ஒரு சிறுகதை என்பது முடிவதற்குச் சற்று முன்பு தொடங்குகிறது
- எழுத்தாளர் சுஜாதா
------------------------------------------------
புத்தகம் : நடந்து செல்லும் நீரூற்று
ஆசிரியர் : எஸ்.ராமகிருஷ்ணன்
வெளியிட்டோர் : உயிர்மை பதிப்பகம்
வெளியான ஆண்டு : 2006
விலை : ரூ70
------------------------------------------------
சாதாரண மனிதர்களின் வாழ்க்கைச் சம்பவங்களை வைத்து எழுதப்பட்ட சிறுகதைகளின் தொகுப்பு இது. எஸ்.ராமகிருஷ்ணனுக்கு அறிமுகம் எதுவும் தேவை இல்லை. தீவிர வாசிப்பில் இருக்கிற யாருக்கும் நெருக்கமானவர் இவர்.
எஸ்.ராமகிருஷ்ணனின் மற்ற புத்தகங்களைப் படித்தவர்கள் இவரை ஒரு மென்மையான ரசிகராகப் புரிந்திருக்கலாம். அந்த புரிதலின் அடித்தளத்தை அசைத்துப்பார்க்கும் படைப்புகள் அடங்கியது இத்தொகுப்பு.
மொத்தம் 12 சிறுகதைகள் இருக்கின்றன. குறைந்தது பத்து கதைகளாவது உங்களை உருக்குலைத்துப்போடும் என்பது என் நம்பிக்கை.
மூன்று குடும்பக்கதைகள் என்ற தலைப்பில் மூன்று குறுங்கதைகளைத் தந்திருக்கிறார். கடந்த காலத்தில் செய்யாத தவறுக்காக தண்டனை பெற்ற ஒரு மனைவியின் வைராக்கியம், கணவன் இறந்ததும் முற்றுப்பெறுகிறது. இந்தப் பீங்கான் நாரைகள் சொல்லும் அம்மா உங்கள் வீட்டிலும் இருக்கலாம்.
இல்லறம் என்றொரு கதை. தேன் நிலவு கொண்டாடும் புது மண மக்களைப் பற்றியதொரு கதை. இரண்டு பக்கங்களுக்குள் என்னை அவமானப்படவைத்த இக்கதையின் கடைசி வரிகளை மட்டும் இங்கு தருகிறேன்.
அதன் பிறகு எல்லாப் பெண்களைப் போலவே அவளும் இனி தன் உடல் தன்னுடையதில்லை என்று ஒத்துக்கொண்டவளைப் போல அவன் இச்சையின் போக்கில் தன்னை ஒப்படைத்துக்கொள்ளத் துவங்கினாள். அவர்களது இனிமையான இல்லற வாழ்க்கை இப்படித்தான் துவங்கியது.
ஆண்மையின் வக்கிரத்தை அழுத்தமாகச் சொல்லும் வரிகள்!
இம்மூன்று சிறுகதைகளும் எஸ்.ராமகிருஷ்ணனின் இணையதளத்திலும் இடம்பெற்றுள்ளன. படிக்க விரும்புவோர் இங்கே செல்லவும்
இது போன்றதொரு உணர்ச்சியைத் தரக்கூடிய இன்னொரு சிறுகதை 'பி. விஜயலட்சுமியின் சிகிச்சைக் குறிப்புகள்'. கணவன் வீட்டாரின் பலாத்காரத்தால் மன நிலை பாதிக்கப்பட்டு, காப்பகத்தில் சேர்க்கப்பட்டு, பின் தன் தந்தையோடு தப்பி ஓடிப்போகும் ஒருத்தியின் கதை. இக்கதையை அவர் அமைத்திருக்கும் விதம் மிகப் புதுமை. ஆனால் அதை எல்லாம் வியக்க அனுமதிப்பதில்லை கதையின் உட்பொருள். படித்தபின் கண்டிப்பாகத் தூக்கம் தொலைந்த இரவு ஒன்று நமக்குக் கிடைப்பது உறுதி.
இன்னுமொரு புதுமை முயற்சி 'ஒரு நகரம், சில பகல் கனவுகள்' சிறுகதை. ஒரே சமயத்தில் ஒரு நகரத்தின் வெவ்வேறு சில இடங்களின் நடப்புகளை வைத்து புனையப்பட்ட கதை.
மிக இயல்பான, எந்தச் சலனத்துக்கும் ஆட்படாத, சீரான ஓட்டத்தைக் கொண்ட வாழ்க்கையை வாழும் மனிதர் ஒருவரின் வாழ்க்கையில் வந்த ஒரு ஞாயிற்றுக் கிழமையைப் பேசுகிறது 'அன்றைக்கு ஞாயிற்றுக்கிழமை' சிறுகதை.
நம் செயல்களும், பேசுகின்ற சிறு வார்த்தைகளும் மற்றவர் வாழ்க்கையில் எந்த மாற்றத்தை வேண்டுமானாலும் கொண்டு போய்ச் சேர்க்கலாம் என்று சொல்லாமல் சொல்கிறது இக்கதை.
பல் விழுந்த சிறுமி ஒருத்தியின் மன ஓட்டங்களைச் சொல்லும் சிறுகதை 'உடலறிதல்'. விழுந்த பல்லை யாருமற்ற இடத்தில் புதைக்க வேண்டி அலையும் சிறுமியின் பகல் பொழுது வெம்மையாகவே இருக்கிறது. இதில் வரும் எண்ணங்களும், நிகழ்வுகளும் நம் எல்லோருக்குமே நடந்திருக்கக்கூடிய சாத்தியம் உண்டு.
என்னுள் மிகுந்த பாதிப்பை ஏற்படுத்திய சில கதைகளை மட்டுமே இங்கு சொல்லி இருக்கிறேன். நல்ல வாசகத்தன்மையை வளர்த்துக்கொள்ள படிக்க வேண்டிய புத்தகம் இது.
- சேரல்
4 comments:
நல்லதொரு அறிமுகம்.. சிகிச்சைக்குறிப்புகளை மட்டும் எஸ்ராவின் இணையத்தில் படித்திருக்கிறேன். மற்றவற்றையும் படிக்கத்தூண்டுகிறது இப்பதிவு.
'இல்லறம்' மற்றும் 'பி. விஜயலட்சுமியின் சிகிச்சைக் குறிப்புகள்' எனது விருப்பங்கள். ரொம்ப யோசிக்க வைத்த, பாதித்த கதைகள். இரண்டும் பெண்ணை மையப்படுத்திய கதைகள்.
பல்லில்கூட ஈமொய்த்த ஒரு பெண்ணை நேற்று இரயில் நிலையத்தருகில் சாலையோரம் பார்த்தேன். 'பி. விஜயலட்சுமியின் சிகிச்சைக் குறிப்புகள்' கடைசி வரிகள் நினைவில் வந்து போயின.
'உடலறிதல்' கதையில் அலைவது ஒரு பெண் என்று நினைக்கிறேன்; சிறுவன் அல்ல. என்னிடம் இப்போது புத்தகம் இல்லை; சரிபார்க்கவும்.
-ஞானசேகர்
தம்பி சேகர்,
தவற்றைச் சுட்டிக்காட்டியமைக்கு நன்றி! அக்கதையில் வருவது 'சின்னு' என்கிற சிறுமிதான்; சிறுவன் இல்லை. திருத்திவிடுகிறேன்.
பாலா,
கண்டிப்பாக நீ படிக்க வேண்டிய புத்தகம். முயற்சி செய்யவும்.
-ப்ரியமுடன்
சேரல்
நன்றி சேரா. நிச்சயம் தேடிப்படிக்கிறேன்..!
Post a Comment