Sunday, August 04, 2013

107. வரலாற்றில் மொழிகள் - செம்மொழிகளின் வரலாறு

யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல்
இனிதாவது எங்கும் காணோம்
- மகாகவி
--------------------------------------------------------------------------------------------------------------------------
புத்தகம் : வரலாற்றில் மொழிகள் - செம்மொழிகளின் வரலாறு
ஆசிரிய‌ர் : இரா.நடராசன்
வெளியீடு : பாரதி புத்தகாலயம்
முதற்பதிப்பு : டிசம்பர் 2011
விலை :  70 ரூபாய்
பக்கங்கள் : 112
வாங்கிய இடம் : New Book Lands, வடக்கு உஸ்மான் சாலை, தியாகராய நகர், சென்னை
--------------------------------------------------------------------------------------------------------------------------
ஆங்கிலத்தோடு தாய்மொழியையும் கற்பிக்கலாம் என்ற பரிந்துரையுடன் வைசிராய் கர்ஸன் காலத்தில், மெக்காலே கல்விமுறை நடைமுறைக்கு வருகிறது. தாய்மொழிகளை விட சமஸ்கிருத மொழியைப் பாடமாக்க வேண்டுமென வட இந்தியாவில் பரிந்துரைக்கிறார்கள். தேசிய மொழி இந்தி என்று கட்டாயமாக நம்ப வேண்டிய காலத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருப்பது போல, பள்ளிக் கல்லூரிகளில் செம்மொழியாகப் போதிக்கும் அளவிற்குச் சமஸ்கிருதம் மட்டுமே இருக்க முடியும் எனப் பலரும் நம்பிய அக்காலத்தில், மதராஸ் மாகாணம் எதிர்க்கிறது. மதராஸ் கிறித்தவக் கல்லூரி பேராசிரியராக இருந்த பரிதிமாற்கலைஞர், செம்மொழியாகப் போதிக்கத் தகுந்த முழுத் தகுதியும் தமிழுக்கு இருப்பதாக வைசிராய்க்குக் கடிதம் எழுதுகிறார். இன்னும் ஒருபடி மேலே போய், சமஸ்கிருதத்தை விடவும் தமிழுக்கே தகுதி அதிகம் என மேடைகளில் பேசுகிறார். எதிர்ப்பு அதிகரிக்கவே, கர்ஸன் சம‌ஸ்கிருதத்தைக் கைவிட்டு தாய்மொழிப் பாடத்தை வழிமொழிகிறார். சுதந்திரம் பெற்ற பின் எந்த மாநிலத்தின் ஆட்சி மொழியாகவும் இல்லாத சமஸ்கிருதத்தின் வளர்ச்சிக்கு நேரு ஆட்சி நிதி ஒதுக்குகிறது.

ஐக்கிய நாடுகள் சபையின் செம்மொழிகளில் இன்று சமஸ்கிருதம் இருக்கிறது. ஒரு மாநிலத்தின் ஆட்சி மொழியாகவும் இருக்கிறது. செம்மொழி (Classical Language) அங்கீகாரம் இல்லாமலேயே, பல நாடுகளில் ஆட்சி மொழியாகவும், பல்கலைக்கழகப் பாடங்களிலும் இருக்கிறது தமிழ். செம்மொழியாக அங்கீகரிக்கப்பட்டுள்ள மற்ற மொழிகளுடன் நம் தாய்மொழியை ஒப்பிடுவதே இப்புத்தகம்.

வரலாற்றில் மொழிகள் - செம்மொழிகளின் வரலாறு. அரபி சீனம் பிரெஞ்சு சம‌ஸ்கிருதம் இலத்தீன் ஸ்பானீஷ் ஜெர்மன் பாரசீகம் ஹீப்ரு கிரேக்கம் என ஒவ்வொரு செம்மொழிக்கும் ஒரு கட்டுரை வீதம் மொத்தம் 10 கட்டுரைகள். மொழியின் தோற்றம், வரலாறு, எழுத்து, இலக்கணம், இலக்கியம், பல்வேறு காலங்களில் தோன்றிய சிறந்த‌ படைப்புகள், ப‌டைப்பாளிகள், இன்றைய நிலை என ஒவ்வொரு செம்மொழியைப் பற்றி பட்டியலிடுகிறது ஒவ்வொரு கட்டுரையும். கட்டுரையின் கடைசிப் பத்தி அம்மொழியைத் தமிழுடன் ஓரிரண்டு வாக்கியங்களில் ஒப்பிடுகிறது. ஒவ்வொரு கட்டுரையின் பின்னிணைப்பாக, அம்மொழியும் தமிழும் பல்வேறு காலங்களில் அடைந்த மாற்றங்களை அட்டவணைப்படுத்தி ஒப்பிடுகிறார் ஆசிரியர். ஏறத்தாழ கிமு 200ல் பெரும்பரிபாடல் முதல் இன்றைய பின்நவீனத்துவம், தலித் இலக்கியம் வரை தமிழ்ப் படைப்புகள் - படைப்பாளிகள் பட்டியல் கால வரிசையில் கடைசி 19 பக்கங்களை அலங்கரிக்கிறது!

பல மொழிகளின் வரலாறும் அமைப்பும் ஆச்சரியப்பட வைக்கின்றன. தமிழைப் போல ழகரம் உடைய, திராவிடக் குடும்பம் சாராத மொழியும் உண்டு. பகுதி விகுதி இலக்கணங்கள் அவ்வளவாக இல்லாத, காலம் குறிக்க குறிப்பான சொற்களற்ற மொழியும் உண்டு. வடமிருந்து இடமாக எழுதப்படும் ஒரே இந்திய மொழி உருது எனத் தெரியும்; அதன் மூலமான அரபியும் அப்படியே எனத் தெரியும்; கோடுகளால் இணைத்து இணைத்தே வரைபடம் போல உண்டாக்கி புதிர் போல எழுதப்படும் மொழியும் இருக்கிறது. அறிவியல் பெயர்கள் இலத்தீன் மொழியில் வைக்கப்படுவது தெரியும்; சர்வதேச‌ சட்டங்கள் பிரெஞ்சில் மட்டுமே மொழிப்பெயர்க்கப்படுவது ஏன் என்றால்.....

தமிழ் பற்றி ஆசிரியர் என்ன சொல்கிறார்? எந்தவொரு மதத்தோடும் பின்னிக் கொண்ட மொழியல்ல. அதிகார முறையில் திணிக்கப்பட்ட மொழியல்ல. யாரும் திட்டமிட்டு செயற்கையாகக் கட்டமைத்த மொழியல்ல. தொல்காப்பியம் முதல், கவிதை என்று நான் ஏதோ கிறுக்குவது வரை புரியும் அளவிற்குக் காலத்தோடு தொடர்ந்து வளர்ந்து வரும் மொழி. மக்கள் காலச்சாரத்தோடு இன்னும் மொத்தமாகப் பிரிந்து போய்விடவில்லை. மேலும்.....

அனுபந்தம்:
----------
புத்தகத்திற்கு அப்பால்,
1. மொழி என்பது கலாச்சாரத்தின் அடையாளம். இலத்தின் கிரேக்கம் என்ற இருபெரும் மொழிகள் - கலாச்சாரங்கள் ஒரு காலத்தில் மோதிக் கொண்டதின் வீரியம் இக்காலம் வரை வெவ்வேறு வடிவங்களில் உலகம் முழுவதும் உணரப்படுவதை இதே தளத்தில் அடுத்த ஆங்கிலப் புத்தகமாக நீங்கள் படிக்கலாம்.
2. தன் தாய்மொழியை எழுதும் போது முழங்காலிடும் ஒரு சமூகம் உண்டு. தேடிப் பாருங்கள்.

மொழி என்பதே தகவல் பரிமாற்றத்திற்கு மட்டும் தானே. தாய்மொழி மட்டும் அதில் என்ன விதிவிலக்கு? இப்படி தாய்மொழி எழுதப் படிக்கத் தெரியாத ஒரு சமூகத்தை உண்டாக்கிக் கொண்டிருக்கும் ஒரு சாராரும் ஒவ்வொரு தாய்மொழியிலும் உண்டு. நீங்கள் அச்சாராரைச் சாராதவர் என்றால், கண்டிப்பாக இப்புத்தகம் படிக்கலாம்.

- ஞானசேகர்

No comments: