Monday, August 03, 2009

42. மணற்கேணி

பதிவிடுகிறவர் நண்பர் ஞானசேகர். நன்றி!

மேற்கொண்டு பாதையைப் பார்க்கவியலாதபடி இருள்கிறது. ஆனாலும், வீடு சேர்ந்துவிடுவேன். என் குதிரை இவ்வழியே வந்திருக்கிறது இதற்கு முன்பே.

------------------------------------------------
புத்தகம்: மணற்கேணி
ஆசிரியர்: யுவன் சந்திரசேகர்
பதிப்பகம்: உயிர்மை
வெளியான ஆண்டு: 2008
பக்கங்கள்: 311
விலை: ரூ.180

------------------------------------------------

நண்பன் இப்புத்தகத்தைப் பரிந்துரை செய்தபோது, நான் அப்போது படித்துக்கொண்டிருந்த சீரியசான புத்தகங்களும், சில நாவல்கள் தந்திருந்த கசப்பான அனுபவமும், கதையெல்லாம் படிக்கும் மனநிலையில் இல்லாமல் இருந்தாலும் வேண்டா வெறுப்போடு பக்கங்களைப் புரட்டினேன். எல்லாக் கதைகளும் அதிகபட்சம் மூன்று பக்கங்களுக்குள் எழுதப்பட்டவை. படித்துப் பார்த்த சில வரிகளில் வார்த்தைகள் படு படு படு சிக்கனம். பில் போட்டாச்சு.



கிருஷ்ணன் என்ற கதாபாத்திரத்தின் தனிப்பட்ட அனுவங்கள் என்று பல்வேறு விதமான சந்தர்ப்பங்களை 100 குறுங்கதைகள் வடிவில் தொகுக்கப்பட்ட புத்தகம். எல்லாக் கதைகளும் ஒரே பாத்திரத்தின் கதையம்சமற்ற நினைவலைகள் என்பதாலும், சுயசரிதை சாயலும், ஒரே களமும், திரும்பத் திரும்ப வரும் கதாபாத்திரங்களும், சொல்லும் முறையில் ஒரு பொது அடையாளம் இசைந்திருப்பதாலும் நாவல் போன்றதொரு தோற்றம் தந்தாலும், இவையெல்லாம் உதிரிக்கதைகள்தாம் என ஆசிரியரே சொல்கிறார்.

ஒரேவாரம்தான் எடுத்துக் கொண்டேன். கதைகளைக் காலவரிசையில் சொல்லாததற்கும், வார்த்தைகளைச் சிக்கனப்படுத்தி முடிவுபத்தியை அடிக்கடி புரட்டிப் பார்க்க தூண்டாததற்கும், களங்களைக் கதைகளில் வித்தியாசப்படுத்தியதற்கும் ஆசிரியரின் கதைசொல்லும் யுத்தியைப் பாராட்டியாக வேண்டும். இனி சில சோற்றுப் பதம் சொல்கிறேன்.

வீட்டின் மூலையில் இருக்கும் ஒரு மேசைக்கடியில் ஒளிந்திருந்தபோது, நடைமுறை வாழ்வில் நெருக்கடிகளை சந்திக்க நேர்ந்த போதெல்லாம் தப்பிக்க உதவிவரும் அபூர்வ மார்க்கம் ஒன்றைக் கிருஷ்ணன் கண்டுபிடித்தாக வரும் ஆறாவது கதைதான் எனது முதல் விருப்பம். பின்வாங்கி வெளியேறும் ஒரு சின்ன விசயத்தைச் சோகத்துடன் ஆரம்பித்து, வார்த்தைகளுக்குள் நகைச்சுவையை ஒளித்துவைத்து முடித்தவிதம் அருமை. பென்சில் எடுத்துக் கொண்டேன்.

டிராக்டர் அறிமுகத்தில் தற்கொலை செய்யும் விவசாயி, உயிரோடு இருக்கும்போது வம்சச்சனியன் என்றும் செத்தபிறகு வம்சதெய்வம் என்றும் சொல்லும் ஒரு பாட்டி, ஆண்மையில்லாதன் என்று புருஷனை அறிவித்துவிட்டு மூன்றுமாதக் கர்ப்பத்துடன் ஓடிப்போகும் ஒரு பெண்ணின் கதை.

நான் பொதுவாக யாருக்கும் பிறந்தநாள் வாழ்த்து சொல்வதில்லை. அதே சாரத்தில் அமைந்த ஒருகதை. கணவனின் நண்பனால் பாலியல் பலாத்காரம் செய்யப்படும் பெண்ணைப் பற்றி கிருஷ்ணன் ஒரு கதை எழுதி, அதை ஒரு பெண் அவர் மேசையில் விட்டெறிய, ஒரு அழகான வாசகியை வெறும் காசாளராக்கிய குற்ற உணர்வுடன் தலைகுனியும்போது, எனது நண்பன் பிரேம்குமாரின் கவிதை 'விபச்சாரம்' என்ற வார்த்தையால் புறக்கணிக்கப்பட்டது ஞாபகம் வந்தது.

'தங்கச்சிப் பூ' - இப்படி ஒரு திரைப்படம் உண்மையிலேயெ வந்ததா என என் நண்பனைத் தேட சொல்லி இருக்கிறேன். 'மகாராஜா என்று வந்ததுக்கப்பறம் பெற்ற மகன் சிறையிலடைப்பது சகஜம்தானே' என்று கதையோடு சேர்ந்துவரும் வாக்கியங்கள் அருமை.

ஒரு வளர்ந்த ஆண்மகன் தாயின் மார்ச்சதை தொடும்போது இருவருக்கும் ஏற்படும் உணர்வுகளை அற்புதமாக எழுதியிருப்பார் ஆசிரியர். அக்கதை முடிந்தவுடன் இயல்புநிலை திரும்ப நீண்டநேரம் ஆனது. இருதய நோய் உள்ள தாயுடைய பெரும்பாலானவர்களுக்கு இவ்வனுபவம் இருக்கலாம்.

ஆறேழு மாதங்கள் சகஜமாகக் கூடத் தொட்டுப்பழகாத தம்பதியர் பிரிய முடிவெடுத்து, கடைசி இரவில் அவசரவசரமாக உடலுறவு கொள்ளும்போது, கல்கத்தாவிற்கு சமரசம் செய்யப்போன அப்பெண்ணின் சகோதர முறைகொண்ட கிருஷ்ணன் அமைதியாக இருப்பார். கிருஷ்ணனின் மனநிலையை உள்வாங்க முடியவில்லை!

பெரும்பாலும் சோகங்களையும், சாதாரணப் பார்வைக்கு எளிதாகத் தப்பிவிடும் சின்னஞ்சிறு நிகழ்வுகளையும் கொண்ட இப்புத்தகத்தைத் 'தங்கச்சி பூ', 'தாயின் மார்ச்சதை' இந்த இரண்டு கதைகளுக்காகவாவது கண்டிப்பாகப் படிக்கலாம்.

- ஞானசேகர்
(http://jssekar.blogspot.com/)

No comments: