Saturday, March 28, 2009

33. அடியாள்

--------------------------------------------
புத்தகம் : அடியாள்
ஆசிரியர் : ஜோதி நரசிம்மன்
வெளியிட்டோர் : கிழக்கு பதிப்பகம்
வெளியான ஆண்டு : 2008
விலை : ரூ 75
--------------------------------------------


















நண்பன் ஞானசேகர் அறிமுகப்படுத்தி என்னைப் படிக்கத் தூண்டிய புத்தகம் இது.

புத்தகங்களை அவசரகதியில் படித்து, வேகமாக முடிப்பது என்பது தவிர்க்கப்பட வேண்டிய ஒன்று என்பது என் கருத்து. படிக்கும்போதே ஆழமாக சிந்திக்கும் வாய்ப்பைப் புத்தகங்கள் வழங்குகின்றன என்றே எண்ணுகிறேன். ஆனால், இந்தப் புத்தகத்தை இரண்டே நாட்களில் படித்து முடித்தேன், இடையிடையே தீர்க்கமான சிந்தனைகளுடனே.

'இருமுறை சிறை சென்று மீண்டவரின் ஒப்புதல் வாக்குமூலம் இது. அடியாள் கூட்டம், சிறை அதிகாரிகள், காவல் துறையினர், கைதிகள், இவர்களைப்பற்றி நீங்கள் கொண்டுள்ள பிம்பம் தூள்தூளாகச் சிதறப் போகிறது. எச்சரிக்கை!' என்ற வாசகங்களோடு நம்மை வரவேற்கிறது புத்தகம்.

ஆம். இப்புத்தகத்தின் ஆசிரியர் இரண்டு முறை சிறை சென்று மீண்டுள்ளார். ஒருமுறை அடியாளாக ஓர் அரசியல் அடிதடிக்காகவும், மறுமுறை ஒரு போராளியாக இலங்கைத் தமிழர் பிரச்சினைக்காகவும் சிறை கண்டுள்ளார். இரு முறை சிறை சென்ற அனுபவங்களையும், அங்கே தான் கற்றுக்கொண்ட விஷயங்கள், சந்தித்த மனிதர்கள், தன் பின்புலம் இவற்றைப் பற்றியும் எழுதியிருக்கிறார் ஆசிரியர்.

விழுப்புரம் மாவட்டத்தில் பள்ளி ஆசிரியர் தம்பதிக்கு மகனாகப் பிறந்தவர் இவர். வன்முறை மீதான காதல், சமுதாயத்தின் நிழல் மனிதர்களுக்குள் இருக்கும் சில நல்ல குணங்கள் இவற்றால் ஈர்க்கப்பட்டு அரசியல் அடியாளாகிறார். ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்திய ஒரு தேர்தல் முடிவு இவர் வாழ்க்கையில் ஏற்படுத்திய மாற்றத்தோடு துவங்குகிறது புத்தகம்.

சட்டப்பேரவை தேர்தலில், இவர்கள் தொகுதியில் இவர்களின் கட்சியும், ஒட்டுமொத்தமாக தமிழ்நாட்டில் எதிர்க்கட்சியும் வெற்றி பெற்றிருக்கின்றன. இரண்டு கட்சிகளும் ஏதோ ஒரு விதத்தில் வெற்றியும் தோல்வியும் கண்டிருக்க, இரு தரப்புக்கும் ஏற்பட்ட சண்டையில், எதிர்ககட்சியாட்களின் வீடுகளை அடித்துச் சேதப்படுத்துகிறார்கள் இவர்கள். மேலிடத்தின் உத்தரவுப்படி இவர்களைத் தேடத்தொடங்குகிறது காவல்துறை. சில நாட்கள் ஓடி ஒளிந்து, பின் சரணடைந்து விசாரணைக்காவலில், கடலூர் சிறையில் அடைக்கப்படுகிறார்கள் இவர்கள்.

இறுதிவரை இவர் எந்தக் கட்சி என்பதைச் சொல்லா விட்டாலும் வருட விவரங்களை வைத்து அனுமானிக்க முடிகிறது. அது இவர் சொல்ல வருகிற விஷயங்களுக்குத் தேவையில்லாதது என்பது படிக்கின்ற போது புரிகிறது.

முதன்முறையாக சிறைக்குச் செல்பவனின் உணர்வுகள், பயம், ஆச்சர்யம், சிறை அறிமுகப்படுத்தி வைத்த வித்தியாசமான மனிதர்கள், சிறை வழக்கங்கள், சிறையில் நடக்கும் சட்டத்திற்குப் புறம்பான செயல்கள், சிறையின் சூழ்நிலை என்று பல விஷயங்களைச் சொல்லிப் போகிறார்.

பின் நிபந்தனை ஜாமீனில் வெளி வந்து, சில காலங்கள் அந்த அரசியல் வட்டாரத்தோடு வாழ்ந்துவிட்டு, பின் தனக்கான களம் இதுவல்ல என்று புரிந்துகொண்டு, தன் ஆதர்ஷ புருஷனிடம் (அந்தக் குழுவின் தலைவர்; இவர்களுக்கான எல்லா தேவைகளையும் கவனித்துக் கொண்ட பெரும்புள்ளி) சொல்லிக்கொண்டு அங்கிருந்து விலகுகிறார். இந்த மாற்றத்துக்குக் காரணமானவை தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ.நெடுமாறனின் எழுத்துகள்.

விலகியபின் தமிழர் தேசிய இயக்கமே அவருக்கான புகலிடமானது. பழ நெடுமாறனைத் தன் தலைவனாகக் கொண்டு அரசியல் பயணத்தைத் தொடர்கிறார் ஆசிரியர். சிறுவயதில் இருந்தே தான் ஒரு பத்திரிகையாளனாக வேண்டும் என்ற எண்ணம் கொண்டிருந்திருக்கிறார் ஆசிரியர். சிறையில் பெற்ற அனுபவங்கள் அவரின் இந்த எண்ணத்தை வலுப்பெறச்செய்தன. பின் திருமணம், சிற்றிதழ், குழந்தை, என்று உருண்டோடுகிற வாழ்க்கை, இலங்கைத் தமிழர்களுக்கு எதிரான அடக்குமுறையைக் கண்டித்து நடத்தப்பட்ட அமைதி ஊர்வலத்தின் மூலம் 2008ல் இவரை மீண்டும் சிறையில் வைத்து அழகு பார்க்கிறது. இம்முறை புழல் சிறை!

அங்கு ஏற்படுகின்ற அனுபவங்கள் கடலூரில் பெற்றவற்றை விட மாறுபட்டவையாக இருக்கின்றன. சகல விதமான வசதிகளோடு இருக்கின்றது புழல் சிறை. (வெளியில் இருந்து பார்த்த எனக்கே அந்த உணர்வு ஏற்பட்டது உண்மை!)

புத்தகத்தை வாங்கியவுடன் எனக்குப் புதுமையாகத் தோன்றிய விஷயங்கள் பின்னிணைப்பில் இருந்த 'கைதிகளின் உரிமைகள்', 'கைதிகளைப் பார்க்க விரும்புபவர்கள் அளிக்க வேண்டிய விண்ணப்பம்', 'முதல் தகவல் அறிக்கைப் படிவம்' இவைதான்.

புத்தகம் முழுவதும் சிறைகள் பற்றிய பல புதிய விஷயங்களை அள்ளித் தெளித்திருக்கிறார். 'பரோலில்' வருவதற்கான விதிமுறைகள், கைதிகளைச் சிறை விட்டு சிறை மாற்றும் 'கமான்' வழக்கம், சிறைக்கைதிகளைப் பார்ப்பதற்கான சம்பிரதாயங்கள் போன்ற அறிமுகமில்லாத செய்திகளை நம் முன் வைக்கிறார்.

செய்த குற்றங்களுக்காக வருந்தும் குற்றவாளிகள், செய்யாத குற்றங்களுக்காகத் தண்டனை பெற்றவர்கள், காவல் துறையால் குற்றவாளிகளாக்கப்பட்டவர்கள் என்று பலவிதமான கைதிகளைக் கொண்டிருக்கிறது சிறை வளாகம்; கைதிகளின் மேல் தங்கள் கோபங்களுக்கான வடிகால் தேடும் காவலர்கள், சிறைக்குள் தங்கள் வியாபாரத்தை நடத்தும் சில காவலர்கள், கைதிகள் மீது இரக்கம் காட்டும் சிலர் என்று வித்தியாசமான காவலர்களையும் கொண்டிருக்கிறது.

தமிழகக் குற்றவியல் பதிவேடுகளில் இடம்பிடித்த முக்கியமான குற்றவாளிகள் சிலரையும் இவர் சந்தித்திருக்கிறார். 1998ல் சென்னை மத்திய சிறைச்சாலையில் நிகழ்ந்த கலவரத்தில் குற்றம் சுமத்தப்பட்டிருந்த ஒருவர், அந்த நிகழ்வு பற்றிச் சொல்லும்போது பெரும் அலைகளைக் கிளப்புகிறது நம் மனதில்.

போராட்டத்தில் ஈடுபட்டபோது தொடரப்பட்ட வழக்கில் வெளிவந்த இவர், தன் முதல் அடிதடி வழக்கிலிருந்து இன்னும் விடுதலையாகவில்லை. 'வாய்தா'க்கள் மட்டும் தொடர்ந்து கொண்டே இருக்கின்றன. நம் நீதித்துறையின் மந்தமான் செயல்பாட்டிற்கு இதை ஒரு உதாரணம் என்றும் கூடச் சொல்லலாம்.

புத்தகத்தில் என்னை மிகவும் வியக்க வைத்த அம்சங்கள், ஆசிரியரின் உற்று நோக்கும் தன்மை, உணர்ந்து கொள்ளும் பக்குவம், தன்னைத் தானே கேள்வி கேட்டுக்கொள்ளும் பகுத்தறிவு! இப்படிப்பட்டவர் அரசியல் அடியாளாக இருந்திருக்கிறார் என்பது கொஞ்சம் நெருடினாலும், அவருக்கு அது ஒரு பெரிய அனுபவமாக அமைந்ததென்பதே உண்மை.

இந்தப் புத்தகத்தை இவர் எழுதியதற்கான நோக்கத்தைப் புத்தகத்தின் கடைசி அத்தியாயத்தில் தெளிவாகத் தருகிறார்.

விடுதலையான பின் தன் இயல்பு வாழ்க்கையைத் தொடரும் இவர் வேண்டிக்கொள்வதெல்லாம் சிறையில் இருந்து வந்தவர்களைச் சமூகம் ஏற்றுக்கொண்டு அவர்களுக்குச் சாதாரண வாழ்க்கை வாழும் உரிமையை வழங்க வேண்டும் என்பதே. அந்த மாற்றம் நம் மனத்தில் விரைவில் தோன்றட்டும்.

பின்குறிப்பு:

ஆசிரியர் ஜோதி நரசிம்மன் தற்போது பத்திரிகையாளராகவும், மனித உரிமை ஆர்வலராகவும், விளிம்பு நிலை மனிதர்களின் வாழ்வியல் உரிமைகளுக்கான போராளியாகவும் இருந்து வருகிறார். இவர் ஐ.டி.ஐ படித்தவர்.

- சேரல்

5 comments:

Unknown said...

உங்களுடைய புத்தகங்கள் பற்றிய பதிவை பார்க்க நேர்ந்தது மகிழ்ச்சி. தொடர்ந்து படிக்கவும் எழுதவும் என்னுடைய வாழ்த்துக்கள். புத்தாண்டு நல் வாழ்த்துக்கள் நண்பரே.

சேரலாதன் பாலசுப்பிரமணியன் said...

வாழ்த்துகளுக்கு நன்றி நண்பரே! தொடர்ந்து வாருங்கள்.
-ப்ரியமுடன்
சேரல்

Unknown said...

சேரல்... பொன்னேரி திருவாரூரிலும் இருக்கிறதா என்ன?

என்னுடைய ஊரும் பொன்னேரிதான். ஆனால் சென்னைக்கு அருகில் உள்ளது.

நான் கூட சில புத்தகங்களைப் பற்றிய குறிப்புகளை எனது வலைப் பூவில் இட்டுள்ளேன்.

www.online-tamil-books.blogspot.com

கிருஷ்ணப் பிரபு,
சென்னை.

சேரலாதன் பாலசுப்பிரமணியன் said...

@Enathu Payanam

நான் பிறந்த ஊரின் பெயர் 'பொன்னேரி' அல்ல. அது 'பொன்னிறை'. திருவாரூர் மாவட்டத்தில் இருக்கின்ற ஓர் கிராமம். உங்கள் ஊரைச் சமீபத்தில் தான், பழவேற்காடு செல்லும்போது பார்த்தேன். வளரும் நகரத்துக்குரிய அனைத்து அம்சங்களும் நிறைந்த தேர்வுநிலை பேரூராட்சி!

உங்கள் வலைப்பூவைப் பார்த்தேன். படித்துவிட்டு என் கருத்தைச் சொல்கிறேன்.

-ப்ரியமுடன்
சேரல்

Unknown said...

சேரல் உங்களைப் பற்றி வலைச்சரத்தில் பிரபு எழுதியுள்ளார். சென்று பார்க்கவும்.

http://blogintamil.blogspot.com/2009/04/blog-post_23.html