Monday, October 22, 2012

96. சோளகர் தொட்டி

Power tends to corrupt and absolute power corrupts absolutely.
- Lord Acton

--------------------------------------------------------------------------------------------------------------------------
புத்தகம் : சோளகர் தொட்டி
ஆசிரிய‌ர் : ச‌.பாலமுருகன்
வெளியீடு : எதிர் வெளியீடு (http://ethirveliyedu.in/)
முதற்பதிப்பு : டிசம்பர் 2010 (முதல் 5 பதிப்புகள் வனம் வெளியீடு (2004-2006); 6ம் பதிப்பு விடியல்)
விலை :  120 ரூபாய்
பக்கங்கள் : 240 (தோராயமாக 39 வரிகள் / பக்கம்)
வாங்கிய இடம் : New Book Lands, வடக்கு உஸ்மான் சாலை, தியாகராய நகர், சென்னை
--------------------------------------------------------------------------------------------------------------------------

சோளகர் என்றும் சோளவர் என்றும் அழைக்கப்படும் மலையின மக்கள் தமிழகத்தின் வட எல்லைப் பகுதியில் உள்ள கர்நாடக எல்லை ஓரத்தில் அதிகம் வாழ்கின்றனர். வேட்டையாடுவதற்கு ஏற்ற அடர்ந்த காடுகள், பள்ளத்தாக்குகள் போன்ற இடங்களில் இவர்தம் கூரைக் குடிசைக் குடியிருப்புகள் உள்ளன. காட்டு இலாகாவினரின் கட்டுப்பாடுகள் இவர்களது பாரம்பரிய வேட்டைத் தொழிலுக்கு இப்போது வாய்ப்பளிக்கவில்லை. காட்டு மரங்களை வெட்டுவதற்கும் தேன் எடுப்பதற்கும் வனத்திற்குள் வழி காட்டுவதற்கும் காட்டு இலாகாவினர் சோளகர்களை அவ்வப்போது பயன்படுத்திக் கொள்கின்றனர். சோளகர்கள் வாழும் பகுதிகள் பெரும்பாலும் லிங்காயத்தார் எனச் சொல்லும் ஒருவகை மலையின மக்கள் வாழும் பகுதிகளை ஒட்டி அமைகின்றன. இவர்களின் தொழில்களுக்கு லிங்காயத்தார்களே வாய்ப்பளிக்கும் வசதி உள்ளவர்களாக இருப்பதால் பெரும்பாலும் சோளகர்களின் குடியிருப்புகள் இவ்வாறு அமைகின்றன. சொந்தமாக விளைநிலங்களோ உழவு மாடுகளோ இல்லாத சோளகர்கள் கூலி விவசாயிகளாக லிங்காயத்தாரிடம் வேலை செய்கின்றனர்.

பெங்களூர் பகுதிகளில் இருந்து ஒரு காலத்தில் போருக்குப் பயந்து ஓடி வந்தவர்களாகத் தங்களைக் கூறிக் கொள்ளும் லிங்காயத்தார்கள், வேறு இனத்தாரைத் தங்கள் வீடுகளில் அனுமதிப்பதில்லை; வெளியிடங்களுக்குப் போகும்போது வேறெங்கும் தண்ணீர்கூட வாங்கிக் குடிப்பதில்லை. சைவ உணவு உண்ணும் லிங்காயத்தார்கள், அசைவ உணவு உண்ணும் சோளகர்களைத் தீண்டத் தகாதவர்களாகவே நடத்துகின்றனர். லிங்காயத்தார்களின் கால்நடைகள் நோய்வாய்ப் ப‌ட்டாலோ, இறந்து பட்டாலோ அவற்றைச் சோளகர்கள் எடுத்துச் செல்கிறார்கள். 1994ல் நியூ சென்சுரி புக் ஹவுஸ் வெளியீடான டாக்டர் கே.ஏ.குணசேகரன் அவர்களால் எழுதப்பட்ட 'தமிழ‌க மலையின மக்கள்' என்ற புத்தகம் சோளகர்களைப் பற்றி சொல்லும் சில குறிப்புகள் இவை.
 

ச.பாலமுருகன் அவர்களின் சோளகர் தொட்டி. சோளகர்களின் வசிப்பிடத்திற்குத் தொட்டி என்று பொருள். தமிழக கர்நாடக எல்லைப் பகுதியில் வன எல்லையில் இருக்கும் கிட்டத்தட்ட நாற்பதுக்கும் மேற்பட்ட குடிசைகளைக் கொண்ட ஒரு சோளகர் தொட்டிதான் பாலமுருகன் அவர்களின் களம். மொத்த புதினத்தைச் சரிபாதியாக பிரித்து இரண்டு பாக‌ங்களில் கதை சொல்கிறார். அறுவடைக்குப் பின் காய வைத்து எடுக்கப்பட்ட ராகி தானியக் கதிர்கள் வாசனையை நுகர்ந்து தொட்டிக்குள் நுழையும் பெரிய கொம்பன் யானையை விரட்டுவதற்காக அந்த இரவில் தூக்கம் தொலைக்கும் சோளகர்களை அறிமுகப்படுத்தி ஆரம்பமாகிறது புதினம். தலைவனை விட்டுக் கொடுக்காத கூட்டு வாழ்க்கை, திருமண முறை, வழிபாட்டு முறைகள் என விரிகின்றது புதினம். பூர்வீகத் தொழிலான வேட்டையைச் சுதந்திர நாட்டின் சட்டங்கள் தடுப்பதையும், தப்பித் தவறி மாட்டிக் கொள்பவர்கள் காவல் துறையிடமும் உயர் சாதியிடமும் அப்பாவித்தனமாக ஏமாற்றப் படுவதையும், ஒரு குடும்பம் பட்ட கடனை மொத்த தொட்டியும் ஏற்றுக் கொண்டு உழைப்பதையும் பதிவு செய்கிறார்.

பீனாச்சியின் நாதம், தப்பையின் தாளம், பாட்டுப் பாடிக் கொண்டே இரவு முழுதும் கண் விழித்து விலங்குகளை விரட்டுகிறார்கள். கொத்தல்லி கோல்காரன் பட்டக்காரன் என்ற தொட்டியின் முக்கியஸ்தர்களுக்குக் கட்டுப்படுகிறார்கள். மணிராசன் கோவிலில் மூதாதையர்களின் ஆவிகளுட‌ன் பேசுகிறார்கள். சோளகர் - லிங்காயத்தார் உறவை ஒரு புராணக் கதை மூலம் விளக்குகிறார். தேனெடுத்தல் வேட்டையாடல் என்ற தங்கள் பூர்வீகத் தொழிலைத் தடை செய்யும் அரசு, அதே வேலைகளுக்காக அரசால் சோளகர்கள் பயன்படுத்தப் படுவதையும் பதிவு செய்கிறார். சோளகர் தொட்டிக்குள் நம்மையும் ஒருவராக‌ உணர வைக்கும் புதினத்தின் ஆரம்பப் பகுதிகளை வைகை எக்ஸ்ப்ரஸில் படித்தேன். அட்டைப் படத்தைப் பார்த்து முகம் சுழித்த சகபயணிகளுடன் திருச்சியில் இருந்து எழும்பூர் வருவதற்குள் 70 பக்கங்களுக்கு மேல் படித்திருந்தேன். ஆனால் புதினம் எதை நோக்கிப் போய்க் கொண்டிருக்கிறது என்பது கொஞ்சம் கொஞ்சமாகப் புரிய ஆரம்பித்தவுடன் அவ்வளவு எளிதாகப் பக்கங்களைக் கடக்க முடியவில்லை. கடைசி 40 பக்கங்களைத் தனிமையில் படித்து முடித்த இரவில் கனத்த மனத்துடனும் தலைவலியுடனும் நான் தூங்கத் தாமதமானது.

சந்தனக்கட்டை வீரப்பனைப் பிடிப்பதற்காக தமிழக கர்நாடக அதிரடிப் படைகளும் வனத்துறைகளும் காவல்துறைகளும் பழங்குடியின மக்கள் மேல் நடத்திய வன்கொடுமைகளே ச.பாலமுருகனின் புதினக்கரு. வனத்துக்கு வெளியே மக்களைத் தலை குனிந்து வணங்கச் செய்யும் வெள்ளைக்காரத் துரைகள், வனத்திற்குள் வந்தால் சோளகனின் தோளில் சமமாகக் கை போட்டு வேட்டைக்குப் போகும் காலமும் இருந்தது. அப்படிப்பட்ட சோளகர்கள் தங்களுக்குச் சம்மந்தமே இல்லாத வீரப்பன் என்ற மனிதனுக்காக‌ வனத்துடனான தங்கள் பாரம்பரிய தொடர்பிலிருந்து திடீரென துண்டிக்கப் படுகிறார்கள். சோளகர்கள் வீரப்பனுக்கு உதவி செய்பவர்கள் என அதிரடிப் படை கேம்ப்களில் அடைக்கப்பட்டு மாதக்கணக்கில் சித்ரவதைகளுக்குப் பிறகு, ஆண்கள் பெரும்பாலும் புதுத்துணி அணிவிக்கப்பட்டு சுட்டுக் கொல்லப் படுகிறார்கள். உடல் பசி எடுக்கும் போதெல்லாம் சோளகத்திகள் குதறப்படுகிறார்கள். பழங்குடியினருக்குப் பிறக்கும் குழந்தைகள் எல்லாம் வீரப்பனுக்குப் பிறந்தவை எனவும், பெண்கள் எல்லாரும் வேசிகள் எனவும் வசைக்கப் படுகிறார்கள். கணவனே தன் சொந்த மனைவியைத் தொடாமல் பயபக்தியுடன் இருக்கும் மாதேஸ்வரன் மலையில்,.....

ஒரு குடும்பம் எப்படிப்பட்டது என்பது அது தம் பெண்களை நடத்தும் விதத்தில் இருக்கிறது. ஒரு சமூகம் எப்படிப்பட்டது என்பது அது தம் சிறுபான்மையினரை நடத்தும் விதத்தில் இருக்கிறது. எல்லாக் காலங்களிலும் எல்லா அரசுகளும் எல்லா இடங்களிலும் சிலருக்குச் சில சமயங்களில் கட்டுப்பாடற்ற அதிகாரங்களைக் கொடுக்கின்றன. அவ்வதிகார வர்க்கம் சிறுபான்மை மக்கள் மேல், குறிப்பாக பெண்கள் மேல் வன்முறை செலுத்தி அவர்கள் வாழ்வைக் கேள்விக் குறியாக்கிவிட்டு பதக்கங்களுடனும் பரிசுகளுடனும் வாழப் போய்விடும் கொடுமையை ஆவணப்படுத்தியதில் ச.பாலமுருகன் தனித்து நிற்கிறார்.

19 ஆண்டுகளுக்குப் பிறகு வாச்சாத்தி வன்கொடுமைகளுக்குத் தீர்ப்பு வந்ததால் ஏதோ வாச்சாத்தி மட்டும்தான் என நினைக்க வேண்டாமென சமூக ஆர்வலர்கள் கூறுகிறார்கள். கடல் தாண்டி நம் காலடியில் நடப்பதாக நாம் சொல்லும் கொடுமைகள் எல்லாம், நம் தலைக்கு மேலேயே நடப்பதைச் சான்று சொல்லும் இந்தச் சோளகர் தொட்டி கண்டிப்பாகப் படிக்கப்பட வேண்டிய புதினம். முழுக்க முழுக்க பழங்குடியினர் பற்றிய புதினம் வேறேதும் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை. பைபிள் படிப்பது போன்ற உணர்வை ஏற்படுத்தும், சுத்தத் தமிழில் இருக்கும் உரையாடல்களைத் தவிர வேறேதும் குறைகளில்லை.

அனுபந்தம்:
----------
இந்த ஜீலையில் சென்னையில் நடந்த 'ஐந்திணை சுற்றுச்சூழல் விழா' என்ற நிகழ்ச்சியில், தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தைச் சேர்ந்த சண்முகம் (தலைவர் என நினைக்கிறேன்) அவர்களின் பேச்சைக் கேட்கும் வாய்ப்பு கிடைத்தது. அதில் சில துளிகள்:

1. இந்திய அரசியலமைப்புச் சட்டம் தரும் அடிப்படை உரிமையான பேச்சுரிமை கூட மலைவாழ் மக்களுக்கு நிராகரிக்கப் படுகிறது. ஒரு ஃபாரெஸ்ட் ஆபிஸர் முன் அவர்கள் பேசினால், 'எங்க முன்னாடி பேசுற அளவுக்குத் தைரியம் வந்துடுச்சா?' என்ற பதில் கிடைக்கும்.

2. இன்று மலையில் பூர்வ குடிகள் எல்லாம் விரட்டி அடிக்கப்பட்டு, மலை மொட்டையடிக்கப் படிகிறது. அவர்கள் இருந்த இடத்தில் ரிசார்ட்டுகளும் சுற்றுலா மாளிகைளும் பணப்பயிர்த் தோட்டங்களும் இருக்கின்றன. உதகமண்டலம் குன்னூர் கொடைக்கானல் போன்ற இடங்களில் மலைவாழ் மக்களிடம் இப்போது துளி நிலம் கூட இல்லை. எல்லாம் பிடுங்கப்பட்டுவிட்டன. நீலகிரி ஏலகிரி ஏற்காடு போன்ற மலைகள் இப்போது திராவிடக் கட்சிக்காரர்களுக்குச் சொந்தம்.

3. உப்பு உடை இந்த இரண்டிற்காக மட்டுமே மலை இறங்கித் தரைக்கு வந்து கொண்டிருந்த‌ மலைவாழ் மக்கள், எல்லாவற்றிற்கும் தரையைச் சார்ந்திருக்கச் செய்யும் ஓர் அடிமை நிலையை உண்டாக்கியதுதான் சுதந்திரம் மற்றும் அறிவியலின் எச்சம்..

- ஞானசேகர்
 (http://jssekar.blogspot.in/)

No comments: