பதிவிடுகிறவர் தம்பி Bee'morgan. நன்றி!
--------------------------------------------------
புத்தகம் : பிரமிள் படைப்புகள்
தொகுப்பாசிரியர் : கால சுப்ரமணியம்
பதிப்பகம் : அடையாளம்
விலை : ரூ210
பக்கங்கள் : 472
முதற்பதிப்பு : டிசம்பர்-2003
--------------------------------------------------
‘சிறகிலிருந்து பிரிந்த
இறகு ஒன்று
காற்றின்
தீராத பக்கங்களில்
ஒரு பறவையின் வாழ்வை
எழுதிச் செல்கிறது…’
மிக அதிகமான முறைகள் மேற்கோள் காட்டப்பட்ட பிரமிளின் வரிகள் இதுவாகத்தான் இருக்கும். எனக்கும் பிரமிள் அறிமுகமானது இவ்வரிகளில்தான். முதல் முறை வாசித்தபோதே, கடற்கரை மணலென மனதில் அப்பிக்கொண்டது. திரும்ப திரும்ப அசைபோடும் போதும் சொல்லவொனாத குதூகலம் தருவதாய் இருந்தன அவரின் வரிகள். அதற்குப் பின்பு அவரின் எழுத்துகளை அதிகம் வாசிக்கும் வாய்ப்பு அமையாத நிலையில், அவரின் இந்த (கவிதையல்லாத) தொகுப்பு நண்பர் சாணக்கியனிடமிருந்து எதேச்சையாகக் கிடைத்தது.
கவிஞர்களின் உரைநடைக்கென்று தனிப்பட்ட உருவமொன்று உண்டு. என்னதான் மறைக்கப்பார்த்தாலும் ரயில் வண்டியிலிருந்து கையசைக்கும் குழந்தைப் பட்டாளம் போல நம்மைப் பார்த்து புன்னகைத்து கடந்து செல்லும் அந்த கவிதை நடை. அவதானிப்புகளை விட அழகியலே அதிகமாகத் தென்படும். அப்படியே மடித்து மடித்து எழுதினால் உரைநடைக் கவிதையில் சேர்த்துக்கொள்ளலாம்.
இப்படித்தான் நானும் நினைத்திருந்தேன் பிரமிளின் படைப்புகளைப் படிக்கும் வரையில். இவ்வளவு தீவிரமாக சிறுகதை உலகில் இயங்கிய ஒருவர், கவிதையும் கவிதை சார்ந்தும் அறியப்பட்ட அளவுக்கு உரைநடையில் அறியப்படவில்லை என்பது ஆச்சரியப்படுத்துகிறது.
ஒரு கவிஞராக என் மனதினுள் நான் ஏற்படுத்தியிருந்த அத்தனை பிம்பங்களையும் உடைத்து நொறுக்கிவிட்டு, ஒரு சிறுகதையாசிரியராக ஒரு புதியதொரு பிம்பமாக மனதினுள் படிகிறார் பிரமிள். ஒவ்வொரு படைப்பும் ஒவ்வொரு ரகம். கொஞ்சம் கற்பனை, கொஞ்சம் ஆன்மீகம், கொஞ்சமே கொஞ்சம் காதல் என்று சில கதைகள் இருந்தாலும், சமுதாயத்தின் மீதான கோபமும், கூர்மையான விமர்சனமும் சாட்டையடியாக பல இடங்களில் வெளிப்படுகின்றன. “கோடரி“ சிறுகதையில் அரசமரம் ஒரு குறியீடாக வருகிறது. பெரும்பான்மையினருக்கும் சிறுபான்மையினருக்கும் இடையே பகடையாடப்படும் அரசமரம் ஒரு பிரிவினரால் கோடரி வீச்சுக்கு ஆளாகி ஊர் இரண்டுபடுகிறது. கதையின் மையச்சரடு இதுதான். 1967 ல் எழுதப்பட்ட இக்கதை, பல ஆண்டுகளுக்குப் பின்னால் நடந்த பல இனக்கலவரங்களின் குறியீடாக அமைகிறது. சில விஷயங்களில் மக்கள் மாறுவதே இல்லை என்பது கசப்பான உண்மை. இனி பிரமிளின் வரிகளில் எனக்குப் பிடித்த பகுதியொன்று,
”அன்று மாலை அச்சந்தி ஜனசந்தடியற்றுப் போயிற்று. மரம் தறி பட்டதில் கொதிப்படைந்த பெரும்பான்மையினரின் குடி நருக்கமான தெருவொன்றில் ஒருவன் சைக்கிள் விபத்தில் சிக்கி காயத்தோடு ஆஸ்பத்திரிக்குப் போனான். அவன் மனிதர்களால் தாக்கப்பட்டதான வதந்தியாயிற்று. இந்நிகழ்ச்சி. ஒவ்வொருவனும் தன் விரோதி இனத்ததை ஒற்றை மனிதனாக உருவகப்படுத்தினான். எவனும் அன்று அவன் இனத்தின் உருவகமாயினான். எவன் பாதிக்கப்பட்டாலும் அவன் இனமே சீறும் - அஞ்சும். இனத்தின் பெயர் மனிதனில் வந்து படிந்தது. அது மட்டுமல்ல, சில கூட்டத்தினர் வெவ்வேறு வகையான உத்தேசங்களுடன் செய்தவை இன அடிப்படையில் காரணம் கொண்டன. இதனால் அவர்களுடன் இன அடையாளத்தால் ஒற்றுமை கொண்டவர்கள் பெருமைப்பட்டனர். தன்னைவிடப் பிரம்மாண்டமானதுடன் ஒரே முத்திரையினால் ஒன்றுபட்டதில்தானே அப்பிரமாண்டமென ஒவ்வொரு துளியும் இறுமாந்தது. ஆனால், அதுவும் இன்னொரு பிரமாண்டத்துக்கு எதிரிடையானதுதான். பாவம், அந்தத் துளி தனித்து, அந்த எதிரிடையான பிரமாண்டத்தின் களத்தில் “தான்“ என இறுமாந்த தனது பிரம்மாண்டத்தின் பெயரில், ஆனால் ஒற்றைத்துளியாகவே சிந்தக்கூடும் எனக் காணவில்லை, சிந்திவிழும் கணம் வரை”
- பக்கம் 26 - பிரமிள் படைப்புகள்
எழுத்து வடிவின் அத்தனை சாத்தியக்கூறுகளையும் பரீட்சித்துப் பார்த்திருக்கிறார். ஒருபக்கக் கதைகள், சிறுகதைகள், குறுநாவல்கள், ஜனரஞ்சகக் கதைகள், தொடர்கதை, நாடகங்கள், பாவனை நாடகங்கள், தொலைக்காட்சி நாடகங்கள்,ஆங்கில நாவல்கள் என எதுவும் இவர் பார்வையிலிருந்து தப்பவில்லை. இவற்றோடு நின்று விடவில்லை. தேர்ந்த ஓவியராகவும், களிமண் சிற்பங்கள் செய்வதில் வல்லவராகவும் விளங்கியிருக்கிறார். அவரின் ஓவியங்கள் சிலவும் இத்தொகுப்பில் இடையிடையே இணைக்கப்பட்டுள்ளன.
பரீட்சார்த்த முயற்சி என்று எதையும் ஒதுக்கி விடமுடியாது. அத்தனையிலும் அப்படி ஒரு உழைப்பு பொதிந்து கிடக்கிறது. நட்சத்ரவாசி நாடகத்தின் நுண்மை நம்மை வியக்கவைக்கிறது. அத்தனை கதாபாத்திரங்களுக்கும், ஒவ்வொரு சின்னசின்ன அசைவுகளும் கூட எப்படி இருக்க வேண்டும் என்று எழுதிவைத்திருக்கிறார். ஒவ்வொரு கதைக்கும் தனித்தனியாக ஒரு எழுத்துநடையையே வைத்திருக்கிறார். குறிப்பாக அவரின் அறிவியல் புனைகதைகளைச் சொல்ல வேண்டும். ”உங்கள் காதலுக்கு வீட்டில் எதிர்ப்பா? இருக்கவே இருக்கிறது HAC3000 சூப்பர் கம்ப்யூட்டர்” என்கிறது ”அசரீரி” சிறுகதை. காதலைச் சேர்த்து வைக்கும் சூப்பர் கம்ப்யுட்டர் கொஞ்சம் ஜனரஞ்சகக் கதைக்கான கருவாகத் தெரிந்தாலும், ஒரு சுவாரஸ்யமான அறிவியல் புனைகதை இது. 90 களின் தொடக்கத்தில் இதுமாதிரி சில அறிவியல் புனைவுகள் எழுதியிருக்கிறார். அந்தக் காலகட்டத்தில் சுஜாதாவைத் தவிர வேறு யாரும் இவ்வளவு சிறப்பாக அறிவியல் புனைவுகளைக் கையாண்டதாக நினைவிலில்லை.
ஒரு மாயத்தன்மைக்கான கூறு இவரின் பெரும்பாலான கதைகளில் புதைந்திருக்கிறது. அதுவே கதைக்கு ஒரு விதமான எதிர்பார்ப்பு நிலையைக் கொடுத்து கடைசி வரை நம்மை அதே ஈடுபாட்டுடன் அழைத்துச் செல்கிறது.
குறியீடுகளை அவற்றிற்கே உரிய லாவகத்துடன் பயன்படுத்தும் வித்தை தெரிந்திருக்கிறது இவருக்கு. அதன் உச்சமாக வருகிறது “லங்காபுரி ராஜா” என்ற சிறுகதை. இலங்கைப் பிரச்சனையின் உக்கிரத்தையும் அதன் ஆழத்தையும் ஒரு உடும்பைக் குறியீடாகக் கொண்டு விவரிக்கிறார். இலங்கைப் பிரச்சனை தொடர்பான படைப்புகளை அதிகம் வாசித்திருக்கா விட்டாலும், இப்படைப்புக்கு அப்பட்டியலில் தனித்ததொரு இடமிருக்கும் என்று உறுதியாகச் சொல்லமுடியும்.
பல சிறுகதைகளில் தென்படும் அந்த நான்-லீனியர் கதைசொல்லும் உத்தியைப் புரிந்து கொள்ளத்தான் கொஞ்சம் நேரம் பிடிக்கிறது. மற்றபடிக்கு ஒரு ஆர்ப்பாட்டமில்லாத ஆழமான வாசிப்பனுபவம் தருபவை பிரமிள் படைப்புகள். சொல்லிக்கொண்டே போனால் எல்லா கதைகளைப்பற்றியும் சொல்லவேண்டும். அதனால் மிச்சத்தை உங்களுக்கே விட்டுவிடுகிறேன்.
இந்நூலின் முன்னுரையிலிருந்து ஒரு வரி.
”நோக்கமில்லாமலே ஓர் அக்கறையான வாழ்க்கை வரலாறு [இத்]தொகுப்புக்குள் புதைந்து கிடக்கிறது. கதைகளைப் பிரமிளாகவும் பிரமிளைக் கதைகளாகவும் கண்டுகொள்ள இந்நூல் உதவும்”
படித்து முடிக்கையில் உண்மையென்றே பட்டது.
பிரமிள் என்ற பன்முக ஆளுமை கொண்ட படைப்பாளிக்கு நாம் செய்யும் மிகப்பெரிய மரியாதை அவரை இன்னும் பலரிடம் கொண்டு சேர்ப்பதே. அப்பணியைச் செவ்வனே தொடங்கி வைத்துள்ளனர் அடையாளம் பதிப்பகத்தார். இப்பதிவினால் இன்னும் சிலருக்கு அந்த அறிமுகம் கிட்டுமானால், தேர் வடம் பிடித்த திருப்தி எனக்கும் ஏற்படுகிறது.
விருபா இணையதளத்திலிருந்து ஆசிரியரைப்பற்றி
இலங்கையின் திருக்கோணமலையில் 20.04.1939 இல், தருமராசன்-அன்னலட்சுமி தம்பதியினருக்கு ஒரே மகனாகப் பிறந்தவர். இலங்கையில் பிறந்தாலும், அறுபதுகளின் இறுதியிலேயே இந்தியா வந்து, தமிழ் நாட்டு எழுத்தாளராகவே வாழ்ந்து, 1971 இலிருந்து சென்னையில் தனது பெரும்பாலனா வாழ்நாளைக் கழித்தவர். புற்றுநோய்ப் பாதிப்பால், தமிழ்நாட்டில் வேலூரை அடுத்த கரடிக்குடி என்னும் ஒரு சிறு கிராமத்தில் 06.01.1997 இல் அடக்கம் பெற்றார்.
இவர், தருமு சிவராம் என்றே ஆரம்ப காலங்களில் அழைக்கப்பட்டார். எண்கணித ஈடுபாட்டால், விதவிதமாகத் தன் பெயரை மாற்றி எழுதிக்கொண்டே இருந்தார். இலக்கிய ஈடுபாட்டையும் மீறி நின்றது அவரது ஆன்மீக அக்கறை. நவீன தமிழின் முதன்மையான கவிஞராகவும், முதன்மையான விமர்சகராகவும் சிறுகதையாசிரியராகவும் ஓவியராகவும் களிமண் சிற்பங்கள் செய்வதில் வல்லவராகவும் பிரமிள் விளங்கினார். படிமக் கவிஞர் என்றும் ஆன்மீகக் கவிஞர் என்றும் சிறப்பிக்கப்பட்ட இவரது கவித்துவம், இரண்டாயிரமாண்டுத் தமிழ்க் கவிதை வரலாற்றில் தனித்துயர்ந்து நிற்பதாகும். இவரது கவிதையும் உரைநடையும், தமிழ் மொழிக்கு நவீன தொனியையும், தமிழ் அறிவுலகிற்கு அதுவரையில்லாத பரிமாணத்தையும் அளித்தன. ஓவியராகவும் சிற்பியாகவும் தொடங்கிய இவரது படைப்பு வாழ்க்கை 1960 இல் சென்னையில் இருந்து வெளிவந்த "எழுத்து" பத்திரிக்கையில் எழுதத் தொடங்கிய பிறகு, புதுக்கவிஞராகவும், விமர்சகராகவும் மாற்றம் கொண்டு, உயர்ந்தபட்சக் கற்பனைத் திறனும் உள்ளூடுருவும் பகுப்பாய்வுச் சக்தியும் கொண்ட எழுத்தாளராக அவரை நிலை நிறுத்தியது.
- Bee'morgan
(http://beemorgan.blogspot.com/)
No comments:
Post a Comment