Sunday, August 05, 2012

94. அலகிலா விளையாட்டு


உலகம் யாவையும் தாமுள வாக்கலும்
நிலை பெறுத்தலும் நீக்கலும் நீங்கலா
அலகிலா விளையாட்டுடையார் அவர் தலைவர்
அன்னவர்க்கே சரண் நாங்களே
- கம்பராமாயணத்தின் முதல் பாடல்

-------------------------------------------------------------------------
புத்தகம் : அலகிலா விளையாட்டு (புதினம்)
ஆசிரிய‌ர் : பா.ராகவன்
வெளியீடு : இலக்கியப்பீடம் பதிப்பகம்
முதற்பதிப்பு : 2005
விலை : 60 ரூபாய்
பக்கங்கள் : 166 (தோராயமாக 36 வரிகள் / பக்கம்) 
சிறப்பு : இலக்கியப்பீடம் இதழ் நடத்திய அமரர் திருமதி ரங்கநாயகி அம்மாள் நினைவு நாவல் போட்டியில் 2003ம் ஆண்டுக்கான பரிசு பெற்ற சமூகப் புதினம்
-------------------------------------------------------------------------

தேடல். மனித வாழ்வின் இருப்பிற்கான ஒரே ஆதாரம் தேடல் என்ற செயல். விடிந்தால் உத்தியோகம், தேதிக்குச் சம்பளம், வேளைக்குச் சாப்பாடு, விழுந்து புரளத் துணை, சிரித்துக் காட்ட குழந்தை குட்டி, அவ்வப்போது சந்தோசம், அளந்து அளந்து பூரிப்பு, கஷ்டமே வந்தாலும் ஆற்றிக் கொள்ள யாரோ ஒருவரின் மடியோ தோளோ, அது, இது என்று தேடப் பணிக்கப்படும் மனிதனுக்கு, இம்மை மறுமை என்று இன்னொரு வாழ்க்கையும் இருப்பதாக சொல்லி, என்றுமே அழியாத ஆன்மா, அனைத்திலும் விளையாடும் பரம்பொருள், அது, இது என்று இன்னும் தேடச் சொல்கிறது ஆன்மீகம். வாழ்வின் பல்வேறு படிநிலைகளில் இப்படி எதையெதையோ தேடித் தேடி, சில தேடல்களுக்கு என்றைக்குமே தீர்வு கிடைப்பதில் என்று தெளிந்து, மரணத்தைத் தேடி இமயமலை வந்திருக்கும் 70+ வயது முதியவர் ஒருவர் தன்னிலையில் த‌ன் கதை சொல்வதே இப்புதினம்.

இரண்டு வேளை சோறாவது கிடைக்கும் என்ற பட்சத்தில், திருச்சினாப்பள்ளி பிராமணச் சிறுவன் ஒருவன் திருவையாற்றில் வேதப் பாடசாலையில் சேர்க்கப் படுகிறான். அவனும் கால் வயிறு உணவு, கால் வயிறு நீர், கால் வயிறு காற்று என்று வேதம் கற்றுக் கொண்டதைக் காட்டிலும் பசியை ஜெயிக்கக் கற்றுக் கொள்கிறான். தொழிலதிபர்கள் புண்ணியம் என்ற பெயரில் செய்யும் பணவுதவியில் அப்பாடசாலையை நடத்திவரும் வாத்தியாரின் குடும்பம் அடுத்தடுத்து பல சோதனைகளைச் சந்திக்கிறது. வாத்தியார் நம்பிய வேதத் தத்துவங்கள் அவரைக் கைவிட்டு விடுகின்ற‌ன. அவர் நம்பிய பரம்பொருள் அவரைப் பொருட்படுத்தவில்லை. அவர் நம்பிய மனிதர்களும் அவரது கன‌வுகளை உதாசீனப்படுத்தி விடுகிறார்கள். தகப்பனுக்கு நிரந்தர வேலை கிடைத்து மூன்று வேளைச் சாப்பாடு உத்தரவாதம் ஆனபின் பாடசாலைக் குடுமிக்கு விடை கொடுத்துவிட்டு கிராப்பு வைத்து வழக்கமான பள்ளிக் கூடத்திற்குச் செல்கிறான்.

படித்த வேதம் வாத்தியாரின் குடும்பத்தை நடுத்தெருவில் கொண்டுவந்து நிறுத்தி இருப்பதைப் பார்த்து வருந்துகிறான். தன்னை வாழ்வித்துக் கொண்டிருக்கிற ஒருவனைப் பொருட்படுத்தாமல் உதைத்துத் தள்ளிய வேதம் என்ற‌ ஆன்ம தத்துவத்துக்கு அப்படியென்ன முக்கியத்துவம்? தன்னைப் பொருட்படுத்துபவனைப் பொருட்படுத்தாத ஒரு விசயம் எப்படி உயர்வானதாக இருக்க முடியும்? மனிதன் நம்பிக்கை வைக்கிற விசயங்களே அவனைக் கைவிடும் என்றால் வாழ்வுக்கான பற்றுக்கோடுதான் என்ன? தீவிரமான நம்பிக்கைகள் நம்ப முடியாதவற்றைச் சாதிக்கும் என்கிற நவீன மனவியல் கண்டுபிடிப்புகளின் அர்த்தம் என்ன? இப்படி நாத்திகத்திற்கும் ஆத்திகத்திற்கும் இடைப்பட்ட நிலையில் ஆன்மா பரம்பொருள் என்று தேட ஆரம்பிக்கும் அவன், அரசாங்க வேலை துறந்து மெட்ராஸ் திருவையாறு திருவானைக்காவல் மைசூர் ஹௌரா கயா என்று சுற்றி இமயமலையைக் கிட்டத‌ட்ட எழுபதாம் வயதில் அடைகிறார். தன்னைச் சுற்றி நடக்கும் விசயங்கள் எல்லாவற்றையும் தன்னையே மையமாக வைத்து சிந்திக்கும் அவரின் வாழ்க்கைதான் இப்புதினம். வாழ்க்கையின் அர்த்தமே வாழ்ந்து தீர்ப்பது என‌ எல்லாவற்றின் வசத்திலும் தன்னை அளித்துவிட்ட ஒருவரின் கதையிது. இலக்கை அடையுமுன் வற்றிவிடக் கூடிய இயல்புள்ள சிற்றோடையின் பயப் படபடப்பு சொல்லும் படைப்பிது.

'அலகிலா விளையாட்டு' புதினம் யோசிக்க வைக்கும் இலக்கிய வகையைச் சார்ந்தது. புத்தகத்தின் முன்னுரையும் இதைத் தான் சொல்கிறது. இப்புதினத்தில் கதை சொல்வது என்பது கதைசொல்லியின் யோசிப்பே. இந்து வேதங்கள் அவற்றையே நம்பி இருப்பவர்களை ஏன் காப்பதில்லை என பதிமூன்று வயதில் யோசிக்க ஆரம்பிக்கிறார். வேதங்கள் உயர்ந்தவைகள் என்றால் கஞ்சிக்கு வக்கற்றவர்கள் மட்டுமே அதைப் படிக்க வருவதேன் என யோசிக்கிறார். தேசம் துண்டாகி தனது சித்தாந்தத்தில் தோற்றுப் போன காந்தியைப் பார்த்தபின், கொஞ்சம் மிஞ்சியிருந்த தத்துவங்களின் மீதான நம்பிக்கையைக் காமராசரின் தேர்தல் தோல்வியோடு தூக்கி எறிகிறார். பவுத்தப் பிக்குகளின் நட்பு கிடைத்தபின், உருவமே இல்லாத ஆன்மாவும், தொப்பையும் வில்லும் வாளும் வேலும் வைத்திருக்கும் பரம்பொருளும் தேவைதானா என யோசிக்கிறார். வாழ்க்கைக்கு உதவக் கூடியதாகத் தத்துவங்கள் இல்லாதபோது யுகம் யுகமாக ஏன் கட்டிக் கொண்டு அழ வேண்டும் என யோசிக்கிறார்.

புத்தருக்கு ஞானமும் காந்திக்கு அகிம்சையும் போல ஒவ்வொருவருக்கும் ஆன்மா என்பது பொருள் வேறு. அவரவர் சித்தாந்தங்களில் பரம்பொருள் என்ற ஒன்றைத் தேடி அலைந்து, அதை அடைந்தார்களா இல்லையா என்பதை வைத்து அவரவர் சித்தாந்தங்களை எப்படி நாம் அளக்க முடியும்? பரம்பொருளை அடைந்த நிலையை அளக்கும் நிரந்தர அளவுகோல்தான் என்ன? மற்றவர் பரம்பொருளை அடைந்தாரா இல்லையா என்றே சரியாகத் தெரியாதபோது அவர்களின் சித்தாந்தங்களை அளக்க நாம் யார்? கஞ்சிக்கே வழியில்லாத போது சித்தாந்தங்களைக் கட்டிக் கொண்டு திரிவதில் ஏது பயன்? எல்லாம் துறந்தவர்களுக்கே வாழ்வியல் தத்துவங்கள் புரியாத போது சாமானியன் அவற்றைக் கடைப்பிடிக்க எப்படி எதிர்பார்க்க‌ முடியும்? வாசகனையும் கூடவே யோசிக்கச் சொல்கிறார்.

நான் ரசித்தவை:
பாத்திரம் -> லங்கிணி பூரணி
ப‌குதி -> கோபால கிருஷ்ண ஹெக்டேயின் குருகுலத்தில் இருந்து வெளியேறும் நிகழ்ச்சி
சிந்தனை -> 1) பலனை எதிர்பார்க்காத சேவை என்ற போர்வையில் கல்வியைக் கூட வியாபாரமாக்கி விட்டதை மைசூரில் சாடும் பகுதி 2) ஒரு புத்தப் பிக்குவுடன் கயாவில் நடக்கும் விவாதம் இப்படி: புலனடக்கம், கொல்லாமை, திருடாமை, கயமைத்தனம் இல்லாமை என்று நல்லொழுக்கக் கோட்பாடுகளைச் சாஷேயில் போட்டுக் கொடுத்து விட்டார்கள். யதார்த்த வாழ்வில் பொருள் தொலைத்த வெறும் லட்சியவாதக் கோட்பாடுகள். காலத்தின் வெறிப் பாய்ச்சலில் இந்தச் சொற்களுக்கெல்லாம் அர்த்தம் இருக்கிறதா என்ன இப்போது? ஓட‌ ஓட விரட்டும் வாழ்வெனும் அசுரப் பிசாசின் பிடியிலிருந்து தப்பிக் கொண்டே இருக்க ஒழுக்கங்களல்ல; ஒழுக்க மீறல்களே பெரும்பாலும் தீர்வாக அமைந்து விடுகிறது. சராசரி மனிதனுக்குத் தத்துவங்களைக் காட்டிலும் தீர்வுகளே முக்கியமாக இருப்பதைத் தயவு செய்து குறை கூறாதீர்கள்.

ஆத்திகம் நாத்திகம் இந்து பவுத்தம் வேதம் காதல் நடைமுறையியல் என்று எல்லா சித்தாந்தங்களுக்கு உள்ளேயேயும் சென்று திரும்புகிறது புதினம். நமது தனிப்பட்ட‌ சித்தாந்தங்களைக் கொஞ்சம் ஒதுக்கி வைத்துவிட்டு, ஏன் அப்படி சிந்திக்கவில்லை - இது தவறு - அது பாதி தவறு என்று எதிர்வாதம் சொல்லாமல் இன்னொருவன் சிந்தனையுடன் உள்ளது உள்ளபடி சேர்ந்து பயணிக்க நீங்கள் தயார் என்றால், குளிர் முதல் மரணம் வரை உங்களை வசப்படுத்த‌ 'அலகிலா விளையாட்டு' இருக்கிறது.

- ஞானசேகர்

No comments: