Wednesday, October 02, 2013

111. வருத்தப்பட்டு பாரம் சுமக்கின்றவர்களே எங்களிடம் வராதீர்கள்

(கர்மவீரருக்கும் மகாத்மாவிற்கும் சமர்ப்பணம்)

பெரும்பாலான கல்லூரிகள் தனியார் அமைப்பால் நடத்தப்படுவதும், அமைப்பு ரீதியாகவும், அலுவலர் ரீதியாகவும் இவ்வமைப்புகள் வகுப்புவாதத் தன்மை கொண்டுள்ளன. இது மாணவர் சேர்க்கையிலும் பிரதிபலிக்கிறது. இதனால் உயர் வகுப்பினர் சேர்க்கையில் முன்னுரிமை பெறுகின்றனர். தீண்டத்தகாத வகுப்பைச் சேர்ந்த மாணவர்களுக்குச் சேர்க்கை முடிந்து விட்டதாகக் கூறி இடம் மறுக்கப்படுகிறது.
- டாக்டர் அம்பேத்கர் (காலத்தில் இருந்து இன்றும்...)
--------------------------------------------------------------------------------------------------------------------------
புத்தகம் : வருத்தப்பட்டு பாரம் சுமக்கின்றவர்களே எங்களிடம் வராதீர்கள்
ஆசிரிய‌ர் : அய்.இளங்கோவன் (ஆங்கிலத் துறைத் தலைவர், எலிசபத் ராட்மன் ஊரிஸ் கல்லூரி, வேலூர்)
வெளியீடு : கருப்புப் பிரதிகள், லாய்ட்ஸ் சாலை, சென்னை
முதற்பதிப்பு : சூன் 2009
விலை :  40 ரூபாய்
பக்கங்கள் : 72
வாங்கிய இடம் : New Book Lands, வடக்கு உஸ்மான் சாலை, தியாகராய நகர், சென்னை
--------------------------------------------------------------------------------------------------------------------------
இந்திய வரலாற்றின் பக்கங்களைப் புரட்டினால் காலந்தோறும் சில குறிப்பிட்ட சமூகங்கள் தீண்டத்தகாதவர்களாக கல்வி மறுக்கப்பட்ட கொடுமைகளைக் காணலாம். போனால் போகட்டும் என்று தர்ம சிந்தனையிலும் புண்ணிய நோக்கிலும் ஆரம்ப காலத்தில் கொஞ்சம் கல்வி கொடுத்திருக்கிறார்கள். 'தீண்டத்தகாதவர்களுக்குக் கல்வி அளிக்கலாம். ஆனால் அதில் நடைமுறைச் சிக்கல்கள் ஏற்படுமானால் அதற்கு முக்கியத்துவம் தரத் தேவையில்லை' என்றார்கள் ஆங்கிலேயர்கள். 1930ல் கல்லூரியில் படித்த மெட்ராஸ் மாகாண தாழ்த்தப்பட்டவர்கள் 47 பேர் மட்டுமே. அவையும் தொழில்நுட்ப மற்றும் அறிவியல் படிப்புகளாக இருந்திருக்க வாய்ப்பில்லை.

கேரளாவில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட உலகின் முதல் இடதுசாரி அரசு, 'கேரளக் கல்விச் சட்டம் 1957' என்ற பெயரில் ஒரு சட்ட முன்வரைவைக் கொண‌ர்ந்தது. அது சிறுபான்மைக் கல்வி நிறுவனங்களில் தாழ்த்தப்பட்டோருக்கு இட ஒதுக்கீடு வழங்க வகை செய்தது. கேரள சிறுபான்மை மக்கள் எதிர்த்தனர். இதனால் சட்டப் பேரவையில் நிறைவேறிய சட்ட முன்வரைவு ஆளுநரின் ஓப்புதலின்றி குடியரசுத் தலைவரின் கருத்துக்கு அனுப்பப்பட்டது. 'இச்சட்டம் சிறுபான்மையினரின் உரிமைகளுக்கு எதிரானதல்ல. சிறுபான்மையினரின் கல்வி நிறுவனங்களில் தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினருக்கு இட ஒதுக்கீடு இப்பிரிவின் கீழ் செல்லத்தக்கதே' என்றது உச்ச நீதி மன்றம். இத்தனை ஆண்டுகள் கடந்துவிட்டோம். மைய மாநில அரசுகள் ஏதாவது செய்தனவா? அத்தீர்ப்பின் நடைமுறை எதார்த்தம் என்ன? இப்புத்தகம் பதில் சொல்கிறது.
(http://udumalai.com)
அரசுக் கல்லூரிகளில் உள்ள மொத்த பணியிடங்களை விட அரசு உதவி பெறும் தனியார் கல்லூரிகளில் இரண்டு மடங்கு அதிகம். பொதுநலம் எனக் காரணம் காட்டி, மக்கள் வரிப்பணத்தில் இருந்துதான் மானியம் என்ற பெயரில் அரசிடம் இருந்து இக்கல்லூரிகள், ஆசிரியர் மற்றும் ஆசிரியர் அல்லாதோருக்கான ஊதியத்தை 100% பெறுகின்றன. பெரும்பான்மையான வேலை மற்றும் கல்வி வாய்ப்புகளைத் தம்வசம் வைத்திருக்கும் இக்கல்லூரிகள் சமூக நீதிப்படி நடந்துகொள்கின்றனவா? அரசமைப்புச் சட்டம் இட ஒதுக்கீட்டில் இருந்து சிறுபான்மைக் கல்வி நிறுவனங்களுக்கு விலக்கு அளிக்கிறது. சிறுபான்மை மதங்கள் தத்தம் மதங்களில் தாழ்த்தப்பட்டவர்களுக்கு இட ஒதுக்கீடு உள்ளிட்ட நெடு நாளைய கோரிக்கைகளை அலட்சியப்படுத்தி வரும் அரசை அடிக்கடி கண்டிக்கின்றன. ஆனால் அவர்கள் நடத்தும் கல்வி நிறுவனங்களில் தாழ்த்தப்பட்டோருக்கு உரிய இட ஒதுக்கீட்டை அளிக்கின்றனவா? சிறுபான்மையினரின் கல்லூரிகளில் சிறுபான்மையினருக்கு மட்டுமே வேலை என்பது மதச் சார்பின்மைக்கும் அரசமைப்புச் சட்டத்திற்கும் எதிரானதில்லையா? 2000 முதல் 2008 வரையிலான புள்ளி விவரங்களை இப்புத்தகம் ஆதரமாகச் சொன்னாலும், அதன்பிறகு பெரிய மறும‌லர்ச்சி ஏதும் நம் நாட்டில் நடக்காத‌தாலும், அவ்வாதாரங்கள் இன்றும் கிட்டத்தட்ட பொருந்தும் எனக் கொள்ளலாம். பின்வரும் முப்பெரும் ஓரவஞ்சனைகளைச் சுட்டிக் காட்டுகிறது இப்புத்தகம்.
1. சிறுபான்மைக் கல்லூரிகளில் முழுமையாக நிரப்பப்படாமல் மறுக்கப்படும் தாழ்த்தப்பட்டோருக்கான வேலை வாய்ப்பு.
2. அரசு உதவி பெறும் தனியார் கல்லூரிகளில் தாழ்த்தப்பட்டவர்களுக்கு மறுக்கப்படும் இட ஒதுக்கீடு.
3. இக்கல்லூரிகளில் தாழ்த்தப்பட்ட மற்றும் சிறுபான்மையினருக்கு மறுக்கப்படும் கல்வி.

தமிழகத்தில் அரசு உதவி பெறும் கல்லூரிகள் 160. இதில் மத மற்றும் மொழி சிறுபான்மையினரால் 62 கல்லூரிகள் நடத்தப்படுகின்றன. சிறுபான்மைக் கல்லூரிகள் இட ஒதுக்கீட்டின் படி 751 தாழ்த்தப்பட்ட, 49 பழங்குடியின விரிவுரையாளர்கள் பணிபுரிய வேண்டும். ஆனால் 160ல் 14ல் மட்டுமே 61 தாழ்த்தப்பட்ட விரிவுரையாளர்கள் பணியில் உள்ளனர். மொத்தமுள்ள ஆசிரியர் மற்றும் ஆசிரியரல்லாத 15192 பணியிடங்களில் 82 பேர் இயலாதோர், 67 பேர் ஆதரவற்ற கைம்பெண்கள், பழங்குடியினர் ஒரே ஒருவர் மட்டுமே. அதுவும் கூட, வள்ளி என்ற பழங்குடியினப் பெண்ணைக் கட்டிய முருகனின் பழனியில், அருள்மிகு பழனியாண்டவர் மகளிர் கல்லூரியில் பெருக்கும் பணியில் இருப்பவர்.

அரசு உதவி பெறும் சிறுபான்மைக் கல்லூரிகள் இப்படி என்றால், அரசு உதவி பெறும் சிறுபான்மை அல்லாத கல்லூரிகளில் 1124 தாழ்த்தப்பட்ட, 62 பழங்குடியின விரிவுரையாளர்கள் இருக்க வேண்டும். தாழ்த்தப்பட்ட விரிவுரையாளர்கள் 49.5% இருக்கின்றனர்; மீதமுள்ள இடங்கள் மற்றவர்களால் நிரப்பப்பட்டுள்ளன. பழங்குடியினர் யாரும் இக்கல்லூரிகளில் விரிவுரையாளர்களாக இல்லை. இட ஒதுக்கீட்டை முழுமையாகப் பயன்படுத்தும் பாராட்டத் தகுந்த மூன்று கல்லூரிகளை ஆசிரியர் அடையாளம் காட்டுகிறார்.
1. திருச்சி உருமு தனலட்சுமி கல்லூரி
2. பரமத்தி வேலூர் கந்தசாமி கண்டர் கல்லூரி
3. சென்னை எஸ்.அய்.வி.இ.டி. கல்லூரி

160 கல்லூரிகளில் உள்ள ஆசிரியர் அல்லாத பணியிடங்கள் 5326. இட ஒதுக்கீட்டின் படி தாழ்த்தப்பட்டவர்கள் பழங்குடியினர் முறையே சிறுபான்மைக் கல்லூரிகளில் 187 - 14 எனவும், சிறுபான்மை அல்லாத கல்லூரிகளில் 236 - 32 எனவும் நிரப்பப்பட்டிருக்க வேண்டும். ஆனால் பிற சாதியினரைக் கொண்டே இப்பணியிடங்கள் நிரப்பப்பட்டிருக்கின்றன. அதாவது எழுத்தர் மேலாளர் காசாளர் என்ற நிதி மற்றும் நிர்வாகம் சம்மந்தப்பட்ட பணியிடங்களில் தாழ்த்தப்பட்டவர்களும் பழங்குடியினரும் முற்றிலுமாகப் புறக்கணிக்கப்பட்டு, துப்புரவுப் பணியாளர்களாகவும் அலுவலக உதவியாளர்களாகவும் அமர்த்தப்படும் வர்ணாசிரம தர்மத்தின் நவீனவடிவம். அரசு உதவி பெறும் 160 தனியார் கல்லூரிகளில் இன்றைக்கும் கூட ஒரு கல்லூரியிலும் ஒரு தாழ்த்தப்பட்டவர் முதல்வராக இல்லை.
(http://www.keetru.com)
சிறுபான்மையினரின் கல்வி நிறுவனங்கள் சிறுபான்மையினரின் நலனுக்காக ஏற்படுத்தப்பட்டவை என்றால், அங்கும் சிறுபான்மையல்லாத சாதி இந்து மாணவர்களே அதிகம். பின், அரசு மற்றும் தனியார்க் கல்லூரிகள் செய்யும் அதே வேலையைச் செய்ய சிறுபான்மை கல்வி நிறுவனங்கள் என்ற தனி அமைப்பு எதற்கு? பணம் சம்பாதிக்கவும், அதிகாரம் செய்யவும் தானோ? அரசு உதவி பெறும் கல்லூரிகளின் பெயர்கள், பெறும் மானியம், அங்கு நிரப்பப்பட்டிருக்கும் தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின பணியிடங்களின் எண்ணிக்கை, தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின மாணவர்களின் எண்ணிக்கை என ஆங்காங்கே அட்டவணைகளுடன் ஆதாரங்கள் தரும் இப்புத்தகம், காசு கொடுத்தால் கதவு திறக்கும் வணிகமாகிப் போன நம் கல்வி நிறுவனங்களின் முகத்திரை காட்டும் கண்ணாடி! இது போல் பள்ளிக் கூடங்களுக்கு ஒரு புத்தகம் வந்தால் இன்னும் நலமாய் இருக்கும்!

நன்கு படித்த ஓர் அம்பேத்காரால் 6 கோடி தாழ்த்தப்பட்டவர்கள் பயன்பெற்றனர். இன்னும் 25 கோடி பேர் அதன் பயனை அறுவடை செய்து கொண்டிருக்கின்றனர். இன்று படித்த தாழ்த்தப்பட்டவர்கள் பலகோடி பேர் இருந்தும் அதனால் எந்தப் பலனும் வந்துவிடவில்லை, பாமரனுக்கு! திருவிவிலியத்தில் இயேசு கிறித்து ஒரு கதை சொல்கிறார். ஓர் ஏழை பணக்காரனின் வீட்டு வாசலில் காத்திருந்து செத்துப் போகிறான். பணக்காரனும் சாகிறான். ஏழை சொர்க்கத்திற்கும் பணக்காரன் நரகத்திற்கும் போகிறார்கள். சொர்க்கத்தில் இருக்கும் ஏழையிடம் உதவி கேட்டு கதறுகிறான் பணக்காரன். உலகத்தில் இருக்கும்வரை எங்களிடம் கெஞ்சிக் கொண்டே இருங்கள்; எல்லாவற்றையும் மேலே போய் கணக்குப் பார்த்துக் கொள்ளலாம் என்கிறார்கள் பணக்காரர்கள். அவர்களுக்குத் தெரியும் அக்கதை வெறுங்கதைதான் என்று. தாழ்த்தப்பட்டவர்களாகவும் பழங்குடியினராகவும் ஒதுக்கப்படும் ஏழைகளுக்குத் தான் அது இன்னும் புரியவில்லை. அக்கதைப்படி அவர்கள் இறுதித்தீர்ப்புக்காகக் காத்திருக்கிறார்கள். இறுதித்தீர்ப்பு என்று ஒன்று உண்டெனில், காலங்கடந்து வரும் அதுவும் ஒரு மறுக்கப்பட்ட நீதியே!

- ஞானசேகர்
 (http://jssekar.blogspot.in/)

No comments: