Thursday, August 25, 2011

75. வாடாம‌ல்லி

பதிவிடுகிறவர் நண்பர் ஞானசேகர். நன்றி!

காகிதப் பூவுன்னு கண்மூடிப் போனீரோ - என்ராசாவே
வாடாமல்லின்னு பேசாமல் போனீரோ... நானும்
அப்பனுக்கு வேப்பங்காய் அண்ணனுக்கு எட்டிக்காய்
ஊருக்கு திருஷ்டிக்காய் ஒனக்குக்கூட ஊமத்தங்காய்
செடியாய் முளைச்சிருந்தால் பூவாய் மலர்ந்திருப்பேன்
கொடியாய் வளர்ந்திருந்தால் கொம்புலே படர்ந்திருப்பேன்
நதியாய்ப் பிறந்திருந்தால் கடலிலே சேர்ந்திருப்பேன்
இரண்டாய்ப் பிறந்ததாலே துண்டுபட்டு நிக்கேனே!
- கூவாகத் திருவிழா ஒப்பாரிப்பாடல்

-------------------------------------------------
புத்தகம் : வாடாம‌ல்லி
ஆசிரிய‌ர் : சு.ச‌முத்திர‌ம்
வெளியீடு : அருவி
முதற்பதிப்பு : ஆக‌ஸ்ட் 2009
விலை : 150 ரூபாய்
பக்கங்கள் : 304 (தோராயமாக 35 வரிகள் / பக்கம்)

-------------------------------------------------
இராமநாதபுர மாவட்டம் பேரையூரில் சுமார் அறுபது ஆண்டுகளுக்கு முன்பிறந்த நூர் முகம்மது, தன் ஆணுடம்பில் இருக்கும் பெண்தன்மையைச் சமுதாயம் ஏற்க மறுத்தபோது முன்னாள் முதலமைச்சர் அண்ணாத்துரையின் இறுதி ஊர்வலத்திற்குச் செல்பவர்களுடன் கும்பலோடு கும்பலாக இரயிலேறி சென்னைபோய் பம்பாய்போய் பால்மாற்று அறுவை சிகிச்சை செய்து நூரி என்ற பெண்ணாகி திருமணம் செய்து கணவனை இழந்து இந்தியாவில் அதிகாரப்பூர்வமாக மூன்றாவது எய்ட்ஸ் நோயாளியாகக் கண்டறியப்பட்டு தற்போது சென்னையில் SIP memorial home நடத்தி சுமார் 32 குழந்தைகளைத் தத்தெடுத்து வளர்த்துவருகிறார். பால் சுயம்பு அவர்களின் 'திருநங்கைகள் உலகம்' புத்தகத்தில் மனதை மிகவும் பாதித்தவர் நூரி. அப்புத்தகத்தில்தான் நூரி அவர்களின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு 'வாடாமல்லி' என்ற தொடரை மறைந்த எழுத்தாளர் சு.சமுத்திரம் அவர்கள் எழுதியிருப்பதாகப் படித்தேன். புத்தகமாகவே கிடைத்துவிட்டது!

'அரவாணிகள் பற்றிய தமிழின் முதல் நாவல்' என்று முன்னட்டை சொல்கிறது. சுயம்பு என்ற ஆண், தனது கல்லூரிப் பருவத்தில் பெண்தன்மையை உணரும்போது பெண்களாலேயே அவமானப்படுத்தப்படுவதுடன் ஆரம்பமாகிறது புதினம். கல்லூரி குடும்பம் சமூகம் என்று பல இன்னல்களுக்கு ஆளாகி ஒருசமயத்தில் எல்லாராலும் வெறுக்கப்படும் ஒரு ஜீவனாக வீட்டைவிட்டு வெளியேறி அவன் சந்திக்கும் திருநங்கைகள் மூலமாக அவர்களின் வாழ்வியல் முறைகளையும் அவர்கள்மேல் சமூகம் திணிக்கும் கொடுமைகளையும் எதிர்கொள்வதுதான் கதைச்சுருக்கம்.

தமிழகத்தின் ஒரு கிராமம், ஒரு பொறியியல் கல்லூரி, சென்னையின் சேரிப்பகுதி, டெல்லி, சில காவல் நிலையங்கள், கூவாகம் என்ற பயணிக்கிறது கதைக்களம். சமையற்காரர்களாகவும் ஒப்பாரிக்கலைஞர்களாகவும் இந்தியா முழுவதும் பரவியிருந்தாலும், வடக்கில் அதிர்ஷ்டக்காரர்களாக வீட்டு விசேசங்களில் சிறப்பிக்கப்படுவதும், நம்மூரில் பேய்ப்பிடித்திருப்பதாக அடிவாங்குவதுமாக பால்பிறழ்வுகளின் சமூகநிலையை அழகாக விவரிக்கிறது புத்தகம்.

முர்கேவாலி மாதா கதையையும் அரவான் கதையையும் கதை மாந்தர்களே சொல்கிறார்கள். அரவான் கதை பிரியாபாபு எழுதிய 'மூன்றாம் பாலின் முகம்' புத்த‌க‌த்திலும் உண்டு. ஆசிரியர்கூட ஆசிரியராகவே கதையின் போக்கில் ஒரு வரியில் வந்துபோகிறார். திருநங்கைகளைத் தாசிகள்போலவும் ஆண்களுக்கு அலைவதுபோலவும் சித்தரிக்கும் சில பத்திரிக்கைகள் பற்றியும், அவர்களை அதற்காகவே பயன்படுத்த நினைக்கும் சில காவல்துறை அதிகாரிகள் பற்றியும் தொட்டுச்செல்கிறது புத்தகம்.

தவிர்க்க முடியாதபடி கூவாகம் இப்புத்தகத்திலும் உண்டு. எஸ்.ராமகிருஷ்ணன் அவர்களின் 'தேசாந்திரி' கூவாகத்திருவிழா பற்றி பேசுகிறது. பிரியாபாபு அவர்களின் 'மூன்றாம் பாலின் முகம்' கூவாக லாட்ஜ்களைப் பற்றியும் பேசியது. பிள்ளையார்குப்பம் மஞ்சக்குப்பம் என்று அருகிலுள்ள அரவான்கோவில்களை ஓரங்கட்டிவிட்டு கூவாகம் அகில இந்திய அளவில் பிரபலமாகியிருந்தாலும் சில திருநங்கைகளுக்கே பிடிக்காத கூவாகம் பற்றி வாடாமல்லி சொல்கிறது.

புத்தகத்தில் இரண்டு இடங்களில் நான் மிகவும் ரசித்த உரையாடல்கள் உங்களின் வாசிப்பிற்கும்.

அரவான் கதையின் முடிவில் வருகிறது முதல் உரையாடல்.
"கிருஷ்ணன் கிடைக்கான் விடு. அவனுக்கென்ன பழையபடியும் ஆணாய் மாறிட்டான்"

ஒரு காவல் நிலையத்தில் இரண்டாம் உரையாடல்.
"அந்த சின்னப் பொட்டையோட டிரஸை எடுத்துட்டு ஜட்டியோட விடுங்க... பக்கத்துல எதையும் வைக்காதீங்க... தூக்குப் போட்டு சாகப் போறவன்மாதிரி முழிக்கான் பாருங்க... அப்புறம்... சொல்றதைக் கேட்காமல் கஸ்டடி டெத், கற்பழிப்புன்னு வம்ப வெலைக்கு வாங்காதீங்க..."
ஒரு போலீஸ்காரர் ஜோக்கடித்தார்.
"கற்பழிப்புக்குப் பிறகுதான் சார் கஸ்டடி டெத்து... மாத்திச் சொல்றீங்க..."
"ஒன்னமாதிரி ஆளுங்க பிணத்தைக்கூட கற்பழிப்பீங்க..."

சமீபத்திய ஆனந்த விகடன் இதழொன்றில் லிவிங் ஸ்மைல் வித்யா, பிரியா பாபு, நூரி இவர்கள் கலந்துகொண்ட நிகழ்ச்சியொன்றின் செய்திக்கட்டுரை வெளியாகி இருந்தது. அதைப் படித்தபிறகுதான் பால்பிறழ்வுகளில் இருவகையென்று எனக்குத் தெரியும். பெண்மை குறைந்து ஆண்தன்மை மிக்கதைத் திருநம்பி என்ற சொல்லாலும், ஆண்தன்மை குறைந்து பெண்மை மிக்கதைத் திருந‌ங்கை என்ற சொல்லாலும் குறிப்பதாகப் படித்தேன். இவர்களை முறையே பேடி அலி என்று பேச்சுவழக்கில் குறிப்பிடப்படுவதாக‌ இப்புத்தகத்தின் தொடக்கத்தில் வரும் ஆய்வுரையில் பேராசிரியர் இராம. குருநாதன் குறிப்பிடுகிறார். இதுவரை நான் படித்திருந்த புத்தகங்களில் திருநம்பிகள் பற்றி பார்த்ததாக நினைவில்லை. திருநம்பிகளின் சமுகநிலை திருந‌ங்கைகளைவிட பரிதாபமென அக்கட்டுரை சொன்னதாக நினைவிருக்கிறது.

மேகலை மாதாஜியிடம் சொல்லும் ஒரு வாக்கியம் எனக்குப் புரியவேயில்லை. உங்களுக்குத் தெரிந்தால் பின்னூட்டமிடவும்.
"பூப்பு நீராட சவுக்குக் கம்புல உட்கார்ந்த‌துகூட உங்க மனச நோகடிக்கக்கூடாது என்கிறதாலதான்".

நூரியாக மாறியபிறகு வாழ்க்கை எப்படி அமைந்தது என்று தெரிந்துகொள்ள எதிர்பார்த்துத்தான் புத்தகம் வாங்கினேன். ஆனால் அதற்கு முந்தைய பகுதிதான் பெரும்பாலும் புதினப்படுத்தப்பட்டிருக்கிறது. சுபமான முடிவை மட்டுமே விரும்பும் தொடர்கதை அல்லது திரைப்பட ரசிகர்களுக்காக எழுதப்பட்டதுபோல் ஒரு சின்ன ஏமாற்றம். நண்பர் கிருஷ்ண பிரபு அவர்கள் பாலபாரதியின் 'அவன்-அது=அவள்' புத்தக விமர்சனத்தில் சொன்னதுபோல வாடாமல்லியின் இரண்டாம் பகுதியானது தமிழ் சினிமாவின் ரஜினியிசத்தில் மாட்டிக் கொண்டதுபோல இருப்பதும் உண்மையே.

சுயம்புவிற்குப் பேய்விரட்டும் பகுதியும், வீட்டைவிட்டு வெளியேறுவதற்குக் காரணமான நிகழ்ச்சியும், சென்னையின் சேரி அனுபவமும், கூவாக நிகழ்வுகளும் கதையின் பலம். வாசிக்கும் வேகத்திற்குத் தடைபோடும் எழுத்துப் பிழைகளும், இரண்டாம் பாதியில் சில இடங்களில் தலைகாட்டும் ஹீரோயிஸமும், காட்சிகளின் நம்பகத்தன்மையைச் சந்தேகிக்கும்படி வந்துபோகும் சில செயற்கைத்தனமான வசனங்களும் புத்தகத்தின் சில குறைகள். அச்சிறுகுறைகளையும் தாண்டி, திருநங்கைக‌ளுக்கான முன்னோடி படைப்பு என்று தனித்து நிற்கிறது வாடாமல்லி.

தமிழில் பால்பிறழ்வுகள் பற்றி நீங்கள் படிக்கவேண்டுமெனில் உங்களின் முதலடியை வாடாமல்லியில் ஆரம்பிக்கலாம்!

அனுபந்தம்:

புதினம் என்றால் எப்படியிருக்கும் என்று தெரிந்துகொள்வதற்காக ஏழாண்டுகளுக்குமுன் நூலகமொன்றில் நான் தேர்ந்தெடுத்து படித்த புத்தகம் - பாலைப்புறா. எய்ட்ஸ் நோய் கதைக்களம். ஆசிரியர் சு.சமுத்திரம்.

- ஞானசேகர்
(http://jssekar.blogspot.com/)

No comments: