பதிவிடுகிறவர் நண்பர் ஞானசேகர். நன்றி!
- Amnon Rubinstein
When I am weak, how can I compromise? When I am strong, why should I compromise?
- A typical tribal logic
Me and my brother against our cousin. Me, my brother and my cousin against the stranger.
- An Arabic proverb
----------------------------------------------
புத்தகம் : From Beirut to Jerusalem
ஆசிரியர் : Thomas Loren Friedman
பக்கங்கள் : 576
விலை: ரூ.595/-
பதிப்பகம்: Anchor Books
----------------------------------------------

இரண்டு வருடங்களுக்கு முன், இதே தளத்தில் The Lexus and the Olive tree என்ற புத்தகத்தைப் பற்றி எழுதி இருந்தபோது, இப்புத்தகத்தைப் பற்றி குறிப்பிட்டு இருந்தேன். என்னைத் தொடர்ந்து படிப்பவர்களுக்கு அது நினைவிருக்கலாம்.
1979 முதல் ஆறு ஆண்டுகள், லெபனான் உள்நாட்டு யுத்த காலத்தில், மத்திய கிழக்கு நாடுகளில் பயணம் செய்து எழுதப்பட்ட புத்தகம் இது. மத்திய கிழக்கு நாடுகள் அல்லது மேற்காசிய நாடுகள் என்ற அறியப்படும் மூன்று கண்டங்களும், முப்பெரும் மதங்களும் இணையும் நிலப்பரப்பில் நடக்கும் பிரச்சனைகள்தான் இப்புத்தகம்.
வரலாறுகள் எழுதத் தொடங்கப்பட்ட காலத்தில் இருந்தே பிரச்சனைகளுடன் பயணிக்கும் இந்நிலப்பரப்பைப் பற்றி 1882ல் Zionism கொள்கை(உலகெங்கும் சிதறிக் கிடந்த யூதர்கள், தமது பூர்வீகமான இன்றைய இஸ்ரேலை நோக்கிக் குடியேற ஆரம்பித்தல்) அறியப்பட்டதில் இருந்து 1994 வரை சில முக்கிய நிகழ்வுகளைப் பற்றிப் பட்டியல் மட்டும் கொடுத்துவிட்டு, நேரடியாக விசயத்திற்கு வந்துவிடுகிறது இப்புத்தகம்.
சுருக்கமாகச் சொன்னால், இஸ்ரேல் என்ற நாடு எப்படித் தோன்றியதில் இருந்து நடந்த நிகழ்வுகளைக் கூறுகிறது இப்புத்தகம். நிகழ்வுகள் என்றால், நாம் அன்றாடம் செய்தித்தாள்களில் படிக்கும் இஸ்ரேல் - பாலஸ்தீன் - லெபனான் பிரச்சனைகள் அல்ல. அதற்கு பழைய செய்தித்தாள்களே போதுமானவை. ஆசிரியர் பார்த்த, கேள்விப்பட்ட, பேட்டிகண்ட நிகழ்வுகளின் தொகுப்பு. காலவரிசையில் இல்லாமல் இடவரிசையில் சொல்லப்பட்ட புத்தகம்.
ஸெமாக் தெருவின் கைதி, கம்பளக்காரர், திருவாளர் இரண்டு சதவீதம் என்று உள்ளூர் பட்டப்பெயர்களுடன் சில தலைவர்கள் அறிமுகப்படுத்தப்படும் விதமும், சதாம் உசேனின் பெயரில் ஒருபாதியை வானொலியில் அறிவித்து நீக்கியது போன்ற செய்திகளும், அப்பெயர்களின் பின்னணியும் நிச்சயமாக நல்ல தகவல்கள். உலகம் முழுக்க பல பிரச்சனைகள் இருக்க, இஸ்ரேல் பிரச்சனையில் மட்டும் பெரும்பாலான நாடுகள் சுவாரசியம் காட்டுவதை Super Stories என்ற தத்துவத்தை வைத்து விளக்கிய விதமும், மொத்த லெபனான் பிரச்சனையையும் Levantine என்ற ஒற்றை வார்த்தையில் விளக்கிய எளிமையும் ஆசிரியரின் மிகப்பெரிய திறமை.

மத்திய கிழக்கு பிரச்சனைகளுக்கான முப்பெரும் காரணங்களை ஆசிரியர் முன்வைக்கும்போதும், அவர் அனுபவித்த மற்றும் கேள்விப்பட்ட நிகழ்வுகளை வரிசைப்படுத்தி சொன்னபோதும் ஒரு நல்ல புத்தகத்தைத்தான் படிக்கி்றேன் என உணர்ந்தேன்.
வழக்கம்போல் ஆசிரியரின் எழுத்தில் மெல்லிய நகைச்சுவையும் கூடவருகிறது. உதாரணமாக, ஒரு தலைவரின் மனைவியைப்பற்றி சொல்கிறார்:
"இவள் ஒருத்தி போதும்; எந்த ஓர் ஆணும் பெய்ரூட் (Beirut) நகர வாழ்க்கையைச் சகித்துக் கொள்வான்".
ஒவ்வொரு கட்டுரைக்கும் முன்னுரையாக ஒரு செய்தியைச் சொல்வது ஆசிரியரின் வழக்கம் (என்னைப் போலவே). அது பெரும்பாலும் ஒருவர் சொன்ன கருத்தாகவோ, செய்தி ஊடகங்களின் வாசகமாகவோ, நாடக உரையாடல்களாகவோ இருக்கும். இண்டிபதா (Intifada) பற்றி சொல்லும் கட்டுரைக்கு முன்னுரையாக, "ஜெருசலேமுக்கும், டெல் அவிவுக்கும் (Tel Aviv) இடையே கல்லெறியும் தூரம்தான்" என்ற விளம்பரத்தை இஸ்ரேலிய சுற்றுலா வளர்ச்சித்துறை நீக்கிய செய்தியைச் சொல்லுவார். இதுபோன்ற அழகியலும், பரந்த உலக அறிவும், நகைச்சுவையும் புத்தகம் முழுவதும் பரவிக்கிடக்கின்றன.உங்களுக்கு இண்டிபதா பரிட்சயமாக இருந்தால் கண்டிப்பாக நகைத்திருப்பீர்கள்.
உடலுறவு கொள்ளாமல் குழந்தை கேட்கும் தம்பதியரை மேற்கோள்காட்டி, இப்பிரச்சனைகளுக்கு எல்லாம் ஆசிரியர் முன்வைக்கும் தீர்வுகள் ஆழமான சிந்தனைகள். மத்திய கிழக்கின் தலைவன் எப்படி இருக்க வேண்டும் என்ற ஆசிரியரின் வார்த்தைகளை அழுத்தி அடிக்கோடிட்டு வைத்திருக்கி்றேன், புத்தகத்திலும். 2300 வருடங்களுக்கு முன் குடியரசு புத்தகத்தில் பிளேட்டோ சொன்ன அதே மாதிரி தலைவன் தான்; ஆனால் முகத்தில் அடிப்பதுபோல், அவனுக்கு ஒரு மோசமான கெட்டவார்த்தை.
லெபனானையும், இஸ்ரேலையும் இப்புத்தகம் சுற்றிச் சுற்றி வந்தாலும் ஏமன், சிரியா, ஜோர்டான், ஈராக் போன்ற நாடுகளும் கொஞ்சம் எட்டிப் பார்க்கின்றன. உதாரணமாக, யாசர் அராபத் ஜோர்டானில் இருந்து பெண்வேடமிட்டு தப்பிவந்ததற்கு அந்நாட்டின் உள்நாட்டுப் பிரச்னைகள் காரணமாக இருந்ததும், எங்கோ நடக்கும் ரஷ்யப் புரட்சியும், உலகப் போரும் எப்படி பாலஸ்தினத்தைக் குத்திப்பார்த்தன என்பதெல்லாம் காலவரிசை புத்தகங்கள் விளக்குவதில்லை. இந்த இடவரிசை புத்தகம் சொல்கிறது. மொத்தத்தில் இது ஒரு தசாவதாரக் கதை; எல்லாக் கமலகாச நாடுகளையும் புரிந்துகொள்வது படிப்பவரின் ஆர்வத்தைப் பொருத்தது.
காட்டின் அடிப்படை விதிகள்கூட பின்பற்றபடாத ஒரு நகரத்தைப் பற்றி, ஒரு மனித இனத்துக்கு நடுவே ஓர் அந்நியனாக தொலைந்துபோகும் அனுபவம் தரும் ஒரு நாட்டைப் பற்றி,மனிதன் வாழும் உலகின் மத்தியில் நடக்கும் மிகப் பெரிய பிரச்சனைகளை என்னைப்போல் 12 பக்க Indexயையும் சேர்த்து படித்துவிட்டு,மிகப்பெரிய ஒரு புதிரைப் புரிந்துகொண்ட பெருமிதத்தில்,அழும் சுவரில் செல்போன் வைத்து அழும் யூதனுக்காகவும், நாடின்றி அலையும் பாலஸ்தீனனுக்காவும் மனிதன் என்ற முறையில் ஏதாவது செய்வோம்,நம் காலடியில் மிதிபட்டுக் கொண்டிருக்கும் சகதமிழனை நாடேற்றியபிறகு.
"வரலாற்றில் இருந்து நாம் கற்றுக்கொண்டது என்னவென்றால் நாம் வரலாற்றில் இருந்து ஒன்றுமே கற்றுக்கொள்ளவில்லை என்பதுதான்" என்று மதன் சொன்னதுமட்டும் நீடித்தால், நாட்டுக்குநாடு எல்லையில் நின்றுகொண்டு சுவர்கட்டும் வேலையில்தான் எல்லாமனிதர்களும் ஈடுபட வேண்டியிருக்கும்.
பின்குறிப்புகள்:
1) நான் முதலில் சொன்னதுபோல, இப்புத்தகம் பிரச்சனைகளின் ஆரம்பப்புள்ளியில் இருந்தது தொடங்குவதில்லை. இஸ்ரேலில் இருந்துதான் தொடங்குகிறது. நமக்கு எல்லாம் பரவலாக தெரிந்த முனிச் ஒலிம்பிக் படுகொலை பற்றி ஆசிரியர் குறிப்பிட்டதாக ஞாபகம் இல்லை. இரு சகோதரரர்கள் ஆரம்பித்து வைத்த ஆரம்பப்புள்ளி பற்றி ஒரு சூப்பர் புத்தகம் தமிழில் படித்தேன். அடுத்த விமர்சனம் அதுதான்.
2) மற்றபடி ஈரான்,ஈராக்,குவைத்,சவூதி பற்றிப் படிக்க பா.ராகவன் அவர்களின்"ஆயில்ரேகை" கும்மு புத்தகம்.
3) பாலஸ்தீன பிரச்சனை மட்டும் படிக்க என்.சொக்கன் அவர்களின் ஹமாஸ் புத்தகம்.
4) மத்திய கிழக்கைப் பற்றி நான் படித்த புத்தகங்களில் சொல்லப்படாத ஒருவிசயம் உங்களுக்கு மட்டும் சொல்கிறேன். யாருக்கிட்டயும் சொல்லிடாதீங்க. அதுதான் Quartet.
5) இதே பிரச்சனையை மையமாகக் கொண்ட ஒரு புத்தகம் தமிழிலும் உண்டு. நிலமெல்லாம் ரத்தம் - பா.ராகவன் சார். ஒரு சிறு இடைவெளிக்குப் பிறகு படிக்கலாம் என்று இருக்கிறேன்.
6) இப்பதிவே ரொம்ப பெரிதாக போய்விட்டதால், ஆசிரியர் சொன்ன நிகழ்வுகளில் ஒன்றைப் பின்னூட்டத்தில் சொல்கிறேன்.
- ஞானசேகர்
3 comments:
உடனே இந்த புத்தக்த்தை வாங்கிவிடுகிறேன்...
Hi ஞானசேகர்,
I am reading a book called "The Black Swan" written by Nassim Nicholas Taleb.
He starts off with the crisis in Lebanon. He also uses the word "Levanite". I was not able to get much of what he was saying about Lebanon. The book is not about Lebanon - from whatever I have read till now it is about expecting the unexpected and looking beyond the GIF (the Great Intellectual Fraud - the nickname given by author to the bell curve normal distribution).
Seems like this book which you have written about will give more clues about the history and geography about the middle east and western asia.
-Arunram. A
ஆசிரியர் சொன்ன நிகழ்வுகளில் ஒன்று:
டெல் அவிவ் (Tel Aviv) விமான நிலையம். காவலர்கள் ஒரு விமானத்தினுள் நுழைந்து, ஒரு ட்ரான்சிட் (transit) பயணியைக் கீழிறக்குகிறார்கள். விமான ஜன்னல் வழியே மற்றவர்கள் நடப்பதைப் பார்க்கிறார்கள். அப்பயணியின் உடைமைகள் அடையாளம் காணப்பட்டு, ஒவ்வொன்றாகப் பிரித்துப் பார்க்கப்படுகின்றன. கடும் சோதனைகளுக்குப் பிறகு அப்பயணி, விமானத்தினுள் அனுமதிக்கப்படுகிறார். ஒருவருக்காக 45 நிமிடங்கள் தாமதம்.
பயம்கலந்த ஆச்சரியத்துடன் தன்னைப் பார்க்கும் சகபயணிகளைப் பார்த்து அவர் சொல்கிறார்: "நான் குடித்திருக்கவில்லை; யாரையும் வம்புக்கு இழுக்கவில்லை. எனது பிரச்சனை ரொம்ப எளிமையானது; நானொரு பாலஸ்தீனியன்".
ஒரு புத்தகம் சொல்ல மறந்துவிட்டேன். Holy Land, Unholy War - Anton La Guardia
- ஞானசேகர்
Post a Comment