Wednesday, October 21, 2009

49. குருதிப்புனல்

----------------------------------------------------------
புத்தகம் : குருதிப்புனல்
ஆசிரியர் : இந்திரா பார்த்தசாரதி
வெளியீடு : கிழக்கு பதிப்பகம்
வெளியான ஆண்டு : 1975
கிழக்கு பதிப்பகம் வெளியிட்ட ஆண்டு : 2005
விலை : ரூ 90
பக்கங்கள் : 237

----------------------------------------------------------

எதேச்சையாக நண்பன் ஒருவனிடமிருந்து இரவலாகக் கிடைத்தது குருதிப்புனல் புதினம். இது சாகித்திய அகாடமி விருது பெற்ற நூல்; கிட்டத்தட்ட அனைத்து இந்திய மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.

இந்திரா பார்த்தசாரதியின் எழுத்துகளை நான் இதற்கு முன் வாசித்ததில்லை. இந்த ஒரு புதினத்தை மட்டும் அடிப்படையாகக் கொண்டு இவரைப் பற்றிய கருத்தைச் சொல்வது எத்தனை சரியாக இருக்குமெனத் தெரியவில்லை. அனாயாசமான எழுத்தோட்டம் இப்புதினத்தில் இருக்கிறது. இ.பா.ஒரு தேர்ந்த கம்யூனிச வாதி என்ற எண்ணம் மேலெழுகிறது. இந்தப் புதினம் கம்யூனிசப் பின்புலத்தில் அமைந்ததால் கூட அப்படி இருக்கலாம். யதார்த்த நிகழ்வுகளை வைத்து, தர்க்க வாதங்களை நிகழ்த்தி, பல தத்துவார்த்தங்களையும் பேசுகிறது இப்புதினம்.



முதலில் புதினத்தின் பின்புலத்தைப் பற்றிக் கொஞ்சம் பார்ப்போம். 1968ஆம் வருடம் டிசம்பர் மாதம் 25ஆம் தேதி அப்பொழுதைய தஞ்சை மாவட்டத்தில் (இப்போது நாகப்பட்டினம் மாவட்டம்) கீழ்வேளூர் வட்டத்தில் கீழ வெண்மணி என்ற கிராமத்தில் கூலி உயர்வு கேட்ட தொழிலாளர்களின் மீது அடக்குமுறையை கையாண்ட நிலக்கிழார்கள், அதன் ஒரு படியாக குடிசைக்குள் தஞ்சம் புகுந்திருந்த பெண்களையும், குழந்தைகளையும் எரித்துக் கொன்றனர்.

இச்சம்பவம் சர்வதேச அரங்கில் சர்ச்சையைக் கிளப்பியது. கம்யூனிச நாடுகள் இதைக் கண்டித்து அனைவரின் கவனத்துக்குக் கொண்டுவந்தன. திராவிட முன்னேற்றக் கழகம் முதன் முறையாக ஆட்சியைப் பிடித்து, அண்ணா முதல்வராக இருந்த காலமது. விசாரணைக் கமிஷன், வழக்கு, போராட்டம் எனத்தொடர்ந்த இச்சம்பவத்தின் விளைவுகள் இன்னும் சில உயிர்களைப் பலிவாங்கிப் பின் ஒன்றுமில்லாமல் போயின.

இச்சம்பவத்தின் பாதிப்பில் இ.பா. எழுதிய இப்புதினம், கணையாழி இதழில் தொடராக வெளிவந்தது. வேறெந்த பத்திரிகையும் இதை வெளியிடத் தயங்கின என்பது இங்கு கவனிக்கத்தக்கது. புத்தகம் முழுவதுமே திராவிட இயக்கங்களின் அரசியல் மீதான தாக்குதல் நேரடியாகவும் மறைமுகமாகவும் இடம்பெற்றிருக்கிறது.

கம்யூனிஸ்ட் இயக்கத்தின் நடவடிக்கைகளும் சில இடங்களில் விமர்சிக்கப்படுகின்றன. உண்மையில், இப்புத்தகம் வெளியான போது, இது கம்யூனிச இயக்கத்தவர்களால் எதிர்க்கப்பட்டதென்றும், சமீப காலகட்டத்தில்தான் இது அவர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டதென்றும் இ.பா.அவர்கள் குறிப்பிட்டிருக்கிறார்.

எனக்குள்ளெழுந்த ஆச்சரியம், இ.பா.வின் எழுத்துத் தைரியம் மீதானதே! எப்படி இவரால் இத்தனை உணர்ச்சி பூர்வமான விஷயத்தைப் பற்றி, எதிர்ப்பு குறித்த, அச்சுறுத்தல் குறித்த எந்தப் பயமும் இல்லாமல் எழுத முடிந்தது? இவர் டெல்லியில் பணியாற்றிக்கொண்டிருந்தார் என்றாலும், அந்த ஆச்சரியத்தை என்னால் கைவிடமுடியவில்லை.

கதை பற்றிக் கொஞ்சம் ஆராய்வோம். சமூகப் பொருளாதார, சாதி அடிப்படையிலான கோர சம்பவமாக நடந்த இந்நிகழ்வை, பாலியல் சார்ந்து, ஃப்ராய்டியன் போக்கில் நடந்தேறியதாகக் கொண்டு இப்புதினத்தைப் படைத்திருக்கிறார் ஆசிரியர். இதற்கான பொறி, இந்நிகழ்வின் மூலகர்த்தாவாக இயங்கிய மிராசுதாரின் ஆண்மைத்தன்மையைப் பற்றி மக்களிடையே நிலவிய செய்தி, வதந்தி, விஷயம் என்கிற ஏதோ ஒன்றுதான் என்கிறார் இ.பா. இது அவரது கற்பனை என்றோ, இதுவே உண்மை என்றோ நாம் கொள்ளத்தேவையில்லை; அதை நிரூபிப்பதற்கான எந்தக் கட்டாயமும் நமக்கில்லை. சமூகத்தில் நடக்கிற கொடுமைகளை, மனித இனத்துக்குச் சவாலான நிகழ்வுகளைப் பதிவு செய்வது படைப்பாளியின் கடமை. அதை எந்தக் குறையுமில்லாமல் நிறைவேற்றி இருக்கிறார் ஆசிரியர். ஃப்ராய்டியன் சிந்தனைகளுடன் இவர் இதை அணுகியதே கம்யூனிச இயக்கத்தின் எதிர்ப்புக்குக் காரணம் என்பதாக நானறிகிறேன்.

ஆண்மைத்தன்மை இழந்த ஒருவனின் மன உளைச்சலுக்கு, ஒரு கிராமமே பலியான கதை இந்தக்குருதிப்புனல். ஊர் பெயர்களை அப்படியே பயன்படுத்தி இருக்கிறார். இது வரலாற்றைப் பதிவு செய்கிற ஒரு முயற்சி என்கிற வகையில் முக்கியமடைகிறது.

இக்கீழ்வெண்மணிக்கு சுமார் பதினைந்து கிலோமீட்டர் தொலைவில்தான் நான் பிறந்து வளர்ந்தேன். பதினெட்டு வயது வரையில் இந்த வரலாறு எதுவும் எனக்குத் தெரியாது. பின் செவிவழியாகவும், புத்தகங்கள் வழியாகவும் கொஞ்சம் அறிந்த எனக்கு, இன்னும் பல தகவல்களைத் தருவதாக இருக்கிறது இப்புதினம்.

டெல்லியில் வாழ்ந்து கீழவெண்மணியில் வாழும் முடிவுடன் வந்துவிட்ட தன் நண்பனைக் காண வரும் இன்னொரு நண்பன்; இவர்களிருவரும் சந்தர்ப்ப வசத்தால், ஆதிக்க வர்க்கத்துக்கெதிரான ஒடுக்கப்பட்டவர்களின் போராட்டத்தில் ஈடுபட நேர்கிறது. இந்தச் சம்பவங்களைச் சுற்றிச் சுழல்கிற கதை, பெண்களும், குழந்தைகளும் எரிக்கப்பட்ட சம்பவத்தைத் தன் உச்சகட்டமாகக் கொண்டிருக்கிறது.

மெத்தப்படித்த, அறிவு, ஞானம், சமுதாயப்போக்கு, இவற்றைக்குறித்து சிந்திக்கிற இவ்விரு நண்பர்களுக்கிடையே நடக்கும் விவாதங்கள் மிகுந்த சுவாரஸ்யமானவை. இருவரின் மனநிலையையும் எந்தத் தயக்கமுமில்லாமல் வெளிப்படுத்தியிருக்கிறார் ஆசிரியர். நண்பர்களுக்கிடையே தோன்றக்கூடிய பொறாமை, இயல்பாக மனிதனுக்கேற்படும் காமம், அடிமைப்படுத்தியவனின் மீதான வன்மம், இயற்கை தனக்கேற்படுத்திய குறைக்காக மற்றவர்களைக் கொடுமைப்படுத்தும் ஒரு மனிதனின் குரூரம் என்று பலவிதமான உளவியல் சமாச்சாரங்களை இயல்பாகச் சொல்லிவிட முடிகிறது இவரால்.

நாற்பது ஆண்டுகளுக்கு முன்பிருந்த தமிழகத்தின் நிலையும் கதையின் போக்கில் சொல்லப்பட்டுவிடுகிறது. பேருந்துப் பயணக்காட்சியொன்றில் நிகழும் உரையாடல்களை வைத்து இவர் சொல்லும் ஒரு செய்தி என்னைப் புன்னகைக்க வைத்தது. 'நம் மனிதர்கள் பேசுகின்ற விஷயங்களை மூன்றே வகைக்குள் அடக்கிவிடலாம்; ஒன்று பக்தி பற்றி பேசுவார்கள்; அல்லது அரசியல் பேசுவார்கள்; அல்லது சினிமா பற்றிப் பேசுவார்கள்; பக்தி அறமாகவும், அரசியல் பொருளாகவும், சினிமா காமமாகவும் தான் இப்போது புலப்படுகிறது. எப்படியும் தமிழர்கள் திருக்குறளைக் கைவிடுவதில்லை' என்பதாகச் சொல்லி இருப்பார். இப்போது இவர் சொன்ன எல்லாவற்றிலும், பொருளும், காமமும் மட்டுமே இருப்பதாக எனக்குப்படுகிறது.

எந்தப் படைப்பும் உன்னதமாவது, அது எழுதப்பட்ட நோக்கத்தைப் பொறுத்ததே! ஒடுக்கப்பட்ட ஓரினத்தின் வரலாற்றில் சோக அத்தியாயமாக இடம்பெற்றுவிட்ட இக்கொடூர சம்பவத்தை இனிவரும் சந்ததிக்குச் சொல்லிச் செல்ல வேண்டும் என்கிற நோக்கத்தைக் கொண்டதால் இப்புதினமும் ஓர் உன்னதப் படைப்பாகிறது.

-சேரல்
(http://seralathan.blogspot.com/)

No comments: