Monday, August 10, 2009

43. பாலகாண்டம்

சிறுகதைப் போட்டியில் வெற்றி பெற்ற உற்சாகத்தோடு புத்தகம் வலைப்பூவில் தான் வாசித்த நூலைப் பற்றிய பார்வையைப் பதிவு செய்கிறான் அன்புத்தம்பி ரெஜோ. அவனுக்கு எங்கள் நன்றிகள்!

------------------------------------------
புத்தகம் : பாலகாண்டம்
ஆசிரியர் : நா முத்துக்குமார்
பக்கங்கள் : 55
பதிப்பகம் :உயிர்மை
முதல் பதிப்பு : டிசம்பர் 2005
விலை : ரூ 40

------------------------------------------

முன்புக்கும் முன்பு , உறைந்து போன பனிப் பிரதேசத்தினுள் , தீரா உறக்கத்திலிருக்கும் ஒரு பறவையின் சிறகைப் போல , பால்யம் ஒவ்வொருவரின் நினைவடுக்குகளிலும் ஏதோ ஒரு இருண்ட மூலையில் ஒளிந்து கிடக்கிறது . தொலைக்கப்பட்ட சிறகினை நினைவுபடுத்தும் ஏதேனும் சந்திக்கப் பட நேர்கையில் எல்லாம் , காற்றினால் களவாடப்பட்டுக் கொண்டிருக்கும் மெழுகின் வெளிச்சம் போல பட படக்கிறது மனது; கசிகின்றன கண்கள்.

பால்யம் ஒரு தங்க நிற மீனைப் போல... புதையல் தேடி கடற்கரையிலேயே அலைவுற்றிருக்கும் நம்மிடம் நெருங்குவது போல் விலகி போக்குக் காட்டியபடியிருக்கிறது. அவ்வப்போது அலைகளிடம் சொல்லிக் கால் நனைக்கச் செய்தாலும், நமக்கும் பால்யத்திற்கும் இடையே திறக்கப் பட முடியாத மெல்லிய கதவொன்று குறுக்கே தடுத்துக் கொண்டே நிற்கிறது .சாவியினைப் பற்றிய குறிப்புகள் என்னிடம் இல்லையெனினும், மாற்றுச் சாவியாக இந்தப் புத்தகம் இருக்கக் கூடும் என நிச்சயமாகச் சொல்ல முடியும்.

நா.முத்துக் குமாரின் பாலகாண்டம். கவித்துவமான வரிகளுக்குச் சொந்தக்காரர். சங்கப் பாடல்களுக்கு முலாம் பூசி நவீனத்திற்குள் புகுத்த முடிகிற வித்தைக்காரர்.

புத்தகத்தின் முன்னட்டையில் எட்டிப் பார்க்கும் குழந்தையிடமிருந்து துவங்குகிறது நமக்கும் இறந்த காலத்திற்குமான ஒரு துவந்த யுத்தம். இறங்கலாமா வேண்டாமா என யோசித்திருக்கையிலேயே, வெகு தூரம் நம் கைகளைப் பற்றி பால்யத்தின் மீட்க முடியாச் சுழலில் இறக்கி விட்டு விடுகிறார் ஆசிரியர்.

சரியாக எப்பொழுது துவங்குகிறது நம் பால்யம். நம் நினைவு தெரிந்த நாட்களிலிருந்து, அந்நாட்களை மறக்கத் துவங்கும் நாள் வரை என வைத்துக் கொள்ளலாமா...

காரை பெயர்ந்திருக்கும் அடுப்பறைச் சுவர்களில் வடிந்தபடி அமைதியாக இருக்கும் புகை பேசும் அம்மாவின் கண்ணீரை உங்களால் உணர்ந்து கொள்ள முடியுமா? மீசை அரும்பும் வயதில், ஏன் அழுகிறாள் என்றே தெரியாமல் திருமணமாகிச் சென்ற அக்காவை நினைவிருக்கிறதா??

அடுத்த தெருவில் இருக்கும் பக்கத்து வீட்டு அக்காவின் காதலனுக்குக் கடிதம் எடுத்துச் செல்கையில், இரு வீட்டுச் சுவர்களுக்கிடையில் இருக்கும் மறைவில், கால்சட்டைப் பையிலிருக்கும் கனத்தால் வெகுநேரம் சிறுநீர் கழித்தது நினைவிருக்கிறதா??

ஞாயிறு சந்தையில் பள்ளித் தோழியுடன் பேசியதைப் பார்த்து முறைத்த பெரிய மீசை வைத்த தலைமை ஆசிரியரை??? கவச குண்டலத்திற்குப் பதில், விளா மரத்தின் குச்சியுடன் பிறந்து தொலைத்து, கொடுத்தே பழக்கப் பட்ட நவ யுகக் கர்ணன் கணக்கு வாத்தியார்?? தாய் மானின் நிழலில் படுத்துறங்கும் கன்றின் ஓவியம் தாங்கிய பக்கத்தை??? கன்றுக்காக மகனைத் தேரேற்றி விட்டு, அதைத் தேர்வில் தவறாக எழுதி நாம் அடி வாங்குகையில் நீதி சொல்லத் தவறிய மனு நீதிச் சோழனின் மணியை??? நினைவிருக்கிறதா??

நாம் எளிதில் உதிர்த்து விட்டுக் கடந்து வந்து விட்ட நினைவுகளை எல்லாம், முத்துக் குமார் அழகான வார்த்தைகளில் சிறை வைத்திருக்கிறார்.

(a+b)^2 = a^2+b^2+2ab என்பது போன்ற தலைப்புகள் ஏற்படுத்தும் அதிர்வுகளே , அடங்குவதற்கு வெகு நேரம் பிடிக்கின்றன. இரண்டாம் தொப்புள் கொடி, நிலா மிதக்கும் பள்ளங்கள், கடவுளைக் கண்ட இடங்கள் எல்லாமே அடுத்தக் கட்டுரைக்குச் செல்வதற்கு முன் கொஞ்சம் மௌனங்களை நிச்சயமாய்ப் பரிசளிக்கக் கூடியவைகள்.

ஒவ்வொரு வரியும், வானில் வெடித்துச் சிதறுகின்றது, சில நொடி வாழ்கின்ற நட்சத்திர மத்தாப்புகளாய். அதன் பிறகான வெறுமையான இருண்ட வானில் தான் ஒளிந்து கிடக்கின்றன பால்யத்திற்கும் நமக்குமான ரகசிய சூத்திரங்கள்.

ஜாக்கிரதை. மீள விரும்பாத அழகிய கனவொன்றினுள் பிரவேசிக்கப் போகிறீர்கள். கறைபடிந்த புகைப்படங்களும், கொஞ்சம் வெது வெதுப்பான கண்ணீரும் கூடவே இருக்கட்டும்.

- ரெஜோ
(http://www.rejovasan.com/)

No comments: