இருந்திருக்கின்றன‌. இந்த இடத்தில் ஆடம் ஸ்மித்தின் தடையற்ற சந்தைக்கு அடிப்படையாக இருக்கும் நியுட்டனின் சிந்தனை பற்றியும் தெரிந்து கொள்ளும் பொறுப்பை வாசகர்களுக்கே விட்டுவிடுகிறேன். இறுதியாக சில அரசியல் நிகழ்வுகளைச் சுருக்கமாக பார்த்துவிடலாம்.

மூன்றாம் உலக நாடுகள் எப்படி கடனில் தள்ளப்பட்டன என்பதற்கு, மடகாஸ்கரையும் கெய்ட்டியையும் உதாரணங்களாகச் சொல்லலாம். மடகாஸ்கரின் மீது படையெடுத்து வெற்றிபெற்ற பிரான்ஸ், தன் படையெடுப்பிற்கான செலவுகளுக்கு மடகாஸ்கர் கடன்பட்டிருப்பதாக அறிவித்தது. இந்த இடத்தில் வெற்றிபெற்ற நாடுகள் எப்போதும் செய்கிற செயல்தான் என்று நீங்கள் நினைத்தால் அது தவறு. கெய்ட்டி பிரெஞ்சுப் படைகளைத் தோற்கடித்ததற்காக கடனில் தள்ளப்பட்டது. மடகாஸ்கர் கடனைக் கட்டமுடியாமல் தவித்தபோது சமூக நலத்திட்டங்களைக் கைவிடக்கோரி உலக நாணய நிதியம் (IMF) அறிவுறுத்தியதால், கொசு ஒழிப்புத் திட்டத்தைக் கைவிட்டு பத்தாயிரத்திற்கும் அதிகமான மக்களைப் பலிகொடுக்க நேர்ந்தது. அதே நேரத்தில், ரிச்சர்ட் நிக்ஸன் காலத்தில் அமெரிக்கா, தங்க நியமத்திலிருந்து விலகி வெளிநாடுகளில் இருக்கும் டாலருக்கு இணையாகத் தங்கத்தைப் பெறமுடியாது என்று அறிவித்தது. தன் படைபலத்தின் மூலம் அமெரிக்கா மூன்றாம் உலக நாடுகளை மதிப்பில்லா டாலரைப் பயன்படுத்துபடி அறிவுறுத்தியது. ஆனால் அவர்கள் கடனைத் திருப்பி செலுத்தும்போது டாலரை ஏற்றுக் கொள்ள மறுத்து, தங்கத்தில் செலுத்த வற்புறுத்தியது. இதனால் டாலரிலிருந்து யூரோவில் வர்த்தகம் செய்ய முயற்சிகள் மேற்கொண்ட சதாம் ஹுசைனுக்கு என்ன நேர்ந்தது என்று உங்களுக்கே தெரியும்.

பணம் கடன் பற்றிய புத்தகம் என்பதால் நிறைய‌ அரசியல் நிகழ்வுகள் இதில் பின்னிப் பிணைந்திருக்கின்றன‌. உதாரணமாக, அர்த்தசாஸ்திரத்தில் குடியாட்சியை எப்படி நயவஞ்சகமாக ஓழிப்பது என்பது பற்றியும், குடிமக்களின் தேவைகள் அனைத்தும் பூர்த்தி செய்யாமல் வைத்திருந்தால் தான் தன் தேவைகளுக்கு உடனடியாக அவைகளைத் திரட்ட முடியும் என்று இருப்பதாகவும், ஹர்சா கோவில்களைக் கொள்ளையடிப்பதற்குத் தனி அமைச்சகத்தை வைத்திருந்தார் என்றும், முஸ்லிம் மன்னர்களின் நோக்கம் கோவில்களில் இருக்கும் தங்கமே தவிர மதத்துவேசம் இல்லை என்றும், கூலிப்படையாக கிரேக்கப் போர்வீரர்கள் படையெடுப்புகளில் பங்கு பெற்றதாகவும், அவர்களுக்குப் பெரும்பாலும் கொள்ளையடிக்கப்பட்டதில் பங்கு வழங்கப்பட்டதாகவும், முதலில் புத்த மதமே கோவில்களை அமைத்ததாகவும் பிற்பாடு அவை இந்து கோவில்கள் ஆனதாகவும் இந்தியா பற்றிய சில உதாரணங்களைச் சொல்கிறது இப்புத்தகம். (1930ல் இந்திய ஆட்சிப் பணியில் ஒபியத்திற்கென்று (Opium) ஒரு தனித் துறையே இருந்தது)

மத்திய கிழக்காசிய நாடுகள், மேற்கத்திய நாடுகள், சீனா, ஆப்பிரிக்கா என அனைத்துப் பகுதிகளும் இப்புத்தகத்தில் ஆய்வுக்கு உட்படுத்தப்படுபடுகின்றன‌. உதாரணமாக கிறித்துவம் சொல்லும் 10 கட்டளைகளில் 7 மற்றும் 10 ஒன்றுபோல் தெரிந்தாலும் தனித்தனியாகச் சொல்வதன் காரணம், கிறித்துவத்தில் பலவற்றிற்கு விளக்கம்கூற முற்பட்ட போது ஏற்பட்ட சித்தாந்த குழப்பங்கள், இந்து கிறித்த‌வம் இஸ்லாம் யூதம் போன்ற மதங்களில் கடன் குறித்த பார்வைகள், அவை காலப்போக்கில் எப்படி மாற்றமடைந்தன‌, தாய்வழி சமுகம் எப்படி தந்தைவழி சமூகமாக மாறியிருக்கக்கூடும், பெண்கள் முகத்திரை அணிந்து கொள்ளும் பழக்கம் எப்படி உருவானது, பணத்தட்டுப்பாடு ஏற்பட்டபோது எத்தகைய அரசியல் மாற்றம் நிகழ்ந்தது, இப்படி பல அரசியல் நிகழ்வுகள் இந்த புத்தகத்தில் குறிப்பிடப்படுகின்றன‌.

கணித‌ம் போலவே, நோபல் பரிசுகளுக்கான துறைகளில் பொருளாதாரம் கிடையவே கிடையாது. ஆனால் பொருளாதாரமும் ஓர் அறிவியல் என்ற சிந்தனையைப் பரவலாக்கி, நோபல் பரிசுகளில் அதுவும் ஒன்று என்ற பிம்பத்தைச் சாமானியன் வரை கொண்டு சேர்த்திருப்பதும் சமீபத்திய சித்தாந்த இடைச்செருகல் தான். அதுவும் கூட இதுவரை பெண்களுக்குத் தரப்பட்டதில்லை. கடவுள் போல பொருளாதாரம். வசதியான பொய்கள் காலந்தோறும் திணிக்கப்படுகின்றன. ஏதோவொரு மாயை நோக்கி நடத்திச் செல்லும் அப்பொய்கள், பெரும்பாலும் பெண்விரோத செயல்களையே செய்கின்றன.

- பிரேம்குமார்
(http://premkumarkrishnakumar.wordpress.com)

Saturday, March 01, 2014

122. வெண்ணிற இரவுகள்

ஒவ்வொரு சந்திப்பின் முடிவில்
மிகவும் ஆயாசமடைந்து
கணவர்கள் மட்டுமே நண்பர்களாக இருப்பது
நல்லது என்று யோசிக்கத் தொடங்குகிறாள்
- மனுஷ்யபுத்திரன் ('சிநேகிதிகளின் கணவர்கள்' கவிதையிலிருந்து)

முட்களின் நடுவில் லீலிமலர்ப் போலவே இளங்கன்னியர் நடுவில் விளங்குகிறாள் என் அன்புடையாள்.
- திருவிவிலியம் (சாலமோனின் உன்னத சங்கீதம் 2:2)
----------------------------------------------------------------------------------------------------------------------------------
புத்தகம்:  வெண்ணிற இரவுகள் (குறும்புதினம்)
ஆங்கிலத்தில்: White Nights
ஆசிரியர்: ஃபியோதார் தாஸ்தோவ்ஸ்கி (Fyodor Dostoyevsky)
தமிழில்: ரா.கிருஷ்ணையா
வெளியீடு: எதிர் வெளியீடு, பொள்ளாச்சி (www.ethirveliyedu.in)
முதல் ஈடு: சனவரி 2013
பக்கங்கள்: 100
விலை: ரூபாய் 70
வாங்கிய இடம்: இந்த வருட சென்னைப் புத்தகக் காட்சி
----------------------------------------------------------------------------------------------------------------------------------
வெண்ணிற இரவுகள். உணர்ச்சிவயப்பட்ட காதற்கதை. ஒரு கனவுலகவாசியின் நினைவுகளிலிருந்து. புத்தகத்தின் முதல் பக்கத்தில் இருந்த இவ்வரிகள் கவனம் ஈர்த்தன. 10% புத்தகத்தில் இருக்கும் எஸ்.ராமகிருஷ்ணனின் முன்னுரையில் சில வரிகள் படித்துப் பார்த்து, வாங்கிவிட்டேன். 'குற்றமும் தண்டனையும்' தான் நான் படித்த ஃபியோதார் தாஸ்தோவ்ஸ்கியின் முதல் புத்தகம். அடுத்து 'வெண்ணிற இரவுகள்'. தமிழில் இயற்கை, இந்தியில் Jab we met (மீண்டும் தமிழில் கண்டேன் காதலை) போன்ற திரைப்படங்கள் இப்புதினத்தின் கருவுடையவை. 

ஓர் இளைஞன். ஓர் இளைஞி. நான்கு இரவுகள். ஒரு பகல். ஒரே இடம். அவ்வளவுதான்  மொத்தக் கதையும். இவ்விரண்டு புத்தகங்களிலும் முக்கிய பாத்திரமாக சித்தரிக்கப்படும் இளைஞர்கள் சிக்கலான மனப்பிரச்சனைகள் கொண்டவர்கள்; தனக்குத் தானே பேசிக் கொள்பவர்கள்; தன்னை அங்கீகரிக்க மறுக்கும் இவ்வுலகிடம் இருந்து விலகியே இருந்து மவுனம் காப்பவர்கள்; ஆனால் உலகின் அழகியலை ரசிப்பவர்கள். அவர்கள் தான் வாழும் நகரின் வீதிகளை இரவின் துணையுடன் ரசிப்பவர்கள்.
(http://discoverybookpalace.com/)
முதல் புத்தகத்தின் இளைஞனைப் போலவே இவனும் இளைஞி ஒருத்தியை ஓர் இரவில் சந்திக்கிறான். அதுவரை எந்தப் பெண்ணிடமும் பேசியிராத அவனை அவளின் துயர நிலை பேசவைக்கிறது. எதையெதையோ பேசுகிறான். பெயர் சொல்லாமல் விடை பெறுகிறாள். அடுத்த மூன்று இரவுகளும் அவர்கள் அதே இடத்தில் சந்தித்துக் கொள்வதும், அவர்களுக்குள் நடக்கும் தத்தம் வாழ்க்கை பற்றிய உரையாடல்களுமே இப்புதினம். ஃபியோதார் தாஸ்தோவ்ஸ்கியின் நாயகர்களின் மனநிலைகளினூடே புதினங்கள் பெரும்பாலும் பயணிப்பதால், அவர்களைப் படிக்கும்போதும் கிடைக்கும் அனுபவத்தை எழுத்தில் சொல்ல அந்நாயகர்களைப் போலவே நானும் தடுமாறுகிறேன்.  ஆதலால், எஸ்.ராமகிருஷ்ணனின் முன்னுரை இடம்பெற்றுள்ள இச்சுட்டியைத் தங்களின் வாசிப்பிற்குத் தந்துவிட்டு நான் விடைபெறுகிறேன். கூடிய விரையில் The Idiot  பற்றி விரிவாக எழுதுகிறேன்.

- ஞானசேகர்