---------------------------------------------------------------------
புத்தகம் : நவீனத் தமிழிலக்கிய அறிமுகம்
ஆசிரியர் : ஜெயமோகன்
வெளியிட்டோர் : உயிர்மை பதிப்பகம்
வெளியான ஆண்டு : 1995
விலை : ரூ 175
---------------------------------------------------------------------
தொடர்ந்த வாசிப்பினிடையே பல தருணங்களில் நமக்கே கூட இந்தக் கேள்விகள் எழுந்திருக்கும். அல்லது எவர் மூலமாவது இதே கேள்விகள் நம்முன் வைக்கப்பட்டிருக்கும். 'ஏன் வாசிக்க வேண்டும்? வாசிப்பு எனக்கு எதைத் தருகிறது? இலக்கிய வாசிப்பின் தேவை என்ன? இலக்கியம் என்கிற கலையின் அவசியம் என்ன? இது வெறும் போழுதுபோக்குதானா? அல்லது அதைத்தாண்டிய ஏதாவது அற்புதம் இதன் மூலம் நிகழ்கிறதா?' இப்படியாக நீளும் கேள்விகளுக்கு இதுதான் பதில் என்று சொல்லிவிட முடிவதில்லை. இதே போல இலக்கியம் தொடர்பாகத் தனக்கு ஏற்பட்ட பல கேள்விகளுக்கு, தான் பதிலாக உணர்ந்தவற்றை அரங்கில் வைக்கிறார் ஜெயமோகன்.
இப்புத்தகத்துக்குள் போவதற்கு முன்பாக நாம் சில விஷயங்களைத் தெளிவுபடுத்திக்கொள்ள வேண்டிய அவசியமிருக்கிறது. நமக்கும் இலக்கியம் குறித்த சிற்றறிவேனும் இருக்கிறது. இலக்கியப்புரிதல் நமக்கும் வசப்படக்கூடிய ஒன்றுதான். அறிமுகம் என்றவுடனே, ஏதோ நமக்குச் சற்றும் தொடர்பற்ற ஒரு புதிய செய்தியை விளக்கப்போகிறார் என்று எண்ணிவிடவேண்டாம். இது முற்றிலுமாக, நீண்ட காலம் ஆழ்ந்த வாசிப்பில் தன்னை ஈடுபடுத்திக்கொண்ட - வாசிப்புக்காக வெகுவாக உழைத்த ஒரு வாசகனும், செறிவுள்ள எழுத்தைப் படைக்கும் திறன் கொண்ட - எழுத்தைத் தன் எண்ணத்தின் முழு வெளிப்பாடாக்கும் எழுத்தாளுமை கொண்ட ஒரு படைப்பாளியுமான ஒரு மனிதன், தன் அனுபவத்தின் மூலமாக அறிந்து கொண்டவற்றை, தொடக்கநிலையில் இருப்பவர்களுக்குக் கடத்தும் ஒரு சீரிய முயற்சி என்றுகொள்ளலாம்.
நீங்கள் எந்த வயதில் வாசிக்கத் தொடங்கினீர்கள் என்று யாரேனும் கேள்வி கேட்டால் என்ன சொல்லத் தோன்றும்? எப்பொழுது ஒரு மொழியின் எழுத்துகள் நம் அறிவுக்கு அறிமுகமாகின்றனவோ அப்போதே வாசிப்பைத் தொடங்கிவிடுகிறோம் அல்லவா? பேச்சு வழக்கில் ஏற்கனவே நமக்கு அறிமுகமாகிவிட்ட மொழியை எழுத்து மூலம் அறிந்துகொள்ளக் கொஞ்சம் கொஞ்சமாக முயன்று பின் அதன் மூலம் வேறு பல செய்திகளை அறிந்துகொள்ளத் தொடங்குகிறோம். இது இன்றைய சூழ்நிலையில் பள்ளிகளில், பாடத்திட்டங்களின் மூலமே சாத்தியமாகிறது. அதைத் தொடர்ந்து பாடமல்லாத எழுத்துகளைத் தேடி வாசிப்பு விரியும் வாய்ப்பு ஒரு சிறு சதவீத பேர்களுக்கே வாய்க்கிறது. பலருக்கு அதில் ஆர்வமிருப்பதில்லை என்பதும் இன்னொரு யதார்த்தம். அந்த வாசிப்பு எனக்குப் 'படக்கதைகள்' என்பதாகத் தொடங்கியது. நிறைய பேருக்கு அப்படியே தொடங்கியிருக்கும் என்பதை ஊகிக்கவும் முடியும். ராணி காமிக்ஸும், பூந்தளிரும், அம்புலி மாமாவும், கோகுலமும் எனக்குக் கிடைத்த பொக்கிஷங்கள். படக்கதையைத் தொடர்ந்த சிறுவர் கதைகளுக்குள் என்னை இட்டுச் சென்றவை கோகுலமும், தினசரிகளில் வாராந்தரி இணைப்பாக வரும் சிறுவர் இதழ்களும்தாம். இப்படித் தொடங்கிய வாசிப்பு, இதழ்களல்லாத தனிப்புத்தகங்கள் வாசிப்பாகத் தொடர்ந்து, இராஜேஷ்குமார், சுபா, பட்டுக்கோட்டை பிரபாகர் என்று வளர்ந்து, பின் சுஜாதா, வைரமுத்து என்று பல்வேறு தளங்களில் நீண்டு இன்னும் தீராத தேடல்களோடு புதிது புதிதாக எதையாவது நாடிச் சென்றவண்ணமே இருக்கிறது.
இந்த வாசிப்பின் படிநிலைகளைத் தான் முதலில் விளக்க வருகிறார் ஜெயமோகன். குழந்தையிலக்கியம், சாகசக்கதைகள், மெல்லுணர்ச்சிக்கதைகள், குற்றக்கதைகள், இலட்சியவாத எழுத்துகள், என்கிற பல படிகளைத் தாண்டியே ஒருவன் தீவிர இலக்கியத்துக்குள் நுழைகிறான் என்பது ஜெயமோகனின் கோட்பாடாக இருக்கிறது. இதை ஏறக்குறைய ஏற்றுக்கொள்ளவும் முடியும். சிலர் ஏதேனும் ஒரு படியில் தேங்கிவிடுவதும் உண்டு.
இலக்கியத்தை எதிர்கொள்வதைப்பற்றியும் விவரிக்கிறார். எழுத்தாளர்களும், கவிஞர்களும் அடிக்கடி 'ஏன் புரிவது போல் எழுத மறுக்கிறீர்கள்' என்ற கேள்வியை எதிர்கொள்ள நேர்கிறது. இந்தக் கேள்வியை இவர் அணுகும் விதம் வித்தியாசமாகவே தோன்றுகிறது. வாசிப்பிலும் சில படிநிலைகளை வாசகன் கடக்க வேண்டியிருக்கிறது. எப்படி ஒரு மாணவன் ஒவ்வொரு வகுப்பாகப் பள்ளிப்படிப்பைக் கடக்க வேண்டியிருக்கிறதோ அதே போன்று இது நிகழ்கிறது. எப்படி ஒரு மூன்றாம் வகுப்பு மாணவன், பத்தாம் வகுப்புப் புத்தகம் புரியவில்லை என்பதில் நியாயம் இல்லையோ, அதே போல ஒரு படைப்பு புரியவில்லை என்று ஒரு வாசகன் சொல்வதிலும் இல்லை. படைப்பு புரிதலுக்காகத் தன்னைத் தகவமைத்துக்கொள்ளும் கட்டாயம் ஒரு வாசகனுக்குள்ளது.
வாசிப்புக்காக உழைக்க வேண்டும் என்கிறார் ஜெயமோகன். எழுதுவதற்கு படைப்பாளி செய்யும் உழைப்புக்கு இணையான உழைப்பு வாசிப்புக்கும் தேவைப்படுகிறது என்பது எத்தனை வியப்புக்குரிய செய்தி! இப்புத்தகத்தில் முழுவதுமாக வலியுறுத்தப்படும் செய்தியாக நான் இதைப்பார்க்கிறேன்.
ஓர் அற்புதமான இலக்கியம் எப்படி நிகழ்கிறது என்பதை ஆழமாக ஆராய்ந்து சொல்லுகிறார். ஒரு படைப்பாளி ஒரு படைப்பின் ஒரு பரிமாணத்தையே பார்க்கிறான். அதன் எஞ்சிய எத்தனையோ பரிமாணங்களை வாசகன் உணர்கிறான் என்கிறார். ஆழ்மனத்துக்கும் இலக்கியத்துக்குமான உறவின் அமைப்பை விளக்குகிறார். படிமங்களின் தோற்றமும், அதன் பல்வேறு வடிவங்களும், அது பரிமாறப்படும் விதங்களையும் விவரிக்கிறார்.
செவ்வியல் இலக்கியம், நாட்டார் இலக்கியம், இலக்கிய அரசியல் என்று தொடர்கிற நூலின் மிக சுவாரசியமான பகுதி 'இலக்கியச் சூழலின் போலி பாவனைகள்'. இலக்கிய வட்டாரத்தில் உலவுபவர்களிடம் மிகச் சாதாரணமாக இருக்கக்கூடிய போலியான குணங்களைப் பற்றிய பட்டியலிது. எழுத்துலகில் புதிதாக நுழைபவர்களை எளிதாகக் கவர்ந்துவிடக்கூடிய, எளிதாக ஆட்கொள்ளக்கூடிய போலி பாவனைகளைப் பற்றிய பதிவு, அவை தவிர்க்கப்பட வேண்டும் என்கிற நோக்கத்தில் அவசியப்படுகிறதென்கிறார் ஆசிரியர்.
1. புரியாத படைப்பை எப்படி எதிர்கொள்வது?
2. இலக்கியம் வாழ்க்கையைப் பதிவு செய்வதுதானே?
3. இலக்கியத்தில் உள்ள சிந்தனைகள் முக்கியமா அல்லவா?
4. இலக்கியச் சண்டைகளினால் என்ன பயன்? பலசமயம் இவை வெற்றுச் சண்டைகளாக உள்ளனவே?
5. இலக்கிய விமரிசனம் என்பது தேவையா? அது இல்லாமலேயே இலக்கியத்தை வாசிக்க முடியாதா?
6. உலக இலக்கியம் என்றால் என்ன? உலகத்தரத்துக்கு நம்மிடம் படைப்புகள் உண்டா?
7. அதிகமாகப் படித்தால் சிறப்பாக எழுதமுடியாது என்பது உண்மையா?
8. நம்முடைய படைப்புகள் ஏன் உலக அளவில் புகழ்பெறவில்லை?
9. இலக்கியம் சாதி இன மத அடையாளம் கொண்ட ஒன்றுதானே?
10. இன்றுள்ள புதுவகை இலக்கியம் முன்புள்ள இலக்கியங்களைக் காலாவதியாக்கிவிடுமா?
11. குறைவாக எழுதப்பட்டால்தான் நல்ல இலக்கியமா?
12. சிற்றிதழ்களில் மட்டும்தான் நல்ல இலக்கியம் வர முடியுமா?
மேலுள்ள கேள்விகளைத் தானே கேட்டுக்கொண்டு, தன் அனுபவத்தின் அடிப்படையில் பதிலும் தருகிறார் ஆசிரியர். இந்தக் கேள்விகளில் பல நம்மிடத்திலும் இருக்கக்கூடும். அவற்றுக்கான பதில் தேடும் ஒரு செயலில் இவரது பதில்களை ஒரு தொடக்கப்புள்ளியாக நாம் அமைத்துக்கொள்ளலாம்.
நூலின் பின்பாதி நவீனத் தமிழிலக்கியத்தின் வரலாற்றையும், அதன் வளர்ச்சிக் காலகட்டங்களையும் தலைமுறை வாரியாக விவரிக்கிறது; நவீனத் தமிழிலக்கியத்தின் தொடக்கப்புள்ளியாக பாரதியை நிறுத்துகிறது; அவரின் பங்களிப்பையும் அவரைத் தொடர்ந்து தமிழிலக்கியத்தின் போக்கையும், அது இயங்கிய தளங்களையும், ஒவ்வொரு காலகட்டத்திலும் ஆதிக்கம் செலுத்திய படைப்பாளிகளையும், ஒவ்வொரு தலைமுறையிலும் இலக்கியத்தின் ஆதாரமாக விளங்கிய கூறுகளையும், இலக்கியம் எதை நோக்கிப் பயணித்தது என்பதையும் ஒரு வாசகன் மற்றும் விமரிசகனின் பார்வையில் முன்வைக்கிறது.
தமிழிலக்கிய உலகில் அரை நூற்றாண்டுக்கும் மேலாக கோலோச்சும் பல ஆதர்சங்களின் பிம்பத்தை உடைக்கவில்லையென்றாலும், அதன் அடித்தளத்தையாவது அசைத்துவிடும் வல்லமையுடையனவாகவிருக்கின்றன இக்கட்டுரைகள்.
இந்த வரலாற்றுக் கட்டுரைகள், இறுதிப்பகுதிகளில் நான் மேற்சொன்ன செய்திகளைப் பற்றிய சிறு குறிப்புகளாக மாறியிருந்தது ஏமாற்றத்தை உருவாக்கியது; இப்பகுதிகள் அவசரகதியில் தயாரிக்கப்பட்டிருக்க வேண்டும் என்ற எண்ணத்தைக் கொடுத்தது.
வரலாறு, பின் இலக்கியக் குழுக்கள் மற்றும் அமைப்புகளின் மீது கவனம் செலுத்துகிறது. நவீனத்துவம், பின்நவீனத்துவம், மீயதார்த்தவாதம் என்று அழகியல் இலக்கியம் சார்ந்தகூறுகளைத் தொடக்க நிலை வாசகனுக்கு விளக்கும் கட்டுரைகள் நிச்சயம் பயன்படும்.
தீவிர இலக்கியத்துக்கு சிற்றிதழ்களே தீனி போடுகின்றன என்பது யதார்த்தம். இன்று என்றில்லாமல், தீவிர இலக்கியத்துக்கான தேடல் தொடங்கிய காலம் முதலே இருக்கும் நிலைதான் இது. சிற்றிதழ் என்ற அமைப்பே பிரபல பத்திரிகைகளால் தீவிர இலக்கியம் புறக்கணிக்கப்பட்டு, பொழுதுபோக்கு வணிகஎழுத்து முன்னிறுத்தப்பட்டதன் காரணமாகத் தோன்றியதே! முதல் சிற்றிதழ் சி.சு.செல்லப்பாவால் தோற்றுவிக்கப்பட்டதிலிருந்து இன்றுவரை அவை தமிழிலக்கியத்துக்கு அளித்துவரும் பங்களிப்பு நன்றிக்குரியதாகவே கொள்ளப்படவேண்டும். ஜெயமோகன், சிற்றிதழ்களின் இப்பங்களிப்பை தேவையான தகவல்களோடு ஆவணப்படுத்தியிருக்கிறார்.
நவீனத் தமிழிலக்கியத்தின் மிகப்பெரிய சாதனையாகச் சிறுகதைகளின் தோற்றம் மற்றும் வளர்ச்சியைச் சொல்லலாம். வணிக எழுத்தும், தீவிர எழுத்தும் சேர்ந்தே இவ்வளர்ச்சியைச் சாத்தியமாக்கியுள்ளன. கவிதைகள் வடிவத்திலும், பாடு பொருள்களின் தன்மையிலும் பல மாற்றங்களை உள்வாங்கிக்கொண்டு இன்னும் வளர்ந்தவண்ணமுள்ளன. இது போக, புதினங்கள் மற்றும் ஆய்வுக்கட்டுரைகளும் வாசகனின் வாசிப்பு தாகத்தைத் தணிக்கத் தொடர்ந்து போராடிக்கொண்டேயிருக்கின்றன. ஜெயமோகனின் இந்த நூலும் அந்த வரிசையிலேயே சேரும்.
எதைப் படிக்க வேண்டும், எப்படிப் படிக்கவேண்டும் என்ற தெளிவு தேவைப்படும் வாசகர்கள் கண்டிப்பாக வாசிக்க வேண்டிய புத்தகம் இது. ஆசிரியரின் மீதுள்ள இலக்கிய அரசியலைப் புறந்தள்ளிவிட்டு இதைப் படிப்பது ஆரோக்கியமாக இருக்கும்.
பின் குறிப்பு :
இலக்கியக் கலைச்சொற்களையும், தமிழிலக்கியத்தில் தானறிந்த சிறந்த சிறுகதைகள், புதினங்கள், கவிதைகள் குறித்த தன் சிபாரிசையும் பின்னிணைப்பில் தொகுத்திருக்கிறார் ஆசிரியர்
-சேரல்
(http://seralathan.blogspot.com/)
No comments:
Post a Comment