Saturday, June 06, 2009

36. யூதர்கள்

பதிவிடுகிறவர் நண்பர் ஞானசேகர். நன்றி!


எருசலேம் நகர மகளிரே எனக்காக அழ வேண்டாம்; உங்களுக்காகவும் உங்கள் பிள்ளைகளுக்காகவும் அழுங்கள்.
- இயேசு கிறிஸ்து (விவிலியம்)

Israel was probably the most confusing place in the world to do so. It is the place to lost yourself as a Jew.
- Thomas Loren Friedman (From Beirut to Jerusalem)


-------------------------------------------------------------
புத்தகம் : யூதர்கள்
ஆசிரியர் : முகில்
பக்கங்கள் : 260
விலை : 100 ரூபாய்
பதிப்பகம் : கிழக்கு

-------------------------------------------------------------

ஒரு பிரபல கண் மருத்துவமனை. நண்பனின் தந்தைக்குக் கண்ணில் லேசர் சிகிச்சை. 4 மணி நேரங்கள் அங்கேயே இருக்க வேண்டிய நிலைமை. என் வயதொத்த வசீகரமான ஒருத்தி, அதே வராண்டாவில் அமர்ந்திருந்தாள். கிட்டத்தட்ட எங்களின் நிலைமைதான் அவளுக்கும். அப்படிப்பட்ட நிலையிலும் வைத்தகண் திருப்பாமல், வசீகரமான என்னைப் போன்றவர்களைக் கூட பார்க்காமல், கருப்பு அட்டைக்குள் இருந்த வெள்ளைப் பக்கங்களைப் புரட்டிக்கொண்டு இருந்தாள். இப்படித்தான் என்னை முதல் பார்வையிலேயே வசீகரித்தது முகில் அவர்களின் இப்புத்தகம்.
இரண்டே இரவுகளில் படித்து முடித்துவிட்டேன். இப்புத்தகத்தை என் வீட்டில் பார்த்த பக்கத்து வீட்டுப்பெண் சொன்னாள், அவளது கல்லூரியில் ஒரு சுற்றுசுற்றிய புத்தகம் என்று; குறிப்பாக கிறிஸ்த மாணவர்கள். உண்மைதான். உலகம் நமக்கு எத்தனையோ விசயங்களைச் சொன்னாலும், நாம் எல்லாவற்றிலும் சுவாரசியம் காட்டுவதில்லை. நமக்குள் இருக்கும் அந்த மிக நுண்ணிய வடிகட்டியைத்தான் Super Stories என்று எனது முந்தைய புத்தக அறிமுகத்தில் சொல்லி இருந்தேன்.

அப்படி ஒரு வடிகட்டிதான் என்னையும் இழுத்தது.
5000 வருட யூதர்களின் சரித்திரத்தை நுட்பமாக கால வரிசையில் விளக்கும் புத்தகம். முதலில் யூதர்கள் என்றால் யார்? அவர்களுக்கும் கிறிஸ்தவ மற்றும் இஸ்லாம் சகோதரர்களுக்கும் என்னதான் பிரச்சனை? முப்பெரும் கண்டங்களும் சந்திக்கும்
- மனிதர் வாழும் பூமியின் மையமாகக கருதப்படும் - முப்பெரும் மதங்கள் தோன்றிய - மனித இனத்தின் மிகப் பெரிய போர் (சுமார் 150 ஆண்டுகள்) நடக்க காரணமான - எங்கேயோ இருக்கும் இந்த சேகர் ஆண்சிசுக்கொலை என்று கவிதை படைக்க காரணமான எருசலேம் எப்ப எப்ப மற்றும் இப்ப யாருக்குச் சொந்தம்? படித்துப் பாருங்கள்.

யூதேயா, எரிக்கோ என்ற இடங்கள் பொதுவான விவிலிய வார்த்தைகள். இதுபோன்ற விவிலிய இடங்கள் பற்றிய வரைபடம் தேடி நான் 10 வருடங்களுக்கு முன்பு அலைந்தேன். 50 ஆண்டுகள் முந்திய விவிலியம் ஒன்று கிடைத்தது. அதில் இருந்த வரைபடங்களும், மக்களின் புகைப்படங்களும் இப்புத்தகம் படித்து முடித்ததும் கொஞ்சம் வித்தியாசமாகவும், தெளிவாகவும் தெரிந்தன.

அரபு நாடுகளுக்கு இடையே சம்மந்தமில்லாமல் ஒட்டிகொண்டிருக்கும் உலகின் ஒரே யூத நாடான இஸ்ரேல் தோன்றிய விதம் பரிட்சயமில்லாதவர்கள் கண்டிப்பாக இப்புத்தகம் படியுங்கள். தேசம் பிறந்த முதல் நாளே யுத்தம். இன்றைய உலகின் மூன்றாவது மிகப்பெரிய உளவுத்துறை. ஆணுறை அசிங்கம். இன்றுவரை ஒருவருக்கு மட்டுமே மரணதண்டனை. 2000 வருடங்களாக இடிந்துபோன கோவிலின் ஒற்றைச் சுவருடன் அழுதுவரும் மக்கள்.

Green House Effet வைத்து விவசாயம் செய்ய ஆரம்பித்த புத்திசாலித்தனம். என்றோ ஒருநாள் இறைத்தூதர் வருவார் என எப்போதும் காத்துக்கொண்டிருக்கும் மக்கள். இஸ்ரேல் நாடு, யூத மதம், யூத மக்கள், ஹீப்ரு மொழி என்று பிரித்துப் பார்க்கமுடியாத ஒரு நிலப்பரப்பு.

இந்தியாவுக்கு அடுத்தபடியாக இஸ்ரேலின் ஆட்சியாளர்களின் வரிசையும், நிகழ்வுகளும் இப்ப எனக்கு அத்துப்பிடி. கொஞ்சம் அமெரிக்காவும்.

ஒலிம்பிக் படுகொலைகள் பற்றி இந்தப் புத்தகமும் சொல்லாததில் ஒரு சிறுவருத்தம். Lorry Collins இன்னொருவருடன் எழுதிய O Jerusalem புத்தகம் பற்றித் தெரிந்தவர்கள் சொல்லவும்.
ஒரு தமிழ் திரைப்படத்கின் பாடல்வரி இப்படி: "ஹிட்லர் பேத்தியே, காதல் ஒன்றும் யூதன் இல்லை கொல்லாதே". ஓரினத்தின் வலியைத் வள்ளுவனின் தமிழன் கூடவா உதாசீனப்படுத்துகிறான்?

- ஞானசேகர்

No comments: