Sunday, May 25, 2014

130. காயிதே ஆஸம் முகமது அலி ஜின்னா

The greatest regret of my life is that there are two persons whom I could never convince. One is my friend from Kathiawad, Mohammad Ali Jinnah.
- மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி (Gandhi My Father திரைப்படத்திலிருந்து)
----------------------------------------------------------------------------------------------------------------------------------
புத்தகம்: காயிதே ஆஸம் முகமது அலி ஜின்னா - உண்மைச் சித்திரம்
ஆசிரியர்: டி. ஞானையா
வெளியீடு: அன்னை முத்தமிழ்ப் பதிப்பகம், சென்னை - 41
முதல் ஈடு: 2012
பக்கங்கள்: 232
விலை: ரூபாய் 175
வாங்கிய இடம்: New Book Lands, வடக்கு உஸ்மான் சாலை, தியாகராய நகர், சென்னை (http://www.newbooklands.com/)
----------------------------------------------------------------------------------------------------------------------------------
முகமது அலி ஜின்னா. பிரிட்டிஷ் இந்தியாவை மூன்று பகுதிகளாகப் பிரித்ததன் மூலம், அண்மைக்கால இந்தியாவின் வரலாற்றில் மிக முக்கியமான தலைவர். பாகிஸ்தானின் தேசத்தந்தை. பெரும்பாலான‌ இந்தியர்களுக்குத் தமது தேசத்தந்தை பற்றியே அதிகம் தெரியாதபோது, அண்டைநாட்டு, அதுவும் பிரித்துக் கொண்டுபோன தேசத்தின் தந்தை பற்றி தெரிந்திருக்க வாய்ப்பில்லை. வாய்ப்புகள் அளிக்கப்படவில்லை என்பதே உண்மை. ஜின்னாவைப் பற்றிய வரலாறு இந்தியாவில் திட்டமிட்டே இருட்டடிப்பு செய்யப்பட்டது என்பதால், குறைந்தபட்சம் இஸ்லாமியர் அல்லாத இந்தியர்களுக்கு எல்லாம் அவர் வில்லன். அவர் உண்டாக்கிய பாகிஸ்தானும். சில உதாரணங்கள் கால வரிசைப்படி:
1. பாகிஸ்தான் சென்று ஜின்னாவை மதச்சார்பற்றவர் என்று சொன்னதற்காக, பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் பதவியிலிருந்து நீக்கப்பட்டார் லால் கிருஷ்ண அத்வானி. 
2. Jinnah: India, Partition, Independence என்ற தனது நூலில் நடுநிலைமையுடன் ஜின்னாவைப் புகழ்ந்ததால், பாரதிய ஜனதா கட்சியில் இருந்து நீக்கப்பட்டார் ஜஸ்வந்த் சிங்.
3. பாகிஸ்தான் கிரிக்கெட் அணி ஒரு போட்டியில் வென்றதற்காக கைத்தட்டிய மாணவர்களை, இந்தியாவில் ஒரு கல்லூரி நிர்வாகம் நீக்கியது.
4. சென்னை சென்ட்ரல் இரயில் நிலையத்தில் குண்டு வைத்தவர்கள் யார் என்று இன்றுவரை கண்டுபிடிக்கப்படவில்லை. 'சென்னை சென்ட்ரலில் குண்டு வைத்த பாகிஸ்தான் தீவிரவாதிகளைக் கண்டுபிடிக்க கேப்டன் விஜயகாந்தால் மட்டுமே முடியும்' என்று சமூக வலைத்தளங்களில் கிண்டல் பரவியது. அதைச் சில ஊடங்களும் வெளியிட்டு வாசகர்களைச் சிரிப்பூட்டின. 

நான் இந்திய வரலாறு படிக்க ஆரம்பித்த காலத்தில், சுதந்திரப் போராட்ட வீரர்கள் அனைவரும் கதராடை தரித்திருக்க, ஜின்னா மட்டும் கோட்டு சூட்டு போட்டுக் கொண்டு, பெரும்பாலும் சிகரெட் பிடித்துக் கொண்டு புகைப்படங்களில் இருப்பதைக் கவனித்திருக்கிறேன்.  சுதந்திரப் போராட்டம் பற்றிய தமிழ் - இந்தி - ஆங்கிலத் திரைப்படங்கள் எல்லாம் ஒரேமாதிரி, முறைத்துக் கொண்டு அடிக்கடி பிரச்சனை செய்யும் மனிதராகவே ஜின்னாவைச் சித்தரித்தன. இப்படி இந்திய இஸ்லாமியர்களின் வரலாறு பற்றிய அறியாமையில் வளரும் ஒரு சாதாரண இந்தியனுக்கு, ஜின்னா தரப்பு நியாயங்களைத் தேடியறியும் ஆவல் ஏற்படுவது அபூர்வமே. சமீபகாலமாக இந்தியா எதை நோக்கிப் போய்க்கொண்டு இருக்கிறது என்ற குழப்பத்தில், இந்தியா எதிலிருந்து வந்தது என்று படிக்கலானேன். சமூகத்தின் பொதுப் புத்தியில் பதிய வைக்கப்பட்டு இருக்கும் வரலாறுகளுக்கும் உண்மைக்கும் மிகப்பெரிய முரண்பாடுகள். எனது தேடலில் முகமது அலி ஜின்னாவும் இடம்பெற்றார். புத்தக வாசிப்பில் எனக்கு சில புதிய பரிமாணங்களை அறிமுகப்படுத்திய‌, டி.ஞானையா அவர்கள் ஜின்னாவைப் பற்றி ஒரு புத்தகம் எழுதியிருப்பது அறிந்து, புரட்டிக்கூட பார்க்காமல் வாங்கிவந்துவிட்டேன். ஆசிரியருக்கு வயது 93!
(http://discoverybookpalace.com/)
காயிதே ஆஸம் முகமது அலி ஜின்னா. 'காயிதே ஆஸம்' என்றால் மகத்தான தலைவர் என்று பொருள் கொள்ளலாம். ஜின்னாவின் அரசியல் மற்றும் சொந்த வாழ்க்கையின் பல சம்பவங்களின் தொகுப்பான 12 கட்டுரைகளே இப்புத்தகம். தேசியவாதியாக இருந்த ஜின்னா மதவாதியாக மாறி, தனிநாடு கோரியமைக்குக் காரணமான வரலாற்று நிகழ்வுகளைப் படிப்படியாக காலவாரியாக விளக்குகின்றன இக்கட்டுரைகள். கீழ்க்காணும் நூல்களில் இருந்தே பெரும்பாலான தகவல்களைச் சேகரித்திருக்கிறார் ஆசிரியர்:
1. ஜஸ்வந்த் சிங்கின் Jinnah: India, Partition, Independence
2. காந்தி மற்றும் இராஜாஜியின் பேரனான‌ இராஜ்மோகன் காந்தியின் Understanding muslim mind
3. இலக்கியவாதியான‌ தின்கர் ஜோஷியின் From facts to truth

ஜின்னாவைப் பற்றி நாம் நினைத்துக் கொண்டிருக்கும் மதவாதி பிமபத்தை உடைத்தெறிகின்றன ஆரம்பப் பக்கங்கள். ஜின்னா ஒரு தேசியவாதியாக, முஸ்லீம் லீக்கில் கூட இணையாமல், காந்திக்கு முன்பிருந்தே காங்கிரஸின் சுதந்திரப் போராட்டங்களில் இந்து - இஸ்லாம் மதவொற்றுமையைக் காத்தமையைப் பதிவு செய்கின்றார். பிரிட்டிஷ் நாடாளுமன்ற உறுப்பினரான முதல் இந்தியரான தாதாபாய் நௌரோஜியின் தனிச் செயலராகத் தான் தன் அரசியல் வாழ்வைத் தொடங்கி இருக்கிறார் ஜின்னா. நமக்கெல்லாம் நன்கு தெரிந்த 'சுதந்திரம் எனது பிறப்புரிமை' என்று முழங்கியதற்காக திலகர் கைது செய்யப்பட்டபோது, அப்பிராமணனுக்காக வாதாட முன்வந்தார் ஜின்னா, என்ற இராஜ்மோகன் காந்தியின் வரிகளை மேற்கோள் காட்டுகிறார் ஆசிரியர். இருநாடு கோரிக்கை இஸ்லாமியர்களால் உருவாக்கப்பட்டதல்ல என்பதையும், பல்வேறு நிகழ்வுகளில் மதவொற்றுமைக்காக‌ ஜின்னா பாடுபட்டதையும் விளக்குகின்றார். இந்து - இஸ்லாம் நல்லிணக்கத்தை உண்டாக்கும் இலக்னோ உடன்பாட்டை 1916ல் உருவாக்கினார் ஜின்னா. 1930ல் முதன்முதலில் கவிஞர் இக்பால், பாகிஸ்தான் என்ற சித்தாந்தத்தை முன்வைத்தபோது ஜின்னா எதிர்த்திருக்கிறார். இஸ்லாமிய ஷரியத் சட்டங்களைக் காந்தி ஆதரித்தும், ஜின்னா எதிர்த்திருக்கிறார். எல்லாவற்றிற்கும் மேலாக, பாகிஸ்தான் பிறந்த நாளில், அது மதச்சார்பற்ற நாடாக இருக்கும் என அறிவித்தார்! ஹதீஸ், ஷரியத் பற்றி ஏதுமறியாத ஜோகேந்திர நாத் மண்டல் என்ற தாழ்த்தப்பட்ட சாதியைச் சேர்ந்த இந்துவைச் சட்ட அமைச்சராக நியமித்தார்!

1906ல் இருந்தே காங்கிரஸ் உறுப்பினராக இருந்தார் ஜின்னா. அநேகமாக 1916-17களில் ஜின்னாவிற்குக் கிடைத்திருந்த இடத்தைக் காந்தி கைப்பற்றிக் கொண்டார் என‌வும், ஜின்னா இருக்க வேண்டிய இடத்தில் காந்தி இடம் பெற்றார் எனவும் காந்தியின் பேரனான் இராஜ்மோகன் காந்தியே எழுதி இருப்பதை மேற்கோள் காட்டுகிறார் ஆசிரியர். ஜின்னாவைப் பற்றி புத்தகத்தில் இருந்து சில வரிகள்:
ஜின்னா ஆங்கிலமய வாழ்வியலை மேற்கொண்டவர். பிறரிடம் விலகியே இருந்தவர். எந்த இந்திய மொழியிலும் உரையாற்ற இயலாதவர். ஜின்னாவிற்கு உருது தெரியாது. ஜின்னா இஸ்லாமுடன் எந்த உறவும் வைத்துக் கொள்ளவில்லை; அந்த மதத்தில் பிறந்தது ஒன்றைத் தவிர! ஷரியத் சட்டத்தைக் கற்றறிவதற்காகவே குரானையும் ஹதீதையும் படித்தார். இது முஸ்லீம்களின் வழக்குகளை நடத்துவதற்குத் தேவைப்பட்டது. மசூதிகளிடம் நெருங்காதவர். ஒருநாளில் ஒருமுறைகூட நமாஸ் செய்ததில்லை. மதுவும் பன்றி இறைச்சியும் இல்லாமல் அவரால் இருக்க இயலாது. 1937 வரை தனது நடை உடை பாவனையில் இஸ்லாமிய தாக்கம் இல்லாதவர்.

இந்தியாவில் இருந்து பாகிஸ்தான் பிரிந்தபோது, உடன்படிக்கைபடி பாகிஸ்தானிற்குச் சில கோடி ரூபாய்கள் இந்தியா தரவில்லை. அதைக் காந்தி எதிர்த்தார். காந்தி கொல்லப்பட்டதற்கான காரணங்களில் இதுவும் ஒன்றாகச் சொல்லப்பட்டது. பாகிஸ்தான் புதிய நாடானபோது சந்தித்த சில பிரச்சனைகள் பற்றி புத்தகத்தில் இருந்து சில வரிகள்:
பாகிஸ்தானை ஒரு நாடாக அமைக்கும் பணி மிகக் கடுமையானது. இந்தியாவில் அனைத்துமே இதுவரை இயங்கி வந்த அரசு இலாக்காக்கள். இராணுவம், காவல்துறை, அமைச்சரவைப் பணி அனைத்துமே ஒரு தொடர்ச்சிதான். புதிதாக எதுவுமே உருவாக்கப்படத் தேவையில்லை. ஆனால் பாகிஸ்தான் ஒரு புதிய நாடு. எல்லாமே புதிதாகத் துவங்க வேண்டும். ஒரு அமைப்பு ரீதியான தலைமை, பிரிவுகள், பிரிவுகளுக்குத் தலைமை, புதிய தலைமையகம் எல்லாமே குழப்பம்.

தான் விரைவில் இறக்கப் போவதை வெளியுலகிற்கு மறைத்து, உறுதியான மனத்துடன் பாகிஸ்தானைப் பெற்றுத் தந்தமையைப் பதிவுசெய்கின்றார் ஆசிரியர். காஷ்மீர் ஜீனகாத் ஹைதராபாத் ஆகியவற்றின் இணைப்பு பற்றிய சிக்கல்கள் பூதாகரமாக இருந்த நிலையில், மருத்துவர்கள் ஆலோசனைப்படி காஷ்மீரில் ஓய்வெடுக்க மன்னரிடம் அனுமதி கேட்கிறார் ஜின்னா. காஷ்மீரின் இந்து மன்னர் அனுமதி மறுத்துவிடுகிறார். இந்நிலையில் இராணுவத்தை அனுப்பி ஜினகாத்தைக் கைப்பற்றிக் கொண்டது இந்தியா. அதேபோல் பாகிஸ்தானும் தனது இராணுவத்தை அனுப்பி காஷ்மீரைக் அப்போதே கைப்பற்றி இருந்தால், ஜீனகாத் ஹைதராபாத் போன்று காஷ்மீர் பிரச்சனையும் அன்றே தீர்ந்து போயிருக்கும் என்கிறார் ஆசிரியர். எவ்வளவு ஆழமான உண்மை! நாம் ஏதொன்றும் அறிந்திராத ஜின்னாவின் சொந்த வாழ்க்கை துன்பியல் நிறைந்த ஒன்று. அதை உங்கள் வாசிப்பிற்கே விட்டுவிடுகிறேன்.

இந்து - முஸ்லீம் பிரச்சனை ஒரு பிரச்சனையே இல்லை என்று காங்கிரஸ் மெத்தனம் காட்டியமை, இந்தியாவை ஒரு பெண் தெய்வமாகச் சித்தரித்து இஸ்லாமியர்களின் தோல்வியைக் கொண்டாடும் 'வந்தே மாதரம்' பாடலை ஊக்குவித்தமை, காங்கிரஸ் தலைவர்களின் இந்துமதச் சார்பு கொள்கைகள், கிரிப்ஸ் திட்டம் என்று பாகிஸ்தான் என்ற தனிநாடு கோரிக்கைக்குப் பின்னுள்ள வரலாற்று நியாயங்களைச் சொல்கின்றன இக்கட்டுரைகள். நம்காலத்தைச் சொல்லும் சில வரிகள் புத்தகத்தில் இருந்து:
மகாத்மா காந்தி. காயிதே ஆஸம் முகமது அலி ஜின்னா. இருவரும் குஜராத்திகள். இருவருக்கும் கத்தியவார் பூர்வீகம். இருவரும் இலண்டனில் பாரிஸ்டர் பட்டம் பெற்றவர்கள். இருவரும் இந்தியாவின் தலைவிதியை நிர்ணயித்தவர்கள். இவ்விரு குஜராத்திகளும் அவரவர் வழிகளில் உறுதியான மதச்சார்பற்றவர்கள். ஆனால் இந்த குஜராத் இன்று ....

இரண்டாம் உலகப்போர் முடிந்தவுடன் ஒவ்வொரு மாகாணமும் பிரிந்துபோகும் உரிமை உண்டு என்று ஒரு திட்டத்தைப் பிரிட்டிஷ் அமைச்சர் கிரிப்ஸ் 1942ல் முன்வைத்தார். இப்படி வங்காளம் பஞ்சாப் என்று தனித்தனி மாகாணங்களாகப் பிரிந்து போக எதிர்த்தவர்கள் அனைவரும், இந்து வங்காளம் - முஸ்லீம் வங்காளம் - இந்து பஞ்சாப் - முஸ்லீம் பஞ்சாப் எனப் பிரிக்கக்கோரி உறுதியுடன் நின்று பிரித்துவிடவும் செய்ததன் காரணங்கள் எவை? பிரிட்டிஷ் இந்தியாவில் இருந்து, இஸ்லாமியர்களுக்குப் பாகிஸ்தான் என்ற தனிநாடு உருவாகியது. இந்தியா மதச்சார்பற்ற நாடென்று நேரு அறிவிக்கிறார். இஸ்லாமியர்களின் நலனுக்காக உருவாகிய பாகிஸ்தானும் மதச்சார்பற்ற நாடென்றார் ஜின்னா. இந்தியாவும் பாகிஸ்தானும் தனித்தனியாக மதச்சார்பற்ற நாடுகளாக இருக்க முடியுமெனில், பிரிக்கப்படாத பிரிட்டிஷ் இந்தியாவில் மதச்சார்பற்று இருந்திருக்க முடியாதா என்ன? வரலாற்றின் சில நியாயங்களைப் புரிந்துகொள்ள, வரலாற்றின் அந்தந்தக் காலங்களுக்கே சென்று படிக்க வேண்டும். அப்படிப்பட்ட‌ புரிதல் இருக்கும் பட்சத்தில், இன்னொருவரின் கைத்தட்டல்களும் புகழ்ப்பேச்சுகளும் நமக்கு ஓவ்வாமையை உண்டாக்கப் போவதில்லை.

அனுபந்தம்:
-------------------
1. மும்பையில் உள்ள ஜின்னா ஹால் பற்றி இப்புத்தகத்தில் தான் தெரிந்து கொண்டேன். அடுத்த முறை மும்பை செல்லும்போது கண்டிப்பாக பார்க்க வேண்டும்.
2. IPL கிரிக்கெட்டில் பஞ்சாப் அணி, ஜின்னாவின் கொள்ளுப் பேரனுடையது. பாம்பே டையிங் நிறுவனத்தைத் தோற்றுவித்ததும் இவர்கள் குடும்பம்தான்.

- ஞானசேகர்
 (http://jssekar.blogspot.in/)

No comments: