----------------------------------------------------------------------------------------------------------------------------------
புத்தகம்: வெயில் மற்றும் மழை (சிறுகதைகள்)
ஆசிரியர்: மீரான் மைதீன்
வெளியீடு: அன்னை ராஜேஸ்வரி பதிப்பகம், பெரம்பூர், சென்னை
முதல் ஈடு: திசம்பர் 2007
பக்கங்கள்: 196
விலை: 90 ரூபாய்
வாங்கிய இடம்: New Book Lands, வடக்கு உஸ்மான் சாலை, தியாகராய நகர், சென்னை (http://www.newbooklands.com/)
----------------------------------------------------------------------------------------------------------------------------------
இஸ்லாமிய மக்கள் பற்றி படித்தறிய சென்ற வருடம் சில புதினங்களும் சிறுகதைத் தொகுப்புகளும் வாங்கினேன். அவற்றில் சிலவற்றைப் பற்றி இதே தளத்தில் எழுதியும் இருக்கிறேன். மீரான் மைதீன் அவர்களின் 'ஓதி எறியப்படாத முட்டைகள்' புதினம் பற்றி மட்டும் எழுதவில்லை. அப்புதினம் பற்றி நான் எழுதிய பதிவு எனக்கு திருப்தியாக இல்லை என்பதாலும், வேலைப்பளுவினாலும் எழுதவில்லை. இதே காரணங்களால் நான் எழுதாமல் விட்டுவிட்ட இன்னொரு புத்தகம், எஸ்.ராமகிருஷ்ணனின் நெடுங்குருதி. இஸ்லாமிய மக்களின் அன்றாட உரையாடல்களில் இடம்பெறும் பல வார்த்தைகளை எனக்கு அறிமுகப்படுத்திய புதினம் 'ஓதி எறியப்படாத முட்டைகள்'. ஒரே ஊருக்குள் இருக்கும் இரு இஸ்லாமிய குடும்பங்கள் மூலம், அரபு நாடுகளில் வேலை பார்க்கும் கனவுடன் வலம் வரும் ஏழைகளின் மனவோட்டத்தை அற்புதமாக விளக்கும் புத்தகம். நடிகைகள் ராதாவும் அம்பிகாவும் வந்து போகும் பகுதிகளைச் சில நண்பர்களிடம் சொல்லிச் சிரித்திருக்கிறேன். மீரான் மைதீன் அவர்களின் மற்ற புத்தகங்கள் ஏதாவது படிக்க வேண்டும் என்ற ஆவலில் தேர்ந்தெடுத்த புத்தகம் தான் இது.
வெயில் மற்றும் மழை. 18 சிறுகதைகளின் தொகுப்பு. 4 அல்லது 5 கதைகள் தவிர மற்றவை அனைத்தும் இஸ்லாமிய மக்களைப் பற்றிய கதைகள். 13 கதைகள் எனக்குப் பிடித்திருந்தன. 'ஓதி எறியப்படாத முட்டைகள்' மூலம் எனக்கு ஏற்கனவே நாகர்கோவில் வட்டார இஸ்லாமிய வழக்குச் சொற்கள் பரிட்சயம் என்பதால், இந்தமுறை பதிவாக எழுதும் அளவிற்கு எளிதாகிவிட்டது. ஒவ்வொரு சமூகத்திலும் இருக்கும் மூட நம்பிக்கைகள் போல, இஸ்லாமிய சமூகத்தினரிடையே இருக்கும் சில மூட நம்பிக்கைகள் பற்றி 'தங்கக்கால்' 'வல்லினம்' போன்ற கதைகள் பேசுகின்றன. ஒவ்வொரு மதத்தினரும் தத்தம் மதம் சொல்லும் கட்டளைகளை ஏதாவதொரு சந்தப்பத்தில் தெரிந்தே மீறுவதைக் 'குனிவு' என்ற கதை சொல்கிறது. எல்லாச் சமூகமும் பெண்ணை ஓர் அடிமையாகவே வைத்திருக்க விரும்புவதையும், அதை எதிர்க்கும் சில பெண்கள் இருப்பதையும் 'வல்லினம்' என்ற கதை சொல்கிறது. 'படிப்பு வராத பயலுவளெல்லாம் யானை விட்டயச் சமுட்டுனா படிப்பு வரும்' என்று யானை விட்டைக்கு அடித்துக் கொள்ளும் 'நன்றி மீண்டும் வருக' என்ற கதை.
கவர்னர் என்ற பதவியைக் கடுமையாக விமர்சிக்கும் சொற்ப இந்தியர்களில் நானும் ஒருவன். கவர்னர்கள் பற்றி இந்தியர்கள் பெரும்பாலும் ஆர்வம் காட்டுவதில்லை என்பதால், நான் பள்ளிக்கூடம் போய்க் கொண்டிருந்த காலத்தில் தமிழ்நாட்டில் கவர்னராக இருந்த ஒருவரைப் பற்றி தெரியாதவர்களுக்காக ஒரு சிறு அறிமுகம் தருகிறேன். எம். பாத்திமா பீவி. இந்திய உச்ச நீதிமன்றத்திற்கு நியமிக்கப்பட்ட முதல் பெண் நீதிபதி. ஆசியாவிலேயே மிக உயர்ந்த நீதிமன்றத்தின் நீதிபதியாக பதவியேற்ற முதல் பெண்மணி என்ற பெருமை உடையவர். 1997 முதல் 2001 வரை தமிழ்நாடு ஆளுநராக இருந்தார். அவர் கவர்னராக இருந்த போது, தங்கள் ஊரின் தர்ஹாவிற்கு வரப்போகும் நாளை எதிர்நோக்கி இருக்கும் ஓர் ஊரின் பரபரப்பைச் சொல்லும் 'கவர்னர் பெத்தா' கதை அருமை.
ஒரு பள்ளித் தலைமையாசிரியைக்கும், வாசலில் கடை வைத்திருக்கும் பாட்டிக்கும் இடையே நடக்கும் பனிப்போர் பற்றி ஒரு கதை. தலையணை இல்லாமல் சென்னை வாழ்க்கையின் நெருக்கடியைச் சித்தரிக்கும் ஓர் உதவி இயக்குனரின் கதை. கல்லூரி சார்பாக நடைபெறும் நாட்டு நலப்பணித் திட்டம் ஒன்றில் ஓர் இஸ்லாமிய மாணவனுக்கும், ஒரு பெந்தெகொஸ்து கிறித்தவ மாணவிக்கும் இடையே வந்து போகும் காதல் போன்ற ஏதோவொன்றைச் சொல்லும் ஒரு கதை. சவங்களைக் கிடத்தி வைக்கும் ஒரு பெஞ்சி, ஒரு சைக்கிள், ஓர் ஆட்டுக்குட்டி போன்றவைகள் மேல் சாதாரண மனிதர்கள் காட்டும் அன்பைப் பற்றி சில கதைகள். 'மஜ்னூன்' என்ற கதையை இன்னும் கொஞ்சம் மெருகேற்றி இருந்தால் சிறப்பாக இருந்திருக்கும்.
நான் மிகவும் ரசித்த கதைகள்: பெஞ்சி, கொழும்புக் குதிரை, கவர்னர் பெத்தா, குனிவு, முகாம்
- ஞானசேகர்
No comments:
Post a Comment