Friday, April 27, 2007

21. கருவாச்சி காவியம்

புனையப்படாத நாவல்தான் வாழ்க்கை. புனையப்பட்ட வாழ்க்கைதான் நாவல்
- வைரமுத்து

------------------------------------------
புத்தகம் : கருவாச்சி காவியம்
ஆசிரியர் : வைரமுத்து
வெளியான ஆண்டு : 2006
வெளியிட்டோர் : சூர்யா பதிப்பகம்
விலை : ரூ350

------------------------------------------
மேற்கண்ட பச்சை நிறத்திலான வார்த்தைகளை முன்னுரையில் கொண்டு தொடங்குகிறது இந்நூல். ஆனந்த விகடனில் தொடராக வந்த கதை இது. எனக்கு ஒரு பழக்கம் உண்டு. எனக்குப் பிடித்த தொடர் எதையும், ஒவ்வொரு பகுதியாக காத்திருந்து படிக்காமல், முழு தொகுதியாகத்தான் படிப்பேன். இந்த முறை எனக்குப் பிடித்திருக்கிறது.

கருவாச்சி என்கிற கிராமத்துப் பெண்ணின் வாழ்க்கையின் சில வருட நிகழ்வுகள்தான் இந்தக் கதை. இந்தக் கருவாச்சி யாரோ ஒரு தனிப்பட்ட பெண் அல்லள். எங்கேயும் நீக்கமற நிறைந்திருக்கிற பெண்குலத்தின் பிரதிநிதி இவள். வாழ்க்கையின் நீரோட்டத்தில் எங்கெங்கோ அடித்துச் செல்லப்பட்டு கடைசியில் சமுத்திரம் சேரும் ஒரு சாதாரண பெண்ணின் கதை.கருவாச்சியின் கணவன், திருமணமான ஆறே நாட்களில் அவளை விலக்கி வைக்க வேண்டி கூட்டியிருக்கிற பஞ்சாயத்துக் கூட்டத்தில் தொடங்குகிறது கதை. விலக்கி வைக்கப்பட்ட அவள், அவனால் கர்ப்பமாகி, குழந்தையைப் பெற்றெடுத்து கஷ்டப்பட்டு முன்னேறி...மன்னிக்கவும், இந்த அதிசயம் மட்டும் இந்தக் கதையில் நிகழவில்லை. விலக்கி வைக்கப்பட்ட அவள், அவனால் கர்ப்பமாகி, குழந்தையைப் பெற்றெடுத்து வாழ்க்கையின் ஒவ்வொரு படியிலும் அடிபட்டு, கடைசியில் தான் பிறந்த மண்ணின் மக்களுக்கு, உயிர் வாழ உதவுகிறாள் என்பதுதான் கதை. அனுபவம் ஒரு பெண்ணை(மனிதனை) எப்படி எல்லாம் பக்குவப்படுத்துகிறது என்பதை அழகாகச் சொல்கிறார் வைரமுத்து.

கதையின் களம் தேனி மாவட்டத்தில் ஏதோ ஓர் கிராமம். கதையின் காலம் இந்தியச் சுதந்திரத்திற்கு முற்பட்ட காலம். வார்த்தைகளைக் கிராமத்துப் புழுதியில் தோய்த்தெடுத்துப் பயன்படுத்தியிருக்கிறார் கவிஞர். இயல்பான எழுத்து, தெளிந்த நீரோடை போல ஓடுகிறது. மிகச்சிறந்த எழுத்தாளுமை கொண்டவர் என்பதை கவிஞர் மீண்டும் நிரூபித்திருக்கிறார்.

ஊர்ப்புறங்களில் நடக்கும் சடங்குகள், அம்மக்களின் நம்பிக்கைகள், அவர்களின் காதல், வைராக்கியம், பழிவாங்கும் உணர்வு, நேசம், இயலாமை, வக்கிரம், உக்கிரம், அறியாமை, வீட்டு வைத்தியம் என்று பல செய்திகளை மிக லாவகமாகச் சொல்ல முடிகிறது வைரமுத்துவால். மருத்துவம் பற்றிச் சொல்லும்போது ஒரு விஷயம் குறிப்பிட்டேயாக வேண்டும். இந்தக் கதையில் மூலிகை மருத்துவம், கை மருத்துவம் பற்றிய குறிப்புகள் அங்கங்கே நிறைய சொல்லப்படுகின்றன. அந்த வகையிலும் இப்புத்தகம் ஒரு பொக்கிஷம்தான்.

கருவாச்சி, கட்டையன், சடையத்தேவர், பெரிய மூக்கி, கொண்ணவாயன், அழகு சிங்கம், சுப்பஞ்செட்டியார், பவளம், கனகம், பூலித்தேவன் என்று பாத்திரங்களை நம் மனதிலேயே அடுக்கி வைத்துவிட்டார் ஆசிரியர். இவர்களுக்கிடையேயான உணர்வுகள் அழகாகச் சொல்லப்பட்டிருக்கின்றன. அழகு மட்டுமில்லை, அதில் உண்மையும் இருக்கிறது. ஒவ்வொரு கதபாத்திரத்துக்கும் ஒரு சிறப்பம்சம் இருப்பது குறிப்பிடத்தக்கது. உதாரணமாக ஒரு பெண், பேன் பார்ப்பதில் பெயர் பெற்றவள். யாருக்கும் பேன் பார்ப்பதென்றால் அவளைத்தான் கூப்பிடுகிறார்கள். கொஞ்சம் சிரிப்பாக இருந்தாலும், இது நிகழ்வதுதான்.

கிராமங்களில் வழக்கத்திலிருக்கும் பல பழைய விஷயங்களை, புதிதாகச் சொல்கிறார் கவிஞர். கருக்கலைப்பு பற்றி வருகிற ஒரு பகுதி... கொஞ்ச நேரம் என்னை உறைய வைத்துவிட்டது. இப்படித்தானே என் பாட்டியோ, முப்பாட்டியோ செய்திருப்பாள் என்று நினைக்கும்போது, மனதைப் பிசைகிறது. முன்னுரையில் கவிஞர் நன்றி கூறும்போது சொல்லும் சில வார்த்தைகள் 'தனியொருத்தியாய் அவள் எப்படி பிள்ளை பெற்றாள் என்று மண்டியிட்டுக் காட்டினாளே அந்த மாதரசி - எனக்கு அழுகையே வந்து விட்டது'. கருவாச்சி தனியே பிள்ளை பெறும்போது, எனக்கும் இதே உணர்ச்சி மேலிட்டது. உண்மையிலேயே அழுதுவிட்டேன். மனிதன் உணர்ச்சிகளின் கலவைதானே?

'பண்படுத்துவது துறவறம் மட்டுமல்ல; சாதாரண வாழ்க்கையில் ஈடுபடுபவனும் பக்குவப்படுகிறான், அனுபவங்களால்' என்று புரிய வைக்கிறார் ஆசிரியர். கள்ளிக்காட்டு இதிகாசத்துக்குப் பிறகு மீண்டும் தன் ஊர்ப்புறங்களைப் பதிவு செய்திருக்கிறார். கருவாச்சி காவியத்துக்கான தூண்டுகோலாக இவர் எடுத்துக்கொண்டவை, இவர் குடும்பப் பெண்களின் வாழ்க்கையில் நடந்த விஷயங்களும், இவர் கேள்விப்பட்ட கிராமத்துப் பெண்களின் கதைகளுமே!

சமீபத்தில் ஒரு பத்திரிகையில் வைரமுத்துவிடம் கேட்கப்பட்ட கேள்வியும், அவரின் பதிலும்:

உங்கள் ‘கள்ளிக்காட்டு இதிகாசம்', 'கருவாச்சி காவியம்’ இரண்டில் பெரிதும் வெற்றி பெற்ற படைப்பு எது?


படைப்பாக்கத்தில் வெற்றி பெற்றது எது என்பதைக் காலம்தான் சொல்ல வேண்டும். விற்பனையில் வெற்றி பெற்றது கருவாச்சி காவியம்தான் என்று கணக்கு சொல்கிறது. 58 நாட்களில் மூன்றாம் பதிப்பு. எல்லாம் வாசகர் கொடுத்த வரம்.

தனக்குக் கிடைத்திருக்கும் புகழைக்கொண்டு, தன் மக்களின் வாழ்வைப் பதிவு செய்யவும், தமிழ் செய்யவும் முனைந்திருக்கும் வைரமுத்து கண்டிப்பாகப் பாராட்டப்பட வேண்டியவர். இவரைத்தவிர வேறு யாரேனும் எழுதி இருந்தால் இந்தப் புத்தகம் இத்தனை பெரிய வெற்றி பெற்றிருக்குமா என்பது சந்தேகமே!

புத்தகத்தின் பின்னட்டையில் நான் கண்ட வைரமுத்துவின் வாசகம் "தமிழில் சிலப்பதிகாரமும், மணிமேகலையும் இரட்டைக்காப்பியங்கள் என்று இலக்கிய வரலாறு பேசுகிறது. 'கள்ளிக்காட்டு இதிகாசம்', 'கருவாச்சி காவியம்' இரண்டும் என்னளவில் இரட்டைக்காப்பியங்கள் என்றுதான் என் இதயம் வலித்துக்கொண்டே நினைக்கின்றது".

கொஞ்சம் கர்வம் வெளிப்படும் வார்த்தைகள்தான் என்று நினைத்த நான், கர்வப்படத் தகுதியுள்ளவர்தான் இவர் என்பதைப் புத்தகத்தைப் படித்தபின் மீண்டும் ஒருமுறை புரிந்துகொண்டேன்.

- சேரல்

9 comments:

Santha Kumar said...

பொன் விலங்கு. ஆசிரியர் நா.பார்த்தசாரதி. தமிழ் புத்தகாலயம்

மனசே நீ ஒரு மந்திரசாவி. ஆசிரியர் சுகி சிவம். விகடன் பிரசுரம்.

இது சிறகுகளின் நேரம். ஆசிரியர் கவிக்கோ அப்துல் ரகுமான். விகடன் பிரசுரம்.

இந்த புத்தகங்களை படித்து விமர்சனம் செய்யுமாறு பணிவுடன் கேட்டு கொள்கிறேன்.

சேரல் said...

மிக வித்தியாசமான பின்னூட்டம். உங்கள் வேண்டுகோளை நிறைவேற்ற முயல்கிறேன்.

-ப்ரியமுடன்
சேரல்

Anonymous said...

please upload karuvachi kavyam and kallikattu ithigasam

i am egarly waiting for that stories

help lz

Anonymous said...

Nothings spl in the storyline & incidents in the story, It happens many villages.
But bringing them as is into words is difficult.
Vairamuthu proves himselft best for bringing the reality into the story without loss of emotions.
Thanks to efforts he took for giving many info. like kai maruthuvam, gold making & narration of story in a wonderful way.

சேரல் said...

நன்றி Anonymous!

நீங்கள் சொல்வதைப்போல இதில் கதை என்று எதுவும் பெரிதாக இல்லை.
ஆனால் உணர்வுகளை வடித்திருக்கும் விதமும், பல துறைகளையும் கையாண்டிருக்கும் விதமும் அருமை.
நான் மறந்து விட்டுவிட்ட ஒரு செய்தி, பொன் செய்யும் பகுதி. நினைவுபடுத்தியமைக்கு நன்றி. பொற்கொல்லர்களுடன் பழகி அவர்களின் வழக்கு மொழிகளையும், அவர்களின் தொழில் நுணுக்கங்களையும் அறிந்து பயன்படுத்தி இருப்பார் கவிஞர்('கிராம்' என்ற சொல்லுக்கு முந்தைய பெயர் 'குண்டுமுத்து' என்பது உட்பட)

-ப்ரியமுடன்
சேரல்

J.S.ஞானசேகர் said...

"செயிச்சா சந்தோசம். தோத்தா அனுபவம்" என்ற மிகப்பெரிய அறிவை ஞானமாக்கித் தரும் அனுபவம் - கருவாச்சி காவியம்.

-ஞானசேகர்

நட்டு said...

அழகிய பதிவு.பதிவின் கருவின் கர்த்தா வைரமுத்துவுக்கும் ரசித்துப் படைத்த உங்களுக்கும் நன்றி.

தஞ்சாவூரான் said...

காவியத்தைவிட, இதிகாசம்தான் என்னை மிகவும் கவர்ந்தது! கண்ணீர் சிந்த வைத்தது!

இன்னும் அதிக புத்தக விமர்சனங்களை எதிர்பார்க்கிறோம்!

நன்றி!

ஜீவி said...

// விற்பனையில் வெற்றி பெற்றது கருவாச்சி காவியம்தான் என்று கணக்கு சொல்கிறது. 58 நாட்களில் மூன்றாம் பதிப்பு. எல்லாம் வாசகர் கொடுத்த வரம்.//

ஆரியக் கூத்தாடினாலும் தாண்டவக்கோனே--காசு

காரியத்தில் கண் வையடா, தாண்டவக்கோனே

--கலைஞர், பராசக்தியில்