புத்தகம் : Ten days that shook the world
ஆசிரியர் : John Reed
மொழி : ஆங்கிலம்
--------------------------------------------
ஓர் அமெரிக்க பத்திரிக்கையாளர் (புத்தக ஆசிரியர்தான்), ரஷ்யப் புரட்சி காலத்தில், லெனின் தலைமையில் ஆட்சி அமையும் வரையுள்ள பத்து நாட்களில், ரஷ்யாவில், குறிப்பாக பெட்ரோகிரேட் மற்றும் மாஸ்கோ நகரங்களில் என்ன நடக்கிறது என்பதைத் தனது பத்திரிக்கைக்கு அனுப்ப செய்தி சேகரிக்கும்போது ஏற்படும் அனுபவங்களே இப்புத்தகம்.
ஆசிரியர் முதல் பாதி பெட்ரோகிரேட் நகரத்தில் நடக்கும் நிகழ்ச்சிகளை விளக்குகிறார். அதில் குறிப்பிட்டுச் சொல்லும்படியாக எனக்கு ஒன்றும் ஞாபகமில்லை. இரண்டாம் பாதியில் மாஸ்கோ நோக்கி பயணிக்கிறார். இதில் கொஞ்சம் சுவாரஸ்யம் இருந்தது. அவருக்கு அளிக்கப்பட்ட அடையாளச் சீட்டில், அவரைப்பற்றி ரஷ்ய மொழியில் எழுதியிருக்க, இவர் மொழிதெரியாத படைவீரர்களிடம் மாட்டிக்கொள்ள, இவரைச் சந்தேகத்தின் பேரில் கொல்லப்போவார்கள். அப்புறம் ரஷ்ய மொழி தெரிந்த ஓரு ஆள் காபாற்றுவார்.
ஒரு பட்டதாரி வாலிபனுக்கும், ஒரு படிக்காத விவசாயிக்கும் நடக்கும் லெனின், கன்யூனிஸம் பற்றிய வாக்குவாதங்கள் ஒரு பக்க அளவிற்கு அனல் பறந்தது. புத்தகம் முழுவதும், லெனின் ஒரு ஜெர்மானியர் என்ற வாதம் அடிக்கடி தலைதூக்கியது.
"கன்யூனிஸம் என்ற கொள்கை, ஓர் இடத்தில் துளிர்விட்டால் போதும்; அண்டை நாடெல்லாம் பரவிவிடும். அதேபோல், ஓர் இடத்தில் அழிந்தால் போதும்; அண்டை நாட்டில் எல்லாம் அழிந்து போகும்"
என்றும்,
"ஒரு நாடு பொருளாதார மறுமலர்ச்சி காணாமல், அரசியல் மறுமலர்ச்சி காண முற்பட்டால், ரஷ்யா போல துண்டாகித்தான் போகும்"
என்றும் சில வரலாற்று ஆசிரியர்கள் கூறக் கேள்விப்பட்டு இருக்கிறேன். இரண்டாம் கருத்தைப் புரிந்து கொள்ளத்தான் இப்புத்தகம் படித்தேன்.
ரஷ்யாவைப் பற்றி எனது முதல் புத்தகம் இது. ஆள் பெயர் எது, இடப்பெயர் எது, அமைப்புப் பெயர் எது என்று நான் ரொம்ப கஷ்டப்பட்டுதான் போனேன். முழுக்க முழுக்க பெட்ரோகிரேட் மற்றும் மாஸ்கோ நகரங்களையே சுற்றிவரும் இக்கதை, எப்படி உலகையே உலுக்கியது என்பது என் சிற்றறிவுக்கு விளங்காமல் போனதும் உண்மைதான்.
-ஞானசேகர்
1 comment:
அருமையான பதிவு!! நன்றி!!
Post a Comment