'எனது ஊரையும், எனது மக்களையும் நான் மிகவும் நேசிக்கிறேன். நான் பிறந்து விழுந்தது இந்த மண்ணின் மேல்தான். நான் தவழ்ந்து விளையாடி மகிழ்ந்ததும், விழுந்து புரண்டு அழுததும் இந்த மண்ணின் மடியில்தான். இந்தப் புழுதியை நான் தலையில் வாரிப் போட்டுக்கொண்டும், என் கூட்டாளிகளின் தலைகளில் வாரி இரைத்தும் ஆனந்தப்பட்டிருக்கிறேன். இந்தக் கரிசல் மண்ணை நான் ருசித்து ருசித்துத் தின்றதற்கு என் பெற்றோரிடம் எத்தனையோ முறை அடி வாங்கி இருக்கிறேன். இன்றைக்கும் எனக்குத் தெவிட்டவில்லை இந்த மண்.
என் கரிசல் மண்ணின் வாசமெல்லாம் அப்படியே என் எழுத்துக்களில் கொண்டுவந்துவிட வேண்டும் என்பது என்னுடைய தீராத விருப்பம். இந்த மண்ணை நான் அவ்வளவு ஆசையோடு நேசிக்கிறேன்.'
- கி.ராஜநாராயணன்
---------------------------------------------
புத்தகம் : தேர்ந்தெடுத்த கதைகள்
ஆசிரியர் : கி.ராஜநாராயணன்
வெளியிட்டோர் : அன்னம்
வெளியான ஆண்டு : 2007
விலை : ரூ.100
---------------------------------------------
கரிசல் காட்டுக்காரர் கி.ராஜநாராயணனின் தேர்ந்தெடுத்த பதினான்கு சிறுகதைகளைக்கொண்ட தொகுப்பு இப்புத்தகம். கி.ரா.வின் எழுத்து பற்றி எல்லாம் நான் ஒன்றும் பிரஸ்தாபிக்க வேண்டியதில்லை.
இதில் இருக்கிற கதைகள் பல்வேறு கால கட்டங்களில் பல்வேறு பத்திரிகைகளில் வெளி வந்திருக்கின்றன. அடிப்படையில் எல்லாமே கரிசல் மனிதர்களின் வாழ்க்கைப் பின்புலத்தை ஆராயும் விதமாகவே அமைந்திருக்கின்றன. எளிமையான வாழ்க்கையை வாழும் மனிதர்களின் உணர்வுகளைச் சொல்லும் கதைகள் இவை.
பத்தாம் வகுப்பிலோ, பதினொன்றாம் வகுப்பிலோ தமிழ்த் துணைப்பாடத்தில் பாடமாக நான் படித்த 'கதவு' சிறுகதை இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ளது. பத்தாண்டுகளில் நம் வாசகத்தன்மையில் நடந்துள்ள மாற்றம் இது போன்ற கதைகளைப் படிக்கும் போது புரிகிறது.
'திரிபு' என்றொரு சிறுகதை. ஒரு குழந்தையின் மனநிலையில் ஏற்படுகிற மாற்றத்தை ஆராய்கிறது. எப்படி இவரால் இவ்வளவு துல்லியமாக விவரிக்க முடிகிறது என்றொரு ஆச்சரியம் நம்மோடு தொற்றிக்கொள்கிறது.
வயோதிகக் காலத்து நட்பு சொல்லும் பழைய காதல் அனுபவம் பற்றிப் பேசுகிறது 'அரும்பு' என்னும் சிறுகதை. எல்லா மனிதனுக்குள்ளும் இப்படி ஒரு முதல் காதல் அனுபவம் இருக்கத்தான் செய்கிறது என்று யதார்த்தம் சொல்லித் தருகிறார் கி.ரா.
தென் மாவட்ட மக்களின் வாழ்க்கை முறை பற்றித் தெளிவாகச் சொல்கின்றன இந்தக் கதைகள்.
சிவப்புச் சிந்தனைகளைப் பூடகமாக ஆங்காங்கே சொல்லி இருக்கிறார் ஆசிரியர்.
'கரிசல்க்காட்டில் ஒரு சம்சாரி' என்றொரு கதை, சிறுகதை வடிவில் இல்லாமல் ஓர் ஓட்டமாக ஒரு சம்சாரியின் கதையைச் சொல்லிக் கொண்டே போகிறது. இந்த உத்தியே மிகவும் புதுமையாய் இருந்தது.
கி.ரா. வின் தேர்ந்தெடுத்த சிறுகதைகள், என் போன்ற கி.ரா.வை அதிகம் வாசித்திராத வாசகர்களுக்கு இன்னுமொரு படியாக இருக்கும்.
-சேரல்
1 comment:
//
பத்தாண்டுகளில் நம் வாசகத்தன்மையில் நடந்துள்ள மாற்றம் இது போன்ற கதைகளைப் படிக்கும் போது புரிகிறது.
//
ஆம் சேரா.
இதே போல் நான் உணர்ந்தது ஜெயகாந்தனின் “பொம்மை“ யில். ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு படைப்பு நமக்குள் ஏற்படுத்தும் பிம்பம் முற்றிலுமாய் மாறிப்போகிறது என்ற எண்ணமே அதன் மீதான ஈர்ப்பை அதிகப்படுத்துகிறது. யார் கண்டார்.. இன்னும் பத்து ஆண்டுகள் கழி்த்து படிக்கையில் அதே படைப்பு உங்களுள் இன்னொரு உருவம் கொள்ளலாம்.
--
கி.ரா வை இன்னும் படித்ததில்லை. அவரது “கோபல்ல கிராமம்” வாங்கி சில மாதங்கள் ஆகிறது.. கூடிய விரைவில் படிக்கவேண்டும். நல்லதொரு அறிமுகத்திற்கு நன்றி.
Post a Comment