Saturday, March 21, 2009

32. மிதமான காற்றும் இசைவான கடலலையும்

--------------------------------------------------
புத்தகம் : மிதமான காற்றும் இசைவான கடலலையும்
ஆசிரியர் : தமிழ்ச்செல்வன்
வெளியிட்டோர் : தமிழினி
வெளியான ஆண்டு : 2006
விலை : ரூ 150

--------------------------------------------------

'பூ' திரைப்படம் பார்த்த பின் அதன் மூலக்கதையை எழுதிய எழுத்தாளர் தமிழ்ச்செல்வனின் கதைகளைப் படிக்க வேண்டும் என்று ஆர்வம் கிளம்பித் தேடத் தொடங்கினேன். 'உப பாண்டவம்' போன்ற தீவிர தேடல் இல்லை என்றாலும், இவர் எழுத்துகள் மீதான பார்க்காத காதலும் அடங்காமலே இருந்தது. சென்னைப் புத்தகக் கண்காட்சியில் தமிழினி பதிப்பகத்தாரிடம் இவரது இந்தச் சிறுகதைத் தொகுப்பு கிடைத்தது.

'நேருக்கு நேரான வார்த்தைகளில் நிகழ்வுகளை ஊடறுத்து மனங்களின் அடுக்குகளுள் தத்தளிக்கும் வாழ்வை இழுத்து வந்து கேள்விக்குள் நிறுத்தும் கதைகள்'

'கேலியும், சிரிப்பும், விளையாட்டுமாய், வறுமையைக் கடந்து செல்லப் பழகிவிட்ட ஒரு வாழ்வைப் பூச்சின்றிப் பேசும் கதைகள்'

இந்த வரிகள்தான் புத்தகத்தின் பின் அட்டையில் இடம்பிடித்திருந்தன.

உண்மைதான்! சமூக அளவீடுகளில் பின் தட்டில் வாழ்கிற மக்களின் வாழ்க்கையை எழுதியிருக்கிறார் எழுத்தாளர்.

கற்பனையைக் கொஞ்சம் வீட்டுக்கு வெளியே நிறுத்திவிட்டு, யதார்த்தத்தின் கைப்பிடித்து அழைத்து வருகிறார். 32 சிறுகதைகளைக் கொண்ட இந்தத் தொகுப்பில், முதல் 13 சிறுகதைகள் என்னுள் பெரிய பாதிப்பு எதையும் ஏற்படுத்தவில்லை. சிறு நிகழ்வுகளை ஊடறுத்துக் காட்டும் விளக்கக் கதைகளாகவே அவை எனக்குத் தோன்றின. ஆனால், அதன் பின் வந்த கதைகள், வாழ்வியல் அடிப்படைத் தத்துவங்களை எளிய மனிதர்கள் மூலம் பேசத்தொடங்கிவிட்டன.

இந்தக் கதைகள் பொதுவாக, தென் மாவட்டங்களையே கதைக்களமாகக் கொண்டிருக்கின்றன. தீப்பெட்டித் தொழிற்சாலையில் பணி செய்யும் மனிதர்களின் வாழ்க்கை, கணவன் மனைவி இடையேயான மனப்போராட்டங்கள், ஒதுக்கப்பட்ட மக்களின் உரிமைக்குரல் இவற்றைச் சுற்றியே நகர்கின்றன கதைகள்.

சாயம் பூசாத நிஜ வாழ்க்கை, பல இடங்களில் நம்மைத் திகைக்க வைக்கிறது. எண்ணெய்ப்பசை மின்னும் முகங்களில் கொஞ்சம் புன்னகையையும் ஓட்ட வைத்துப் போகும், தீக்குச்சி அடுக்கும் பெண்களைக் கண் முன் நிறுத்துகிறார்.

ஒரு போராளியாக, கவிஞனாக இருந்தவனை, தான் படித்த புத்தகத்தின் 26ஆம் பக்கத்திலயே வருடக்கணக்கில் நிறுத்தி வைத்துவிட்ட குடும்ப வாழ்க்கையைச் சாடுகிறது '26 ஆம் பக்கத்து மடிப்பு' என்ற சிறுகதை.

தனக்கென்ற கனவுகளையும், எதிர்காலம் குறித்த எதிர்பார்ப்புகளையும் கொண்டலையும் ஒருத்தியின் வாழ்வில் வருகிறான் 'குதிரை வண்டியில் வந்தவன்'; அவள் மீது மிகப் பிரியமாக இருக்கிற கணவன். ஆனாலும் எதிர்பார்ப்புகள், சின்னஞ்சிறு ஆசைகள் உடைக்கப்படுகிற போது அவள் சிதைந்து போகிறாள். இருவருக்கும் இடையேயான உணர்வுகளைச் சொல்லிப்போகிறது இச்சிறுகதை.

தன் பரம்பரை வாளோடு சிறு வயதிலிருந்தே பேசிக்கொண்டு வாழும் ஒரு மனிதனின் வாழ்க்கையைச் சொல்கிறது 'வாளின் தனிமை'. தென் மாவட்டங்களில் ஊடுருவி இருக்கும் சாதீய நோயின் பின்புலத்தையும் விளைவுகளையும் ஆராய்கின்றன, 'சொல்ல வருவது' மற்றும் 'ஒரு பிரம்பு ஒரு மீசை' சிறுகதைகள்.


வாழ்க்கையைப் படைப்பாக்கும் போது மட்டுமே அதில் உயிரோட்டம் இருப்பதாகப் படுகிறது.

'கதைகளைவிட வாழ்க்கை மர்மங்களும் திருப்பங்களும் நிறைந்ததாக அச்சமும் வியப்பும் ஊட்டுவதாக - கதைகளைப் பார்க்கினும் சுவாரஸ்யமானதாக முக்கியமானதாக இருப்பதாக நினைத்த ஒரு நாளில் கதைகள் என்னிடமிருந்து சொல்லாமலே விடைபெற்றுச்சென்றன' என்ற முன்னுரையில் இடம்பெற்ற தமிழ்ச்செல்வனின் இந்த வரிகள் சத்தியமானவை என்றே தோன்றுகிறது.

பின் குறிப்பு 1:

'பூ' திரைப்படத்தின் மூலக்கதை 'வெயிலோடு போய்' ஆறு பக்கங்களுக்கே நீள்கின்ற ஒரு சிறுகதை. ஒரு சிறுகதையையோ, புதினத்தையோ திரைப்படமாக்கும் வித்தை இயக்குனர் சசிக்கு இலாவகமாக வருகிறது. புதுமைப்பித்தனின் 'சித்தி' எனும் புதினத்தை 'உதிரிப்பூக்கள்' என்ற பெயரில் படமாக்கினார் இயக்குனர் மகேந்திரன். புதினத்தின் பாத்திரங்களையும், கதையின் களத்தையும் மட்டும் அடிப்படையாகக் கொண்டு தன் போக்கில் கதையை மாற்றிக்கொண்டார். இயக்குனரின் 'முள்ளும் மலரும்' திரைப்படமும் இப்படி அமைந்ததே! அதே போன்று தான் சசியும் இந்தக் கதையை இலாவகமாக கையாண்டு ஒரு தரமான திரைப்படத்தை வழங்கியிருக்கிறார். படத்தின் பெரும்பாலான கதாப்பாத்திரங்களே சிறுகதையில் கிடையாது. குறிப்பாக கதாநாயகனின் தந்தை பாத்திரத்தைச் சொல்லலாம்.

பின் குறிப்பு 2:

32 சிறுகதைகளே கொண்ட இந்தத்தொகுப்பே இவர் தன் வாழ்க்கையில் இதுவரை எழுதியிருக்கிற எல்லா கதைகளையும் உள்ளடக்கியிருக்கிறது.

பின் குறிப்பு 3:

இந்த வலைப்பூவின் நோக்கம் நாங்கள் படித்த நல்ல நூல்களையும், நல்ல படைப்பாளிகளையும் அறிமுகப்படுத்துவதே! இந்தப்புத்தகத்தை அறிமுகப்படுத்துவதில் அந்த சந்தோஷம் எனக்கு முழுமையாகக் கிடைக்கிறது.

- சேரல்

8 comments:

ஆ.ஞானசேகரன் said...

//இந்த வலைப்பூவின் நோக்கம் நாங்கள் படித்த நல்ல நூல்களையும் நல்ல படைப்பாளிகளையும் அறிமுகப்படுத்துவதே! இந்தப்புத்தகத்தை அறிமுகப்படுத்துவதில் அந்த சந்தோஷம் எனக்கு முழுமையாகக் கிடைக்கிறது.//

வாழ்த்துகள் நண்பரே...

சேரலாதன் பாலசுப்பிரமணியன் said...

நன்றி ஞானசேகரன்!

-ப்ரியமுடன்
சேரல்

G K said...

வாழ்த்துகள் தோழரே...

அன்புடன்,
கோகுலகிருஷ்ணன் கந்தசாமி

Anonymous said...

சேரல்,
உங்களுடைய பதிவுகளை தொடந்து படிக்கிறேன். படித்ததை எங்களுடன் பகிர்ந்து கொள்வது மிகவும் மகிழ்ச்சி. எழுத்தாளர் தமிழ்ச்செல்வன் வலைப்பதிவு தொடக்கி இருக்கிறார். உங்களுக்கு தெரியும்தானே?

சேரலாதன் பாலசுப்பிரமணியன் said...

@ gokul
நன்றி நண்பரே!

@ Anonymous
நன்றி!

எனக்கு இந்தச் செய்தி தெரியாது. இணையத்தில் தேடிப் பார்த்தேன். சிக்கவில்லை. URL தெரிந்தால் கொடுத்து உதவுங்கள்.

-ப்ரியமுடன்
சேரல்

Anonymous said...

அவருடைய வலைப்பதிவு satamilselvan.blogspot.com எப்படி லிங்க் கொடுப்பதென்று தெரியவில்லை.

சேரலாதன் பாலசுப்பிரமணியன் said...

நன்றி Anonymous!

-ப்ரியமுடன்
சேரல்

ச.தமிழ்ச்செல்வன் said...

i saw ur comments today only.very nice and correct introduction.thank u

satamilselvan