Thursday, April 20, 2006

5. வில்லோடு வா நிலவே!

புத்தகத்தை வெளியிட்டோர் - "சூர்யா பதிப்பகம்", சென்னை
புத்தகத்தின் விலை - 75 ரூபாய் (2001ல்)
வெளியான ஆண்டு - 1993
------------------------------------------------------------------


















இந்தப் புத்தகத்தை எழுதிய வைரமுத்துவுக்கு அறிமுகமே தேவையில்லை. தமிழ்க் கவிதைகளைக் காதலிக்கும் பெரும்பாலானோர் இவரின் கவிதைகளோடே தத்தம் பயணத்தைத் தொடங்கி இருப்பார்கள்(நானும்தான்). எனவே நேரடியாக நூலைப் பற்றிப் பார்ப்போம்.

இந்தப் புத்தகத்தைப் பற்றி வைரமுத்துவின் வார்த்தைகளாலேயே சொல்வதென்றால்,
"ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன் சேர அரச குடும்பத்தில் வருணபேதம்வந்து புகுந்த வேளையில் அதை எதிர்த்தாடிய ஓர் இளைய சேரன் கதை! இதைக் கதையாகவும் வாசிக்கலாம், கவிதையாகவும் நேசிக்கலாம்"
எனலாம்.

இந்தப் புத்தகத்தை முதன்முதலாக நான் படிக்க நேர்ந்தது, என் 13 ஆம் வயதில். தமிழ் மீதும் வைரமுத்து மீதும் அப்போதே தொடங்கிய பற்றுதல் இன்றும் தொடர்கிறது.

இது ஒரு நாவல் என்பதால், கதை படிப்பவர்களுக்கும், கவிதை நடையிலேயே அமைந்திருப்பதால் கவிதைப் பிரியர்களுக்கும் நல்ல விருந்தாய் இருக்கும் என நம்புகிறேன்.

சேரன் செங்குட்டுவன், களங்காய்க்கண்ணி நார்முடிச்சேரல், இளங்கோவடிகள் இவர்களின் தம்பி "சேரலாதன்" என்னும் சிற்றரசனே இக்கதையின் நாயகன். காக்கைப்பாடினியார் என்று பின்னாட்களில் அழைக்கப்பட்ட "நச்செள்ளை" எனும் புலவரே இக்கதையின் நாயகி.

கதைக்களம் சிலப்பதிகாரத்துக் காலம் என்றாலும், (நல்லவேளை!) எல்லோருக்கும் புரியும்படியான தமிழையே பயன்படுத்தி இருக்கிறார் கவிஞர்.

இந்நாவலின் முன்னுரையில் கவிஞர் கீழ்க்கண்டவாறு குறிப்பிடுகிறார்,
"இளைய தலைமுறைக்கு இரண்டு குணங்கள் வேண்டும்.
ஒன்று எதிர்காலம் குறித்த முன்நோக்கும் உணர்வு!மற்றொன்று, வரலாறு குறித்த பின்நோக்கும் உணர்வு!"

எனவே, வரலாற்றில் தன்னை மிகவும் நெருடிய, கவர்ந்த ஓர் உண்மையை அடிப்படையாக வைத்து, கற்பனை கலந்து இந்த நாவலைப் படைத்திருக்கிறார் கவிஞர்.

வருணபேதம் தலை தூக்கத்தொடங்கிய காலத்தில், வருணங்களையும், அதை வைத்துப் பிழைப்பு நடத்துபவர்களையும் பற்றிச் சிறிதும் கலங்காமல் தமிழ்க்கவிதையாய் வாழ்ந்த, வேறு இனத்தைச் சேர்ந்த நச்செள்ளையைத் தன் இணையாகக் கொண்டான் இளைய சேரன் சேரலாதன் என்பது வரலாற்று உண்மை.

இதைச்சுற்றி தன் தமிழால் கோட்டை கட்டியிருக்கிறார் கவிஞர். தமிழர்களின் மரபு, அக்காலத்திய வழக்கங்கள்,அரசகுல மாண்பு, தமிழின் பெருமை, தமிழ்நாடு பிற நாடுகளுடன் கொண்டிருந்த வாணிபத்தொடர்பு என்று பல செய்திகள் ஒரு காதல் கதையோடு இழையோடி இருக்கின்றன.

உம்பற்காடனின் நட்பு, சேரலாதனின் காதல், வீரம், காமம், நச்செள்ளையின் தமிழ், குருமார்களின் சூழ்ச்சி, என்று உணர்ச்சிகள் எங்கெங்கும் குவிந்து கிடக்கின்றன.

உன்னதப் பெண்ணின் இலக்கணம் சொல்வதிலாகட்டும், மடலேறுதல் போன்ற பழந்தமிழ்ப் பண்பாடுகளை விளக்குவதிலாகட்டும், சேரலாதன் - நச்செள்ளை காதல் காட்சிகளைக் காட்சிப்படுத்துவதிலாகட்டும், எல்லாவற்றிலும் தனித்து நிற்கிறார் வைரமுத்து.

முதல் அத்தியாயம் தொடங்கி, கடைசி வரை கொஞ்சமும் ஆர்வம் குறையாதவாறு படைத்திருக்கிறார் கவிஞர். ஒவ்வொரு காட்சியிலும் காதலும், தமிழும் கொஞ்சி விளையாடுகின்றன.

எல்லாவற்றிற்கும் மேலாக, தான் சொல்ல வந்த கருத்தைக் கொஞ்சம் அழுத்தமாகவே சொல்லியிருக்கிறார்.

தமிழைக் காதலிப்பவர்களுக்கும், காதலிக்கும் தமிழர்களுக்கும் கண்டிப்பாகப் பிடிக்கும்.

-சேரல்

5 comments:

Arvind said...

Pramatham! Ovvoru vimarsanamum arumai!

J S Gnanasekar said...

புத்தகத்தின் விலை - 75 ரூபாய் (2006ல்)

-Gnanasekar

J S Gnanasekar said...

சேரலின் பரிந்துரைப்படி, "வில்லோடு வா நிலவே" படிச்சாச்சு. படிக்கும்போது, இப்புத்தகத்தின் பெயர் மட்டும், எளிமையாக வைக்கப்பட்டுவிட்டதாகத் தோன்றியது, கடைசித்தாளைப் படிக்கும்வரை. நல்ல புத்தகம். 'தண்ணீர் தேசம்' மறுவாசிப்பு செய்ததுபோல், ஒரு திருப்தி.

அந்தச் சேரலின் கதை தெரிந்துவிட்டது. இந்தச் சேரலுக்கு நச்செள்ளை என்று ஏதாவது கதை உண்டா?

நான் போய்ட்டு வர்றேன். எனெக்கெதுக்கு வம்பு?

-ஞானசேகர்

ப்ரியன் said...

புத்தக விமர்சனம் நல்ல செயல் சேரல் தமிழ் வலைப்பதிவு உலகில் இத்தகைய நல்ல செயல்கள் குறைவு...ம் தொடருங்கள்

சேரலாதன் பாலசுப்பிரமணியன் said...

நன்றி...ப்ரியன்.