Tuesday, May 16, 2006

8. INTERPRETER OF MALADIES

விமர்சனம் செய்பவர் நண்பர் ஞானசேகர்.

புத்தகம் : Interpreter of maladies
ஆசிரியர் : Jhumpa Lahiri (வங்காள எழுத்தாளர்)
மொழி : ஆங்கிலம்
விலை : ரூ.235

சிறப்பு : 2000ம் ஆண்டுக்கான புலிட்சர் பரிசு வாங்கிய புத்தகம் மற்றும் நான் சம்பாதித்து முதலில் செய்த செலவு
------------------------------------------------------------------------------வழக்கம்போல், ஆசிரியரை உங்களுக்கு அறிமுகப்படுத்தி வைத்து, உங்களைச் தெரிந்துகொள்ள விடாமல் செய்ய, நான் விரும்பவில்லை.

11 சிறுகதைகளின் தொகுப்பே இப்புத்தகம். பொதுவாக, எந்த மொழியிலுமே நான் சிறுகதைகள் படிப்பதில்லை. சரி, புலிட்சர் பரிசு வாங்கிய ஒரு புத்தகத்தைப் படித்தோம் என்ற பெருமையாகச் சொல்லிக் கொள்ளத்தான், இப்புத்தகத்தை வாங்கினேன். இன்னொரு காரணம், இதன் அருமையான, வித்தியாசமான தலைப்புதான் - "பிணிகளை விளக்குபவர்". எனக்குப் பிடித்த, சில கதைகளைப் பற்றி மட்டும் இங்கே சொல்கிறேன்.Halder என்ற ஒரு கதையில், மனநிலை பாதிக்கப்பட்ட ஒருத்தி , ஒரு அடுக்குமாடிக் குடியிருப்பில், எப்படி எல்லாம் நடத்தப்படுகிறாள் என்று நன்றாக சொல்லி இருப்பார். தமிழில்கூட இதுபோல பலகதைகள், நான் வார இதழ்களில் படித்து உள்ளேன். சாகித்திய அகாடமி விருது வாங்கிய ஒரு தமிழ் எழுத்தாளர்கூட, இதுபோல ஒரு கதை எழுதி இருக்கிறார். ஆனால், எல்லா கதைகளிலும் ஒரே முடிவுதான்; சொல்லப்படும் சூல்நிலைகள்தான் வித்தியாசப்பட்டன. அனால், இந்த Halder கதையில், அப்பெண் யாரோ ஒருவனால் கற்பமாக்கப்பட்டபின்கூட, கதை முடியாமல் இருப்பதுதான், ஆசிரியரின் எழுத்துத் திறமை. புத்தகத்தின் ஆசிரியர் என்ற ஒரு பெண், இன்னொரு பெண்ணை நன்கு புரிந்து எழுதி இருந்தார்.

இன்னொரு கதையில், அமெரிக்காவிற்கு வாழ்க்கைப்பட்டு போன, அதிகம் படிப்பறிவு இல்லாத ஒரு பெண்ணின் மனநிலையை அற்புதமாக விளக்கி இருக்கிறார்.

எனக்கு மிகவும் பிடித்த கதை, புத்தகத்தின் தலைப்பிலேயே அமைந்த "Interpreter of maladies" என்ற கதைதான். ஒரியா மொழி தெரியாத ஒரு டாக்டரிடம், ஒரியா மொழி பெயர்ப்பாளராக பணியாற்றும், மொழிகள் தெரிந்த ஓர் ஏழையின் கதை இது. இப்போது புரிகிறதா, தலைப்பின் அர்த்தம்? தமிழில், எஸ்.ராமகிருஷ்ணனின் தலைப்புகள் போல, சும்மா நச்சுன்னு! டாக்டரிடம் வேலை இல்லாத நேரங்களில், சுற்றுலாப் பயணிகளுக்கு மொழிபெயர்த்து சம்பாதிக்கிறான். நாற்பது வயதிலும், மனைவியின் முழங்காலைக்கூட பார்த்திராத, ஓர் அப்பாவிக் கணவன் அவன்.

அவனுக்குள் பல நாட்களாக காமம், வடிகால் தேடி தழும்பி வழியக் காத்திருக்கும் நேரத்தில், சுற்றுலா வரும் ஒரு தம்பதிக்கு பூரி ஜெகன்நாதர் கோவிலைச் சுற்றிக் காட்டுகிறான். பேச்சுவாக்கில், அப்பெண் தனது கணவனுக்கு ஏற்கெனவே துரோகம் செய்தவள் எனவும், இவன் மனைவி இருந்தும் சந்யாசி எனவும் தெரிய வருகிறது. இருவரும், தங்களுக்குள் ஒருமுறை உடலுறவு கொள்ள தீர்மானிக்கிறார்கள். சந்தர்ப்பமே கிடைக்காமல், கனவுகளிலேயே எல்லாவற்றையும் செய்துவிட்டு, 100 நாட்கள் தாண்டி ஓடும் பல தமிழ் திரைப்படங்களைப் போல் அல்லாமல், செக்ஸ் என்பதில் பல்வீனமாய் இருந்தாலும், அதைவிடப் பல பலவீங்கள் மனிதனிடம் உண்டு. அப்பலவீனங்களின் முன், நடைமுறையில் செக்ஸ் என்ற பலவீனம் தோற்றுத்தான் போகிறது என்ற அற்புதமான உண்மையைச் சொற்களில் சொல்லாமல், காட்சிகளில் சொல்லி, கதையை முடிக்கிறார் ஆசிரியர். பிணிகளை விளக்குபவன் மீண்டும் வேலைக்குத் திரும்புகிறான். இவன் பிணிகள் மட்டும் யாருக்கும் விளக்கப்படாமல் போகின்றன.

Interpreter of maladies - ஆர்ப்பாட்டம் இல்லாத, உணர்ச்சிவசப்பட வைக்காத ஓர் அமைதியான புத்தகம்.

-ஞானசேகர்

2 comments:

Boston Bala said...

அறிமுகத்திற்கு நன்றி.

சித்தார்த் said...

நல்ல விமர்சனம். நான் நீண்ட நாட்களாக எழுத வேண்டும் என நினைத்திருந்தேன். எனக்கு தொகுப்பில் மிகவும் பிடித்த கதை முதல் கதை தான். (powercut or something like that). குழந்தை இறந்து பிறக்க, அது அக்கணவன் மனைவிக்கிடையே நிகழ்த்தும் மாற்றங்களை, இடைவெளியை மிக அழகாக சொல்லும் கதை. கதையின் ஒட்டுமொத்த premise கொஞ்சம் melodramaticஆனது தான் எனினும், அதை கூறிய விதத்தில் இருந்த அந்த மெல்லியத் தன்மை என்னை மிகவும் ஈர்த்தது. இன்றும் இக்கதையை, அதன் முடிவை யோசிக்கையில் ஏதோ செய்கிறது... நினைவுகளை கிளரியதற்கு நன்றி ஞானசேகர். :)