Sunday, October 17, 2010

68. திருநங்கைகள் உலகம்

பதிவிடுகிறவர் நண்பர் ஞானசேகர். நன்றி!

புறத்துறுப் பெல்லாம் எவன்செய்யும் யாக்கை
அகத்துறுப்பு அன்பி லவர்க்கு.
- வள்ளுவம்


நாமெல்லாம்.... நாமன்னா.... நான், நீ, இந்தப் பச்சச்சட்ட, மஞ்ச சுடிதார், அந்தப் போலீஸ்காரர் எல்லாம் ஹார்மோன் சமாச்சாரம். வெறும் ஆர்கானிக் கெமிஸ்ட்ரி.
- ஆய்த எழுத்து திரைப்பட வசனம்


ஆண்மை என்கிற வார்த்தைக்குக் குழந்தைகளைப் பெறும் தகுதியுள்ளவன் என்கிற விதத்தில் எங்கும் அர்த்தம் கொடுக்கப்படவில்லை. எடுத்த காரியத்தில் திடசிந்தனை, கொண்ட நோக்கத்தில் குழப்பமில்லாத தன்மையுடன் உயர்வடைவதற்குத்தான் ஆண்மை என்று அர்த்தம் கொடுக்கப்பட்டிருக்கிறதே ஒழிய, கிடா மீசை வைப்பதோ, பத்து மனைவிகளைக் கட்டிக் குழந்தைகளைக் கொடுப்பதற்குப் பெயரா ஆண்மை? அந்த மாதிரியான ஆண்மை எனக்கு வேண்டியதில்லை. இதையும் மீறிப் பெண் தன்மையுடன் இருப்பதற்காகப் பெருமைப்படுகிறேன்.
- நர்த்தகி நடராஜ் ('கனவின் பாதை' புத்தகம் - மணா - உயிர்மை பதிப்பகம்)


--------------------------------------------------------
புத்தகம் : திருநங்கைகள் உலகம்
ஆசிரியர் : பால் சுயம்பு (தினத்தந்தியில் துணையாசிரியர்)
வெளியீடு : கிழக்கு பதிப்பகம்
முதற்பதிப்பு : அக்டோபர் 2009
விலை : ரூ.150
பக்கங்கள் : 277 (தோராயமாக 35 வரிகள் / பக்கம்)

--------------------------------------------------------

இவ்வருட ஆரம்பத்தில் ஞாநி அவர்களின் 'அறிந்தும் அறியாமலும்' புத்தகம் படிக்கும்போதுதான், இனப்பெருக்க மண்டலத்திற்கும் சிறுநீரக மண்டலத்திற்கும் பெண்ணுடலில் வெவ்வேறு துவாரங்கள் என்று தெரியும். ஆணுடலைத் தாங்கி ஆண்மனதுடன் சிந்திக்கத் தெரிந்த எனக்கு இது பெரிய ஆச்சரியம்தான். இதேபோல் யாரோவொரு பெண் இவ்விரு மண்டலங்களும் ஆணுடலில் ஒரே இடத்தில் முடிவதை அறிந்து அதிசயிக்கலாம். ஆணோ பெண்ணோ இன்னொரு பாலினரை அறிவு அல்லது உறவு ரீதியாக அறிந்துகொள்ள முற்படும்போது மனிதவுடலில் இயற்கை புதைத்து வைத்திருக்கும் ஆச்சரியங்கள் பிரமிக்க வைக்கலாம். இந்த இருபாலினருக்கும் பொதுவான ஆச்சரியத்தையும், கேள்விகளையும், சில நேரங்களில் பயத்தையும் உண்டாக்கும் இயற்கையின் இன்னொரு படைப்பு பால்பிறழ்வுகள்.

ஆண் அல்லது பெண் என்று அறுதியிட்டுக் கூறமுடியாத Congenital Adrenal Hyperplasia, இருபால் உறுப்புகளையும் கொண்ட Hermaphroditism, குரோமசோம் அடிப்படையில் ஆணாகவும் உடலமைப்பில் பெண்ணாகவும் அமையும் Androgen Sensitive Syndrome என்று பால்பிறழ்வுகளில் பலவகைகள். இவர்களில் குறிப்பிடத்தக்க வகையினரான ஆணுடலையும் பெண்மனத்தையும் பெற்றிருக்கும் மாற்றுப் பாலினத்தவரே திருநங்கைகள் என்று அறியப்படுகிறார்கள். அவர்களைப் பற்றிப் படிப்பதற்காக நான் தேர்ந்தெடுத்த புத்தகங்களில், மற்றவர்களுடன் பகிந்துகொள்ளும் அளவிற்கு நான் புரிந்துகொண்ட புத்தகம் - திருநங்கைகள் உலகம்.சுருக்கமாகச் சொன்னால், சமூகத்தில் அங்கீகரிக்கப்பட்ட நிலையில் இருக்கும் அல்லது அந்நிலையை நெருங்கிக் கொண்டிருக்கும் திருநங்கைகள் இருபது பேரின் வாழ்க்கைச் சுருக்கம். தங்களைத் திருநங்கையாக உணர்ந்த நாள்முதல் அதனை வெளிக்காட்ட முடியாமல் பட்ட அவஸ்தைகளும், குடும்பத்தின் கட்டுப்பாடுகளும், சமூகம் தந்த அவமானங்களும், தன்னைப் போன்றவர்களை அடையாளம் கண்டு, அங்கீகாரம் கிடைக்கும்படி வாழ்ந்துகாட்டி ஜெயித்தவர்களின் கதைகள்.

முதல் பக்கங்களில் அழகம்மை என்ற திருநங்கையை உதாரணப்படுத்தி அவர்களின் வாழ்க்கைமுறையை விளக்குகிறார் ஆசிரியர். ஆணாகப் பிறந்த அழகப்பன், தனக்குள்ள பெண்மனதை உணர ஆரம்பித்து, குடும்பமும் சமூகமும் வெறுத்து ஒதுக்க, மும்பைக்குப்போய் தன்போன்றவர்களுடன் அழகம்மையாக அடைக்கலமாகிறார். அங்கு ரீத் எனும் சடங்குமூலம் மூத்த திருநங்கை ஒருவரால் மகளாகத் தத்தெடுக்கப்படுகிறார். உரோமம் பிடுக்கும் சிம்டா கருவி, தண்டுப்பணம், தந்தா என்ற கடைகேட்டல் என்று திருநங்கைகளின் வித்தியாசமான உலகையும் சொல்லாடல்களையும் அறிமுகப்படுத்துகிறார் ஆசிரியர். அதில் அதிரவைக்கும் ஒருவிசயம், நிர்வாணம் எனப்படும் தாயம்மா அறுவை சிகிச்சை. ஆண்தன்மையை நீக்குவதற்காக ஆணுறுப்பை வெட்டியெடுக்கும் சிகிச்சை. மயக்க மருந்தே இல்லாமல் இரத்தத்தையும் வலியையும் நேரடியாக உணரவைக்கும் சிகிச்சை. இறந்து போனால் காளிக்குச் சமர்ப்பணம்.

அதன்பிறகு கிட்டத்தட்ட 20 திருநங்கைகளின் தனிப்பட்ட அனுபவங்களைத் தொகுத்திருக்கிறார். விஜய் தொலைக்காட்சி இப்படிக்கு ரோஸ், திருநங்கைகள் வாக்குரிமைக்குக் குரல்கொடுத்த பிரியாபாபு, கல்கி (sahodari.org), இந்தியாவின் முதல் மாடலிங் திருநங்கை ஸ்ரீதேவி ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள். என்னை மிகவும் பாதித்தவர் நூரி. இந்தியாவில் அதிகாரப்பூர்வமாக கண்டறியப்பட்ட மூன்றாவது எய்ட்ஸ் நோயாளி அவர். தற்போது சென்னையில் SIP memorial home நடத்திவருகிறார். புத்தகத்தின்படி 32 குழந்தைகளைத் தத்தெடுத்து வளர்த்துவருகிறார். சு.சமுத்திரம் அவர்களின் வாடாமல்லி தொடர்கதையில் சுயம்பு என்ற பாத்திரம் இவரே.

திருநங்கைகளுக்குச் சாதாரணமாக வாடகை வீடு கிடைப்பதில்லை. கழிவறையைப் பயன்படுத்துவதில் கிடைத்த கசப்பான அனுபவத்தில் எம்.ஏ. படிப்பைப் பாதியிலேயே விட்டவரும் உண்டு. இவர்களைப் புதிய அனுபவத்திற்காக நெருங்கி உடல்ரீதியில் தொடர்புகொண்டு ஏமாற்றுபவர்களும் இச்சமுதாயத்தில் உண்டு. மெரீனா கடற்கரையில் நூரி அவர்களின் பாலூற்றும் சடங்கைப் பார்த்து ஆயிரம் ரூபாய் தட்சணை கொடுத்த வில்லன் நடிகர் நம்பியார் போன்றவர்களும் இதே சமுதாயத்தில் உண்டு.

பெரும்பாலும் திருநங்கைகள் விசேசங்களில் சமையல் செய்பவர்களாகவும், ஒப்பாரிக் கலைஞர்களாகவும், கரகாட்டம் - மயிலாட்டம் - ஒயிலாட்டம் - கணியான் கூத்து என்று கிராமியக் கலைஞர்களாகவும் இருக்கிறார்கள். இவர்களின் சமூகப் பிரிவுகளும் மதக்கோட்பாடுகளும் வட-தென் இந்தியப் பகுதிகளில் வித்தியாசப்படுகின்றன. முகலாயர்கள் காலத்தில் ஆரம்பித்த முக்காடு பழக்கம், அரவான் சரித்திரம் என்று பல தகவல்கள் ஆங்காங்கே கட்டங்களில் எட்டிப்பார்க்கின்றன.பாலுறுப்பு மாற்றலுக்குத் தாயம்மா சிகிச்சைக்குப் பதிலாக SRS (Sexual Reassignment Surgery) போன்ற நவீன சிகிச்சைகள் சென்னைக்கே வந்துவிட்டன. சகோதரன், தாய் (TAI - Tamil Nadu AIDS Initiative)ன் மனசு போன்று திருநங்கைகளுக்காகச் செயல்படும் அமைப்புகளும் பலவுள்ளன.

இவர்களின் பிறப்பிற்கு விதி, கர்மவினை, சாபம், சென்மபாவம் என்ற எதுவும் காரணமில்லை. என்றோ இரண்டு Xகளில் ஒன்றை Yயாக்கி பெண்ணிலிருந்து ஆணை உண்டாக்கியதுபோன்ற இயற்கையின் குரோமசோம் விந்தைகள்தான் இவர்களும். பாலியல் திரிபைக் கணக்கில் எடுத்துக்கொண்டு அதற்கான அனுதாபத்தையோ, அடக்குமுறையையோ இல்லாமல் சகமனிதன் என்ற அங்கீகாரம் மட்டுமே இவர்கள் கேட்பது. ஈரலைக் கெடுக்கும் ஹார்மோன் ஊசிகளுடன் வாழ்ந்துவரும் ஒரு சமூகத்தைப் புரிந்துகொள்ள, நம்மில் சிலருக்கு இருக்கும் Transphobiaவை உடைத்தெறிய இதுபோன்ற புத்தகங்கள் கண்டிப்பாக உதவும். ஆங்காங்கே பரவிக்கிடக்கும் எழுத்துப்பிழைகளைத் தவிர்த்து, திருநங்கையாகப் பிறப்பதற்கான அறிவியல் காரணங்களை இன்னும் கொஞ்சம் விரிவாகச் சொல்லியிருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும்.

அனுபந்தம்:

1. அரவானி என்ற குறிப்பிட்ட மதம் சார்ந்த புராண மரபுடன் பெயரிடப்படுவதைத் தவிர்த்து,ஆணும் பெண்ணும் கலந்த திருநங்கை என்று அழைக்கப்படுவதை விரும்புகிறார் நர்த்தகி நடராஜ்.

2. பிரியாபாபு எழுதிய 'மூன்றாம் பாலின் முகம்' என்ற புதினம் படித்தேன். படிக்கலாம். சந்தியா பதிப்பகம். 50 ரூபாய்.

3. மராத்தி மொழியில் 'NATARANG' என்றொரு திரைப்படம் உண்டு. பாருங்கள்.

- ஞானசேகர்
(http://jssekar.blogspot.com/)

No comments: