திண்ணியத்தில்
தின்ன வைத்தார்கள்
மலத்தை.
குமட்டுகிறது.
ஒருவரிகூட
எழுதவில்லை நான்.
- யுகபாரதி (தெப்பக்கட்டை நூலிலிருந்து)
I may not be born again; but if it happens, I will like to be born into a family of scavengers; so that I may relieve them of the inhuman, unhealthy and hateful practice of carrying night soil.
- Mohandas Karamchand Gandhi
------------------------------------------------------------
புத்தகம் : பீக்கதைகள்
ஆசிரியர் : பெருமாள்முருகன் (http://www.perumalmurugan.com/)
வெளியீடு : அடையாளம்
முதற்பதிப்பு : டிசம்பர் 2004
விலை : 60 ரூபாய்
பக்கங்கள் : 136 (தோராயமாக 40 வரிகள் / பக்கம்)
------------------------------------------------------------
அம்மா தாய்வீடு வந்து தலைப்பிரசவ சம்பிரதாயங்கள் எல்லாம் முடிந்தவுடன் என்னைத் தூக்கிக் கொண்டு புகுந்த வீடு அழைத்துப் போகப்பட்ட அன்று தாய்வீடு தூக்கம் தொலைத்த கதையை என் அம்மாச்சி இப்படி சொல்வாள்: "இத்தன நாளு ஏன் பேரப்புள்ள இருந்த வீடு சட்டுன்னு வெறுச்சோடி போகவும் நெஞ்சே வெடிச்சுரும் போல இருந்துச்சு. ஒரு பீத்துணியக் கூட விட்டுட்டுப் போகாம இப்புடி புள்ளயத் தூக்கிட்டு போய்ட்டாளே". பீத்துணியிலும் பாசம் கண்ட ஒரு தலைமுறைக்கு முதல் பேரக் குழந்தையாக நான் வலம் வந்த அக்கதையை இன்றைக்கு எழுத முடிந்த என்னால், இதற்கு முன்னால் நாலு பேருக்கு முன்னால் சொல்ல முடிந்ததில்லை. காரணம் 'பீ' என்ற சொல். இந்தச் சங்கடம் எனக்கு மட்டுமல்ல, எல்லாருக்கும் உண்டு. பெண்ணின் கருவில் இருந்து பிறக்கும் ஒவ்வொரு உயிரும் தன் தாயுடன் வைத்திருக்கும் ஆரம்பகாலக் கதைகள் எல்லாம் வயிற்றுப்போக்கு சிறுநீர் மலம் சளி போன்ற கருப் பொருள்களைக் கொண்டவையே.
ச்ச்சீ. அசிங்கம். அசுத்தம். அநாகரீகம். அப்படிச் சொல்லக் கூடாது. அதை அப்படி மாற்றிச் சொல். அவையல்கிளவி இடக்கரடக்கல் குஃறொடரன்மொழி மங்கலவழக்கு என்று இலக்கணம் வகுத்துக் கொடுக்கிறது சமூகம். அவற்றை அப்படியே பேசுபவனுக்கு நாகரீகமற்றவன் என்று பெயரிடுகிறது. பீ என்ற சொல் இல்லாமல் என் முதல் பத்திக் கதையை எப்படி சொல்வது? ஒரே கட்டிலில் புரண்டு கூட படுக்க முடியாமல் பக்கவாதத்தில் ஒரு பக்க உடல் அழுகி புழுப்பிடித்து இறந்து போன கதையைப் பீ, மூத்திரம் என்ற சொற்கள் இல்லாமல் எப்படி சொல்வது? ஓரங்கட்டப்படுபவை சொற்கள் மட்டுமல்ல; அவற்றின் பின்னே மனிதகுலம் வைத்திருக்கும் கதைகளும்தாம். அவற்றை வெளிக்கொணர முயலும் வெகுசில படைப்பாளிகளில் ஒருவர் பெருமாள்முருகன். 'கெட்ட வார்த்தை பேசுவோம்' என்ற அவரின் முந்தைய புத்தகம் கொடுத்த தெளிவான சிந்தனைதான், இப்புத்தகம் படிக்கவும் அதைப் பற்றி எழுதவும் செய்யும் நாகரீகத்தைத் தந்ததெனக் கூறுவேன்.
(www.nhm.in)
பீக்கதைகள். பீயும் பீ சார்ந்தனவும் உரிப்பொருள்களாக அமைந்த 14 சிறுகதைகளின் தொகுப்பு. பீ, மலம், ஆய், கக்கூஸ், கழிவறை, மல்லு, பேழ்றது, வெளிக்கி, எருவி, நரகல், கக்கா, பீக்காளான் போன்ற வார்த்தைகள் விரவிக் கிடக்கும் கதைகள். எல்லாக் கதைகளிலும் பீ தான் உரிப்பொருள் என்று முன்னரே தெரிந்து போனாலும், சலிப்பில்லாமல் வாசிக்கச் செய்யும் எழுத்து நடையும் அதன் மூலம் வாசகனின் பார்வையைத் தன் கரு நோக்கி இழுத்துச் செல்லும் வித்தியாசமான கதைக்களங்களும் இக்கதைகளின் மாபெரும் பலம். கிராமங்களில் வாய்வழியாக உலாவரும் பீயை மையமாகக் கொண்ட கதைகள் அல்லாமல், சமகாலச் சூழலில் பீயை மையமாக்கி இருப்பதும் அருமை.
ஒரு சின்னப் பையனின் இயற்கை உபாதையை இச்சமூகம் எவ்வாறு அலட்ச்சியப் படுத்துகிறது, என்கிறது ஒரு கதை. தேநீர் குடித்தால் தான் வெளிக்கிப் போகும் என்று நம்பும் பலரில், வீம்புக்காக தேநீர் குடிக்காமல் அடக்கி அல்லல்படும் ஒருவனின் கதை. கிராமத்தில் முதலில் கழிவறை கட்டி அதைப் பொத்திப் பொத்திப் பாதுகாக்கும் ஒரு கிழவி, தன் கிணத்துத் தண்ணீரை யாரும் பயன்படுத்தி விடக் கூடாதென மலம் கலக்கும் ஒருவன், பீயள்ளுபவன், கட்டணக் கழிவறைகளில் சீக்கிரம் வெளிவரச் சொல்லி கதவு தட்டுபவனாக வேலை பார்ப்பவன், புனிதமாக மதிக்கப்படும் சாமிக் கிணற்றில் பேண்டவன் போன்றவர்கள் தான் கதைகளின் பாத்திரங்கள்.
மிகவும் பரிட்சயமான வழக்கமான சில விசயங்களில் பீயை உரிப்பொருளாகப் புகுத்தி வித்தியாசமான பார்வையில் கதை சொல்லும் விதம் அருமை. உதாரணமாக, நகரத்து நெருக்கடியைக் கதவில்லாக் கழிவறைகள் மூலம் திறந்து காட்டும் கதை. கிராமத்துக் காடுகரைகளில் வெளிக்கிப் போய்க் கொண்டிருந்த ஒருத்தி நகரத்திற்குக் கல்யாணம் கட்டி வந்தபின், கழிவறை என்ற வினோதத்துடன் பகல் பொழுதைப் பயந்து பயந்து தனிமையில் கழிக்கும் ஒரு கதை. அக்கதையில் வரும் 'இரு உள்ளங்கைகளையும் விரித்துக் கொண்டு மண்டை ஓட்டு வடிவம் எடுத்திருந்தது பீவாங்கி' என்ற வரி அழகு. அக்கதைக்கு எதிர்மாறாக, கழிவறைகளில் வெளிக்கிப் போய்க் கொண்டிருந்த ஒருத்தி, கிராமத்திற்குக் கல்யாணம் கட்டி வந்தபின், காடுகரைகளில் ஒதுங்கப் பணிக்கப்படும் துயரம் சொல்கிறது இன்னொரு கதை. கம்யூனிஸம், மாய எதார்த்தம், சாமி, சாதி என்று பல தளங்களில் பீயைத் திணித்துப் பார்க்கின்றன கதைகள்.
'பொன்னாள எனக்குத்தான் மொதல்ல கட்டிக் குடுக்குறதா இருந்தாங்க. கிழவியைக் கட்டியிருந்தால் வயதான காலத்தில் அங்கே இங்கே அலையாமல் இருந்த இடத்திலேயே பேண்டு கொள்ளலாம்' என்று ஊரில் கழிவறை வைத்திருக்கும் ஒரே கிழவியைப் பார்த்து ஒரு கிழவன் ஏங்கும் கதை ஒன்று. வாக்கியங்களுடனேயே தொடர்ந்து வரும் எளிய நகைச்சுவையும், சமூகப் பார்வையும் எல்லாக் கதைகளும் கொண்டிருக்கின்றன. எந்தக் கதையிலும் பீ வலுக்கட்டாயமாகத் திணிக்கப்பட்டதாக நான் உணரவில்லை. பீயை வைத்து இவ்வளவு சமூகப் பிரச்சனைகளை அலச முடியும், மாய எதார்த்த முறையில் அருமையான கதை சொல்லக்கூட பீயைப் பயன்படுத்தலாம் - நிரூபித்துக் காட்டுகிறது இப்புத்தகம். சந்தனச் சோப்பு என்ற சிறுகதையை ஆசிரியரின் அனுமதியுடன் யாராவது குறும்படமாக எடுக்கலாம் என்று வலைப்பதிவர் ஒருவர் பரிந்துரை சொன்னார். நான் வழிமொழிகிறேன்.
நான் ரசித்தவை:
பிடித்த கதைகள்: கடைசி இருக்கை, சந்தனச் சோப்பு, பீ, புகை உருவங்கள்
பிடித்த பாத்திரங்கள்: கடைசி இருக்கை, சந்தனச் சோப்பு என்ற கதைகளில் வரும் சிறுவர்கள்
திருமலை நாயக்கருக்கு எதிராகப் புரட்சி செய்த ஒருவனைக் கழுதை மேல் அமர வைத்து, மலக்கரைசல் கொண்ட பானை ஒன்றை அவன் தலை மேல் வைத்து, முகத்தில் சிந்தி வழியும் கழிவுடன் மதுரை நகரில் வலம் வரச் செய்ததாகச் சரித்திரக் குறிப்பு உண்டு. தவறு அல்லது எதிர்ப்பு செய்யும் கூலி விவசாயிகளைப் பண்ணையார்கள் மலம் மூலம் தண்டிக்கும் வழக்கம் சுதந்திரத்திற்கு முன் காவிரி டெல்டா பகுதிகளில் இருந்திருக்கிறது. 2002ல் திண்ணியம், 2003ல் ஊரப்பனூர், 2010ல் மெய்க்கோவில்பட்டி, 2012ல் திருவக்கரை என்று மனிதன் கழிவை மனிதனையே உண்ண வைக்கும் கொடுமைகளை நான் வாழும் காலத்திலேயே கேள்விப்பட்டு இருக்கிறேன்.
பீ. அசிங்கத்தின் அடையாளம். அவமானச் சின்னம். அதனால் தான் ஆதிக்கவெறியின் அடக்குமுறையின் உச்சக்கட்ட ஆயுதமாகப் பீ பயன்படுத்தப் படுகிறது. பீ என்பது அப்படிப்பட்ட ஓர் ஆயுதமாகப் பயன்படுத்தப்படும் வரை, அதற்குச் சமூகம் தந்திருக்கும் பிம்பமும் நிலைத்திருக்கும். அவையெல்லாம் இல்லாமல் போகச் செய்யும் சாத்தியமில்லாத ஒரு சமூகத்தில் நாம் இப்போது இருக்கிறோம். அப்படியொரு சமூகம் சாத்தியப்படும் வரை பீக்கதைகள் போன்ற படைப்புகள் கண்டிப்பாக வரவேற்கப் படவேண்டும்.
இப்புத்தகம் தன்னைக் 'கீழிறக்கி' விடுமோ என நண்பர்கள் அஞ்சியதாக ஆசிரியர் கூறுகிறார். இப்பதிவு என்னைக் 'கீழிறக்கி' விட்டதா என்ன? இரண்டு பேருக்கும் பதில் நீங்கள் தான் சொல்ல வேண்டும்.
- ஞானசேகர்
(http://jssekar.blogspot.in/)
No comments:
Post a Comment