வெளியான ஆண்டு : 1999
வெளியிட்டோர் : Penguin Books India (P) Ltd, New Delhi
புத்தகத்தின் விலை : 395 ரூபாய்கள்
--------------------------------------------------------------

நண்பர் ஞானசேகர் பாணியில் இப்புத்தகத்தின் ஆசிரியர் குஷ்வந்த் சிங்கைப் பற்றி நான் எதுவும் சொல்லவில்லை. படிப்பவர்களின் தேடல் முயற்சி தொடரட்டும்(ஆங்கிலப் புத்தகங்கள் படிப்பவர்களுக்கு இவரைப்பற்றிக் கொஞ்சமாவது தெரிந்திருக்கும்)
எனவே நேரடியாகப் புத்தகத்திற்கு வரலாம். குஷ்வந்த் சிங்கின் புத்தகங்கள், பெரும்பாலும் அரசியல், மதங்கள் போன்ற விஷயங்களை விமர்சனம் செய்வதாக அமைந்திருக்கும் என நான் கேள்விப்பட்டிருக்கிறேன். இந்தப்புத்தகம் அரசியலை மட்டும் விட்டு விட்டு, காதல், காமம், மதங்கள், நம் கலாச்சாரம் என பலவற்றைத் தாக்கி இருக்கின்றது.
இது ஒரு நாவல். மோகன் குமார் என்ற ஒரு மனிதனின் வாழ்க்கை மூன்று பகுதிகளில் விளக்கப்பட்டிருக்கிறது.
திருமணம் ஆகி 12 வருடங்களுக்குப்பிறகு, மனைவியையும் 2 குழந்தைகளையும் விவாகரத்து மூலமாகப் பிரியும், டெல்லியில் வாழும் சுமார் 40 வயதான ஒரு தொழிலதிபர் மோகன்குமார் என்பதாகத் தொடங்குகிறது கதை. மனைவியின் பிரிவுக்குப் பிறகு கிடைக்கும் தற்காலிகத் துணைகளின் மூலமாக, எப்படி தன் தனிமைக்கும், பாலுணர்வுகளுக்கும் மருந்து தேடிக் கொள்கிறார் என்பதாகக் கதை தொடர்கிறது.
இடையில், தன் இளமைப்பருவத்தைப் பற்றி மோகன் குமாரே சொலவது போல் அமைத்திருக்கிறார் ஆசிரியர். 20 வயது வரையில் இந்தியாவில் தன் ஒரே உறவான தந்தையுடன் வாழும் மோகன், தன் திறமையால் அமெரிக்காவில் ஒரு பல்கலைக்கழகத்தில் படிக்க வாய்ப்பு கிடைத்து செல்கிறார். அங்கே அவருக்கு மன ரீதியாக, உடல் ரீதியாக நிகழும் மாற்றங்கள் என்று பல விஷயங்களை அடுக்கிச்செல்கிறது கதை.
அங்கே அவர் முதன்முதலில் உடலுறவு கொண்ட கருப்பினப்பெண், பாகிஸ்தான் நாட்டுப் பெண் என்று பலருடனான தன் அனுபவங்களை வெட்டவெளிச்சமாக விளக்கி நாடு திரும்புகிறார் மோகன். பிறகு திருமண வாழ்க்கை, முதலிரவு, தேன் நிலவு, குழந்தைகள் என்று சரளமாக ஓடுகிறது கதை.
மீன்டும் மணமுறிவுக்குப் பிறகான நிகழ்காலத்தில் வரும் பெண்கள், அவர்களுடனான உறவு, மும்பையில் உறவு கொள்ளும் ஒரு விலைமாது, கடைசியாக எய்ட்ஸ், மரணம் என்பதாக முடிகிறது கதை.
சரி! இனி கதையைக் கொஞ்சம் வெளியிலிருந்து அலசுவோம். பாலுணர்வைத் தூண்டக்கூடிய பகுதிகள் புத்தகம் முழுதுமே உண்டு! இந்தப் புத்தகத்தை எழுதும் போது குஷ்வந்த் சிங்கிற்கு 80 வயதுக்கு மேல் என்பது குறிப்பிடத்தக்கது. அவரே இப்புத்தகத்தின் முகவுரையில் கீழ்க்கண்டவாறு குறிப்பிடுகிறார்,
"As a man gets older, his sex instincts travel from his middle to his head. What he wanted to do in his younger days, but did not because of nervousness, lack of response of oppurtunity, he does in his mind"
உன்மைதான்!
சரளமான ஆங்கிலம். நான் படித்தப் புத்தகங்களில் மிக எளிமையான ஆங்கிலத்தைக் கண்டது இதில்தான்.
ஒரு மனிதனின் வாழ்க்கையில் மிகச் சாதாரணமாக, எவ்வளவு பெரிய மாற்றங்கள் நிகழ்ந்துவிடுகின்றன என்று சொல்லி இருக்கிறார். 20 வயது வரை படிப்பது மட்டுமே வாழ்க்கை என்று வாழ்ந்த ஒருவன், சில மாதங்களிலேயே தன்னை விட ஒரு வயது மூத்த கருப்பினப் பெண்ணுடன் உடலுறவு வைத்துக்கொள்கிறான் என்பது முகத்திலடிக்கும் உண்மையாக இருந்தது.
யாஸ்மீன் என்னும் பாகிஸ்தான் பெண்ணுடனான் அவன் உறவு கொஞ்சம் வித்தியாசமானது. இவன் வயது இருபதுகளின் ஆரம்பம்! அவள் வயது முப்பதுகளின் முடிவு! கல்லூரி வகுப்பில் மதங்களைப் பற்றிய விவாதத்தில், இந்துத்துவத்தைத் திட்டிப் பேசும் இந்தப் பெண்ணுடன் மோதலில் தொடங்கும் இவன் அனுபவம், காதலில் அல்ல, காமத்தில் முடிகிறது. இந்தியா-பாகிஸ்தான் பிரச்சினைக்கு மோகன் தரும் தீர்வு மிகவும் வித்தியாசமானதுதான்!
விவாகரத்திற்குப் பிறகு, தனக்குத் தற்காலிகத் துணை வேண்டும் என விளம்பரம் கொடுக்க, வரிசையாக வந்து சேர்கிறார்கள் சரோஜினி என்கிற ஒரு பேராசிரியரும், மோலி என்கிற ஒரு பெண்ணும்!
பெண்களுடனேயே வாழ்ந்து முடிக்கும் மோகனின் இன்னொரு புறமும் வித்தியாசமாகவே இருக்கிறது! குழந்தைகளிடம் அன்பு, வியாபாரத்தில் வெற்றி, தோட்டத்தில் சிறு நீர் கழிப்பது, தகப்பனார் மீதான மாறாத அன்பு, தினம் செய்யும் சூரிய நமஸ்காரம், காயத்ரி மந்திரம், அடக்க முடியாத உடல் இச்சை என்று மோகன் என்ற தனி மனிதனின் பன்முகத்தன்மையைக் காட்டி இருக்கிறார் குஷ்வந்த் சிங்.
படிப்பது கொஞ்சமாவது பயன்பட வேண்டும் என்று நினைப்பவர்கள் இந்தப் புத்தகத்தைத் தவிர்க்கலாம். Just for Fun என்று நினைப்பவர்களும், எந்தப் புத்தகத்திலும் ஏதாவது ஒரு விஷயம் இருக்கும் என்ற(என் போல்) நம்பிக்கை இருப்பவர்களும் இதைப் படிக்கலாம்.
-சேரல்