விமர்சனம் செய்பவர் நண்பர் ஞானசேகர். நன்றி!
------------------------------------------------------------
புத்தகம் : Shalimar the clown
ஆசிரியர் : சென்னையை மணந்த மும்பைக்காரர் சல்மான் ருஷ்டி (Salman Rushdie)
மொழி : ஆங்கிலம்
விலை : ரூ.395/ல் இருந்து
-------------------------------------------------------------
புத்தகத்தின் பெயரைப் பார்த்தவுடன், காஷ்மீரைப் பற்றிய கதை என்று சிலர் சற்றே யூகிக்கலாம். அதுவும் சரியே. இதைப் படித்துவிட்டு, புத்தகத்தை எவரேனும் படிக்க தூண்டப்பட்டால், சுவாரஸ்யம் குறைந்துவிடும் என்பதற்காக கதையை ஒரமாக ஒதுக்கி வைத்துவிட்டு, நான் ரசித்த கதைக்களத்தைப் பற்றி மட்டும் கொஞ்சம் சொல்கிறேன்.
மொகலாய மன்னர் ஜஹாங்கீரால் காஷ்மீரில் அமைக்கப்பட்ட சாலிமார் (Shalimar) தோட்டத்தில் பிறந்த ஒரு கழைக்கூத்தாடியின் கதைதான் இப்புத்தகம். வாழ்க்கைத்துணை தனக்கு செய்த துரோகத்திற்காகப் பழிவாங்கும் சாதாரண கதைதான். முதல் நாற்பது பக்கங்கள் படித்து விட்டாலே, மீதி கதையின் போக்கை உங்களாலேயே யூகிக்க முடியும். கிட்டத்தட்ட ஜெனரல் டயரின் கதைமாதிரி என்று ஆசிரியரே சொல்கிறார்.
ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கும் பெயர் வைத்ததில் ஆசிரியர் பிரமிக்க வைக்கிறார். ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கும் 'அன்பே சிவம்' பாணியில் இரண்டு பெயர்கள். உதாரணமாக, ஒரு கதாபாத்திரத்தின் ஒரு பெயர் காஷ்மிரா, மற்றொரு பெயர் இந்தியா. ஓர் இடத்தில் அவளைப் பற்றி சொல்லும்போது, "இந்தியாவைப் போல் விரிந்த, துணையாக, அளவுக்கு அதிகமாக, குரூரமாக, அதிர்வாக, கும்பலாக, பழைமையாக, இரைச்சலாக, புராணமாக, எந்த வையிலும் மூன்றாவது உலகமாக இருக்க விரும்பாத அவள் காஷ்மீராவாகவே இருக்கிறாள்" என்கிறார் ஆசிரியர். இதற்குமேல் என்ன வேண்டும், இந்தியாவையும், காஷ்மீரையும் ஒப்பிட?
ஓரிடத்தில் வரும் உரையாடல் இது : "Freedom is not a tea party India, freedom is a war". இங்கு இந்தியா எனக் குறிப்பிடப்படுவது அப்பெண்ணின் கதாபாத்திரம். என்ன ஒரு வார்த்தை விளையாட்டு!
கதாப்பாத்திரங்களின் பின்னணியிலும் ஆசிரியர் என்னைப் பிரமிக்க வைத்துவிட்டார். தட்டச்சு கண்டுபிடித்த குட்டன்பர்க்கின் அச்சகத்தில் அவருடன் வேலை பார்த்த ஒருவரின் வழித்தோன்றல் ஒரு கதாபாத்திரம். அலெக்ஸாண்டர் இந்தியாவில் படையெடுத்தபோது, அவரின் படை காஷ்மீரில் செய்த சில்மிஷங்களின் வழித்தோன்றல் இன்னொரு கதாபாத்திரம். உச்சக்கட்ட பிரமிப்பு, இந்தியாவின் அமெரிக்கத் தூதராக வரும் அந்த ஒரு கதாப்பாத்திரம்தான். ராதாகிருஷ்ணன், வி.வி.கிரி, இந்திராகாந்தி போன்றவர்களுடன் அத்தூதர் பேசுவதாகக் காட்டப்படும் நிகழ்ச்சிகளும், வியட்நாம் போரைக் காரணம் காட்டி அவரைப் பதவியில் இருந்து அமெரிக்கா நீக்காமல் இருந்தது என்று சொல்வதில் இருந்தும், இப்படி ஒரு தூதர் உண்மையிலேயே இந்தியாவில் இருந்தாரா என என்னை கூகிளில் தேடவைத்துவிட்டன.
பழங்கால கற்பனை கதாபாத்திரமான மேலைநாட்டுக் கும்பகர்ணன் ரிப் வேன் விங்கிளையும், வரலாற்றின் தந்தை எனப் போற்றப்படும் ஹிப்போகிரேட்டஸையும், இன்னும் சிலரையும் ஆங்காங்கே உவமைகளாக அருமையாகக் கையாண்டு இருக்கிறார் ஆசிரியர். அலெக்ஸாண்டரின் படை கிரேக்க நாடு திரும்பி, "இந்தியர்களின் உயிரணுக்கள் கருப்பு நிறமுடையவை" என்று சொன்னார்களாம். ஒரு நிமிடம் இடைவெளி எடுத்துக்கொண்டு, அதை யோசித்துப் பாருங்கள். விளையாட்டு வினையாய்ப் போனது?
தொலைக்காட்சி அறிமுகமான ஒரு முஸ்லீம் கிராமத்தில் வரும் சண்டைகளும், தலிபான் பற்றிய சில நிகழ்ச்சிகளும், கதையின் முடிவின்மையும், உலகப் போர்கள்-வியட்நாம் போர்-இந்திய பாகிஸ்தான் போர் என பல போர்கள் கதை பயணிக்கக் காரணமாக அமைக்கப்பட்டு இருந்தாலும் காஷ்மீரும், சுவாரஸ்யமும் கொஞ்சம் குறைவே.
-ஞானசேகர்
4 comments:
நன்றி சேரல் அவர்களே.
பங்களாதேஷ், ரஷ்யா, இந்தியா (காஷ்மீர்) போன்ற நாடுகளின் ஏதோ ஒரு பிரச்சனையை மையமாக வைத்து எழுதப்பட்ட சில புத்தகங்களைப் பற்றி எனது கருத்துகளை உங்கள் தளத்தில் இடம்பெற வைத்ததற்கு நன்றிகள்.
தண்டவாளங்களே இல்லாத - ஒபியம் உற்பத்தியில் முதலிடம் வகிக்கும் -
தனது பெயரையே தனது கரன்ஸிக்கும் வைத்துக்கொண்ட - The biggest land locked contry in the world - அந்த நாட்டின் இன்றைய மிகப் பெரிய பிரச்சனையை அலசி ஆராயும் ஒரு புத்தகத்துடன் அடுத்து வருகிறேன்.
-ஞானசேகர்
Thanks for this post.
- Suresh Kannan
தவறான கருத்து ஒன்றைச் சொல்லிவிட்டேன்.
மங்கோலியாதான் The biggest land locked contry in the world என கொஞ்ச நாளைக்கு முன்னர்தான் தெரியவந்தது. எங்கு தவறான கருத்தைச் சொல்லி இருந்தேன் என்று கண்டுபிடிப்பதற்குள், பூமியுடன் சேர்ந்து இரண்டு முறை சுற்றிவிட்டேன்.
தவறுக்கு மன்னிக்கவும். இனி தவற மாட்டேன் என்ற நம்பிக்கையில்
- ஞானசேகர்
மீண்டும் குழப்பம். மங்கோலியாவா இல்லை கஸகஸ்தானா என்று இன்னும் குழப்பம்.
-ஞானசேகர்
Post a Comment