விமர்சனம் செய்கிறவர் சேரல்!
'இளைய தலைமுறைக்கு இரண்டு விதமான அறிவு தேவை. ஒன்று எதிர்காலம் குறித்த முன்னோக்கும் அறிவு; இன்னொன்று வரலாறு குறித்த பின்னோக்கும் அறிவு'
- வைரமுத்து
-----------------------------------------------
புத்தகம் : கிமு.கிபி
ஆசிரியர் : மதன்
வெளியிட்டோர் : கிழக்கு பதிப்பகம்
வெளியான ஆண்டு : 2006
விலை : 75 ரூ
-----------------------------------------------
குமுதத்தில் வெளியான வரலாற்றுக் கட்டுரைகளின் தொகுப்பு. மதனுக்கு அறிமுகமே தேவை இல்லை.
'வந்தார்கள் வென்றார்கள்' புத்தகத்தின் மூலம், தான் வரலாறு சொல்லும் பாணியே தனி என்று நிரூபித்திருந்த மதன், இந்தப் புத்தகத்திலும் நம்மை ஏமாற்றவில்லை. தன் இயல்பான நடையில் நன்றாக எழுதி இருக்கிறார்.
இதில் இடம்பெற்றிருக்கும் பெரும்பாலான விஷயங்கள் ஏற்கனவே நம்மில் பலருக்குத் தெரிந்த விஷயங்களாகவே இருக்கின்றன. எனவே, வித்தியாசமான செய்திகளாக எனக்குத்தோன்றிய சிலவற்றை மட்டும் இங்கே பகிர்ந்து கொள்கிறேன்.
450 கோடி ஆண்டுகளுக்கு முன் உலகம் தோன்றியதிலிருந்து புத்தகம் தொடங்குகிறது.
உலகின் முதல் மனிதன் ஒரு பெண் என்று வரலாற்று ஆதாரங்களோடு சொல்கிறார் ஆசிரியர். ஆப்பிரிக்காவின் ஒரு குறிப்பிட்ட பகுதியில் தோன்றிய மனித இனம் 3 லட்சம் ஆண்டுகளில் நடை பயணமாக உலகெங்கும் சென்று சேர்ந்திருக்கின்றது.
நாடோடியாகவே வாழ்ந்த மனிதர்கள் கிமு 8000ல் தான் பாலஸ்தீனில் ஜெரீகோ என்ற இடத்தில் முதன்முதலில் ஒரு குடியிருப்பை உருவாக்கியிருக்கிறார்கள்.
நாகரிகத்தின் தோற்றத்தையும், அதன் பல்வேறு படிநிலைகளையும் விவாதித்துவிட்டு, பூசாரிகள், மன்னர்கள் தோன்றிய வரலாற்றையும் சொல்கிறார். கிமு 2334ல் மெசொபடேமியாவில் ஆட்சிக்கு வந்த 'ஸார்கான்' தான் உலகின் முதல் மன்னன் என்று சொல்லப்படுகிறான். 1764ல் பாபிலோனியாவில் மன்னனான 'ஹமுராபி' உலகின் முதல்பெரும் சக்கரவர்த்தி.
ஹமுராபியைப் பற்றி விளக்க ஆசிரியருக்குச் சில அத்தியாங்கள் தேவைப்பட்டிருக்கின்றன. உண்மைதான்! உலகின் முதல் பேரரசனின் அரசு அப்படிப்பட்டதாகத்தான் இருந்திருக்கிறது. உலகிலேயே முதன்முதலாக ஒழுங்குபடுத்தப்பட்ட முறையான சட்டங்களை வகுத்து நடைமுறைப்படுத்திய மன்னன் ஹமுராபி தான்.
'கண்ணுக்குக் கண்; பல்லுக்குப் பல்' என்பது ஹமுராபியின் சட்டங்களின் ஆதாரமாக இருந்தது. அடித்தவனுக்கு அடியே தண்டனை! கலப்படம் செய்தால் தண்டனை! கொள்ளை, கொலை, கற்பழிப்பு செய்தவர்களுக்கு பாரபட்சம் பார்க்காமல் மரண தண்டனை!
திருட்டுப்போன பொருளைக் காவல்துறை கண்டுபிடிக்காவிட்டால் அந்தப் பொருளின் இழப்பை அரசே ஈடு செய்தது. மேலும், குறிப்பிட்ட காவல் அதிகாரிகள் பதவி நீக்கம் செய்யப்பட்டனர். இன்று வரை வேறெந்த அரசிலும் இப்படி ஒரு சட்டம் இருந்ததே இல்லை.
ஹமுராபியை தொடர்ந்து ஆட்சி செய்த அரசர்களைப்பற்றி சொல்லிவிட்டு இலக்கியத்தில் நுழைகிறார் ஆசிரியர். கிமு 2100ல் எழுதப்பட்ட கில்கெமெஷ் காப்பியம் இலியத், ராமாயண மகாபாரதங்களுக்கு முன்னோடியாக இருக்கிறது.
பாபிலோனியர்களின் மத நம்பிக்கை பற்றி பேசும்போது நம் மனதைக் கவரும் ஒரு பாத்திரம் 'லிலித்'. இவள் பாதி பெண்ணாகவும் பாதி பறவையாகவும் நிர்வாணமாக அலையும் ஒரு செக்ஸ் தேவதை. கலவியின் போது தெறித்து விழும் ஆணின் உயிரணுக்களைக் கொண்டு சாத்தான்களை உருவாக்குவது அவள் வேலை என்று நம்பப்பட்டது.
நம்மைக் கவரும் இன்னொரு பாத்திரம் 'ஆமன் ஹோடப்' எனப்படும் 'ஆக்நெடான்' என்னும் மன்னன். ஓவியத்தில் உண்மயைச் சொல்லுங்கள் என்று கலைஞர்களுக்குக் கட்டளை இட்டவன் இவன். மதங்களில் நம்பிக்கை இல்லாமல் சூரிய வழிபாட்டை மேற்கொண்டவன்.
எகிப்தின் வரலாறு சொல்லும்போது, மன்னர்கள் தங்கள் இனத்தில் கலப்பு ஏற்படக்கூடாது என்பதற்காக தங்கள் மகள்களையே மணந்து கொண்டதாகக் குறிப்பிடுகிறார்.
சற்று ஹரப்பா, மொஹஞ்சதாரோவைப் பார்வை இட்டுவிட்டு ஏதென்ஸின் வரலாறு சொல்லத்தொடங்குகிறார் ஆசிரியர். இதில் தெரிந்த பல விஷயங்களையே குறிப்பிட்டுள்ளார். புது விஷயங்கள் என்றால், நல்ல நாகரிகம் பெற்றிருந்த கிரேக்கத்தில் பெண்களுக்கு உரிமைகள் வழங்கப்படவில்லை. பெண்கள் போகப்பொருளாக மட்டுமே பார்க்கப்பட்டனர். 'ஹோமோ செக்ஸில்' ஈடுபட்டவர்கள் அதிகம். சொல்லப்போனால் 'ஹோமோ செக்ஸில்' ஈடுபடாதவர்களுக்கு மதிப்பு இல்லை. 'மகிழ்ச்சிக்கு விலைமாதர்கள்; குழந்தைக்கு மனைவி; காதலுக்கு நண்பன்' என்று குறிப்பிடுகிறார் டெமஸ்தனிஸ்.
வரலாற்றின் தந்தை ஹெரோடோடஸ், மருத்துவத்தின் தந்தை ஹிப்போகிரேடஸ், நையாண்டி நாடகங்கள் எழுதிய அரிஸ்டோஃபனீஸ், தத்துவ ஞானிகள் சாக்ரடீஸ், பிளாட்டோ, அரிஸ்டாட்டில், மாவீரன் அலெக்ஸாந்தர் பற்றியெல்லாம் பேசிவிட்டு இந்திய வரலாற்றில் நுழைகிறார் மதன்.
இந்தியாவின் முதல் பேரரசர் சந்திரகுப்த மௌரியர், சாணக்கியர், சந்திரகுப்தரின் மகன் பிந்து சாரர், அவரின் மகன் அசோகர் என்று வரலாறு சொல்லி மௌரிய வம்சம் கிமு 188ல் வீழ்ச்சி அடைவதோடு முடிக்கிறார்.
வரலாற்றில் ஆர்வம் உள்ளவர்கள் படிக்க வேண்டிய ஒரு புத்தகம். 'வந்தார்கள்; வென்றார்கள்' முன்னுரையில் சுஜாதா சொல்வது போல, மதன் வரலாற்றுப்பாடங்களை எழுதினால் யார் வேண்டுமானாலும் நூற்றுக்கு நூறு வாங்கலாம்.
புத்தகத்தின் குறை, அங்கங்கே தெரியும் சில எழுத்துப் பிழைகள். உதாரணமாக, ஆரியருக்கு ஆசிரியர், ஐந்நூறுக்கு ஐந்தாறு, இப்படிச் சில பிழைகள். ஓரிடத்தில் அலெக்ஸாந்தரின் ஆசிரியர் பிளாட்டோ என்று அச்சாகியுள்ளது. கண்டிப்பாக இது அச்சுப்பிழைதான். அடுத்தப் பதிப்பில் இந்தப் பிழைகள் நீக்கப்படும் என்று நம்புவோமாக!
- சேரல்
3 comments:
//உலகின் முதல் மனிதன் ஒரு பெண் என்று வரலாற்று ஆதாரங்களோடு சொல்கிறார் ஆசிரியர்//
இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட பாதச்சுவடுகளில் பழமையானது, ஒரு பெண்ணுடையது. அவளிடம் இருந்த மீட்டோ காண்ட்ரியல் என்ற ஜீனை வைத்து, உலகில் முதலில் தோன்றிய மனிதன் பெண்தான் என்று மதன் இப்புத்தகத்தில் சொல்லி இருப்பார்.
இதே கருத்தை 'ஏன்? எதற்கு? எப்படி?' புத்தகத்தில், Y குரோமசோம் என்பது X குரோமசோமின் பரிணாம மாற்றமே என்று விளக்கி இருப்பார், சுஜாதா.
-ஞானசேகர்
//திருட்டுப்போன பொருளைக் காவல்துறை கண்டுபிடிக்காவிட்டால் அந்தப் பொருளின் இழப்பை அரசே ஈடு செய்தது. மேலும், குறிப்பிட்ட காவல் அதிகாரிகள் பதவி நீக்கம் செய்யப்பட்டனர். இன்று வரை வேறெந்த அரசிலும் இப்படி ஒரு சட்டம் இருந்ததே இல்லை//
ஏதோ ஓர் அமெரிக்க மாகாணத்தில், கைதி தப்பி ஓடிவிட்டால், சிறைக்காவலர் அவனின் மிச்ச காலத் தண்டனையை அனுபவிக்க வேண்டும் என சட்டம் இருப்பதாகக் கேள்விப்பட்டு இருக்கிறேன்.
-ஞானசேகர்
நம்மைக் கவரும் இன்னொரு பாத்திரம் 'ஆமன் ஹோடப்' எனப்படும் 'ஆக்நெடான்' என்னும் மன்னன். ஓவியத்தில் உண்மயைச் சொல்லுங்கள் என்று கலைஞர்களுக்குக் கட்டளை இட்டவன் இவன். மதங்களில் நம்பிக்கை இல்லாமல் சூரிய வழிபாட்டை மேற்கொண்டவன்.
////
i too like
nice
Post a Comment