Wednesday, September 11, 2013

109. A WORLD WITHOUT ISLAM

(மகாகவிக்குச் சமர்ப்பணம்)

இன்று செப்டம்பர் 11. பயங்கரவாதத்திற்கு எதிரான நிரந்தரப் போர் என்று பிரகடனப்படுத்தி, தனது அடாவடிகளை நியாயப்படுத்தவும் ஆழப்படுத்தவும் அகலப்படுத்தவும் அமெரிக்கா சுட்டிக் காட்டும் நாள். ஆப்கான் ஈராக், இன்று சிரியா என்று யுத்தக்குடையின் நிழல் நீண்டு கொண்டே போகிறது. ஆப்கான் யுத்தம் தொடங்கப்பட்ட சில வாரங்களுக்குப் பின் அப்போதைய‌ அமெரிக்க ஜனாதிபதி கையாண்ட வார்த்தைகளும், இஸ்ரேல் உருவாக்கப்பட்ட 60வது ஆண்டு விழாவில் அவர் ஆற்றிய உரையும் தெளிவாகச் சொல்லின; இப்போர்கள் எண்ணெய் வளத்திற்காக மட்டுமல்ல; நாடுபிடிக்க மட்டுமல்ல; இவை பூர்வகுடி இஸ்லாமியர்களுக்கு எதிரான போர்க‌ள்.

ஈழப் போருக்குப் பின், இனப்போர்களின் ஆணிவேரைக் கண்டுபிடிக்கும் நோக்கில் புத்தகங்கள் தேடினேன். உலகின் மிக நீண்ட இனப்பிரச்சனை நடக்கும் இடமான இஸ்ரேலைச் சுற்றிய மத்திய கிழக்கு நாடுகளில் தான் என் கவனம் இருந்தது. இத்தளத்தில் 100வது புத்தகமாக நான் எழுதிய ஜெருசலேம் புத்தகம் தான், என் பல கேள்விகளுக்குப் பதில் சொன்னது. ஒரு தனிப்பட்ட யூதன் மேல் இருந்த வெறுப்பால் ஒட்டு மொத்த யூத இனத்தையும் அழிக்கத் துணிந்த ஹிட்லரைவிட அதிக வெறுப்பை இன்றைய மத மற்றும் சாதித் தலைவர்கள் விதைத்துக் கொண்டு இருக்கிறார்கள். வெறும் இறைச்சித் துண்டுகளை வழிபாட்டுத் தளங்களில் வீசிவிட்டு வகுப்புக் கலவரங்கள் மிக எளிதாக‌ உண்டாக்கி விடுகிறார்கள். போன வாரம் நம்மூரில் ஒருவன், பிரபலமாக வேண்டும் என்பதற்காக தன் சொந்த வீட்டிலேயே வெடிகுண்டை வீசிவிட்டு இன்னொரு மதத்தவர்கள் மேல் சந்தேக வதந்தி பரப்பிய கதையும் கண்டோம். நாம் எங்கே போய்க் கொண்டிருக்கிறோம்? எங்குமே போகவில்லை. ஜெருசலேம் சுற்றும் அதே வட்டத்திற்குள் சுற்றிக் கொண்டிருக்கிறோம்.

அறியாமை வட்டத்தை விட்டு வெளியேறச் சொல்லித் தரும் பகுத்தறிவுப் புத்தகங்களில் இதோ இன்னுமொன்று. தொடர்ந்து படிப்பதற்கு முன்
1. நிலமெல்லாம் ரத்தம்
2. Jerusalem
புத்தகங்கள் பற்றிய எனது பதிவுகளை ஒருமுறை படித்துவிடுங்கள்.
--------------------------------------------------------------------------------------------------------------------------
புத்தகம் : A WORLD WITHOUT ISLAM
ஆசிரிய‌ர் : Graham E. Fuller
வெளியீடு : Hachette Book Group, New York
முதற்பதிப்பு : ஆகஸ்ட் 2010
விலை : 350 ரூபாய்
பக்கங்கள் : 350
வாங்கிய இடம் : Landmark
--------------------------------------------------------------------------------------------------------------------------
கிரகாம் இ. ஃபுல்லர். அமெரிக்க சி.ஐ.ஏ.வின் மேற்பார்வை பொறுப்பில் அமெரிக்க உளவுத்துறை கவுன்சிலின் முன்னாள் துணைத் தலைவர் (former Vice Chairman of the National Intelligence Council at the CIA). பணி நிமித்தம் இஸ்லாமிய நாடுகளில் கிட்டத்தட்ட 20 ஆண்டுகள் வாழ்ந்திருக்கிறார். அமெரிக்க அரசுப் பணிகளில் இருந்து ஓய்வு பெற்றவர்கள், திடீரென ஞானம் பெற்று அமெரிக்காவிற்கு எதிராக‌ எழுதும், தற்காலிகப் புரட்சிகரமான புத்தகங்களை நான் படிப்பதில்லை. இத்தளத்தில் எனது முந்தைய புத்தகமான‌, சர்வதேச பயங்கரவாதமும் இந்திய பயங்கரவாதமும் தான், இப்புத்தகத்தை எனக்கு அறிமுகப்படுத்தியது. அப்புத்தகம் இப்புத்தகத்தில் இருந்து சில பக்கங்களுக்கு மேற்கோள் காட்டிய சில விசயங்கள் தான் என்னைப் படிக்கத் தூண்டின. இது தற்காலிகப் புரட்சிகரப் புத்தகம் இல்லை. மதப் புத்தகமும் அல்ல. இஸ்லாமிய மண்ணில் வாழ்ந்த அனுபவசாலி ஒருவரின், இன்றைய பிரச்சனைகளுக்கான‌ மாற்றுச் சிந்தனைகள் தான் இப்புத்தகம். இப்புத்தகத்தின் ஆசிரியரும், இப்பதிவை எழுதும் நானும் இஸ்லாம் மதத்திற்குத் தொடர்பு இல்லாதவர்கள் என்பதால், எங்களின் நடுநிலைமையைச் சந்தேகிக்காமல் தொடர்ந்து படிக்கலாம்.

இஸ்லாம். இன்றைய உலகின் மிகப் பெரிய மதங்களில் சமீபத்தில் தோன்றிய இளமையான மதம். வரலாறு என்ற புதிய துறை நன்கு வளர்ந்திருந்த காலத்தில் தோன்றியதால், இதற்கு முந்தைய மதங்களைப் போல் அல்லாமல், இதன் மதநூலில் சொல்லப்படும் சம்பவங்கள், இஸ்லாமிற்குச் சம்மந்தமே இல்லாத பல சமகால அறிஞர்களால் சரிபார்க்கப்பட்டமையால், நம்பகத்தன்மையும் அதிகம். வரலாற்றில் மிக மகத்தான மிக சக்திவாய்ந்த தொடர்ச்சியான நாகரிகங்களில் ஒன்றான இஸ்லாம் உலகின் மீது ஏற்படுத்திய தாக்கம் அதிகம். வேறு எந்த நாகரிகமும் இஸ்லாமைப் போல உலகின் பரந்த நிலப்பரப்பில் இவ்வளவு நீண்ட காலம் இருந்ததில்லை. இஸ்லாமிய கலாச்சாரம் கலை விஞ்ஞானம் தத்துவம் மற்றும் நாகரிகம் என இன்றைய உலகிற்குக் கிடைத்த செல்வங்கள் ஏராளம். இப்படி சொல்வதற்கு எத்தனையோ நல்ல விசயங்கள் இருக்க, இஸ்லாம் மற்றும் வரலாற்று அரசியல் அறியாமைகள் காரணமாக பெரும்பான்மை மக்களின் பொதுப் புத்தியில் இஸ்லாம் பற்றிய எதிர்மறைச் சிந்தனைகள் பரவியிருக்கும் காலத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.

ஒரு வட்டத்திற்குள் இருக்கும் வரை, அது வட்டம் என்பதே பல நேரங்களில் தெரிவதில்லை; அது எவ்வளவு பெரிய வட்டம் என்பதும் புரிவதில்லை. வட்டத்தை விட்டு எவ்வளவு வெளியே போய் பார்க்கிறோமோ, அவ்வளவு தெளிவாய்ப் புரியும் வட்டம். பூமியுடன் இருந்தாலும், பூமிக்கு வெளியே போய் ஒரு புகைப்படம் எடுத்து வ‌ந்த பின் தானே எல்லோரும் பூமிக்கோளம் என நம்பினோம்? நமக்குப் பூதாகரமாய்க் காட்டப்படும் சித்தாந்தங்களைக் கொஞ்சம் சிறிதாக்கி விட்டு, அதன் பக்கத்தில் இருக்கும் மற்ற விசயங்களைக் கொஞ்சம் பெரிதுபடுத்தி பகுத்தறியும் போது புரியாத பல விசயங்கள் புரியும். வரலாற்றின் பழைய பக்கங்களில், முதன்மைக் காரணமாக இஸ்லாம் சொல்லப்படும் சம்பவங்களை எல்லாம் மீள்பார்வை செய்து, இஸ்லாம் தவிர வேறேதும் காரணிகள் அதே சம்பவங்களை நிகழ்த்தி இருக்கக் கூடிய சாத்தியங்களை ஆராய்வதே இப்புத்தகம். குழப்புகிறேனா?

நிகழ்கால உதாரணம் ஒன்று. இலங்கை ஆட்சியாளர்கள் கடைசியாக புத்த‌மதத் துறவிகளையும் ஈழத்திற்கு எதிராகப் பயன்படுத்தத் தொடங்கிவிட்டனர். அவர்களின் இந்த நிலைப்பாட்டிற்கும் புத்தமதத்திற்கும் / புத்தருக்கும் சுத்தமாகச் சம்மந்தம் இல்லை என்று நமக்குத் தெரியும். ஈழத்தில் இருந்து சிங்களவர்களை இனம் மொழி தவிர இன்னும் நன்கு பிரிக்க அந்த ஆட்சியாளர்கள் எடுத்த ஆயுதம் தான் மதம். புத்தத்தின் இடத்தில் வேறு எந்த மதம் இருந்தாலும் அதுவும் ஆயுதமாகி இருக்கும். அங்கு இப்போது புத்தம் என்பது வெறும் பதாகை என்பது நமக்குத் தெரியும். இந்நிலை தொடருமாயின் ஈழப் பிரச்சனையை ஒரு மதப் பிரச்சனையாக மட்டுமே எதிர்காலம் புரிந்து கொள்ளும் வாய்ப்புகள் அதிகம். குழப்பம் தீர்ந்ததா? பின்னோக்கிச் சிந்திக்கத் தயாராகுங்கள். புத்தகத்திற்குள் போகலாம்.
(http://img6a.flixcart.com/)
அரேபியப் பாலைவனத்தில் இருந்து முகமது நபி தோன்றாமல் போயிருந்தால் - இஸ்லாம் என்ற ஒரு மதமே மத்திய கிழக்கில் தோன்றாமல் இருந்திருந்தால் - மத்திய கிழக்கில் மிக விரைவாகப் பரவிய இஸ்லாமிய சகாப்தம் இல்லாமல் போயிருந்தால் - இஸ்லாமியர்களின் படையெடுப்பு இந்தியத் துணைக்கண்டத்தில் நடக்காமல் இருந்திருந்தால் - ஜிகாத் முஜாஹிதீன் அல்-கெய்தா போன்ற வார்த்தைகள் கேள்விப்படாமலேயே இருந்திருந்தால் - இன்றைய உலகம் எப்படி இருந்திருக்கும் என நினைக்கிறீர்கள்? கண்டிப்பாக இவ்வளவு குழப்பங்கள் இருந்திருக்காது - மத்திய கிழக்கு நாடுகள் கொஞ்சம் அமைதியாக இருக்கும் - இந்தியத் துணைக்கண்டம் 3 துண்டுகளாகி இருக்காது - காஷ்மீர் பிரச்சனை இருக்காது - 3 யுத்தங்களை இந்தியா சந்தித்திருக்காது - விஸ்வரூபம் திரைப்படம் திட்டமிட்ட தேதியில் வெளியாகி படுதோல்வி அடைந்திருக்கும் - என பெரும்பான்மை பதில்கள் கிடைக்கும்.

இஸ்லாம் இல்லாமல் இருந்திருந்தாலும், இன்று நாம் காணும் உலகம் கிட்டத்தட்ட அதே பிரச்சனைகளுடன் தான் இருந்திருக்கும் என வாதிடுகிறது இப்புத்தகம். அதாவது, ஒசாமா பின் லேடன், ஜிகாத் போன்ற வார்த்தைகளுக்குப் பதில் வேறு வார்த்தைகள் இடம்பெற்று விஸ்வரூபம் திரைப்படம் திட்டமிட்ட தேதியில் வெளியாக முடியாமல் தாமதமாகி பின் வெற்றிப்படம் ஆகியிருக்கும் சாத்தியங்கள் உண்டு. ஆசிரியர் இன்னும் ஒருபடி மேலே போய், இஸ்லாம் இல்லாமல் போயிருந்தால் மத்திய கிழக்கின் நிலைமை இன்றைவிட இன்னும் கொடுமையாக இருந்திருக்கும் என்கிறார். இதே கருத்தைத் தான், ஜெருசலேம் புத்தக அறிமுகத்தில் நானும் சொன்னேன். மேலும், இஸ்லாமிய நாகரிகம் இல்லாதிருந்தால் இவ்வுலகம் இன்று நாகரிக ஏழ்மை நிறைந்ததாக இருந்திருக்கும் என்கிறார். The world would be a much more impoverished place in the absence of Islamic civilization. வரலாறு தெரியாதவர்களுக்கு, நம்புவதற்குக் கொஞ்சம் கடினமாக இருந்தாலும், ஆதாரங்கள் சொல்ல வரலாற்றின் பழைய பக்கங்களை 3 பாகங்களாக‌ப் புரட்டிக் காட்டுகிறார் ஆசிரியர்.

Religion may in most of its forms be defined as the belief that the gods are on the side of the Government.
- Bertrand Russell

இஸ்லாம் மத்திய கிழக்கில் தோன்றி, மத்திய கிழக்கை விட்டு வெளியே பரவுவதற்கு முன்பு வரை மத்திய கிழக்கின் மதம் மற்றும் அரசியல் நிலைகளை விளக்குவதே முதல் பாகம். யூதம் கிறித்தவம் இஸ்லாம் என்ற முப்பெரும் மதங்களும் தோன்றிய மண் மத்திய கிழக்கு. 4000 ஆண்டுகளுக்கு முன்னரே ஒரே கடவுள் கொள்கை பேசிய மண்! மேசேயில் (Moses) இருந்து கணக்குப் பார்த்தால் யூதமத வயது 4500க்கு மேல். புனித பவுலில் (St.Paul) இருந்து கணக்குப் பார்த்தால் கிறித்தவமத வயது 1900. முதல் முஸ்லீமும் கடைசி இறைத்தூதருமான முகமது நபியில் இருந்து கணக்குப் பார்த்தால் இஸ்லாமியமத வயது 1400. ஆபிரகாமின் மதங்கள் (Abrahamic religions) என்று இம்மும்மதங்களும் அழைக்கப்படுகின்றன. 610CEல் அரேபியாவில் இஸ்லாம் தோன்றிய காலத்தில் கிறித்தவமும், நகரங்களில் மட்டும் யூதமும், பார்சிகளின் மதமான சரத்துஸ்திரமும் (Zoroastrianism) என மத்திய கிழக்கில் இருந்திருக்கின்றன. அதே காலத்தில் பௌத்தமும் இந்துவும் இந்தியாவிலும், கிறித்தவமும், பல கடவுள்களும் ஐரோப்பாவிலும் இருந்திருக்கின்றன; அரேபியாவில் மெக்காவில் மட்டும் கிட்டத்தட்ட 360 உருவ வழிபாடுகள் இருந்திருக்கின்ற‌ன.

ஆபிரகாமின் மதங்கள் மூன்றையும் தனித்தனியாக ஒன்றோடொன்று நம்பிக்கைகளில் ஒப்பிடுகிறார் ஆசிரியர். இம்மதக் குடும்பத்தில், மூத்த மதங்கள் இளையவர்களை முற்றிலுமாக நிராகரிக்கின்றன. இயேசுவையும் முகமது நபியையும் யூதம் ஏற்பதில்லை. முகமது நபியைக் கிறித்தவம் ஏற்பதில்லை. யூதர்களின் இறைத்தூதர்களைக் கிறித்தவமும் இஸ்லாமும் ஏற்கின்றன. இயேசுவிற்கும் மரியாளிற்கும் இஸ்லாமில் தனியிடம் உண்டு. மூன்று மதங்களும் ஒரே கடவுளைப் பற்றி பேசுவது போல் தெரிந்தாலும், மனிதப் பரிணாம வளர்ச்சியில் வெவ்வேறு காலக்கட்டங்களில் வெவ்வேறு விதமாகப் புரிந்து கொள்ளப்பட்ட மதங்களாக தெரிந்தாலும், ஆபிரகாமின் மதங்கள் என்று ஒரே சித்தாந்தத்தின் கீழ் கொண்டுவர முயன்றாலும், உண்மையிலேயே மூன்று மதங்களும் ஒரே கடவுளைப் பற்றித்தான் பேசுகின்றனவா என்று சந்தேகப்படும் அளவிற்கு வேறுபாடுகள் அதிகம். கிறித்தவம் இஸ்லாமுடன் கொண்ட வேறுபாடுகளை விட யூதத்துடன் கொண்ட வேறுபாடுகள் அதிகம்; மிகவும் அதிகம். இயேசுவைக் கொன்றவர்கள் என்ற பழிச்சொல்லுடன் யூதர்கள் வெறுக்கப்பட்டது போன்ற, கொள்கைகளுக்கு அப்பாற்பட்ட சில‌ வேறுபாடுகளும் உண்டு. மத்திய கிழக்கு பற்றி எந்தப் புத்தகம் படித்தாலும், இதுவரை சொன்ன விசயங்கள் ஆரம்பக் கட்டுரைகளாக வந்துவிடும். அதாவது, இஸ்லாம் தோன்றுவதற்கு முன்னரே மற்ற இரு மதங்களுக்குள் அடிப்படையான பிரச்சனைகள் இருந்திருக்கின்றன. அதன் தொடர்ச்சியாக ஐரோப்பாவிலும், சார் மன்னர்களின் ஆட்சியில் இரஷ்யாவிலும், ஹிட்லரால் ஜெர்மனியிலும் யூதர்கள் வதைக்கப்பட்டதை வரலாற்றின் கொடூரப் பக்கங்கள் சொல்லும்.

570CEல் முகம்மது நபி தோன்றாது போய் இருந்தால் அரபு மக்களுக்கு என்று ஒரு தனி வரலாறு இருந்திருக்குமா என்று தெரியவில்லை,என்பது வரலாற்று ஆசிரியர்கள் ஏற்றுக் கொள்ளும் உண்மை. நாகரிகம் தெரியாதவர்களாக அருகில் இருப்பவர்களால் கருதப்பட்ட அரபுகளுக்கு, இஸ்லாம் புதிய அடையாளத்தையும் சிந்தனையும் உத்வேகத்தையும் தர, அசுர பலத்துடன் தங்கள் எல்லையை விரிவுபடுத்துகிறார்கள். முகமது நபி இறந்து 30 வருடங்களுக்குள் மேற்கே துனிசியா, வடக்கே கௌகாஸஸ், கிழக்கே பாகிஸ்தான் எல்லை வரை பரவுகிறார்கள். 800CEல் மத்திய கிழக்கும் கிழக்கு ஐரோப்பாவும் ஏறத்தாழ சமமான மக்களைக் கொண்டிருந்தன; ஒவ்வொன்றும் 3 கோடி பேர். ஆனால் மத்திய கிழக்கில் ஏறத்தாழ 50000 பேர் கொண்ட 13 நகரங்கள் இருந்தன; கிழக்கு ஐரோப்பாவில் ரோம் மட்டுமே நகரமாக இருந்தது. இஸ்லாமின் உடனடித் தாக்கத்தைப் புரிந்து கொள்ள இப்புள்ளி விவரங்கள் போதுமென நினைக்கிறேன்.

பெரும்பான்மை மக்கள் நினைப்பது போல, ஆரம்ப கால இஸ்லாம் வாள் முனையில் பரவவில்லை. எல்லையை விரிவுபடுத்துவது மட்டுமே அரபுகளின் நோக்கமாக இருந்திருக்கிறது. ஆரம்பகால ஆட்சியாளர்கள் மதநல்லிணக்கம் பேணுபவர்களாக இருந்ததாலும், ரோமானியப் பேரரசின் கிழக்குச் சாம்ராச்சியத்தை அவர்கள் கைப்பற்றும் போது அதன் குடிமக்கள் வரவேற்றார்கள்; இஸ்லாம் என்ற இறை நம்பிக்கைக்காக அல்ல; அவர்கள் தரப்போகும் அரசியல் உரிமைகளுக்கும், அவர்கள் தரப்போகும் ஆட்சிக்கும். காலப்போக்கில் ஒரு பரந்து விரிந்த ஒரு சிறந்த நாகரிகத்தின் அங்கமாக மதம் மாறுகிறார்கள். அரபுகளை மற்ற இனங்களுடன் இஸ்லாம் இணைக்கிறது. அரபுகள் இஸ்லாம் மேல் இருந்த தங்களின் ஏகபோக உரிமையை இழக்கிறார்கள். அங்கே உடைகிறது இஸ்லாமின் முதல் கலீபாக்கள் ஆட்சி. முதன் முறையாக இஸ்லாமிய ஆட்சி உமையாது (Umayyad) அரபுகளிடம் இருந்து, அப்பாசிய  (Abbasid) பாரசீக‌ர்களுக்குப் போகிறது. இப்படி இஸ்லாமியர்களின் ஆட்சி இன்னொரு இஸ்லாமியரிடம் இழக்க‌, பிராந்திய அரசியல் காரணங்கள் இருந்திருக்கின்றன; இஸ்லாம் இல்லை. மத்திய கிழக்கில் இஸ்லாம் சந்தித்த இஸ்லாம் அல்லாத இன்னொரு அச்சுறுத்தல் மேற்கில் இருந்துதான் வந்தது; இன்றும் வந்து கொண்டிருக்கிறது.

The curse of the human race is not that we are so different from one another, but that we are so alike.
- Salman Rushdie

மத்திய கிழக்கு, மேற்கத்திய, கிழக்கத்திய நாடுகள் என்று அடிக்கடி பேசுகிறோமே, எந்தப் புள்ளியில் இருந்து இத்திசைகளைக் குறிக்கிறோம்? இவையெல்லாம் ரோமானிய மக்கள் பயன்படுத்திய வார்த்தைகள்; இன்றும் தொடர்கின்றன. ரோமைத் தலைநகரமாகக் கொண்ட ரோமானியப் பேரரசின் மன்னன் முதலாம் கான்ஸ்டன்டைன் (325CE), கிறித்தவ மதத்தைத் தழுவுகிறான். அதுவரை ரகசியமாகத் தூரத்துத் தேசங்களில் கடைபிடிக்கப்பட்டு வந்த கிறித்தவ மதம், மன்னன் எவ்வழியோ குடிமக்கள் அவ்வழி என ரோமானிய தேசமெங்கும் பரவுகிறது. பைசாந்திய நாடுகளைக் கைப்பற்றி கிழக்கே கான்ஸ்டான்டிநோபிள் (இன்றைய இஸ்தான்புல்) என்ற புதிய நகரையும் உருவாக்குகிறான். ரோமின் மொழி இலத்தின். இரண்டாம் ரோம் என அழைக்கப்பட்ட கான்ஸ்டான்டிநோபிளின் மொழி கிரேக்கம்.

ரோம் மேற்கு; கான்ஸ்டான்டிநோபிள் கிழக்கு. அதாவது ரோமானியப் பேரரசின் மேற்கு மற்றும் கிழக்குச் சாம்ராச்சியங்கள் மொழியாலும் கலாச்சாரத்தாலும் இருவேறு இனங்கள். ரோமானியப் பேரரசிற்குக் கிழக்கே இருந்த நம்மைப் போன்றவர்களுக்கு, மொத்த ரோமானியப் பேரரசும் மேற்கு. அடுத்து வந்த பேரரசர்கள் எல்லாம் கிழக்கே கவனம் செலுத்த, ஆரம்பகால விவிலியங்கள் கிரேக்கத்தில் எழுதப்பட, ரோம் கான்ஸ்டான்டிநோபிள் என இரு கிறித்தவ மதத் தலைமைப் பீடங்கள் உருவாக, 476CEல் ரோம் வீழ்ச்சியுற, அதிகாரம் முழுவதும் கிழக்கே குவிய, அதிகாரச் சண்டை அரசியலிலும் மதத்திலும் தலைதூக்க, ஐரோப்பாவின் நோயாளி என துருக்கி ஒதுக்கப்பட‌, இன்றும் தொடர்கிறது கிழக்கு மேற்கு பிரிவினை! ரோமைத் தலைமையகமாகக் கொண்டு கத்தோலிக்க கிறித்தவம் (Roman Catholic) இன்றும் தொடர்கிறது. எங்கே போனது கான்ஸ்டான்டிநோபிள் கிறித்தவத் தலைமைப் பீடம்?

நிலமெல்லாம் ரத்தம் புத்தகம் நீங்கள் படித்திருந்தால், உங்களால் மறக்க முடியாத சம்பவம் ஒன்றை ஞாபகப் படுத்துகிறேன். மொத்த புத்தகத்திலும், கொஞ்சம் கிச்சுக்கிச்சு மூட்டுவது போல் வரும் அந்த ஒரே சம்பவத்தை நீங்கள் மறந்திருக்க வாய்ப்பில்லை. ஒரு சிலுவைப் போரில், ரோம் போப்பால் அனுப்பப்பட்ட வீரர்கள் விரக்தியில் ஜெருசலேமைத் தாக்காமல் கான்ஸ்டான்டிநோபிளைத் தாக்கும் சம்பவம் நினைவிருக்கிறதா? மேற்கு கிழக்கின் புராதன பகையின் வெளிப்பாடே அது! இதுதான் இப்புத்தகத்தின் கரு. அதாவது இஸ்லாம் மத்திய கிழக்கில் காட்சிக்கு வருவதற்கு முன்பே மிச்சமிருக்கும் ரோமானியப் பேரரசின் அதிகார வேட்கை, திருச்சபையில் இருந்த நீயா நானா குளறுபடிகள் என எரிந்து கொண்டிருந்த பிரச்சனைகள் நிறைய இருந்தன.

மேற்குலகிடம் தோற்பதை விட இஸ்லாமிடம் தோற்பதே மேல் என பின்னாளில் கான்ஸ்டான்டிநோபிள், இஸ்தான்புல் ஆன பின்னும் அங்கேயே தங்கள் தலைமைப் பீடத்தைத் தொடர்கிறார்கள். இதனால் தான் ஆசிரியர், இஸ்லாம் இல்லாமல் போயிருந்தால் மத்திய கிழக்கின் நிலைமை இன்றைவிட இன்னும் கொடுமையாக இருந்திருக்கும் என்கிறார். ஏற்கனவே சண்டை போட்டுக் கொண்டிருந்த கிழக்கும் மேற்கும் கொஞ்சம் நின்று, புதிதாகப் பரவும் இஸ்லாமைப் புரியாத புதிராக நோக்க ஆரம்பித்தார்கள். போப் இரண்டாம் அருள் சின்னப்பர் (Pope John Paul II) 800 ஆண்டுகள் கழித்து, கிழக்குத் தலைமைப் பீடத்திடம் மன்னிப்பு கேட்கிறார்; 3 வருடங்கள் கழித்து ஏற்றுக் கொள்கிறார்கள்; அந்த அளவிற்குப் புரையோடிய பகை. இஸ்லாம் போன்ற திசை திருப்பிய சக்தி (distracting factor) ஒன்று, அக்காலத்தில் தோன்றாமல் போயிருந்தால் சண்டை படு உத்வேகத்துடன் தொடர்ந்து கொண்டிருக்கும். இஸ்லாம் இல்லாமல் இருந்திருந்தால், சரத்துஸ்திர ஈரானைத் தவிர‌ கிழக்குத் திருச்சபை அவ்விடங்களை நிரப்பி இருக்கும் என்று சிந்திக்கச் சொல்கிறார் ஆசிரியர். அப்புரியாத சக்தியின் மேல் பரப்பப்பட்ட‌ பயமும், வன்முறை மாயமும் இன்றைய நவீன காலத்திலும் தொடர்வது துரதிஷ்டமே!

தொழுகை திசையை ஜெருசலேமில் இருந்து மெக்காவை நோக்கி முகமது நபி மாற்றியதே மிகப் பெரிய நல்லெண்ண முயற்சியே! அவர் மட்டும் திசையை மாற்றி இருக்காவிட்டால், ஜெருசலேம் இன்று என்னவாகி இருக்கும் என்று நினைத்து கூடப் பார்க்க முடியாது. சொட்டு இரத்தம் சிந்தாமல் ஜெருசலேமைக் கைப்பற்றி தனது மதச் சின்னங்களைப் புதிதாகக் கட்டாமல் மத ஒற்றுமை காக்கிறார் முதலாம் உமர். சுல்தான் சலாவுதீன் தோற்றுப்போன எதிரிகளுக்கும் கப்பம் கட்டுகிறார்; மருத்துவ உதவி செய்கிறார். இஸ்லாமியர்களின் காலம் ஜெருசலேமின் பொற்காலம், என எல்லா வரலாற்று ஆசிரியர்களும் ஒத்துக் கொள்வதை எனது முந்தைய பதிவுகளில் பதிவு செய்திருக்கிறேன். சுருக்கமாகச் சொன்னால், இஸ்லாமியர்கள் காலத்தில் பெரும்பாலும் ஜெருசலேம் மதமற்று இருந்திருக்கிறது; மத்திய கிழக்கும்.

I want to see an India where everyone is literate. Only then can we erase the difference between India and Bharat.
- U.R.Ananthamurthy (ஞானபீட விருது பெற்ற கன்னட எழுத்தாளர்)

ஒரே கடவுள் கொள்கை கொண்ட மத்திய கிழக்கின் ஒரு பாரம்பரியத் தொடர்ச்சிதான் இஸ்லாம். மத்திய கிழக்கில் இருந்த ஒரே நாகரிகத்தின் பல்வேறு தளங்களை இஸ்லாமால் மிக எளிதாக இணைக்க முடிந்திருக்கிறது. இஸ்லாமின் அரசியல் எல்லைகள் காலப்போக்கில் பல சமயங்களில் மாற்றி எழுதப்பட்டு இருந்தாலும், இஸ்லாம் உண்டாக்கிய அவ்விணைப்பு இன்று வரை நீடிப்பது மறுக்க முடியாத உண்மை. மதம் என்ற அடையாளத்தைத் தவிர ஏற்கனவே அங்கிருந்த பிரச்சனைகளுக்கு அதிகாரம் தேசியம் அரசியல் இனம் என்ற பல காரணங்கள் இருந்ததையும், மதம் ஓர் பதாகை போல் தான் செயல்பட்டிருக்கிறது எனப் பேசுகிறது முதல் பாகம். மத்திய கிழக்கை விட்டு வெளியே பரவ ஆரம்பித்த இஸ்லாம் எதிர்கொண்ட பல்வேறு நாகரிகங்கள் பற்றிப் பேசுகிறது இரண்டாம் பாகம். மூன்றாம் ரோம் என‌ உருவெடுத்த இரஷ்யாவின் மாஸ்கோ, சீனா, மேற்கத்திய நாடுகள் போன்றவற்றை விடுத்து, இஸ்லாம் எதிர்கொண்ட கிறித்தவம் அல்லாத முதல் நாகரிகம் பற்றி விரிவாகப் பேசுவோம். ஆம், இந்தியாவைத் தான் சொல்கிறேன்.

மதம் பற்றி எந்தப் புரிதலும் இல்லாத எனது 20வது வயதில் படித்த குஷ்வந்த் சிங் கட்டுரை ஒன்று இன்னும் நினைவில் இருக்கிறது. இந்து இஸ்லாம் மதங்களுக்கு இடையே இருக்கும் வேற்றுமைகளைப் பட்டியலிடுவார். மெய்சிலிர்த்து ஆச்சரியப்பட்டு இருக்கிறேன்! முரண்தொடை என்ற இலக்கண அழகியல் இயற்கையாக அமைந்த இயற்கையின் இரு படைப்புகள்! அப்துல் ரகுமானின் ஆலாபனை பித்தன் என்ற இரண்டு கவிதைத் தொகுப்புகளை அடுத்தடுத்து படிப்பது போன்ற அருமையான அனுபவம். 12ம் நூற்றாண்டில் இஸ்லாம் வட இந்தியாவில் நுழைந்தவுடன் இம்முரண்தொடையை ரசிக்கத் தெரிந்தவர்களிடம் இருந்து புதுப்புது பக்தி மார்க்கங்கள் பிறப்பெடுத்தன. சுஃபியிஸம் தோன்றியது. கபிர் துக்காராம் துளசிதாஸ் குருநானக் என அடித்தள மக்களிடம் இருந்து மதத் சிந்தனைவாதிகள் தோன்றினர். கார்ல் மார்க்ஸ் சொன்னது போல தனிப்பட்ட வரலாறு இருந்திராத இந்தியத் துணைக்கண்டம் பற்றிய புத்தகங்கள், 'மதங்கள்' என்ற அலமாரியில் பிரிட்டிஷ் நூலகங்களில் உறங்கிக் கொண்டிருந்த காலத்தில், மொகலாயர்கள் என்ற வேற்று எதிரியால் அதிர்ந்த மக்கள், அதே பெயரால் ஒன்றுபட்டனர். இன்று இந்தியத் துணைக்கண்டம் என்று சொல்லப்படும் அடிப்படை எல்லைகள் மொகலாயர்கள் நிர்ணயித்தவை, என்பதை யாராலும் மறுக்க முடியாது.

மத நல்லிணக்கத்தின் உச்சக்கட்டமாக, எல்லா மத நம்பிக்கைகளின் நல்ல கருத்துகளைக் கொண்டு கடவுளற்ற இறைத்தூதரற்ற தீன்‍இ‍லாஹி என்ற புது மதத்தையே உருவாக்கினார் அக்பர். ஜவஹர்லால் நேரு அக்பரை இந்தியாவின் தந்தை என வர்ணிப்பதில் ஆச்சரியமில்லை. இம்முரண்தொடையை வரலாறு எதிர்மறையாக எழுதியதும், புரிந்து கொள்ளப்பட்டதும் நமக்கான சாபமே அன்றி வேறேன்ன சொல்ல? அரபு மற்றும் மொகலாயப் படையெடுப்பை இஸ்லாமியப் படையெடுப்பு எனப் பதிவு செய்தனர் வரலாற்று ஆசிரியர்கள். ஐரோப்பியர்கள் காலனி பிடித்த போது, கிறித்தவ ஆக்கிரமிப்பு என்று அவர்கள் எழுதவில்லை. காந்தி கொல்லப்பட்ட நாளில் கொலைகாரனின் மதத்தைத் தான் கேட்டது ஒட்டுமொத்த நாடும்! முரண்தொடையை ரசிக்க வைக்க அப்படியொரு தலைவன் மீண்டும் கிடைக்காது போனதும் சாபமே!

இந்தியாவின் இன்றைய நிலைக்கும், எதையுமே சாதித்திராத இந்தியப் பிரிவினைக்கும் பிரிட்டிஷாரின் பிரித்தாளும் சூழ்ச்சியே அன்றி இஸ்லாம் காரணமே அல்ல என்கிறார் ஆசிரியர். இஸ்லாம் இல்லாமல் இருந்திருந்தால், பாபர் வராமல் போயிருந்தால், பெர்ஷியாவில் இருந்து யாரோவொரு குட்டி அரசன் ஏதோவொரு மத அடையாளத்துடன் கொஞ்சங் கொஞ்சமாக நாடுகள் பிடித்து, கடைசியில் இந்தியாவைப் பேரரசாக மாற்றினாலும், பிரிட்டிஷ்காரன் இஸ்லாம் இல்லாமலே பிரித்திருக்க மாட்டானா என்ன? வாய்ப்புகள் நிறைய உண்டு.

உன் ஆயுதத்தை உன் எதிரியே தீர்மானிக்கிறான்.
- மா சே துங்

Terrorism is the weapon of the weak.
- ஷேக் அகமது யாசின் (ஹமாஸ் தலைவர்)

நவீன காலத்தில் இஸ்லாம் எதிர்கொள்ளும் பிரச்சனைகளையும் அதற்கான தீர்வுகளையும் பேசுகிறது கடைசி பாகம். எல்ஜா முகமது, மால்கம் எக்ஸ் போன்ற தலைவர்கள் ஏற்கனவே இன ரீதியில் திரண்டிருக்கும் தங்கள் போராட்டங்களை இஸ்லாமுக்கு மதம் மாறி, இன்னும் தீவிரப்படுத்தியதை பேசுகிறது ஒரு கட்டுரை. நாசர், பாலஸ்தீனம், தற்கொலைப் படைத் தாக்குதல், தீவிரவாதம் என பேசுகின்றன அடுத்தடுத்த கட்டுரைகள். எகிப்தில் நாசரை அடக்க இஸ்லாமிய மதவாதிகளுக்கு மறைமுகமாக உதவியது அமெரிக்கா. யாசர் அராபத்திற்கு எதிராகச் செயல்பட ஹமாஸ் தலைவர் ஷேக் அகமது யாசினை விடுதலை செய்து உதவியது இஸ்ரேல். இவற்றில் எங்கு மதம் வந்தது? குஜராத் இனக்கலவரம் முன்பு இந்திய முஜாஹிதீன் கிடையாது என்கிறது அரசு. பாபர் மசூதி இடிப்புக்கு முன்பு இஸ்லாமிய தீவிரவாதம் இந்தியாவில் கிடையாது. காலிஸ்தான் பிரச்சனையில் பக்கத்து பஞ்சாப் பற்றி எரிந்த போதும் காஷ்மீர் அமைதியாகப் போராடி இருக்கிறது. ஆப்கானிஸ்தானைச் சோவியத் ஆக்கிரமிக்கும் வரை உலகில் இஸ்லாமிய மதவாதம் கிடையாது. 1967ல் பாலஸ்தீனம் முழுவதும் அரபுகளிடம் இருந்து பிடுங்கப்பட்ட போதும் தீவிரவாதம் இல்லை. பின் எந்தச் சூழ்நிலையில் மதம் ஆயுதமாக எடுக்கப்படுகிறது? உங்களின் வாசிப்பிற்கே விட்டுவிடுகிறேன்.

மதம் என்றாலே பிரச்சனை என்று ஒட்டுமொத்தமாக ஒதுக்கிவிட முடியாது. மதச்சார்பற்ற பிரெஞ்சு நாடு மத அடையாளங்களைத் தடை செய்கிறது. நாத்திக சோவியத் யூதர்களை விரட்டிய கதையும் உண்டு; அதே சோவியத் மதத்தைக் கையில் எடுத்த கதையும் உண்டு. Pogrom என்ற வார்த்தையை அகராதியில் சேர்த்ததே சோவியத்தான். மதச்சார்பற்ற வன்முறை என்று தனிப்பெயர் தரலாம். மதம் இருக்கட்டும். மதம் நல்லது. மதம் இல்லாத உலகம் இன்னும் அதிகமாக மதம் பிடித்திருக்கும். மதம் இல்லாதவனுக்கு இல்லாள் கிடைப்பதில்லை, என்பது என் பட்டறிவு.

ஆசிரியர் சொல்லும் தீர்வுகளில் உங்களுக்குப் புரியும் சில கருத்துகள் இதோ:
1. அரபு மண்ணில் இருந்து அந்நியப் படைகள் வெளியேறினால் போதும்; பல தீவிரவாத இயக்கங்கள் முடிவுக்கு வரும்.
2. பாலஸ்தீன அகதிகளுக்கு நீதி.
3. இஸ்லாமிய மதவாதம் மற்றும் பயங்கரவாதங்களுக்குத் தீர்வு காண உள்ளூர் இஸ்லாமியர்களால் மட்டுமே முடியும். அவர்களிடம் விட்டுவிடுங்கள்.

சுருக்கமாகச் சொன்னால், புத்தகத்தின் தலைப்பைப் போல், எந்தவொரு பிரச்சனைக்கும் இஸ்லாமியச் சாயம் பூசாமல், வெறும் உலகலாவிய மனிதயினத்தின் சமூக மற்றும் அரசியல் பிரச்சனையாக மட்டும் பாருங்கள். நடக்கும்? ஆயுதத் தயாரிப்பாளர்களும் வல்லரசுகளும் நடக்கவிடுவார்களா?

உங்கள் சிந்தனைக்கு:
1. திலக் என்ற இந்துத் தளபதியின் கீழ் ஓர் இந்துப் படையை வைத்திருந்தார் கஜினி முகமது. வெற்றி மட்டுமே நோக்கமாகக் கொண்ட கஜினியுடன் இஸ்லாம் எப்படிக் காரணமாகும்?
2. வாள் முனையில் இஸ்லாம் பர‌வியது என்ற கூற்று, தென்னிந்தியாவிற்கும் சீனாவிற்கும் முற்றிலும் தவறு. இவ்விரண்டு இடங்களுக்கும் இஸ்லாம் வணிகம் மூலம் வந்தது. உலகின் இரண்டாம் பள்ளிவாசலான சேரமான் ஜீம்மா பள்ளிவாசல், சேரப் பேரரசின் தலைநகரான கொடுங்களூரில், இன்றைய கேரளாவில் உள்ளது! முகமது நபியின் வாழ்நாளிலேயே கட்டப்பட்டது அது!  'அறியப்படாத தமிழகம்' புத்தகத்தில் தொ.பரமசிவன் அவர்கள், பிரியாணியும் தென்னாட்டிற்கு வெகு நூற்றாண்டுகளுக்கு முன்பே வந்துவிட்டதாகக் கூறுகிறார்.
3. அடிமைமுறையை இஸ்லாம் ஊக்குவிப்பதாகக் கூறினார் அம்பேத்கார். அடிமைகள் அரசாண்டிருக்கிறார்கள். குதுப்மினார் கட்டி இருக்கிறார்கள்.
4. தமிழீழ விடுதலைப் புலிகள் என்ற பெயருடன் இந்து என்ற வார்த்தையையும் பல வெளிநாட்டு ஊடகங்கள் சேர்த்துக் கொள்ளும். அவர்கள் தற்கொலைப் படைத் தாக்குதல் பயிற்சி பெற்றது லெபனானில், பல இஸ்லாமிய அமைப்புகளிடம் இருந்து என்று பலருக்குத் தெரியும். விடுதலைப் போராட்டக் குழுக்களில் மதம் உண்டா என்ன?
5. பிரிவினைக்குப் பின் இலாகூரைத் தவிர மொகலாயர்கள் நிர்மாணித்த அனைத்து பெரிய நகரங்களும் இந்தியாவில் தான் இருக்கின்றன, தாஜ்மகால் உட்பட.
6. ஷியா ஈரானைத் தவிர, இஸ்லாமிய மதத் தலைவர்கள் ஆட்சித் தலைவர்களை நியமித்ததாக‌ அல்லது கட்டுப்படுத்தியதாக எங்குமே வரலாறு கிடையாது! அதே போல் எந்தவொரு சுல்தானோ ஷாவோ பாதுஷாவோ முஃப்திக்கு முன் மண்டியிட்டு மன்னிப்பு கேட்டதாக இஸ்லாமிய வரலாறு கிடையாது! அதாவது இஸ்லாமிய வரலாற்றில் மத மற்றும் அரசியல் தலைமைகள் ஒன்றோடொன்று குறுக்கிட்டதில்லை. இது நல்லதா கெட்டதா என்று உங்களுக்குச் சட்டெனப் புரியாது. மதம் ஆதிக்கம் செய்தால் / அரசியல் ஆதிக்கம் செய்தால் / இரண்டுமே சேர்ந்து ஆதிக்கம் செய்தால் / இரண்டுமே தனித்தனியாக இருந்தால் / என ஒவ்வொரு நிலையிலும் வரலாற்றில் மற்ற மதங்களில் எப்படி நடந்திருக்கிறது எனப் புரட்டிப் பாருங்கள். இரண்டின் வல்லமையும் புரியும்.

காந்தி கொலைவழக்கில் அவர் மேல் சுமத்தப்பட்ட பல குற்றங்களில் ஒன்று: 'ஓர் இந்துவைத் திருக்குரானைப் படிக்கச் சொன்னார்'. பெரியார் கட்சிக்காரர் ஒருவரிடம் கேட்டார்கள்: 'நீங்கள் ஏன் எப்போதும் இந்து மதத்திலேயே குறை கண்டு பிடிக்கிறீர்கள்?'. அவர் சொன்னார்: 'அது என்னுடைய மதம் என்று சொல்லப் படுவதால்'. இதே பதில்தான் காந்தியும் சொல்லியிருப்பார். காந்தி அம்பேத்கர் பெரியார் என்று எல்லா சீர்திருத்தவாதிகளும் தங்கள் மதங்களைச் சீர்திருத்தியவர்களே. கடவுள் என்னைக் கைவிட்டு, நான் கடவுள்களைக் கைவிட்டு பல்லாண்டுகள் ஆகிவிட்டதால், நான் உங்களுக்குக் கொடுக்க முடிந்தது இது போன்ற மத நல்லிணக்கம் சொல்லும் புத்தகங்களே! 'ஏன் இஸ்லாம்?' எனக் கேட்டால், சுற்றி அமர்ந்திருக்கும் குழந்தைகளில் பசித்திருக்கும் சிறு குழந்தைக்கு முதல் தோசையைக் கொடுக்கும் ஒரு சாதாரண தாயின் மனநிலையே என்னுடையதும்!

- ஞானசேகர்
(http://jssekar.blogspot.in/)

No comments: