Thursday, November 17, 2011

78. பண்பாட்டு அசைவுகள்

-----------------------------------------------
புத்தகம் : பண்பாட்டு அசைவுகள்
ஆசிரிய‌ர் : தொ.பரமசிவன்
வெளியீடு : காலச்சுவடு பதிப்பகம்
முதற்பதிப்பு : டிசம்பர் 2001
விலை : 100 ரூபாய்
பக்கங்கள் : 197

-----------------------------------------------

பேருந்தில் பயணித்துக் கொண்டிருக்கிறீர்கள். உங்கள் தாகத்தை மட்டுமே தணிக்கும் அளவுக்கான தண்ணீர் உங்களிடம் இருக்கிறது. இரவு நேர வெக்கை தாகத்தை அதிகப் படுத்திக் கொண்டே போகிறது. அருகிலிருக்கும் அறிமுகமற்ற வயோதிகர் நீங்கள் வைத்திருக்கும் தண்ணீரை அருந்தக் கேட்கிறார். கொடுக்கவும் தோன்றாமல் மறுக்கவும் முடியாமல் நீங்கள தவிக்கிறீர்கள். வேண்டா வெறுப்பாகவே பின் கொடுத்த நீரைப் பருகும் அந்நபரை ஜென்ம விரோதியாக சில நொடிகள் பாவிக்கிறீர்கள். உங்கள் மீதும் பிழையில்லை. அந்நீருக்காக நீங்கள் செலவு செய்த பதினேழு ரூபாய் உங்களை அப்படி எண்ணச்செய்யலாம். அதைவிட அதிகமாக எதிர்காலத்தில் நீங்கள் வருத்தப்படவும் கூடும். உணவு வேளையில் பேருந்து நிற்கும் சில நிமிடங்களில் அதே வயோதிகர் ஒரு தண்ணீர் பாட்டிலைத் தான் வாங்கி வந்து உங்கள் கையில் திணிக்கும் பொழுது வருந்தமாட்டீர்களா என்ன? அதையும் மீறி ஒரு அவமான உணர்வும் உங்கள் மனத்தில் எழக்கூடும். இது உங்களுக்கும், எனக்கும், யாருக்கும் அச்சூழ்நிலையில் ஏற்படக்கூடிய, ஏற்படவேண்டிய ஓர் உணர்வுதான். 'சோறும் நீரும் விற்பனைக்குரியதல்ல' என்ற பண்பாடு கொண்டிருந்த ஒரு சமூகத்தின் தொடர்ச்சி தான் நாமெல்லாம். நீரை விற்றும் வாங்கியும் பிழைக்க வேண்டி வந்த நிலைக்கு வருந்தாமல் இருப்பதெப்படி?

அன்னச்சத்திரம் என்ற பெயரில் வறியவருக்கும், வழிசெல்வோருக்கும் உணவு கொடுப்பதைப் பழங்காலத்தில் அரசுகள் ஒரு அடிப்படை சேவையாகச் செய்து வந்திருக்கின்றன. பதினேழாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் தான் உணவை விற்கும் பழக்கம் தமிழ்நாட்டில் தொடங்கியதாக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். உணவை விற்பது பாவமென்றிருந்த அதே சமூகத்தின் எச்சமாக இன்றிருக்கும் நமக்கு உணவை விற்பதொன்றும் அத்தனை பெரிய இழிசெயலாகத் தெரிவதில்லை. அதுவும் ஒரு வியாபாரம் என்று ஏற்றுக்கொண்டதோடு வாங்கும் பணத்துக்கு தரமான உணவைத் தரும் உணவகங்களைப் பாராட்டவும் பழகிவிட்டோம். அடிப்படையில் அது அவர்களின் கடமை என்பதை அவர்கள் உணரவில்லை; நாமும்தான்.

இப்படியே பேரெண்னிக்கையிலான நம் மூதாதையரின் பண்பாட்டுக் கூறுகளை விட்டு வெகுதூரம் கடந்து வந்துவிட்டோம். அதிலும் குறிப்பாகக் கடந்த ஐம்பதாண்டுகளில் நம் வாழ்முறையில் ஏற்பட்டிருக்கிற மாற்றங்கள் நாம் கடந்து வந்த தொலைவைக் கண் கூடாக்குகின்றன. 'அரிசி எங்கிருந்து வருகிறது?' என்கிற கேள்விக்கு, 'கடையிலிருந்து' என்று பதிலளிக்கிற அடுத்த தலைமுறைக்கு நம்மிடம் மீதமிருக்கும் சிற்சில பண்பாட்டு எச்சங்களைக் கடத்துவதும் எளிதன்று.

பல தலைமுறைகளில் செவி வழியாகவும், அனுபவ வழியாகவும் பயின்று வந்த பழக்க வழக்கங்கள் இன்று ஆவணப்படுத்தப்பட வேண்டிய அவசியத்துக்குள்ளாகி இருக்கின்றன. இல்லையெனில் இன்னும் சில வருடங்களில் நாம் கடந்து போகப்போகிற தூரம், கடந்து வந்த பாதையின் சுவடுகளை வாழ்வின் வேகத்திலேயே மறக்கச் செய்து விடும் அபாயம் நிச்சயம். தொ.பரமசிவனின் இந்நூல் நான் மேற்சொன்ன ஒரு சிறந்த ஆவணம்.

ஒரு பழங்கதையுண்டு. ஒரு காலத்தில் ஒரு குரு இருந்தாராம். தன் சீடர்களுடன் ஊர் ஊராகப் போய் பூசைகள், சடங்குகள், செய்து பிழைப்பு நடத்திக்கொண்டிருந்தார் அவர். அப்படி ஓரூரில் தங்கியிருந்து பூசைகள் செய்த போது பூனையொன்று வந்து பூசையினிடையே இடைஞ்சல் செய்தபடியே இருந்தது. பொறுத்துப் பார்த்த குரு, பூனையின் அட்டகாசம் தாங்காமல், அதைப் பிடித்துக் கட்டிவைக்கச் சொன்னார். பூனையின் அட்டகாசமும் ஓய்ந்தது; பூசையும் தொடர்ந்தது. அவ்வூரிலிருந்த பிற வீடுகளிலும் பூசையின்போது பூனையின் தொந்தரவு தொடரவே, பூனையைக் கட்டிவைத்த பின்னரே பூசை செய்யவேண்டிய நிலையாகிப்போனது. ஒரு நாள் குரு இறந்து போனார். குருவின் பணியைத் தொடர்ந்து செய்ய வந்த சீடர்கள் பூசைக்கு முன் முதல் வேலையாக பூனையைக் கட்டி வைப்பதைக் கொண்டனர். பூனையே இல்லாவிட்டாலும், அதைத் தேடிப்பிடித்துக் கட்டிவைக்கவும் செய்தனர். அடுத்தடுத்த தலைமுறையில் பூனையைக் கட்டிவைப்பது முக்கியமான சடங்கானது என முடிகிறது அக்கதை.

நாமும் எத்தனையோ பூனைகளைப் பிடித்து இன்னும் கட்டிவைத்துக் கொண்டுதானிருக்கிறோம். ஏன் கட்டி வைக்கிறோம் என்பதற்கான சில காரணங்களைப் பேசுகிறது இந்நூல். மூட நம்பிக்கைகளை விட்டு விலகிய நாம், அவற்றோடு சேர்த்து பல நல்ல வழக்கங்களையும் தொலைக்க நேர்ந்தது துரதிர்ஷ்டமே! பொருளற்ற வெறும் சடங்குகளாக அவை மாறிய நிலையே அதற்கான பெருங்காரணமும் கூட. அது போலான சடங்குகளைப் பற்றியும் இந்நூல் ஆராய்கிறது.



வழக்கிலிருக்கும் பல சொல்லாடல்கள், மற்றும் பழமொழிகளின் மூலங்களை சில இடங்களில் ஆதாரத்துடனும், சில இடங்களில் அனுமானத்துடனும் பதிவு செய்கிறார் ஆசிரியர். இவற்றின் மீதான நம் புரிதல்களைத் தகர்த்தெறியும் வேறொரு பரிமாணத்தை அறியச்செய்து திகைக்க வைக்கிறார். இந்நூலைப் பற்றி என் நண்பர்களுடன் உரையாடும் பொழுதெல்லாம் தவறாமல் பகிர்ந்து கொண்ட செய்தி குளித்தல் பற்றியது. வெப்பப் பிரதேசத்தில் அமைந்திருக்கும் தமிழ்நாட்டில், உடல் மேல் நீரூற்றிக் குளிர்விக்கும் பழக்கம் ஆதி முதலே இருந்திருக்கிறது. இக்குளிர்த்தலே இப்பொழுது நாம் செய்யும் குளித்தலாகிப் போனது எனும் ஆசிரியரின் கூற்றை மறுப்பதற்கில்லை.

பதினைந்தாம் நூற்றாண்டில் சிலி நாட்டில் இருந்து இறக்குமதியான மிளகாய் தமிழரின் உணவுக்கு காரம் கொடுத்துக் கொண்டிருந்த மிளகை இடம் பெயர்த்தது. உப்பு என்ற சொல்லுக்கு 'சுவை' என்பதே முதற்பொருள். இசுலாமிய சமூகத்தில் தந்தையைக் குறிக்கும் 'அத்தா' எனும் சொல்லுக்கு மூலம் 'அத்தன்' என்கிற தமிழ்ச்சொல். பிறப்பு, இறப்புத் தீட்டுகளால் பாதிக்கப்படாத ஒரே இந்துத் திருவிழா 'தைப்பூசம்'. போதிமரம் என்பது அரசமரத்தைக் குறிக்கும். என்பன போன்ற செய்திகள் எனக்கு மிகவும் புதியனவாகவிருந்தன.

இந்நூலின் பெயரிலேயே உள்ள ஒரு கட்டுரையில், கிராமமொன்றில் தனக்கேற்பட்ட அனுபவத்தை ஆசிரியர் பகிர்ந்துகொள்கிறார். ஓர் ஆண் இறந்த வீட்டில் குவிந்திருக்கும் மனிதர்களிடையே, வீட்டுனுள்ளிருந்து அமைதியாக வெளிவரும் கிழவியொருத்தி, நீர் நிறைந்த செம்பினுள் மூன்று முல்லைப் பூக்களைப் போடுகிறார். புரியாமல் இருந்த ஆசிரியருக்கு, 'இறந்து போனவரின் மனைவி மூன்று மாதங்கள் கருவுற்றிருப்பதாகவும், அக்கருவுக்குக் காரணகர்த்தா இறந்தவர்தான் என்பதை ஊரறியச் செய்வதற்காக இச்சடங்கு என்பதாகவும்' தெரிவிக்கிறார்கள். ஆச்சரியத்தில் ஆழ்ந்து போன ஆசிரியரின் வார்த்தைகள் அவர் மொழியிலேயே... 'ஒரு பண்பாடு பேச்சே இல்லாத ஒரு சின்ன அசைவின் மூலம் எவ்வளவு நுட்பமாகவும், மென்மையாகவும் தன்னை அடையாளம் காட்டிக் கொள்கிறது!'.

பண்பாடு என்பது ஒரு சமூகத்தின் உணவு, உடை, கலை, வாழ்முறை, மொழி, நம்பிக்கை, வாழிடம், விழா, விளையாட்டு, இலக்கியம், சடங்கு எனும் பல கூறுகளின் தொகுப்பு என்ற அடிப்படையில், தமிழரின் வாழ்வில் இவை அனைத்தும் இருந்த நிலை மற்றும் சமகால நடைமுறைகளை இந்நூல் முன்வைக்கிறது. நிறைய தகவல்களின் தொகுப்பாக இருப்பதால் வாசிப்பவரைக் கொஞ்சம் ஆயாசப்படுத்தலாம். ஆயினும், நல்ல தகவல்களைத் தேடும் ஆர்வமுள்ளவர்களுக்கு அது பெரிய தடையில்லை.

பின்குறிப்பு :


1. இந்நூல், ஆசிரியரின் 'அறியப்படாத தமிழகம்', 'தெய்வங்களும் சமூக மரபுகளும்' எனும் இரு நூல்களின் தொகுப்பு. (இந்த உண்மை தெரியாமலேயே 'அறியப்படாத தமிழகம்' நூலையும், இந்நூலையும் ஒரே நாளில் வாங்கி வைத்த புத்திசாலி நான். அதை விட பெரிய வருத்தம் என்னவென்றால் ஒரே பதிப்பகத்திலிருந்து வெளிவந்த இவ்விரு புத்தகங்களின் விலையும் கூட ஒன்று என்பதே!)

2. இப்புத்தகத்தின் முகப்பு அட்டையில் இருக்கும் ஓவியம்தான் என்னை இப்புத்தகத்தை வாங்கத் தூண்டியது.

3. என் இன்னொரு வலைப்பூவான 'கருப்பு வெள்ளையை' 'கறுப்பு வெள்ளை'யாக மாற்றியது இந்நூல்தான்.

-பா.சேரலாதன்
(http://seralathan.blogspot.com/)

No comments: