Saturday, July 20, 2013

105. சாபம்

--------------------------------------------------------------------------------------------------------------------------
புத்தகம் : சாபம் (சிறுகதைகள்)
ஆசிரிய‌ர் : சல்மா
வெளியீடு : காலச்சுவடு பதிப்பகம்
முதற்பதிப்பு : டிசம்பர் 2012
விலை : 110 ரூபாய்
பக்கங்கள் : 142
வாங்கிய இடம் : New Book Lands, வடக்கு உஸ்மான் சாலை, தியாகராய நகர், சென்னை
--------------------------------------------------------------------------------------------------------------------------
(http://www.wikipedia.org)

சிறுகதைகள் பற்றியோ, கவிதைத் தொகுப்புகள் பற்றியோ பெரும்பாலும் நான் இங்கு எழுதுவதில்லை; எழுதவும் தெரியாது. சமீபத்தில் ச.தமிழ்ச்செல்வன் சிறுகதைகள் பற்றி எழுதலாம் என முனைந்தால், தம்பி சேரல் ஏற்கனவே எழுதிவிட்டார். மனதுக்கு மிக அருகில் நெருங்கும், சில சமய‌ங்களில் எதார்த்தத்தை உட்கிரகிக்கத் தடுமாற வைக்கும் சில சிறுகதைகளைப் படிக்கும் போது, அவற்றைப் பற்றி ஏதாவது எழுதிவிடத் தோன்றும். சமீபத்தில் படித்த, சல்மா அவர்களின் சாபம் என்ற சிறுகதைகள் தொகுப்பும் அப்படித்தான்.

மொத்தம் 11 சிறுகதைகள். 5 கதைகளைப் பிடித்த வரிசையில் குறித்து வைத்திருக்கிறேன். எல்லாக் கதைகளும் ஓர் இஸ்லாமியப் பெண் பார்வையில் சொல்லப்படுகின்றன. இரயிலில் முகம் தெரியாத ஆண்களுக்கு இடையே இரவுப் பயணம், கணவன் இல்லாத நாட்களில் அடிக்கடி சிணுங்கி பேச மறுக்கும் தொலைபேசி அழைப்பு, முதிர்கன்னி நிலைக்குச் சற்று முன் திருமணம் செய்து பித்தாகிப் போக வைக்கும் முதலிரவுகள், குழந்தைப்பேறு இல்லையென மருத்துவத்தால் கைவிடப்பவள் சந்திக்கும் இரவுகள், மொட்டைக் கடுதாசிகள் என முழுக்க முழுக்க பெண்ணுலகில் சஞ்சரித்து வந்த அனுபவத்தைத் தருகின்றன இக்கதைகள்.
(http://www.noolulagam.com)
அக்கதை சாதியைச் சவுக்கால் அடித்தது என்றோ, இக்கதை பெண்ணியப் பெருமை பேசியது என்றோ, ஒரு சொட்டுக் க‌ண்ணீர் தந்தது ஒரு கதை என்றோ, தூக்கம் தூக்கிப் போட்டது இன்னொரு கதை என்றோ எனக்கு எழுதத் தெரியாது என ஏற்கனவே சொல்லிவிட்டேன். இதற்கு மேலும் எழுதினால், கதைகளைத் தான் எழுத வேண்டும் என்பதால், ஒரு சோறு பதம் பார்க்க, நான் ரசித்த ஒரு பத்தியை உங்கள் வாசிப்பிற்கும் தருகிறேன்.

உடல் சார்ந்த பயங்களும் தயக்கங்களும் மறைந்த மேலான சுதந்திரத்தை அடைந்திருந்தாள். பயத்தின் கரங்களிடமிருந்து விடுபட்டுப் பரவசத்தின் எல்லைகளுக்குள் பயணிக்க ஆரம்பித்தாள். பயத்தில் வெறுத்து ஒதுக்கிய இரவுகள், விருப்பமானவையாக மாறித் தன்னைத் தவிக்கவைக்கும் அதிசயத்தை அதீத வியப்புடன் யோசித்தாள். இன்றைய இரவுக்காகவும் தன் உடலைப் புணர வரும் அந்த உருவத்திற்காகவும் விரகத்தில் தகிக்கும் உடலைப் படுக்கையில் கிடத்துவதற்காகவும் இரவு ஒரு பறவைபோலக் கதவுக்கு மேலாகப் பறந்து வரும் அதிசயத்துக்காகக் காத்திருக்க ஆரம்பித்தாள்.

நான் அதிகம் ரசித்த கதைகள்: சாபம், இருள்
நான் ரசித்த குறியீடு: 'சாபம்' கதையில் தெருத் தெருவாகப் போய் மோர் கேட்கும் பெண்கள்

- ஞானசேகர்  
 (http://jssekar.blogspot.in/)

No comments: