Wednesday, September 02, 2009

44. தமிழகத் தடங்கள்

பதிவிடுகிறவர்கள் சேகரும், சேரலும்

Know the past to divine the future

--------------------------------------------------------------
புத்தகம்: தமிழகத் தடங்கள் (முதல் தொகுதி)
ஆசிரியர்: மணா
பதிப்பகம்: உயிர்மை
விலை: 90 ரூபாய்
பக்கங்கள்: 144

--------------------------------------------------------------



"அலைச்சலில் ருசியிருந்தால் அது லேசில் அலுப்பதில்லை". தூரத்தை வகுத்து, களைப்பைக் கழித்து, தீவிரத்தைப் பெருக்கி, இன்னோர் அலைச்சலைக் கூட்டித் தந்து போகிறது ஒவ்வொரு அலைச்சலும். அழகும், தொன்மையும், முதுமையின் சாயலும் படர்த்திருக்கும் தமிழக இடங்களை அலைந்து தேடிப்போய் எழுதி, புத்தகப்படுத்தி இருக்கிறார் ஆசிரியர். மொத்தம் 40 இடங்கள். மேற்கோளாகச் சிற்சில இடங்களும் கூட.

1300 வருடங்களுக்கு முன் மதத்தின் பெயரால், திருஞானசம்பந்தர் முன்னிலையில், 'பெரிய புராண'க் கணக்கின்படி 8000 பேர் கழுவேற்றிக் கொல்லப்பட்ட சாமநத்தம் என்ற ஊர்தான் இந்நூலின் முதல் அறிமுகம். மதுரை பெரியார் பேருந்து நிலையத்தில் இருந்து சுமார் 5கி.மீ. தூரத்தில் இருக்கும் இவ்விடம், சாம்பல்நத்தம் என்பதில் இருந்து மருவி சாமநத்தமானதாக ஆசிரியர் கூறுகிறார். நானும் அவ்வூர் சென்று பார்த்தேன். கழுவேற்றப்பட்டதாக் சொல்லப்பட்ட இடத்தில் திருஞானசம்பந்தருக்கு ஒரு கோவில் உள்ளது. சமணநத்தம் என்பதுதான் மருவி இப்போதைய பெயர் பெற்றதாக ஊர்மக்களில் சிலர் கூறினர்.

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் வைக்கப்பட்டுள்ள சமணர்கள் கழுவேற்றப்பட்ட காட்சி; ஆசிரியர் சொன்னபடி 'சைவக் கோவிலில் அசைவம்'.

சாமநத்தத்திற்குச் சமயம் என்றால், குமரி மாவட்ட தாலியறுத்தான் சந்தை, நெல்லை கிளாரிந்தா சர்ச், நாகையில் கீழ்வெம்மணி என்று சாதியால் புறக்கணிப்பட்ட வரலாற்று இடங்களையும் சொல்கிறார். சென்னை யுத்தக்கல்லறை, நெல்லையில் ஆஷ்துரையின் கல்லறை, வா.உ.சி. இழுத்த செக்கு, மதுரை காந்தி மியூஸியம் போன்ற சுதந்திரப் போராட்ட சம்மந்தப்பட்ட இடங்களும் உண்டு. 'தமிழ் நாடு' என்று சொல்லப்படும் நிலப்பரப்பில் வாழும் நம்மில் பலருக்கு விருதுநகர் தேசபந்து மைதானம் தெரியாமல் இருப்பதை ஆசிரியர் சுட்டிக்காட்டியபோது, கொஞ்சம் குத்தியது.

மத ஒற்றுமையை வலியுறுத்தும், மதுரை சம்மட்டிபுரம் மருதநாயம் தர்ஹா, காதலைப் பறைசாற்றும் எம்.ஆர்.ராதாவின் காதல் சின்னம் இன்னும் பல இடங்களைப் புத்தகம் முழுவதும் தூவியிருக்கிறார் ஆசிரியர். அலைந்து, அவற்றைப் பொறுக்கி, அடுக்கி, தத்தம் அணிகலன்களில் சேர்த்து அழகுபடுத்திக் கொள்வது அவரவரின் ஈடுபாட்டையும், ஆர்வத்தையும் பொருத்தது. இப்புத்தகம் சம்மந்தமான எனது அலைச்சல்கள் உங்களுக்காக:

அ) படிப்பதற்கு முன்

1) தஞ்சை சரஸ்வதி மஹால்
2) வீரபாண்டிய கட்டபொம்மன் இறந்த கயத்தாறு
3) நெல்லை சுல்லோச்சனா முதலியார் பாலம்

ஆ) படித்தபின் இதுவரை

1) சாமநத்தம்
2) மதுரை காந்தி மியூஸியம் (இது குறித்த பதிவு இங்கே..)



இ) இனிமேல்

1) ஆவுடையார் கோவில் - பலருக்குப் பரிட்சயமில்லாத இவ்வூர், என் வாழ்நாளில் ஒரு குறிப்பிட்ட பகுதியை ஆக்கிரமித்திருந்தது. இரால் வாங்கவும், அலைவராத கடல் பார்க்கவும், கோயிலுக்குப் போகும்போது பஸ் மாறும் இடமாகவும் இதுவரை உபயோகப்படுத்தி இருந்தேன். ஆவுடையார் கோவிலின் சைவக்கோயிலின் மூலைமுடுக்கெல்லாம் இருட்டுக்குள் அலைந்திருக்கிறேன். அப்போது பயப்பட வைக்காத இருட்டு, இப்போது உலுக்கிவிட்டது. மதுரையின் கழுவேற்றத்தின் சாட்சிகள் இக்கோவிலும் இருக்கிறதென்கிறார் ஆசிரியர்.ஓர் ஆட்டோகிராப் பதிவில் விரிவாக என்னுடைய தளத்தில் சந்திக்கிறேன்.

2) சென்னை யுத்தக் கல்லறை - ஏர்போர்ட், சென்ட்ரல், கோயம்பேடு, தாம்பரம், மெரீனா பீச், அப்பல்லோ மருத்துவமனை. சென்னையைப் பற்றிய என்னுடைய அதிகபட்ச பொது அறிவு இதுதான் என்றாலும், நினைக்கும் இடங்களுக்குப் பைக்கில் கூட்டிச்செல்ல ஒரு வெள்ளைக்காரனை அடிமையாக வைத்திருக்கிறேன். அதனால் வெகுசீக்கிரம் பார்த்துவிடுவேன்.

3) வ.உ.சி. இழுத்த செக்கு - கோவை உக்கடம் பஸ் நிலையத்தில் இருந்து, மத்திய சிறையை நாங்கள் விசாரித்தோம். அவர்கள் பார்த்த பார்வையும், எங்களின் இறுக்கமான பயணத்திட்டத்தில் கையைக்கடித்த நேரமின்மையும் எங்களை அதிவிரைவுப் பேருத்தில் ஏற்றிவிட்டு, ஈரோட்டிற்குப் போகச் சொன்னது. பெரியாரின் வீட்டைப் பார்க்க வேண்டி, வ.உ.சி,யின் செக்கைத் தவிர்த்தோம். அடுத்த முறை கோவை வரும்போது முதலில் பார்க்கப் போகும் இடம்.

4) கீழ்வெம்மணி - எனது நண்பன் கல்வெட்டு பிரேம்குமார் அறிமுகப்படுத்திய இடம். சம்பவம் நடந்த தேதி அன்றே பார்க்க வேண்டும் என்று 2005ம் ஆண்டு முடிவெடுத்தது. இதுவரை முடியவில்லை. ஜெயா அல்லது விஜய் டிவி செய்திகளில் அன்று பார்ப்பதோடு சரி. வரப்போகும் சமீபத்திய வருடங்களிலும் காலம் என்னை அனுமதிக்காதென்று எனக்கு நிச்சமாகத் தெரியும். கண்டிப்பாக பார்ப்பேன், மனித வாழ்க்கையின் நீளம் அதிகம்!

புத்தகத்தின் பெயரிலேயே இதை முதல் தொகுதி என்றுதான் ஆசிரியர் சொல்லியிருக்கிறார். நாங்கள் பார்த்த சில இடங்கள், முதல் தொகுதியில் இல்லை. அதுபோன்ற இடங்களை அடுத்தடுத்த தொகுதிகளுக்காக ஆசிரியருக்குப் பரித்துரைக்கலாம் என்று இருக்கிறோம். உங்கள் கருத்துகளை / இடங்களை எங்களுக்கு நீங்கள் பின்னூட்டத்தில் தெரிவிக்கலாம்.

-சேகர்
(http://jssekar.blogspot.com/)


பயணங்கள் அலாதியானவை. இலக்கற்று அலையவேண்டும் என்று துவங்குகிற பயணங்களும், சொல்லி வைத்தது போல் சில இலக்குகளைச் சென்றடைவதைத் தவிர்க்கமுடிவதில்லை. இலக்குகள் அர்த்தமுள்ளவையாக இருக்கும் அளவில் மகிழ்ச்சியே. மணாவின் இந்தப் புத்தகம் அறிமுகப்படுத்தும் இடங்கள் தமிழகத்தில் பார்க்கவேண்டிய இடங்களாக யாருடைய பட்டியலிலும் இல்லாத இடங்களாகவே தோன்றுகின்றன. இந்த இடங்களைச் சுற்றுவதில் பெரிதாக என்ன கிடைத்துவிடப்போகிறது என்ற கேள்விக்கான பதிலை கேள்வி கேட்பவர்களின் சிந்தனைக்கே விட்டுவிடுவோம். கேள்வி கேட்பவர்களுக்கு, பதில் சொல்லியும் விளங்கப்போவதில்லை என்பதை அனுபவம் உணர்த்தியிருக்கிறது. பாரதியின் கவிதை படித்த போது, 'கஞ்சா குடிப்பவனின் எழுத்தையா படிக்கிறீர்கள்?' என்று கேட்ட ஒரு தமிழனைப் பற்றி நண்பன் சேகர் என்னிடம் சொன்னபோது, சத்தியமாய் நான் நொந்துபோனேன். இந்த வியாக்கியானத்தைக் கொஞ்சம் ஓரமாக வைப்போம்.

ஓர் இனம் எப்படி இருந்தது என்பதை உணர்ந்தவர்களே, அது எப்படி இருக்க வேண்டும் என்று முடிவு செய்யும் ஆற்றல் படைத்தவர்களாகிறார்கள். தமிழினத்தின் நேற்றுகள் எப்படி இருந்தன என்பதற்கான சிற்சில ஆதாரங்களை இன்னும் சுமந்து கொண்டிருக்கும் இடங்களைக் குறித்த கட்டுரைகளாக இப்புத்தகத்தை வடித்திருக்கிறார் மணா. இப்புத்தகத்தை அறிமுகப்படுத்தியதோடு எனக்கு வாங்கியும் கொடுத்தவன் நண்பன் சேகர். புத்தகம் கைக்கு வந்ததும் நான் செய்த முதல் செயல், இதில் இருக்கும் இடங்களில் எத்தனை இடங்களை நான் ஏற்கனவே கண்டிருக்கிறேன், எத்தனை இடங்களைப் பற்றி கேள்வியேனும் பட்டிருக்கிறேன் என்பதுதான். முதல் கேள்விக்கு ஏதோ ஓர் ஒற்றை இலக்க எண்ணும், இரண்டாவது கேள்விக்கு இருபதுக்குள்ளான ஏதோ ஒரு எண்ணும் கிடைத்ததாக இப்போது நினைவு.

சுலோச்சனா முதலியார் பாலமும், தஞ்சையிலிருந்து ஒரு வெள்ளைக்காரரால் உடன்கட்டை ஏறுவதிலிருந்து காப்பாற்றப்ப்ட்டு பின் கிறித்தவ மதத்தில் சேர்ந்த ஒரு பெண் கட்டிய கிளாரிந்தா சர்ச்சும் உருவான கதைகளை இன்னும் நான் சிலாகித்துச் சொல்லிக்கொண்டிருக்கிறேன். இன்னும் கூடச் சொல்வேன்.

கயத்தாறு கண்ட பயணம் குறித்த பதிவு இங்கே....

ஊமைத்துரை அடைத்துவைக்கப்பட்ட சிறைச்சாலையை வெளியிலிருந்து மட்டும் பார்க்கும் வாய்ப்பு ஒரு முறை கிடைத்தது. அடுத்த மாதத்தில் திட்டமிட்டிருக்கும் திருநெல்வேலி வட்டாரப் பயணத்தில் இந்த இடத்தைச் சென்று பார்த்துவிடவேண்டும்.

சரஸ்வதி மஹாலை எந்த விதத்தில் சேர்ப்பதென்று தெரியவில்லை. அக வாழ்வில் நெறியற்ற வாழ்வு வாழ்ந்த ஒரு மன்னனின் புற அறிவுக்களஞ்சியமாக இன்றும் இருக்கிறது இந்நூலகம். பல மொழிகளில் பல துறைகள் பற்றிய புத்தகங்களைப் பத்திரப்படுத்தியிருக்கிறார்கள்.

கீழவெண்மணி, சாதீய வன்முறையின் வெளிப்பாடாக மட்டுமில்லாமல், பொருளாதார அடிப்படையில் பின்தங்கியவர்களின் அவலத்துக்கு இன்னும் ஒரு உதாரணமாக இன்னுமிருகிறது. நான் பிறந்து வளர்ந்த கிராமத்திலிருந்து சுமார் 15 கி.மீ தூரத்தில் இருக்கும் இந்த ஊரின் சரித்திரத்தை நான் தெரிந்துகொள்ள 18 வருடங்கள் ஆனது. 'வெண்மணி தியாகிகள் நினைவு வளைவு' என்கிற நினைவுச்சின்னத்தைப் பார்த்த பிறகுதான் இது குறித்த ஆர்வம் மேலிட, கொஞ்சம் செவி வழியிலும், புத்தகங்கள் மூலமும் சரித்திரம் படிக்கத் தொடங்கினேன். கூலி உயர்த்திக்கேட்டதற்காக சுமார் 42 மனிதர்களை ஒரே ராத்திரியில் ஒரு வீட்டில் வைத்து எரித்த கொடூரம் இங்கே நிகழ்ந்திருக்கிறது. இன்றும் இந்த ஊரின் வழி கடந்து செல்லும்போது, வயிற்றைப் பிசையும் உணர்வு ஏற்படும். இதை நேரில் பார்த்த, அந்த நாளை வாழ்ந்த மனிதர்கள் இன்னும் கூட உயிரோடிருப்பார்கள். அவர்களின் நினைவுகளில் அந்த இரவின் கருமை இன்னும் படர்ந்து கிடக்கக்கூடும்.

பின்குறிப்பு :

கீழ வெண்மணி சம்பவத்தை அடிப்படியாக வைத்து எழுத்தாளர் இந்திரா பார்த்தசாரதி எழுதி, சாகித்ய அகாடமி விருது பெற்ற 'குருதிப்புனல்' நாவல் இன்று காலை நண்பன் ஒருவனிடமிருந்து தற்செயலாகக் கிடைத்தது (என்ன மாதிரி design இது?). இன்னும் சில தினங்களில் அதை வாசித்து அது பற்றிய பதிவோடு வருகிறேன்.

-சேரல்
(http://seralathan.blogspot.com/)

No comments: