விமர்சனம் செய்பவர் நண்பர் ஞானசேகர். நன்றி!
--------------------------------------------------
புத்தகம் : The Kite Runner
ஆசிரியர் : Khaled Hosseini
மொழி : ஆங்கிலம்
--------------------------------------------------
ஆப்கானிஸ்தான் நாட்டைப் பற்றிய புத்தகம்.
அமீர், ஹாஸன் என்ற இரண்டு சிறுவர்கள்-நண்பர்கள். அமீர் வீட்டு வேலைக்காரரின் மகன் தான் ஹாஸன். தனது படிப்பறிவைப் படிப்பறிவு இல்லாதவர்களை ஏமாற்றுவதற்குப் பயன்படுத்தி அதில் சுகம் காணும் அற்ப சிறுவனாகவும், தனது நண்பன் தனக்காக பரிந்து பேசப் போய் தன் கண் முன்னே பாலியல் பலாத்காரம் (ஆண் ஆணையே) செய்யப்படும்போது மறைந்து நின்று வேடிக்கை பார்க்கும் ஓர் அற்ப நண்பனாகவும் தான், கதையின் நாயகன் அமீர் வலம் வருகிறார். மேல் உதடு கிழிந்து போய், நண்பனுக்காக எதுவும் செய்யும் ஒரு நட்பு பைத்தியமாக, தனது முன்னோர்கள் தன் தலையில் வைத்து போன அவமானங்களின் பாரத்தால் அமைதியாகவே வலம் வருகிறார் ஹாஸன்.
ஒருகாலத்தில், இருவரும் பட்டம்விட்டு ஓடி விளையாடிய வீதிகளில் ரஷ்ய பீரங்கிகள் வலம்வர ஆரம்பிக்கின்றன; இருவரும் கதை சொல்லி விளையாடிய மலைகளில் குண்டு மழை மொழிகிறது. உயிரைக் காப்பாற்றிக் கொள்ள, பூர்வீக சொத்தை எல்லாம் விட்டுவிட்டு, அமீரின் குடும்பம் பாகிஸ்தான் வழியாக அமெரிக்காவில் குடியேறுகிறது. அமீரின் சூழ்ச்சியால் அவமானப்படுத்தப்பட்ட ஹாஸனின் குடும்பம், தனது சொந்த ஊரில் குடியேறுகிறது.
அமெரிக்காவில் மனைவியுடன் வசதியாக வாழும் அமீர், பல ஆண்டுகள் கழித்து, இடம் பெயர்ந்தபோது உதவிய தனது தந்தையின் நண்பர் ஒருவரைக் காண, பாகிஸ்தான் வருகிறார். அவர் தனது கடைசி காலத்தில், அமீரின் குடும்ப ரகசியம் ஒன்றை அமீரிடம் சொல்ல, அதுவரை இருந்த அமீரின் மனநிலை அப்படியே தலைகீழாக மாறிப் போகிறது.
அப்போதைக்கு ஆப்கானிஸ்தானில் தலிபான் ஆட்சி நடந்துவந்த நேரம். தனது பால்ய பருவத்தில் ஹாசனுக்குச் செய்த கொடுமைகளுக்குப் பரிகாரம் தேட ஆப்கானிஸ்தானுக்குள் நுழைகிறார் அமீர். தனது சொந்த நாட்டை ஒரு சுற்றுலாதளம் போல உணரும் அமீர், வந்த காரியத்தை முடிக்க எவ்வளவு கஷ்டப்படுகிறார் என்பதும், அவர் மேல் உதடு எப்படி கிழிகிறது என்பதும், மீண்டும் பாகிஸ்தான் வழியாக அமெரிக்காவிற்கு உயிருடன் எப்படி வருகிறார் என்பதே மீதி கதை.
சிறு வயதில் தர்பூசணி கொட்டைகளைத் தூரத்தில் துப்பி விளையாடியதை பிற்காலத்தில் நினைவுபடுத்தி பார்ப்பதையும், நாட்டின் எல்லை கடக்க கணவனின் கண் முன்னே மனைவியின் உடல் சுகம் கேட்கும் ஒரு ரஷ்ய படைவீரன் சம்மந்தப்பட்ட நிகழ்ச்சியும், சிறு வயதில் அமீர் செய்யும் ஒவ்வொரு தவறையும் உடனுக்குடன் விமர்சித்து இருப்பதையும், அமீரின் குடும்ப ரகசியமும், அமீருக்கும் ஒரு தலிபான் வீரனுக்கும் நடக்கும் கை சண்டையும், வலுவான கதையும், இன்னும் பல நிகழ்ச்சிகளும் இப்புத்தகத்திற்குப் பலங்கள்.
மொத்தத்தில், ஓர் ஆண்மை இல்லாத கதாபாத்திரம், தனது மனைவியை இன்னொருவன் மூலம் குழந்தை பெற்றுக் கொள்ள அனுப்பியதால் வந்த பிரச்சனைகளையும், இன்னொரு ஆண்மை இல்லாத காதாபாத்திரம், ஒரு குழந்தையைத் தத்தெடுக்கக் கிழம்புவதால் வரும் பிரச்சனைகளையும், ரஷ்யாவின் ஆப்கானிஸ்தான் ஆக்கிரமிப்பு, தாலிபான் ஆட்சி என்ற பின்னணியில் சொல்லி இருக்கும் அற்புதமான - ஆண்மை உள்ள - உயிரோட்டமான கதைதான் இது.
கொசுறு 1 : உலகின் மிக உயரமான புத்தர் சிலை, நாம் வாழும் இக்காலத்தில் ஆப்கானிஸ்தானில் இடிக்கப்பட்டதால், அமெரிக்காவின் ஆப்கானிஸ்தான் ஆக்கிரமிப்பிற்காக அழும் பாப்பரசர் இரண்டாம் ஜான் பாலின் படத்துடன் தினத்தந்தி வெளியிட்ட இந்தத் தலைப்பு மனிதன் என்ற முறையில் என்னைக் கேவலப்பட வைத்தது: " ஆதி மனிதன் அவதரித்த மண்ணில் நாகரீக மனிதன் நடத்தும் யுத்தம்".
கொசுறு 2 : இப்புத்தகத்தைப் படிக்க வேண்டும் என்ற எண்ணம் இருந்தால், கடந்த 40 ஆண்டுகளில் ஆப்கானிஸ்தான் பற்றி கொஞ்சம் தெரிந்து கொண்டு படித்தால், முழுக்கதையும் தெளிவாக புரியும். உதவிக்கு விகடன் பிரசுரத்தின் ஜி.எஸ்.மணி அவர்கள் எழுதிய 'பிரச்னை பூமிகள்' என்ற புத்தகத்தின் ஆப்கானிஸ்தான் பற்றிய குறிப்புகள் போதுமானவையே.
கொசுறு 3 : ஆப்கானிஸ்தான் மீது ரஷ்யாவின் ஆக்கிரமிப்பைப் பற்றிய ஓர் அற்புதமான ஆங்கிலப்படம் உள்ளது. அதன் பெயர் - The beast of war.
கொசுறு 4 : "பொதுவாக, எதாவது ஒரு நாடு இன்னொரு நாட்டின் மீது படை எடுத்தால், ரஷ்யா ஏதும் கண்டனம் தெரிவிப்பது இல்லை. ஆப்கானிஸ்தான் விஷயத்தில் நீ மட்டும் யோக்கியமோ என்று யாராவது கேட்டு விடுவார்களோ என்ற பயத்தில்தான்" - எதோ ஒரு பிரபலமான தமிழ் புத்தகத்தில் இப்படி படித்து இருக்கிறேன்.
சரி, மீண்டும் வேறு ஏதாவது பிரச்சனையுடன், மன்னிக்கவும், புத்தகத்துடன் சந்திக்கிறேன்.
-ஞானசேகர்
2 comments:
உங்கள் விமர்சனம், இந்த புத்தகத்தைப் படிக்கும் ஆவலைத்தூண்டுகின்றன. நன்றி.
பாகிஸ்தான் அதிபர் முஷாரஃப், தனது சுய சரிதையில் இந்தப் புத்தகத்தைச் சிறந்த புத்தகம் எனக் குறிப்பிட்டு இருக்கிறார்.
-ஞானசேகர்
Post a Comment