Sunday, March 16, 2014

125. இந்தியாவில் குற்றங்களும் மத நம்பிக்கைகளும்

Religion is opium of masses.
- Karl Marx
----------------------------------------------------------------------------------------------------------------------------------
புத்தகம்: இந்தியாவில் குற்றங்களும் மத நம்பிக்கைகளும்
ஆங்கிலத்தில்: Crime and Religious Beliefs in India
ஆசிரியர்: அகஸ்டஸ் சோமர்வில்
தமிழில்: மா.வெற்றிவேல்
வெளியீடு: சந்தியா பதிப்பகம் (http://www.sandhyapublications.com/)
முதல் ஈடு: 2012
பக்கங்கள்: 224
விலை: 170 ரூபாய் 
வாங்கிய இடம்: New Book Lands, வடக்கு உஸ்மான் சாலை, தியாகராய நகர், சென்னை (http://www.newbooklands.com/)
----------------------------------------------------------------------------------------------------------------------------------
1931ல் Crime and Religious Beliefs in India என்ற ஆங்கில நூல் அகஸ்டஸ் சோமர்வில் என்ற ஆங்கிலேயரால் வெளியிடப்பட்டது. ஒரு சராசரி இந்தியனின் மனம் சமய நம்பிக்கைகளாலும் மூடப் பழக்க வழக்கங்களாலும் கட்டப்பட்டிருப்பதையும், இந்தியச் சமூகத்தில் நடக்கும் குற்றங்களின் பின்னணியில் உள்ள சமய நம்பிக்கைகளின் உளவியலையும் பதிவு செய்த புத்தகம் அது. அதன் தமிழ் மொழியாக்கமே 'இந்தியாவில் குற்றங்களும் மத நம்பிக்கைகளும்'. இன்று இந்தியா என்பதற்கு ஒவ்வொருவரும் ஒவ்வோர் அர்த்தம் சொல்வது போல், ஆசிரியர் காலத்திலும் வேறு அர்த்தம் என்பதால், இப்பதிவு முழுவதும் இந்தியா என்று வரும் இடங்களில் இந்தியத் துணைக்கண்டம் என்று புரிந்து கொள்க. 80 ஆண்டுகள் கடந்துவிட்டாலும் மாற்றம் ஒன்றும் பெரிதாக நிகழ்ந்துவிடவில்லை என்பதால், கிரிக்கெட்டில் யாருக்குக் கைத்தட்டக் கூடாது என்றும், வாடகை வீடு முதல் நாடாளுமன்றம் வரை யார் குடியேற வேண்டும் என்றும் பெரும்பாலும் மதம் வைத்து தீர்மானிக்கும் இத்தேசத்தின் கடந்தகால நிகழ்கால எதிர்கால குற்றங்களுக்கும் மத நம்பிக்கைகளுக்கும்  உள்ள தொடர்பு  எல்லோருக்கும் வெளிப்படையாகவே தெரியும் என்பதால், நான் சிற்சில உதாரணங்கள் சொல்லி நிரூபிக்க வேண்டிய முயலாமல் நேரடியாக புத்தகத்திற்குள் போகிறேன். மொத்தம் 17 கட்டுரைகள். மத நம்பிக்கைகளின் பின்னணியில் சமூகத்தில் நடக்கும் குற்றங்களாக ஆசிரியர் உதாரணப்படுத்தும் பல குற்றங்களை, இப்பதிவின் எளிய புரிதலுக்காக ஐந்து வகைகளில் அடக்குகிறேன்.

முதலாவது பாலியல் தொழில் என்ற பெயரில் பெண்கள் மேல் திணிக்கப்படும் வன்கொடுமை. கன்னித் துறவிகள், அந்தப்புர கணிகைகள் என்ற பெயரில் காலங்காலமாக இம்மண்ணில் விபச்சாரம் புனிதப்படுத்தப்பட்டு பாரம்பரியமாகத் தொடர்ந்து வருவதைச் சுட்டிக் காட்டுகிறார். கிமு காலத்தில் ரிக் வேதம், அர்த்தசாத்திரம், மனுஸ்மிருதி போன்ற நன்னெறி நூல்களும், கிபி காலத்தில் காமசூத்திரமும் சமூக அங்கீகாரத்துடன் ஊக்குவித்ததைக் கூறுகிறார். இதன் தொடர்ச்சியாக உருவான தேவதாசி முறை; 'தேவதாசி வீட்டுத் தூசு கூட தெய்வீகமானது' என்பது போன்ற அன்றாடச் சொல்லாடல்கள்; பிராமணீயத்தின் மோசமான தலைமையகமான மெட்ராஸ் நகரத்தில் மிகமிக மோசமாக இருந்த தேவதாசிகளின் நிலை; திருக்கழுக்குன்றம் போன்ற பகுதிகளில் குடும்பத்தில் மூத்த பெண்ணைக் கோயிலுக்கு நேர்ந்து விடும் கொடுமையான வழக்கங்கள் இருந்ததையும் கண்ணுற்ற ஆசிரியர் சொல்கிறார். 

Unhappy India என்ற புத்தகத்தில் இதுபோன்ற கொடூரங்களை லாலா லஜபதி ராய் எழுதியிருப்பதையும், டாக்டர் முத்துலெட்சுமி (பல 'முதல்'களுக்குச் சொந்தக்கார‌ரான இவரும் எங்கள் மாவட்டம்) அவர்கள் மெட்ராஸ் சட்டமன்றத்தில் நேர்ந்து விடுதல் தடைச்சட்டம்  மசோதாவை 1930ல் அறிமுகப்படுத்தியதையும் உதாரணமாகச் சொல்லி இந்தியர்களின் எதிர்ப்பையும் பதிவு செய்கிறார் ஆசிரியர். மாதவிலக்கான பெண்கள் மூன்று நாட்கள் ஒதுங்கியே இருக்க அந்தப்புரத்தில் தனியறை இருக்கும். அப்பாரம்பரியத்தைக் காக்கும் புரட்சியாக, முந்தைய கர்நாடக அரசு கிராமங்களுக்கு வெளியே கட்டடங்களைக் கட்டிக் கொடுத்தது. வழக்கம் போல, அத்திட்டத்திற்கும் மஹிலா என்ற வார்த்தையுடன் இந்தி மொழியில் ஒரு பெயர். 

இரண்டாவது போதை மருந்துப் பழக்கம். மது, அபின், கோக்கைன், ஹஷீஷ், இந்தியன் ஹெம்ப் (கஞ்சா) போன்ற போதை மருந்துப் பழக்கங்கள் பற்றியும், அவை சட்ட விரோதமாகக் கடத்தப்படுவது பற்றியும் சில கட்டுரைகள் பேசுகின்றன. இவற்றிற்கும் மத நம்பிக்கைகளுக்கும் என்ன சம்மந்தம் என்று நீங்கள் கேட்கலாம்? கங்கை நதிக்கரையில் ஒரு தெய்வீக மகரிஷியின் மூலம் அபின் பிறந்த கதை, 6 பக்கங்களுக்கு இருக்கிறது. சாராயத்தை விருப்பப் பானமாகக் கொண்ட சில மத நம்பிக்கைகளின் புராணக் கதைகளையும் பட்டியலிடுகிறார். உச்சி முதல் பாதம் வரை கள்ளாபிஷேகம் செய்யப்படும் சில கடவுளர்களைச் சொல்கிறார்.

மூன்றாவது கடவுளைப் பற்றிய‌, கடவுளின் எதிரியான பேய் / பிசாசு / சாத்தான் பற்றிய மூட நம்பிக்கைகள். சாமிகள் மேல் மரியாதை இல்லாமல் மண்ணுருண்டைகள் எரிந்து வழிபடுதல் போன்ற வினோத வழக்கங்கள்; சில ஆபத்தான காலங்க‌ளில் பூர்வீகச் சாமியைச் தற்காலிகமாக கைவிட்டுவிட்டு, வேறு சாமியையோ பேய்களையோ வழிபடுவதையும் சுட்டிக் காட்டுகிறார். இன்றும் அம்மை நோய்க்கு மருத்துவமனை போகாமல் நம் மக்கள் என்ன செய்கிறார்கள் என்று உங்களுக்கே தெரியும். 'துஷ்ட தேவதைகளை அமைதிப்படுத்த நடத்தப்படும் அனைத்துப் பரிகாரங்களும் தோற்றுப் போனால் மட்டுமே, இந்த வானுயர்ந்த மலைகளை உருவாக்கிய கடவுளை வணங்குவோம்' என்பது நேபாள மக்களின் வாதம். 'பேய் அனைத்து வண்ணங்களையும் ஆடையாக உடுத்திக் கொன்டு ஏதோவொரு மலைச் சுனையிலிருந்து நீர்ப்பருகும் காட்சிதான் சாதாரணமாக மழைக்காலத்தில் காணப்படும் வானவில்' - இப்படி நம்புவது வேறு யாருமில்லை, புத்த மதத்தின் ஒரு பிரிவான நாடோடி லாமாக்கள். புத்த மதத்தின் ஒரு பிரிவினருக்காக மனிதக் கபாலங்கள் இந்தியாவில் இருந்து கடத்தப்படுவதை ஏற்கனவே The Red Market புத்தகத்தில் இத்தளத்தில் எழுதி இருக்கிறேன்.

நான்காவது கடவுளைக் கையில் எடுத்தவர்கள் / கடவுள் விற்பவர்கள் செய்யும் வினோத மற்றும் மூட வழக்கங்கள். பேயோட்டிகள் மற்றும் பாம்பு வைத்தியர்களின் இன்றும் தொடரும் வினோதப் பழக்கங்களையும் சடங்குகளையும் அன்றே பட்டியலிட்டிருக்கிறார் ஆசிரியர். ஏதோவொரு மகாமுனிவரின் கண்ணிமைகளை அலங்கரித்த பிங்களன் என்ற நாகப்பாம்பின் மூலம் உண்டாக்கப்பட்ட அரிய நடனமென்ற பெயரில், இன்றும் கல்கத்தாவின் சோனாகச்சி சிவப்பு விளக்குப் பகுதியில் வாடிக்கையாளர்களைக் கவர ஆடப்படும் பிங்கள நடனம் பற்றிக் குறிப்பிடுகிறார்.  உயிருடன் புதைக்கச் சொல்லி அடம்பிடிக்கும் சாமியார்களை அடிக்கடி செய்திகளில் இன்றும் காணலாம்.  ஒரு சாமியார் சொன்னதற்காக அரசாங்கமே சமீபத்தில் புதையல் தேடியதல்லவா?

ஐந்தாவது மதத்தின் பெயரால் நடக்கும் உயிர்ப்பலிகள். மகாபாரதப் போரில் வெல்ல அரவானைப் பலி கொடுத்தது போல, இன்றும் தொடரும் கங்காசாகர் திருவிழா பற்றி சொல்கிறார். ஏதோவொரு தெய்வத்தின் கோப‌த்தைத் தணிப்பதற்கோ, மந்திர சக்திகளைப் பெறுவதற்கோ, புதையல் கிடைக்கவோ, பாலமோ கட்டடமோ வெற்றிகரமாகக் கட்டப்படவோ குழந்தைகள் இன்றும் நரபலி கொடுக்கப்படும் சம்பவங்கள் நடக்கத்தான் செய்கின்றன. 3000 ஆண்டுகளாக இந்தியாவில் வழக்கில் இருந்த‌, கைம்பெண்களைக் கணவனுடன் உயிருடன் எரித்த சதி என்னும் உடன்கட்டை ஏறும் கொடூரத்தையும் சொல்கிறது இப்புத்தகம். இப்படி உடன்கட்டை ஏறப்போன ஓர் இளம்விதவையைக் காப்பாற்றி திருமணம் செய்து கொண்ட, ஓரு ஆங்கிலேயர் கல்கத்தாவில் பிரபலம். ஜாப் சார்னாக் (Job Charnock) என்ற அவர்தான் கல்கத்தா என்ற நகரை நிறுவியவர்.

இந்தியா என்பது இந்தி பேசும் இந்துக்களின் நாடு என்ற பொதுவான கருத்து வெளிநாட்டவர்களுக்கு உண்டு. ஆனால் எந்த நம்பிக்கைகள் எந்த மதத்திற்குச் சொந்தமானவை என ஆசிரியர் தெளிவாகச் சொல்லி இருக்கிறார். இந்து இஸ்லாம் புத்தம் போன்ற மதங்கள் இவற்றில் அடக்கம். கிறித்தவ மதம் காலனியாதிக்கத்திற்குப் பல நூற்றாண்டுகளுக்கு முன்னரே இந்தியாவிற்குள் வந்துவிட்டாலும், ஆசிரியர் ஆங்கிலேயர் என்பதால் கிறித்தவ மத நம்பிக்கைகள் மூலம் நிலவும் குற்றங்கள் பற்றி ஏதும் சொல்லவில்லை. மேலை நாட்டவர் என்ற முறையில் கீழை நாட்டு நம்பிக்கைகள் அனைத்தையும் கீழ்த்தரமாகப் பார்க்கும் சில வரிகள் ஆங்காங்கே தென்படுகின்றன. நாம் பெருமையாகச் சொல்லும் ஒத்துழையாமை இயக்கத்தின் வெற்றியைக் கூட கிண்டல் செய்திருக்கிறார். இவை நீங்கலாக, நல்ல புத்தகம் இது.

என்ன தம்பி, சதிக்குற்றம் வரை சொன்ன நீங்கள் சாதிக்குற்றம் பற்றி ஒரு வார்த்தை கூட சொல்லவில்லையே? இவ்வாறு மத நம்பிக்கைகளால் இழைக்கப்பட்ட குற்றங்கள் அனைத்திலும் பெரும்பாலும் தாழ்த்தப்பட்டவர்கள் என்று ஒதுக்கி வைக்கப்பட்ட கீழ்சாதிக்காரர்கள் தான் அதிகம் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள் என்பதையும் ஆங்காங்கே ஆசிரியர் குறிப்பிடுகிறார். அடுத்த புத்தகத்தில் நிறைய பேசலாம்.

- ஞானசேகர்
(http://jssekar.blogspot.in/)

No comments: