Monday, January 09, 2012

85. ATLANTIC - A VAST OCEAN OF A MILLION STORIES

பதிவிடுகிறவர்  நண்பர் ஞானசேகர். நன்றி!

Men might as well project a voyage to the Moon, as attempt to employ steam navigation against the stormy North Atlantic Ocean.
- Dionysius Lardner (1838 AD)
------------------------------------------------------------------------------
புத்தகம் : Atlantic - A vast ocean of a Million stories
ஆசிரியர் : Simon Winchester
மொழி : ஆங்கிலம்
வெளியீடு : Harper Press
முதற்பதிப்பு : 2010
விலை : 399 ரூபாய்
பக்கங்கள் : 498 (தோராயமாக  33 வரிகள் / பக்கம்)

------------------------------------------------------------------------------

நடுநிலைப் பள்ளி வகுப்புகளில் விடுமுறை தினங்களில் மாமா வீட்டிற்குச் செல்லும்போது அவர் வைத்திருக்கும் பாக்யா இதழைப் படிக்கும் பழக்கம் இருந்தது. 'மயிர்க் கூச்செரியும் விசயங்கள்' என்று அப்போது வெளிவந்து கொண்டிருந்த தொடர் ஒன்றில்தான் கடல் என்ற பிரம்மாண்டத்தின் அபாயம் புரிந்தது. நினைவில் கொஞ்சம் தங்கியிருக்கிறது அக்கதை. ஏதோவொரு கடலில் காணாமல் போன உல்லாசப் பயணிகள் கப்பல் ஒன்றைத் தேடுவதைப் பற்றியதுதான் அத்தொடர். தன்னந்தனியாக நடுக்கடலில் தத்தளிக்கும் அக்கப்பலைக் கண்டெடுக்கிறார்கள். பயணிகளுடன் சென்ற செல்லப் பிராணிகள் உட்பட யாருமே அதனுள் இல்லை. ஆராய்ச்சிக் குழுக்கள் களத்தில் குதிக்கின்றன.

இராட்சசக் கடல் பாம்புகள் எல்லாரையும் கொன்றிருக்கலாம் - வெறிநாய்க்கடி நோய் (Rabies) தாக்கப்பட்ட செல்லப் பிராணிகள் மூலம் எல்லாருக்கும் நோய் பரவி, கொலைகளும் தற்கொலைகளும் நடந்திருக்கலாம். இப்படி ஒவ்வொருவரும் ஒவ்வொரு காரணம் சொன்னார்கள். சாப்பாட்டு மேசையில் சிந்தப்படாமல் பாதி உண்ணப்பட்ட நிலையில் இருந்த தட்டுகள், இவ்விரண்டு சந்தேகங்களையும் நிராகரித்தன. 'அப்படியென்றால் இருந்தவர்களைக் கொன்றுவிட்டு நன்றாகச் சாப்பிட்டுவிட்டு தட்டைக் கழுவி வைக்காமல் போயிருப்பார்கள் கடற்கொள்ளையர்கள்' என்றார் இன்னொருவர். எரிபொருள் ஒருசொட்டுகூட பீப்பாய்களில் மிச்சமில்லை என்பது சாதகமாய் இருந்தாலும், மற்ற பொருளேதும் களவாடப்படவில்லை என்று அதையும் நிராகரிக்கிறார்கள். இப்படியே மர்மாய் நகர்ந்தது அத்தொடர்.

அத்தொடர் அத்தோடு இருக்கட்டும்; நான் தொடரும் என் சொந்தக்கதை சொல்கிறேன். உலகின் இரண்டாவது நீளமான கடற்கரையான மெரினாவில் முதன்முதலில் கடல் பார்த்தபோது, ஆச்சரியத்தில் இருந்து மீளாமல் செருப்புக் காலுடன் எம்ஜிஆர் சமாதியில் அடியெடுத்து வைத்து அப்பாவிடம் அடிவாங்கியது. அம்மாவைக் காப்பாற்றியது மாதா இல்லை, இராம‌நாதன் டாக்டர் என்று வேளாங்கன்னி கோயிலுக்குள் போகாமல் கடற்கரையில் போய் அமர்ந்து கொண்டது. எனக்குப் பிரியமான வங்கக்கடலை இந்தியப் பெருங்கடலின் சிறுகுழந்தை என்று சொன்னதற்காக, 'தண்ணீர் தேசம்' புத்தகத்தில் வரிக்கு வரி காதலையும் கடலையும் ரசிக்க வைத்த வைரமுத்துவை மனதுக்குள் குழந்தைத்தனமாகத் திட்டியது. அதே வைரமுத்துவின் 'வங்காள விரிகுடா' கவிதையைத் திரும்பத் திரும்ப படிப்பது. மண்வாசனை போல கடல்வாசனை அறிய நடுக்கடல் பயணம் போனது. இந்த நவம்பரில் கோனார்க் - பூரி சாலையில் எல்லாரும் கடல் பார்க்க இடையில் இறங்கியபோது, மடியில் படுத்திருந்த யாரோவொரு கர்ப்பிணிக்காக நான் கடல் தொடாமல் போனது.

கடல் பற்றிய‌ பேச்சு வந்தாலே இப்படித்தான் சம்மந்தமே இல்லாமல், 'மந்திரப் புன்னகை' கதாநாயகன் போல மனதில் தோன்றுவதை எல்லாம் பேசத் தோன்றும். இதுவரை நான்கு கடல்களை மட்டுமே தரிசித்திருக்கும் எனக்குச் சம்மந்தமே இல்லாத இன்னொரு பிரம்மாண்டம் - அட்லாண்டிக். புத்தகத்தைப் பார்த்த உடனேயே நான் வாங்கிவிடவில்லை. விலையும் தடிமனும் உறுத்தின‌. சொத்தைப் பல்லுக்காக சொத்தையா இழப்பது சொத்தைப் பயலேயென்று வாங்கிவிட்டேன். புதினங்களில் கதையே சொல்லாத நான், உங்களுக்கு எளிதில் புரிவதற்காக இப்புத்தகத்தைக் கதையாகச் சொல்கிறேன்.

சுமார் 250 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் தரைப்பகுதிகள் எல்லாம் சேர்ந்து ஒரே நிலப்பரப்பாகவும் (Pangaea), அதைச் சுற்றி ஒரேயொரு கடற்பரப்பும் (Panthalassa) இருந்திருக்கின்றன\. நிலவோடுகள் நகர்ந்து கண்டங்கள் உருவாக ஆரம்பித்தபின், சுமார் 190 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் பிறந்ததுதான் அட்லாண்டிக் பெருங்கடல். பாதி ஆயுளைக் கடந்துவிட்டு இன்னும் சுமார் 180 மில்லியன் ஆண்டுகளில் இல்லாமல் போகப்போகும் இப்பெருங்கடல் தின்று செரித்து நின்று சிரித்து சொல்லும் மில்லியன் கதைகள்தான் இப்புத்தகம்.

15ம் நூற்றாண்டில் கான்ஸ்டான்டினோபிளை (இஸ்தான்புல்) ஒட்டாமன் பேரரசு கைப்பற்றி, பாதையை அடைத்தவுடன், ஆசியாவுடனான தனது வர்த்தகத்தைத் தொடர புதிய வழிகளைக் கண்டுபிடிக்க ஐரோப்பிய நாடுகள் நிர்ப்பந்திக்கப்பட்டன. கடலில் இருக்கும் அரக்கன் படகைக் கடித்துவிடுவான் எனவும், பூமத்திய ரேகையில் கடலில் நெருப்பெரியும் எனவும், மேற்குக் கடைசியில் கடலில் சகதி இருக்கும் எனவும், தட்டையான பூமியின் விளிம்பில் கப்பல் கவிழ்ந்துவிடும் எனவும் அதுவரை நம்பிக் கொண்டிருந்த ஐரோப்பியர்கள் தங்களது மேற்குப்பக்க நீர்ப்பரப்பில் பயணிக்க ஆரம்பித்தார்கள்.

தனது ஐந்து பயணங்களிலும் தரையிறங்கும் இடங்கள் எல்லாம் இந்தியா என்று பூர்வீக மக்களைக் கொன்று குவித்த‌ கிறிஸ்டோபர் கொலம்பஸ், கரிபியன் பகுதியில் உள்ள ஹிஸ்பேனியோலா (Hispaniola) தீவில் முட்டிக் கொண்டதை நாடு திரும்பியவுடன் பரிதாபமாகச் சொல்கிறார்: "My intention in this navigation was to reach Cathay and the extreme east of Asia, not expecting to find such an obstacle of new land as I found". Cathay என்பது சீனாவிற்கான ஆங்கிலச் சொல். Cathay Pacific விமானம் கேள்விப்பட்டு இருப்பீர்கள்.

ஆசியா ஐரோப்பா ஆப்பிரிக்கா போல கொலம்பஸ் கண்டுபிடித்ததும் இன்னொரு பெரிய கண்டம் என்று 16ம் நூற்றாண்டைத் தொடக்கத்திலேயே திகைக்க வைக்கிறார் அமெரிக்கொ வெஸ்புகி. அதற்கு முன் அட்லாண்டிக் என்பது ஒரு தனிக்கடல் என்ற அறிவோ அல்லது அப்படிப்பட்ட‌ சந்தேகமோ இருந்திருக்கவில்லை என்பது ஆச்சரியம்தான். அந்த நான்காம் கண்டத்திற்குத் தனது பெயரின் பெண்பால் நிகரான‌ அமெரிக்கா என்ற பெயர் தந்த‌ அவர், வாழ்க்கையின் பிற்பகுதியை விபச்சாரத் தரகராகக் கழித்தார் என்பது நமக்கெல்லாம் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

வழக்கம்போல கண்டுபிடித்த கண்டத்தை வட-தென் என இரு துண்டாக்கி காலனிகளில் போட்டிப்போட்டு காலணி பதித்தன‌ ஐரோப்பிய நாடுகள். ஆப்பிரிக்க கறுப்பின மக்களை அடிமைகளாகக் கண்டம் கடத்துவது, புதிய கண்டத்தின் நிறக் கொடுமைகளையும் காலனி ஆதிக்கத்தையும் எதிர்த்து புரட்சிகள் உண்டானதெல்லாம் பெருங்கதைகள். அமெரிக்கா என்ற தனிநாடு வடக்கே தோன்றியவுடன் முதல் போஸ்ட் மாஸ்டர் ஜெனரலாக இருந்து, இடிதாங்கி மற்றும் இரட்டையாடி மூக்குக்கண்ணாடி (Bifocals) கண்டுபிடித்துப் பிரபலமான பெஞ்சமின் பிராங்க்ளினுக்கு ஒரு மிகப்பெரிய சந்தேகம் வருகிறது. குறிப்பிட்ட ஓர் இங்கிலாந்து நகரத்தில் இருந்து ஓர் அமெரிக்க நகரத்திற்குச் செல்லும் தபால்கள், அதே தொலைவில் இருக்கும் இருவேறு நகரங்களுக்குச் செல்லும் தபால்களைவிட ஒருநாள் தாமதமாகச் செல்வதைக் கவனிக்கிறார். அரசியல் அறிவியல் என்று சகலகலா வல்லவனாக இருந்த அவர், தானே காரணத்தையும் கண்டுபிடிக்கிறார். கடல் நீரோட்டம் (stream) என்ற ஒரு புதிய அத்தியாயத்தை உலகிற்கு அறிமுகப்படுத்துகிறது அட்லாண்டிக்.

அட்லாண்டிக் கடலில், மிகச்சரியாக பாதிவழியில், ஒரு பள்ளத்தை நிரப்புவது போல் இருபக்கங்களில் இருந்தும் குறுக்குவாக்கில் நீர்த்திரள் கூடுவதை (Dolphin Rise) மாலுமிகள் கவனிக்கின்றனர். அமெரிக்க நிலவோடுகளை ஆசிய-ஐரோப்பிய-ஆப்பிரிக்க தகடுகளில் இருந்து பிரிக்கும் அந்த இடத்தில், கடலுக்கடியில் உலகின் மிக நீண்ட மலைத்தொடர் (Mid-Atlantic ridge) இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது 19ம் நூற்றாண்டின் பிற்பாதியில். எவெரெஸ்ட்டைப் பசிபிக் கடலுக்குள் மறைத்து வைத்தால் யாராலும் கண்டுபிடிக்க முடியாது என்றும், வாலிப மனித உடம்பொன்றின் நரம்புகளைக் கயிறாய்த் திரித்து பூமியை ஆறு சுற்றுகளுக்கு மேல் சுற்றலாம் என்றும் சின்ன வயதில் படித்த ஆச்சரியமே இன்னும் குறையவில்லை!

இன்னொரு புறம் பரிணாமம் பற்றி ஆராய்ச்சி செய்வதற்காக தனது மாணவர்களை மனிதக் காலடிபடாத பகுதிகளுக்கு அனுப்பி வைக்கிறார் சார்லஸ் டார்வின். அப்படி அவர்கள் கொண்டுவந்த ஓர் ஆதிவாசி நிர்வாண மனிதனை, இரண்டு வருடங்கள் இலண்டன் நகரில் பழக்கி, நுனிநாக்கு ஆங்கிலம் கற்றுக்கொடுத்து, கோட்டு சூட்டெல்லாம் போட்டு, திரும்பவும் அவனை அவனது பூர்வீகத் தீவிலேயே இறக்கி விடுகிறார். அவன் காட்டிய எதிர்வினைதான், ஆதாம் ஏவாள் என்று மனிதயினம் படைக்கப்பட்டிருக்க வாய்ப்பில்லை என்று அவரை நாத்திகம் சொல்ல வைத்தது.

இதுவரை 150 பக்கக் கதை சொல்லி இருக்கிறேன். அட்லாண்டிக் கடலை ஓவியம், இலக்கியம் என்று கலைகள் எவ்வாறு அழகுபடுத்திக் காட்டின எனபதுதான் அடுத்த 50 பக்கங்கள். பெருங்காற்று (Tempest) எழுதின வில்லியம் ஷேக்ஸ்பியர் முதல், 2012ல் மிகப்பரவலாகப் பேசப்படப் போகும் மாயா இனமக்கள் வரை பல உதாரணங்கள். அடிமைமுறை, கடல் வணிகம், கள்ளக்கடத்தல், கடற்போர்கள், கடற்கொள்ளை, பிடிபட்டவர்கள் மேல் செய்யப்படும் வதைகள், கடல் விபத்துகள், கடல் சம்மந்தப்பட்ட அமைப்புகளின் தோற்றம் மற்றும் ஒப்பந்தங்கள் என்று படங்களுடன் பேசுகின்றன அடுத்தடுத்த கட்டுரைகள்.

இப்போதுதான் புத்தகத்திலேயே என்னை மிகவும் ஆச்சரியப்படுத்திய பகுதிக்கு வந்திருக்கிறேன். 1760ல் இங்கிலாந்து மன்னர் இரண்டாம் ஜார்ஜ் இறந்த செய்தி, அவரின் அமெரிக்கக் காலனியை அடைய 6 வாரங்கள் ஆனது. ஆபிரகாம் லிங்கன் 1865ல் சுட்டுக் கொல்லப்பட்டதைக் கேட்டு அதிர்ச்சியடைய, இலண்டன் மக்களுக்குப் 12 நாட்கள் தேவைப்பட்டன. அப்போது பிரபலமாகி வந்த சாமுவேல் மோர்ஸின் (Samuel Morse) தந்திமுறை மூலம், இந்த இருபெரும் நிலப்பரப்புகளுக்கு இடையே தகவல் பரிமாற்றம் செய்ய மனிதன் என்ன செய்தான் என்று நான் சொல்ல மாட்டேன். உங்கள் தேடுதலுக்கு விட்டுவிடுகிறேன். அதை ஒருமுறை டிஸ்கவரி சேனலில் விளக்கியதாக என் நண்பன் ஒருவன் சொன்னான்.

முதல் தந்திவழித் தொடர்பு வெற்றி பெற்றவுடன் டைம்ஸ் பத்திரிக்கை செய்தி: "...the Atlantic is dried up and we become in reality as well as in wish... one country...". 15 நாட்களே நீடித்த அச்சந்தோசத்தின் முடிவில், தந்தி செயலிழக்கிறது; கடல் வெல்கிறது; மீண்டும் இருவேறு கண்டங்கள். இயற்கையை வெல்ல முடியாதென மனிதன் உணர்கிறான். (நதிநீர் இணைப்பு ஆதரவாளர்கள் கவனிக்க) தேவையும் ஆசையும் மனிதனை விடவில்லை. அடுத்த தந்திக் கம்பியை 4 வாரங்களுக்குப் பின் புதைத்தான். 1900ல் 15 தந்திக் கம்பிகள் அட்லாண்டிக் கடலினூடே ஓடின. இக்காலத்தில் கம்பியில்லாத் தொடர்பு மூலம் வானொலி கண்டுபிடித்த குலீல்மோ மார்க்கோனி (Guglielmo Marconi) அறிமுகமாவதும், இரு கண்டங்களுக்கு இடையே ஆன்டெனாக்களை வைத்து அவர் நடத்தும் சோதனைகளும், வெற்றி பெற்றபின் அவருக்கு வரும் மிரட்டல்களும், ஆல்வா தாமஸ் எடிசன் தோள் கொடுப்பதும்... இரண்டே தாள்கள் தான். அருமை. அதன்பிறகு விமானம் கண்டுபிடித்த ரைட் சகோதரர்களும் வருகிறார்கள். எல்லா அறிவியல் சோதனைகளுக்குப் பின்னும் அட்லாண்டிக் எளிதில் தாண்ட முடியா பெரும் சோதனையாகவே இருந்திருக்கிறது.

ஒரு காலத்தில் எவெரெஸ்ட்டை அண்ணாந்து பார்த்து பிரமித்த மனிதன், ஏறி முடித்த பின் கெட்ட வார்த்தையில் திட்டியது மட்டுமில்லாமல், அடியைக் குப்பைக் கூடமாகவும், வழியைப் பிணக் கூடமாகவும், உச்சியைப் பல‌ தேசக் கொடிக‌ள் கட்டும் கொட்டகையாகவும் தான் மாற்றியிருக்கிறான். அதே நிலைமைதான், உலகின் தட்பவெப்பத்தில் பெரும்பங்கு வகிக்கும் அட்லாண்டிக் பெருங்கட‌லுக்கும் என பேசுகின்றன மிச்சமுள்ள கட்டுரைகள். டைட்டானிக், லூசிடானியா (Lusitania), பெர்முடா முக்கோணம் (Bermuda triangle) போன்றவை அதிகம் விவாதிக்கப்பட்டு பரிச்சயமான‌ விசய‌ங்கள் என்பதால் இப்பதிவின் நீளம் கருதி விட்டுவிடுகிறேன். பனாமா கால்வாய் வரும் வரும் என்று எதிர்பார்த்து ஏமாந்து போனேன். இப்படியே கடல் பற்றி மனதில் தோன்றுவதை எல்லாம், முதிர‌னுபவமுள்ள ஒரு கடல் மாலுமிக்குக் கடல் தரும் பிரமிப்பு போல சலித்துப் போகும்வரை, பேசிக்கொண்டே இருக்க ஆசைதான்!

அட்லாண்டிக் பற்றி சில தகவல்கள்:
1. அமேசான் என்ற ஓர் ஆறு மட்டும் அட்லாண்டிக் கடலில் கொண்டு சேர்க்கும் நீரும் மண‌லும் சகதியும், உலகின் அடுத்த எட்டு பெரும் ஆறுகள் தத்தம் கடல்களில் சேர்ப்பதைவிட அதிகம்.
2. அட்லாண்டிக் கடலடியில் கிடக்கும் தெரிந்த‌ பிணங்களின் தோராய எண்ணிக்கை 60,000.
3. வருடத்திற்கு 4,00,000 வர்த்தக விமானங்கள் அட்லாண்டிக் தாண்டுகின்றன.
4. பெருங்கடல்களிலேயே அதிக பனிக்கட்டி கொண்டிருப்பது அட்லாண்டிக். எனவே உலக வெப்பமயமாதலில் முதலில் கவனிக்கப்பட வேண்டியதும் பாதிக்கப்படப் போவதும் அதுதான்.
5. பெரும்பாலும் அட்லாண்டிக்கின் நிறம் சாம்பல்; பசிபிக்கும் இந்தியப் பெருங்கடலும் நீலம்.
6. ஆப்பிரிக்கக் கண்டத்தின் தென்கோடி எது? நன்னம்பிக்கை முனை (Cape of Good Hope) என்றால் தவறு. அகுல்ஹஸ் முனை (Cape Agulhas). உலக வரைபடத்தில் அவ்விடத்தில் அகலவாக்கில் ஒரு கோடுபோட்டு, அந்தக் கோட்டைத் தாண்டி நீயும் போகக் கூடாது இவனும் வரமாட்டான் என்று அட்லாண்டிக் மற்றும் இந்தியப் பெருங்கடல்களிடம் சொல்கிறது IHO (International Hydrographic Organization). இந்தியாவின் தென்முனை எதுன்னா, டக்குன்னு குமரி என்று சொல்லிவிடாதீர்கள்; அது தீபகற்ப இந்தியாவின் தென்முனை மட்டுமே. இந்திரா முனை என்று ஒன்று தீவாக இருக்கிறது!
7. அமலாவைக் கண்டுபிடித்தது டி.ராஜேந்தர். அமெரிக்காவைக் கண்டுபிடித்தது யார்? கிறிஸ்டோபர் கொலம்பஸின் கைக்கெட்டியது ஆனால் கால் படவில்லை; அமெரிக்கொ வெஸ்புகியின் வாய்க்கெட்டியது. அவர்களுக்கெல்லாம் 500 வருடங்களுக்கு முன், சரியாக 1001ம் ஆண்டு, கால்பதித்தவர் Leif Ericson. வரலாற்றில் மறைக்கப்படும் பல‌ மனிதர்களில் இவரும் ஒருவர்.
8. இப்பதிவின் ஆரம்பத்தில் பாக்யாவில் படித்ததாக நான் சொன்ன கப்பல் Mary celesteஆக இருக்கலாம்.

நீங்களே படித்துக் கொள்ள அட்லாண்டிக் சுற்றி சில விசயங்கள்:
1. பசிபிக் கடக்கும் சிரமம் இல்லாமல் மனிதயினத்தை ஆசியாவில் இருந்து அமெரிக்காவில் பரவ வைத்த பேரிங் நீரிணை (Bering strait).
2. Cape Bojador - நெருங்கும் கப்பல்களைக் கடலுக்குள் இழுத்துப்போய் 600 மைலுக்கு அப்பால்விடும் கடல்நீரோட்டம் உள்ள இடம். சகாரா பாலைவனத்து மணலை அட்லாண்டிக் தாண்டி பிரேசிலில் தூவி சோயாபீன்ஸ் மகசூலை ஓகோவெனவாக்கும் காற்று வீசுமிடம்.
3. Tristan da Cunha - தென்னாப்பிரிக்காவில் இருந்து 1800 மைல்கள் தொலைவில் உள்ள தீவு; மக்கள் வசிக்கும், உலகின் மிகத் தனிமையான தீவு.

கடல் சம்மந்தப்பட்ட சில கேள்விகள் உங்களின் வீட்டுப்பாடத்திற்கு:
1. வளைகுடா - Gulf, விரிகுடா - Bay, கடல் - Sea, பெருங்கடல் - Ocean. என்ன வித்தியாசம்? (நீங்கள் யோசிக்கும் போது மன்னார் வளைகுடா, வங்காள விரிகுடா, அரபிக்கடல், ஆர்க்டிக் பெருங்கடல் போன்றவற்றை நினைத்துக் கொள்ளுங்கள்)
2. புயல் என்ற வார்த்தையை ஆங்கில ஊடக‌ங்களில் Hurricane, Cyclone, Typhoon என்றெல்லாம் கேள்விப்பட்டு இருப்பீர்கள். என்ன வித்தியாசம்? (கற்றதும் பெற்றதும் அல்லது ஏன் எதற்கு எப்படி, புத்தகத்தில் சுஜாதா சார் பதில் சொன்னதாக ஞாபகம்)
3. ஸ்ரீ ஹரிகோட்டா மாதிரி ராக்கெட் ஏவுதளங்கள் இந்தியாவில் வங்கக் கடற்கரையில் மட்டுமே அமைந்துள்ளன. அரபிக்கடலுக்கு ஏன் ஓர வஞ்சனை? (The Hinduவில் 7 ஆண்டுகளுக்கு முன் படித்தது)

அட்லாண்டிக் பற்றிய அறிவு, உலகைப் பற்றிய அறிவு என்கிறது புத்தகத்தின் ஒருவரி. 33% பூமியையும் 46% நீரையும் வைத்துக் கொண்டு நிலவுக்கே நிலம் கொடுத்த பசிபிக் பெருங்கடல் இருக்கும்போது, 20% பூமியையும் 26% நீரையும் வைத்திருக்கும் அட்லாண்டிக் பற்றி அவ்வரி மிகவுரை போலத் தோன்றியது. புத்தகத்தின் பாதியைக் கடக்கும் முன்னே, அவ்வரிகளை ஆதரிக்க ஆரம்பித்துவிட்டேன். புத்தகம் நான் கடந்துவிட்டாலும், அட்லாண்டிக் என்ற S வடிவ பிரம்மாண்டத்தில் நான் இன்னும் தத்தளிப்பது நின்றபாடில்லை.

நாம் உள்ளிழுக்கும் 5 மூச்சுகளில் ஒன்றிற்கான ஆக்ஸிஜன் கடலில் இருந்துதான் கிடைக்கிறது. கடல் கற்போம்; கசடறக் காப்போம்!

அனுபந்தம்:

1. நீங்கள் தமிழ்வழிக் கல்வியில் படித்திருந்தால், வெறிநாய்க் கடி'நாய்' என்று எழுதி மாட்டி இருக்கிறீர்களா? இல்லை, சும்மா துணைக்கு யாராவது இருக்கீங்களா என்று தெரிந்து கொள்ள கேட்டேன்.

2. தற்போது நான் படித்துக் கொண்டிருக்கும் புதினத்தில், 19ம் நூற்றாண்டின் கடைசியில், நல்ல எதிர்காலம் இருப்பதாக கதாநாயகனைத் தந்தி அலுவலகத்தில் வேலைக்குச் சேரச் சொல்கிறார்கள். அவனோடு படுக்கை பகிரும் ஒருத்தி, நல்ல எதிர்காலம் இருப்பதாகத் தட்டச்சு கற்கிறாள். நீராவி இயந்திரத்தில் ஆரம்பித்த நல்ல எதிர்காலம், தந்தி தட்டச்சு என்று தாவிக் கொண்டே இருக்கிறது. அப்புத்தகத்தைப் பற்றியும் இதே தளத்தில் எதிர் காலத்தில் பார்க்கலாம்.

- ஞானசேகர்

(http://jssekar.blogspot.com/)

No comments: