Monday, June 28, 2010

64. எண்ணும் மனிதன்

------------------------------------------------
புத்தகம் : எண்ணும் மனிதன்
ஆசிரியர் : மல்பா தஹான்
மொழி பெயர்ப்பாளர் : கயல்விழி
வெளியீடு : அகல் பதிப்பகம்
வெளியான ஆண்டு : 2009
விலை : ரூ.120

------------------------------------------------

பள்ளி நினைவுகளை அசை போடும்போது, கொஞ்சம் யோசித்துப் பார்ப்போம். எத்தனை பேருக்கு கணக்கு பிடித்தமான பாடமாக இருந்திருக்கும்? இந்தக் கேள்விக்கான விடை பெரும்பாலும் சொற்பமான ஓர் எண்ணாகவே இருக்கக் கூடும். ஆனால் இன்று கணக்கையும் நம் வாழ்க்கையையும் பிரித்துப் பார்க்க இயலும் என்று தோன்றுகிறதா? பணியிலோ, தொழிலிலோ, அன்றாட கொடுக்கல் வாங்கல் செயல்களிலோ, வியாபாரத்திலோ, மேலும் குடும்ப விஷயங்களிலோ கூட பள்ளிக்கூடக் கணக்கின் பயன்பாடு சிறிதளவேனும் இருந்தே விடுகிறது. என்றால், கணக்கில்லாது இயங்கும் வாழ்க்கைமுறை இங்கு சாத்தியமில்லை என்பது புரிகிறது.

கணக்கை ஒரு பாடம் என்பதையும் தாண்டி, எண்களைக் கொண்டதொரு மொழியாகவும், நிர்ணயிக்கப்பட்ட விதிகளைக் கொண்ட சூட்சும விளையாட்டாகவும், தர்க்கங்களின் தொகுப்பாகவும், நோக்கும் பார்வை அதன் மீதான ஓர் ஈர்ப்பைத்தோற்றுவிக்கலாம். எண்களைக் கொண்டு கட்டுவிக்கப்பட்டிருக்கும் மாபெரும் புதிர் மாளிகை கணக்கு. அதன் ஒவ்வொரு மர்ம முடிச்சையும் அவிழ்த்து வெளியேறும் அனுபவம் நிச்சயம் சுவாரசியமானதாகவே இருக்கும் என்று பேசுகிறது இந்த 'எண்ணும் மனிதன்' புத்தகம்.

புதின வடிவில் இப்புத்தகம் அமைந்திருக்கிறது. பெர்சிய நாட்டைச் சேர்ந்தவன் இந்த எண்ணும் மனிதன் 'பெரமிஸ் சமீர்'. ஆடு மேய்க்கும் பணியில் இருக்கும்போது ஆடுகள் தொலைந்து விடாமல் இருப்பதற்கென அவற்றை எண்ணத் தொடங்கியவன், வெவ்வேறு முறைகளில் எண்ணி, பின் எண்ணுதலின் மீதிருந்த போதை மிகுந்துவிட அதைச் சார்ந்தே இயங்கத் தொடங்குகிறான். கணக்கின் அடிப்படை மற்றும் அழகுகளைக் கற்றுக்கொள்கிறான். பாக்தாத் செல்லும் வழிப் பாலைவனப் பயணத்தில் இப்புத்தகத்தின் ஆசிரியருடன் அறிமுகமேற்பட்டு பின் இருவருமாக பாக்தாத்தை நோக்கிச்செல்கின்றனர். இருவரும் சந்திக்கும் மனிதர்கள், வித்தியாசமான அனுபவங்கள், கணிதப் புதிர்கள், சவால்கள், எண்ணும் மனிதன் அடையும் உயர்வு, என்பதாக விரிகிறது இப்புத்தகம். சிந்துபாத்தின் சாகசப் பயணம் போலும் பெரமிஸ் சமீரின் கணித சாகசங்களை அடுக்குகிறது இப்புத்தகம்.

தன் எண்ணும் திறமையால் பாக்தாத் வணிகர் ஒருவரைக் கவர்ந்து அதன் மூலம் கூண்டுப் பறவைகளுக்கு விடுதலை பெற்றுத் தரும் எண்ணும் மனிதனின் சொல் இப்படியாக அமைகிறது. 'ஒவ்வொரு பறவையும் ஒரு புத்தகம் அதனுடைய பக்கங்கள் திறந்திருக்கும் சொர்க்கம் . கடவுளின் இந்த நூலகத்தை திருடவோ, அல்லது அழிக்கவோ முயற்சிப்பது மிக அசிங்கமான குற்றம்.' எத்தனை சத்தியமான வார்த்தைகள் இவை!

பாக்தாத்தின் பழங்கால வாழ்வு, அரசு, நாகரிகம் என்பதைக் கொஞ்சமாகக் கோடிட்டு, ஏறத்தாழ அத்தியாயத்துக்கொரு புதிரைக் கொண்டு சிந்திக்கச் செய்கிறது இப்புத்தகம். நான்கு 4களையும், அடிப்படைக் கணிதச் செயல்பாடுகளையும் (கூட்டல், கழித்தல், பெருக்கல், வகுத்தல்) பயன்படுத்தி 1 முதல் 10 வரையிலான எண்களைக் கொண்டு வரும் புதிர், என்னை மிகவும் கவர்ந்தது. நான் முயன்று ஏழு எண்களைக் கண்டுபிடித்தேன். மற்றவற்றுக்கு எண்ணும் மனிதன் உதவி செய்தான். உதாரணத்துக்கு ஒன்று இங்கே. மற்றவற்றை நீங்கள் முயன்று பாருங்களேன்.

5 = (4+(4*4))/4

எண்களைப் பற்றிப் பெரமிஸ் சமீர் பேசும் ஒவ்வொரு தருணமும் எண்களின் மீதான அவனின் காதலை உணர்த்துவதோடு, எண்களின் வேறொரு பரிமாணத்தை நமக்கும் அறிமுகம் செய்துவைக்கிறது. எண்ணும் மனிதன் இடையிடையே இசுலாமியத் தத்துவங்களையும் பேசுகிறான். இறுதியில் பெரமிஸை அறிஞர்கள் சோதிக்கும் அத்தியாயங்கள், கணக்கு என்பது வெறும் தர்க்கம் சார்ந்த அறிவியல் மட்டுமல்ல என்பதை வலியுறுத்துகின்றன.

கணக்கின் வரலாறு சொல்லும்போது, கணக்கில் இந்தியாவின் பங்கு பற்றிய செய்திகள் வருகின்றன. திருமணம் செய்து வாழும் பேறற்ற தன் மகள் லீலாவதியின் பெயரை வரலாற்றில் இடம்பெறச் செய்ய விரும்பிய கணிதவியலாளர் பாஸ்கராவின் கதை இடம்பெற்றிருக்கிறது.

'உன்னுடைய மோசமான திருமணத்தினால் பிறக்கும் குழந்தைகளின் வாழ்நாளைவிட அதிக காலம் மனிதர்களின் நினைவில் நீ இருக்கும் வகையில் உன்னுடைய பெயரில் ஒரு புத்தகத்தை எழுதப்போகிறேன்' என்றபடி 'லீலாவதி'யைப் படைத்திருக்கிறார் பாஸ்கரா.

சற்றே சலிப்பூட்டும் நடை புத்தகத்தின் மீதான நம் ஈர்ப்பைக் குறைக்கலாம். அதை மீட்டெடுப்பது, விடுகதை போலும் நம் முன்னால் வைக்கப்படும் கணிதப்புதிர்கள்தான். ஆங்கிலத்தில் Mathematical Aptitude, Mathematics trivia, என்று பல வகையில் புத்தகங்கள் கிடைக்கின்றன. இம்மாதிரியான ஒரு புத்தகம் தமிழில் நான் பார்ப்பது இதுவே முதன்முறை.

கணக்கின் மீது ஆர்வமுள்ளவர்களை விட, கணக்கின் மீது ஆர்வமில்லாதவர்கள் அவசியம் படிக்க வேண்டிய நூல் இது.

'எண்ணும் மனிதன்' பற்றி மேலும் அறிந்துகொள்ள எஸ்ராவின் பதிவு இங்கே...
http://www.sramakrishnan.com/deep_story.asp?id=397&page=

- சேரல்
http://seralathan.blogspot.com/

No comments: