Thursday, June 07, 2012

90. THE RED MARKET


பதிவிடுகிறவர்  நண்பர் ஞானசேகர். நன்றி! 

மனிதனுக்காக பொருள்கள் என்ற நிலைபோய் பொருள்களுக்காக மனிதன் என்ற நிலை உருவாகும்.
- கார்ல் மார்க்ஸ்.
---------------------------------------------------------------
புத்தகம் : The Red Market
ஆசிரியர் : Scott Carney (http://www.scottcarney.com/)
மொழி : ஆங்கிலம்
வெளியீடு : Hachette India
முதற்பதிப்பு : 2011
விலை : 550 ரூபாய் (ரூ 385 தள்ளுபடி விலையில் வாங்கினேன்)
பக்கங்கள் : 241 (தோராயமாக 30 வரிகள் / பக்கம்)

---------------------------------------------------------------

எனது எடை 90 கிலோ கிராமிற்குக் கொஞ்சம் குறைவு. அடர்த்தியான முடிகள். ஆரோக்கியமான கண்கள். எல்லாப் பற்களும் பத்திரமாக‌ உள்ளன. எனக்குத் தெரிந்தவரை எனது தைராய்டு சுரப்பி நன்றாக வேலை செய்கிறது. ஆறு அடி இரண்டு அங்குல உயரம். தொடை மற்றும் பின்னங்கால் எலும்புகளும் இணைப்புத் தசைகளும் நன்கு வலுவாக உள்ளன. இரண்டு சிறுநீரகங்களும் நலமே. இதயம் நிமிடத்திற்கு 87 முறைகள் துடிக்கிறது. எனது மதிப்பு ஒரு கோடி ரூபாய்க்கும் மேல். திருமணச் சந்தையில் எனது ஆரம்ப ஏல விலை என நினைக்காதீர்கள். இவை அனைத்தும் ஸ்காட் கார்னி அவர்கள் தனது The Red Market புத்தகத்தில் ஒரு கட்டுரையில் அவரது உடம்பிற்கான சுயமதிப்பீடாக‌ சொல்லும் விசயங்கள்.

எனது இரத்தத்தில் இருந்து பிளாஸ்மா சிவப்பணுக்கள் இரத்தத்தட்டுகள் (platelets) என்று தனித்தனியே பிரித்தெடுத்து தேவைப்படுபவருக்கு உபயோகப்படுத்தப் படலாம். முழங்கால் உடைந்து போன விளையாட்டு வீரர்களுக்கு எனது தசைநார்கள் (ligament) பொருத்தப் படலாம். அமெரிக்க அழகிகளுக்கும் பாப் பாடகர்களுக்கும் செயற்கை முடி செய்யவோ கேக்குகள் செய்யவோ எனது முடி பயன்படுத்தப் படலாம். விழிவெண்படலம் இதயம் சிறுநீரகம் கல்லீரல் போன்றவை இன்னொருவருக்கு அப்படியே பொருத்தப் படலாம். எனது மொத்த எலும்புக் கூடும் ஏதோ ஒரு மருத்துவ மாணவனின் படிப்பிற்குப் பயன்படலாம். நான் செத்தே போனாலும் கூட எனது விந்துவைப் பத்திரப்படுத்தி ஒரு பெண்ணைக் கருத்தரிக்க வைக்கலாம். அப்படிப் பிறக்கும் குழந்தையின் மதிப்பில் எனக்கும் பங்குண்டு என்பது வேறு விசயம். இப்படித்தான் ஒரு கோடி ரூபாய்க்கு விளக்கம் சொல்கிறார் ஆசிரியர். 'மீன் செத்தா கருவாடு, நீ செத்தா வெறுங்கூடு. அடப் போங்க‌ தம்பி'. நீங்கள் நினைக்கலாம்.

ஓர் இயந்திரத்தின் உதிரி பாகத்தைப் போல மனித உறுப்புகளைச் செயற்கையாகச் செய்ய இன்னமும் ஆய்வுக்கூடங்கள் திணறிக்கொண்டு இருக்கின்றன. இன்றைய‌ சூழலில் இன்னோர் உயிருள்ள ஆரோக்கியமான மனித உடலில் இருந்து எடுத்து, பழுதடைந்து போன மனித உடலில் பொருத்துவதுதான் ஒரேவழி. கொடுக்கல் வாங்கல் என்றாலே தரகு என்ற இடைநிலையுடன் ஒரு சந்தை இருக்கத்தான் செய்யும். எதையும் விலைப்படுத்தும் வளர்ந்த நாட்டவர்கள்தான் இங்கே வாங்குபவர்கள்; மனிதவளம் மிக்க மூன்றாம் உலக நாட்டவர்கள்தான் இங்கே கொடுப்பவர்கள். ஆசிரியரின் சுயமதிப்பீட்டில் சொன்ன ஒரு கோடி ரூபாயில் அவருக்கு ஏதாவது சொற்ப பங்கு கிடைக்குமா இல்லையா என்பது உறுப்பைப் பொறுத்தது. தேவை உள்ள இடங்களில் தட்டுப்பாடு தோற்றத்தை ஏற்படுத்தி பணம்செய்யும் தரகர்களின் கள்ளச் சந்தை பற்றியது இப்புத்தகம். இரத்தமும் சதையும் நுகர்வுப் பொருட்கள் என்பதால், இக்கள்ளச்சந்தையின் பெயர் சிவப்புச் சந்தை!

ஒரு காலத்தில் மனித உடலை வெட்டிப் படிக்க மதங்கள் தடை செய்தன. மருத்துவ வல்லுனர்கள் பிணங்களைத் திருடித்தான் மனித உடலைத் திருட்டுத்தனமாகப் படித்தார்கள். போர்களில் சில வீரர்களின் பாலியல் இச்சையைத் தீர்த்துக் கொள்ள எதிரிகளின் பிணங்கள் தேவைப்பட்டன. எல்லாக் காலங்களிலும் ப‌ல்வேறு சூழ்நிலைகளில் இன்னொரு மனித உடலின் உறுப்புகள் தேவைப்பட்டுக் கொண்டுதான் இருக்கின்றன‌. இளமை நிலைக்க‌ சிறுவர்கள் நரபலி கொடுக்கப்படுவதும், ஆட்சி நிலைக்க புதிதாய்ப் பருவமடைந்த பெண்ணின் கருவறை திறப்பதும் அத்தேவைகளின் இன்னொரு வடிவங்கள். பெனிசிலின் கண்டுபிடித்து மருத்துவ உலகம் பிரம்மாண்டமாய் வளர்ந்துவிட்ட பின், இரத்தம் கண் உடல் என்று பொதுநலம் கருதி சிலர் தானே முன்வந்து தானமாகவும் தந்தனர்; அவற்றின் தேவை அதிகரித்தபோது அவற்றுக்கென ஒரு சந்தை உருவாகி விலையும் உருவானது. செருப்பு, எலட்ரானிக் பொருட்கள் போல மனித உறுப்புகளும் சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு நாடுகள் கடந்தன. காலப்போக்கில் மனிதநேயம் என்ற அடிப்படையில் மனித உறுப்புகளை விற்பதை நாடுகள் படிப்படியாகத் தடை செய்தன. பேனா வாங்கினால் மூடி இலவசம் என்று சொல்லி, மூடியின் விலையையும் பேனாவோடு வசூலிக்கும் சந்தை தந்திரத்தில், மனித உறுப்புகள் மூடி போல் இலவசமாயின. இடமாற்றும் மருத்துவச் செலவு என்பது பேனா போல் சமூக வழக்கமாயின. தரகு தளைக்கிறது!

மனித பாகங்களை ஏற்றுமதி செய்வதை 1985ம் ஆண்டுதான் இந்தியா தடை செய்தது. ஆனாலும் ஓர் இந்திய மருத்துவ மாணவன், கல்லறைகளில் திருடப்பட்ட எலும்புகளைத் தனது படிப்பிற்குப் பயன்படுத்துவதைச் சட்டம் அனுமதிக்கிறது. பிள்ளைகளைத் தத்தெடுப்பதில் இந்தியாவில் கெடுபிடிகள் அதிகம். மருத்துவப் பணிகளை ஊக்குவிக்கும் பொருட்டு, வாடகைக்குக் கரு சுமப்பதை இந்தியா 2002ம் ஆண்டு சட்டப்பூர்வ‌மாக்கியது; ஆனால் சட்ட திட்டங்கள் தெளிவாக இன்னும் ஒழுங்குபடுத்தப் படவில்லை. அமெரிக்காவில் ஆகும் சிகிச்சை செலவை விட இந்தியாவில் கிட்டத்தட்ட 20 மடங்கு குறைவு. அமெரிக்காவில் காப்பீட்டு நிறுவனங்களின் கெடுபிடிகள் அதிகம். உறுப்புச் சந்தையைச் சீனாவில் அரசாங்கமே நடத்துகிறது. அரசுக்கு எதிரான சிறைக் கைதிகளின் உறுப்புகளைச் சீன‌ அரசாங்கமே கடத்தியதாக செய்திகள் உண்டு. இஸ்ரேல் போன்ற நாடுகள் தனது எல்லைக்குள் கருமுட்டைகள் விற்பதைத் தடை செய்துள்ளன. ஆனால் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படுவதற்குப் பணவுதவி அளிக்கின்றன. கொடுப்பவர் யாரெனத் தெரியாமலேயே வாங்கச் சொல்லி அவர்களுக்கு இடையே தார்மீக சங்கடங்கள் ஏற்படுவதை உலக நாடுகள் ஊக்குவிக்கின்றன. இதுபோன்ற விசித்திர ஓட்டைகள் தான் சிவப்புச் சந்தையின் மந்திரச்சாவி.

10 கட்டுரைகள் அடங்கிய இப்புத்தகம் சொல்லும் சில விசயங்கள்:

1. இறந்த உடல் பாகங்களுக்கு அருகில் இருப்பதன் மூலம் முக்தி அடைய முடியுமென நம்புகிறது பூட்டானிய புத்த மதத்தவர்களின் ஒரு பிரிவு. அவர்களின் புல்லாங்குழல், மனித பின்காலெலும்பு (tibia); அவர்களின் மந்திரம் சொல்லும் கோப்பை, மனித மண்டையோடு. இதற்காகப் பிணங்கள் தோண்டி எடுக்கப்பட்டு கடத்தப் படுகின்றன. புத்தனின் பல்லைக் காக்கும் சிங்களவர்கள் புத்தனின் சொல்லைக் காக்காமல் போனது போல!

2. மருத்துவ மாணவர்களுக்கு எலும்புக் கூடுகள் விற்கும் கும்பலில் ஒவ்வொரு வேலைக்கும் ஒரு தனி டீம். பிணங்களைப் பற்றிய துப்பு கொடுக்க ஒரு டீம். தோண்டி எடுக்க ஒரு டீம். சதைகளைப் பிரித்தெடுக்க ஒரு டீம். பாலிஷ் போட ஒரு டீம். மார்கெட்டிங் டீம் தனி. ஷிப்பிங் டீம் தனி. இதேபோல் உறுப்புகள் தேவைப்படும் மருத்துவமனைகளுடன் தொடர்புடைய துப்பு கொடுப்பவர்கள், மிகவும் சாதாரணமானவர்கள். அவர், நீங்கள் மதுரையில் தினமும் சாப்பிடும் இட்லிக் கடைக்காரராக‌க் கூட இருக்கலாம். தினமும் உங்கள் வறுமையைச் சொல்லி அவரிடம் புலம்பிக் கொண்டிருந்தால், ஒருநாள் அவர் சொல்லலாம்: 'ஒங்க கஷ்டமெல்லாம் தீர நான் ஒன்னு சொல்லுவேன் கேப்பீங்களா?'. மதுரை இட்லிக்கு மட்டுமல்ல பேமஸ்; கிட்னிக்கும்தான் என்பது வடிவேலு காமெடியல்ல!

3. சுனாமி மறுவாழ்வுக்கென அமைத்துத் தரப்பட்ட சென்னைக் கிராமம் ஒன்று, பிழைப்புக்கு வேறு வழியில்லாமல் தங்களின் சிறுநீரகங்களை விற்றது. கிட்னிவாக்கம் என்று பெயர் பெறும் அளவிற்கு வியாபாரம். தடுத்த உள்ளூர் அரசியல்வாதியின் போஸ்டர் கல்லடி வாங்கும் அள‌விற்கு, வியாபாரம் நியாயமாகிவிட்டது. விசயம் நீதிமன்றம் வரை போய் தமிழ்நாட்டின் 52 பெரும் மருத்துவமனைகள் சிக்கின. காலாவதியான மாத்திரைகள் விசயம் காலாவதியாகிப் போனது போல், கிட்னி விசயமும் ஓர் அமைச்சரின் தலையீட்டால் செயலிழந்து போனது என்று ஆசிரியரான அமெரிக்காக்காரர் சொல்கிறார்.

4. புதிய மருந்துகளைச் சோதிக்கும் இரகசிய ஆய்வுக்கூடம் ஒன்றிற்குப் படிக்கும் காலத்தில் ஆசிரியரும் போய் இருக்கிறார். சோதிக்க உடம்பு தருபவர்களுக்கு ஊதியம் அதிகம். படிப்புச் செலவிற்காகச் சென்றிருக்கிறார். அவர் போன நேரம், ஆணுறுப்பின் விறைப்புத் தன்மையை நீண்ட நேரம் தக்க வைக்கும் புதிய மருந்துக்கான சோதனை. இறந்தால் வெளியே தெரியாத இந்த சோதனையில் ஆசிரியர் தப்பித்துவிடுகிறார். முழுச் சோதனையிலும் தன் ஆணுறுப்பு சோதிக்கப்படாத ஆச்சரியத்தை நர்ஸிடம் கேட்கிறார். 'மிக வினோதமான பக்கவிளைவுகள் இல்லாத வரையில் மருந்தின் செய‌ல்பாடு என்பது சோதனையின் நோக்கமல்ல. அது எவ்வளவு நேரம் உடம்பில் தங்குகிறது என்பதே சோதனை' என்கிறது பதில்.

5. சென்னையில் ஒரு பிரபல மருத்துவர் ஸ்டெம் செல்களை ஒரு நோயாளியின் மேல் சோதித்து எதேச்சையாக‌ வெற்றி. எப்படி என்று அவரால் சொல்ல முடியவில்லை. திரும்பவும் வெற்றி பெற முடியவில்லை. ஜெயிக்கும் வரை இராசியான டாக்டர் என்ற பெயர். தோற்றால் ஈ திரைப்படத்தின் வில்லன்!

திருப்பதி தேவஸ்தானத்தில் ஆயுதப் பாதுகாப்புடன் முடி பிரிக்கும் பணி. செங்கிஸ்கானை விட அதிகமாகப் பெண்களைப் பிரசவிக்க வைத்ததாகப் பெருமைப்படும் ஒரு சைப்ரஸ் நாட்டு டாக்டர். அமுல் பால் புகழ் ஆனந்த் நகரில், வாடகைத் தாய்களின் வயிற்றைக் குழந்தை பெற்றுத்தரும் பாத்திரமாக உபயோகிக்கும் கொடூரம். கோரக்பூர் நகரில் இருட்டறையில் வைத்து தொடர்ந்து மாதக்கணக்கில் இரத்ததை உறிஞ்சி உறிஞ்சி சக்கையாக உடம்பைப் பிழிந்து போட்ட கொடூரம். புதிய மருந்து கண்டுபிடிப்புகளைப் பரிசோதிக்கப் போய் விகார‌மான குறைபாடுகளுடன் பிறக்கும் குழந்தைகள். இங்கே உபரியாக‌ இருக்கும் குழந்தை வளத்தை, வெளிநாடுகளுக்குத் தத்துக் கொடுக்கும் சமூகத் தொண்டு நிறுவனங்கள். இது போல பல அதிர்ச்சிகளைத் தருகிறார் ஆசிரியர்.

சிவப்புச் சந்தையில் இப்போது கிராக்கி அதிகம். கருமுட்டை / விந்து வாங்குபவர்களும் தத்து எடுப்பவர்களும் தன்னைப் போலவே குழந்தை இருக்க வேண்டுமென எதிர்பார்க்க ஆரம்பித்துவிட்டனர். கொடுப்பவர்கள் பேரம் பேச ஆரம்பித்து விட்டார்கள். ஆனால் இதன் எல்லாவற்றின் மூலம் அதிகம் பாதிக்கப்படுபவன் சமூகக் கட்டமைப்பில் அடியில் கிடப்பவனே! உதாரணமாக மதுரையில் தனது சிறுநீரகம் ஒன்றை விற்ற மல்லிகா தனது மகனுக்குச் சிறுநீரகம் தேவைப்படும்போது திக்கற்று நிற்கிறாள். இந்தியாவில் சதை என்பது சமூகக் கட்டமைப்புகளின் மேல்தட்டு மக்களால் மட்டுமே பெற முடிகிறது, கீழ்த்தட்டு மக்களால் விற்க மட்டுமே முடிகிறது என்கிறார் ஆசிரியர். இலாப நோக்கில் போய்க் கொண்டிருக்கும் இச்சந்தையில் மனிதனுக்குத் தன் சொந்த சதை மேல் கூட உரிமை இல்லாமல் போகிறது.

எல்லா கட்டுரைகளும் ஆசிரியரின் நேரடி அனுபவ‌ங்கள். அமெரிக்கா இந்தியா சைப்ரஸ் என்று தேடித்தேடிப் போய் தகவல்கள் சேகரித்து இருக்கிறார். அவர் மனைவி பெயரைப் பார்த்தால் நம்மூர் போல் தெரிகிறது. ஏழாம் உலகம் போன்ற புதினங்கள் உலாவும் தமிழ் தெரிந்து, ஆங்கிலத்தில் படித்ததால் பிரச்சனையின் வீரியம் அந்த அளவிற்குப் பாதிக்கவில்லை. புத்தகத்தில் வீரியம் குறைவு என்பதும் உண்மையே. ஆனால் எடுத்துக்கொண்ட விசய‌த்தால் கண்டிப்பாக பாராட்ட வேண்டும்.

காணாமல் போன‌ குழந்தை ஏதோ ஒரு தன்னார்வத் தொண்டு நிறுவனம் மூலம் வெளிநாட்டுப் பெற்றோர்களால் வளர்க்கப்பட்டு திரும்பி வந்ததைச் செய்தித்தாள்களில் படித்திருப்பீர்கள். அது ஏன் கடத்தலாக இருக்கக் கூடாதென‌ இனிமேல் யோசியுங்கள். இரத்தம் பெறும்போது HIV அது இது என்று பல கேள்விகள் கேட்பதுபோல், இரத்ததானம் செய்யும்போதும் எங்கெல்லாம் போகும், கேளுங்கள். பெரியார் சொல்லியே கேட்காத, நீண்ட முடியைக் கடவுள் பெயரில் மொட்டை அடிக்கும் பெண்கள், நான் சொல்லியா கேட்கப் போகிறார்கள்?

ஸ்டெம் செல்கள் மூலம் உறுப்பு பரிமாற்றத்தை நீக்கும் முயற்சியை மருத்துவ உலகம் தேடிக் கொண்டு இருக்கிறது. இரத்ததானம் செய்பவர்கள் முதல், எதிர்பாராமல் மரணத்தை நெருக்கும் உறவுகளின் உறுப்புகளை எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் யாரோ ஒருவருக்குத் தானம் செய்யும் நல்லவர்கள் வரை மனிதமும் அடிக்கடி தலை நீட்டத்தான் செய்கிறது. மருத்துவம் என்பது அடிப்படை உரிமையாக்கப்பட்டு அனைவருக்கும் இலவசமாகும் வரை, பேனாவிற்கு மூடி இலவசம் என்ற வியாபார யுக்தியுடைய தரகுகளைத் தடுப்பது கடினமே! அதுவரை சந்தை நிலவரம் தெரிவோம்!

அனுபந்தம்:
1. ஆரோக்கியமான, புகை மற்றும் இதர கெட்டப் பழக்கங்கள் இல்லாத முடிந்தால் அழகான, வெள்ளையான, உயரமான ஐஐடி மாணவரின் விந்தணு தான‌ம் தேவையென சில நாட்களுக்கு முன் விளம்பரம் செய்தனர் ஒரு சென்னை தம்பதியினர். பெர்னாட்ஷாவை ஓர் அழகு யுவதி கேட்டாள்: 'நாம் இருவரும் திருமணம் செய்து கொண்டால், என்னைப் போல் அழகாகவும் உங்களைப் போல் அறிவாகவும் குழந்தை பிறக்கும்'. பெர்னாட்ஷா சொன்னார்: 'ஒருவேளை என்னைப் போல அழகாகவும் உன்னைப் போல் அறிவாகவும் பிறந்துவிட்டால்?'.

- ஞானசேகர்
(http://jssekar.blogspot.in/) 

No comments: