பதிவிடுகிறவர் நண்பர் ஞானசேகர். நன்றி!
உங்கள் தலைமுடிமீதுகூட உங்களுக்கு உரிமை இல்லை.
உங்கள் தலைமுடிமீதுகூட உங்களுக்கு உரிமை இல்லை.
-இயேசு கிறிஸ்து
-----------------------------------------------------------------------
புத்தகம் : Of Love and Other Demons (புதினம்)
ஆசிரியர் : Gabriel Garcia Marquez
மொழி : ஸ்பானிஷில் இருந்து ஆங்கிலம்
வெளியீடு : Penguin Books
முதற்பதிப்பு : 1994
விலை : 200 ரூபாய்
பக்கங்கள் : 160 (தோராயமாக 32 வரிகள் / பக்கம்)
-----------------------------------------------------------------------அப்போது ஒரு மருத்துவமனை இருந்த அவ்விடத்தில் ஒரு காலத்தில் கன்னியாஸ்திரிகளின் மடம் ஒன்று இருந்திருக்கிறது. அதையும் விற்று, அவ்விடத்தில் ஓர் ஐந்து நட்சத்திர விடுதி கட்டுவதற்காக அவ்விடத்தைச் சுத்தப்படுத்துகிறார்கள். மூன்று தலைமுறைகளாக அம்மடத்தில் இறந்தவர்களை நிலவறையில் தான் அடக்கம் செய்து வைத்திருந்தார்கள். மீதமிருக்கும் எலும்புத் துண்டுகளை எல்லாம் தோண்டி எடுத்து வேறோர் இடத்தில் புதைக்கும் பணி நடந்து கொண்டிருக்கிறது. எலும்புத் துண்டுகளைச் சேகரிக்கும் முன், அவை புதைக்கப்பட்டு இருக்கும் கல்லறைக் கல்லில் எழுதப்பட்டு இருக்கும் தகவல்களைக் குறிப்பெடுத்து தனித்தனியே அடுக்கி வைக்கிறார்கள். அமெரிக்க அதிகாரிகள் சிலர் தமக்கான கல்லறைகளை ஏற்கனவே தயார் செய்து வைத்துக் கொண்டு, வேறு கல்லறைகளில் புதைக்கப்பட்டு இருக்கும் வினோதங்களும் தென்படுகின்றன.
இவற்றையெல்லாம் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த ஆசிரியர் ஒரு வித்தியாசமான கல்லறையைக் காண்கிறார். பெட்டியைத் திறந்தால் வெறும் முடி. இரண்டு மூன்று பேர் சேர்ந்து முடிகளை மெதுவாக வெளியே இழுக்கிறார்கள். வந்து கொண்டே இருக்கிறது. கடைசியாக முடியின் அடி இன்னமும் ஒரு யுவதியின் கபாலத்துடன் ஒட்டிக் கொண்டிருக்கிறது. சில எலும்புத்துண்டுளும் வெடியுப்பும் தவிர வேறேதும் இல்லை. முடியை அளவெடுக்கிறார்கள். 22 மீட்டர் 7 சென்டிமீட்டர்.
மனிதமுடி இறப்பிற்குப் பின்னும் மாதத்திற்கு ஒரு சென்டிமீட்டர் வீதம் வளர்வது இயல்பு. அப்படி என்றால், அந்த யுவதி கிட்டத்தட்ட 200 ஆண்டுகளுக்கு முற்பட்டவள். இந்தக் கணக்குப் போட்டுப் பார்க்கும் போதுதான், ஆசிரியருக்குச் சிறுவயதில் தன் பாட்டி சொன்ன கதை ஒன்று ஞாபகத்திற்கு வருகிறது. தொடர்வண்டி போல் கூந்தலை இழுத்துக் கொண்டே திரிந்து, வெறிநாய்க்கடி நோயினால் (Rabies - ரேபீஸ்) இறந்துபோன 12 வயது சிறுமியொருத்தி கரீபியக் கடற்பகுதிகளில் அற்புதங்கள் செய்துவரும் கதையது. இக்கல்லறையில் இருக்கும் யுவதி அச்சிறுமியாய் இருக்கக் கூடும் என்ற சிந்தனைதான் ஆசிரியரை இப்படி ஒரு புத்தகம் எழுத வைத்தது.
12 வயது சிறுமி ஒருத்தியை ஒரு நாய் கடிப்பதுடன் ஆரம்பமாகிறது புதினம். அவள்தான் கதாநாயகி. தன்னைத் தானே நெறித்துக் கொல்வதுபோல் கழுத்து சுற்றி தொப்புள்கொடியுடன் குறைமாதத்தில் அவள் பிறந்தவுடன், பிழைப்பதே சந்தேகமென செவிலி சொல்லி, அவள் மட்டும் பிழைத்துக் கொண்டால் அவளின் திருமண இரவு வரை அவளுக்கு முடியே வெட்டுவதில்லை என, இருக்கும் புனிதர்களை எல்லாம் செவிலியே வேண்டிக் கொள்கிறார்கள். அதனால் அவளுக்கு முடி அதிகம். பெற்ற தாயே அவளைக் கொன்றுவிடுவதாக வெறுத்து ஒதுக்க, கதாநாயகியும் செவிலித்தாயுடன் அடிமைகளின் குடியிருப்பிலேயே வாழ்ந்து வருகிறாள். அந்த அடிமைகளின் குடியிருப்புப் பகுதி, கன்னியாஸ்திரிகளின் மடமொன்று; பெரும்பாலும் மொத்தக் கதையும் இவ்விரு இடங்களிலேயே அடங்கிவிடுகிறது.
பெரும்பாலான நோய்களைப் போல ரேபீஸ் நோயும் கடற்பயணத்தின் மூலம்தான் ஐரோப்பாவில் இருந்து தென்னமெரிக்காவை அடைத்திருக்கிறது. குரங்கொன்றின் மூலம் அதன் எஜமானுக்கும் பரவி, அவன் விசித்திரமான இறப்பைக் குழந்தைகளுக்குப் பயங்காட்டத்தான் மக்கள் பயன்படுத்தி வந்திருக்கிறார்கள். வெறிநாய்க் கடிக்குத் தடுப்பூசி கண்டுபிடிக்கப்படாத அக்காலத்தில், நாலைந்து நாய்கள் ஒரே நாளில் கடித்தால் கூட கவலைப்படாமல் வெறும் எலுமிச்சைச் சாற்றைத் தேய்த்துவிட்டு தூங்கி இருக்கிறார்கள். நோய்க்கான முதல் அறிகுறி தோன்றும் வரை யாருமே எத்தனை நாய்கள் கடித்தாலும் கவலைப்படாமல் இருந்திருக்கிறார்கள்.
யாருக்காவது ரேபீஸ் இருப்பதாகத் தெரிந்தால் அவ்வளவுதான்; நம்மூரில் இடிவிழுந்த வீடுபோல, குடும்ப மானம் கப்பலேறிவிடும். நாய்க்கடி மூலம் சாத்தான் உடம்பினுள் புகுந்துவிடுவதாகச் சொல்லி, அவர்களை ஒதுக்கி வைத்து பேய் விரட்டுவதற்கென்றே சில பிரத்யேகப் பாதிரியார்களை நியமிக்கிறது கத்தோலிக்கத் திருச்சபை. மருந்துமில்லை, கடித்த விலங்கைப் போல் கடிபட்டவர்களும் மாறிவிடுவதில்லை, அதே நேரத்தில் பேயுமில்லை என்று இன்னொருபுறம் கையறுநிலையில் தவிக்கிறது மருத்துவம். இப்படிப்பட்ட காலத்தில் அறிவியலுக்கும் ஆன்மீகத்திற்கும் இடையே கடிபட்டவர்கள் தத்தளிப்பதுதான் கதைச்சுருக்கம். இதற்குமேல் நான் பேசினால், மிச்சமிருக்கும் சின்ன கதையும் வெளிவந்துவிடும்.
புத்தகத்தில் நான் ரசித்த சில வரிகள்:
அடிமை ஒருத்தியை விலை பேசும்போது: A slave two meters tall weighs at least 120 pounds. And no woman, white or black, is worth 120 pounds of gold unless she shits diamonds.
ஒரு பாதிரியாரின் ஆத்திகம்: More than faith, what Galileo lacked was a heart. (பிகாசோ ஒருமுறை சொன்னார்: The genius of Einstein leads to Hiroshima)
ஒரு மருத்துவரின் நாத்திகம்: Our patients entrust their bodies to us, but not their souls, and like the devil, we try to win them away from God. (தசாவதாரம் கமலஹாசன் மாதிரி)
பெண் மேல் காதல் வயப்பட்ட பாதிரியாரிடம் மருத்துவர் சொல்வது: Love is an emotion contra nature that condemned two strangers to a base and unhealthy dependence, and the more intense it is, the more ephemeral.
இளமையில் காதலில் தோற்ற இருவர், இல்லறமும் தோற்றபின் முதுமையில் பேசிக் கொள்ளும் உரையாடல்:
'This is how we should have been', she said.
'When you are like this you seem to be in your right mind', he said.
'I always have been', she said. 'It was you who never saw me as I really was'.
'I picked you out of the crowd when you were all young and beautiful and it was difficult to choose the best', he said.
'I picked myself out for you', she said. 'Not you. You were always what you are now: a miserable devil'.
.
.
.
'If you bit your tongue you would poison yourself', he shouted.
'Don't try to humiliate me, because I'm the only one you have left to powder your face when you die'.
நான் ரசித்தவை:
பாத்திரம் : ஆறு பேய்களைச் சுமந்து திரியும் கதாநாயகி Sierva Maria de Todos los Angelesவரி : The enemy makes better use of our intelligent than of our errors.
பகுதிகள் : பாமர மக்கள் தங்களது பிரச்சனைகளைத் தன்னோடு தொடர்புபடுத்தச் செய்து, சேவல்களை நண்பகலில் கூவச் செய்யும் சூரியக் கிரகணம் பற்றிய பகுதிகள்.
உங்களின் வீட்டுப்பாடத்திற்கு:
எப்படியும் ஒரு அவுன்ஸ் மலத்தை எப்போதும் சுமக்கும் மனிதவுடல் சுமக்கும் ஆச்சரியங்கள் கணக்கிலடங்கா. செத்தாலும் (=சாகும்வரை) வளராது, நித்தம் செத்துச் செத்துப் பிறக்கும், (முடிதவிர) செத்தாலும் வளரும், செத்தே கிடக்கும், சாகவே சாகாது, முதலில் சாகும்.... இப்படி பல பாகங்களைச் சாவுடன் மட்டுமே சம்மந்தப் படுத்தலாம். அவற்றைக் கண்டுபிடியுங்கள்!
ஆன்மீகத்தையும் அறிவியலையும் வைத்து ஒருகாலத்தில் விளையாடிக் கொண்டிருந்த நாயை முடியுடன் பின்னிப் பார்க்கும் கதை. படித்துப் பாருங்கள்.
அனுபந்தம்:
1. செந்தமிழ்ப்பாட்டு, குங்குமப் பூவும் கொஞ்சு புறாவும் போன்ற திரைப்படங்களில் கூந்தல்தான் முக்கிய கதாப்பாத்திரம்.
2. ரேபீஸ் என்பது பெரும்பாலும் நாய்களுடனேயே சம்பந்தப்படுத்தி சொல்லப்பட்டாலும், எந்த விலங்கின் மூலமாக வேண்டுமானாலும் பரவலாம். மும்பை எக்ஸ்பிரஸ் திரைப்படம் போல குதிரை அல்லது மனிதன்; இப்புத்தகத்தில் வருவது போல் குரங்கு அல்லது நாய். நம்ம சுஜாதா சார், ரேபீஸ் தாக்கப்பட்ட வவ்வால் மட்டும்தான் கடிக்கும் அல்லது எங்காவது மோதிக் கொள்ளும் என்ற ஒரு சின்ன விசயத்தை வைத்து ஒரு சூப்பர் சிறுகதை கூட எழுதி இருக்கிறார்.
3. அப்போதைய மாநில ஆளுநர் சென்னா ரெட்டி இறந்ததற்கு விடுமுறை விட்ட நாளில், திருச்சி மலம்பட்டி திருவிழாவிற்குப் போன இடத்தில், கோவாவில் வைக்கப்பட்டிருக்கும் புனித சவேரியாரின் உடலில் முடி வளருவதில் ஆச்சரியமே இல்லை என்று 12 வயதிலேயே சொல்லப்போய், பெயருக்கேற்றபடி நடந்து கொள்ள அறிவுரை பெற்ற அடியேன் நான்!
4. என்னதான் விசக்கடிக்குத் தடுப்பு மருந்துகள் எல்லா அரசு மருத்துவமனைகளிலும் கிடைக்கும் அளவிற்கு நாம் முன்னேறி விட்டாலும், இன்னமும் மாந்திரீகவாதியிடம் போய் வெற்றிலைக் காம்பை வைத்துப் பல் பிடிங்கி வருவது, நம் முன்னோர்களுக்குத் தீய சக்திகளின் மேல் இருந்த அச்சத்தின் எச்சமே!
- ஞானசேகர்
(http://jssekar.blogspot.in/)
No comments:
Post a Comment