Thursday, November 19, 2009

52. பதேர் பாஞ்சாலி - நிதர்சனத்தின் பதிவுகள்

பதிவிடுகிறவர் நண்பர் ஞானசேகர். நன்றி!

Not to have seen the cinema of Roy would mean existing in the world without seeing the sun or the moon.

- Akira Kurosavoa

------------------------------------------------------------------
புத்தகம்: பதேர் பாஞ்சாலி - நிதர்சனத்தின் பதிவுகள்
ஆசிரியர்: எஸ்.ராமகிருஷ்ணன்
வெளியீடு: உயிர்மை பதிப்பகம்
விலை: 90 ரூபாய்
பக்கங்கள்: 151

------------------------------------------------------------------

சத்யசித் ரே இயக்கி முதன்முதலில் வெளிவந்த திரைப்படம் பதேர் பாஞ்சாலி (Pather Panchali). வங்காள மொழி (Bengali). 1955 ம் ஆண்டு. மேற்கு வங்காள மாநில அரசு தயாரித்த திரைப்படம். அதன் பொன்விழா ஆண்டிற்குப்பின், அம்மாபெரும் படைப்பைப் புரிந்துகொள்ளும் முயற்சியாக எஸ்.ராமகிருஷ்ணன் அவர்கள் எழுதிய புத்தகமே இது. இயக்குனர் மகேந்திரன் அவர்களின் 'நடிப்பு என்பது' அடுத்து நான் படித்த சினிமா பற்றிய புத்தகம் இது.

பழைய தெரிந்தவர்களின் தழும்புகள் மூலம் அடையாளப்படுத்திக் கொள்ளும் பக்குவம். லோனாவாலா நகரின் குளிரின் நடுவே நீர்வீழ்ச்சியின் காலடியில் கேட்கும் தவளை சத்தம். எறும்புகளோடு வரிசைதவறியோடும் கோடை வெக்கை. நல்லதங்காளின் கேசம்போல் மிதக்கும் கிணற்றுப்பாசி. இப்படி பல தருணங்களில் எஸ்ரா சொன்ன அனுபவங்களைத் தேடிப்போய் ரசித்திருக்கிறேன். உலகின் ஏதோவொரு மூலையில் இருந்துகொண்டு வீட்டுச் சன்னலருகில் இருக்கும் தொலைபேசிக்கு அழைத்து இரண்டு நிமிடங்கள் பேசிமுடிக்கும் அவசரமான தட்டை உலகத்தில், வீட்டின் சன்னலில் இருந்து உலகைத் தொடங்கும் அற்புதப் பால்யப்பருவ நினைவுகளை வருடிச் செல்லும் எழுத்து அவருடையது. நான் கவனிக்காத ஏதோ ஒன்றை எஸ்ரா கவனித்திருப்பார்; அல்லது இப்படியும்கூட கவனிக்கலாம் என்றாவது சொல்லியிருப்பார். இந்த நம்பிக்கைதான் இப்புத்தகம்.



எனக்கு இப்படத்தை அறிமுகப்படுத்திய நபர் அல்லது ஊடகம் பற்றி எனக்கு நினைவில்லை. இரண்டு வருடங்களுக்கு முன் இரண்டு வாரங்கள் காத்திருந்து இப்படத்தின் குறுந்தகடு Landmarkல் வாங்கினேன். வெவ்வேறு தருணங்களில் படத்தைப் பார்த்துவிட முயன்றேன். 30 நிமிடங்களுக்கு மேல் முடியவில்லை. மிகமிக மெதுநடை. கிடப்பில் கிடந்த குறுந்தகடை ஆறுமாதங்களுக்கு முன்புதான் மீண்டும் எடுத்து, நண்பன் ஒருவனுடன் முழுவதும் பார்த்து முடித்தேன். படம்முடியும்வரை பேசிக்கொள்ளவில்லை. அதன்பிறகு சில காட்சிகளை மீண்டும் ஓட்டிப்பார்த்து, நீண்டநேரம் அப்படத்தைப் பற்றி பேசிக்கொண்டிருந்து கைக்கெட்டிய உன்னத படைப்பின் திருப்தியில் தூங்கிப்போனோம்.

கதாநாயகன், கதாநாயகி இல்லாத கதையில் யாரைச்சுற்றி கதை சொல்வது? படம்பார்த்த எல்லோரும் தேர்ந்தெடுக்கும் பாத்திரம், துர்கா. ஓர் ஏழை பெற்றோரின் மூத்தமகள் துர்கா. அவளின் தம்பி அப்பு. அக்குடும்பமே கெதியென அவர்களுடன் வாழ்ந்துவரும் ஒரு பாட்டி. ஒரு மேற்கு வங்க கிராமத்தில் வறுமைப்பிடியில் கசக்கிப் பிழியப்படும் இக்குடும்பம், துர்காவின் இறப்பிற்குப்பின் காசியில் குடியேறுவதே கதைச்சுருக்கம்.



1955லேயே காட்சியமைப்பில் அழகானதொரு வித்தியாசம் காட்டியிருக்கும் படம். ஒரு செடியின் உயரத்தை வைத்து காலவோட்டத்தைச் சொல்லும் உத்தி. சன்னலின் வழியாக ரயில் பார்க்கும்போது துர்காவின் கண்களில் மின்னும் பால்யப்பருவத்தின் ஆனந்தம். மிட்டாய்க்காரனைத் துரத்திக் கொண்டோடும் பிள்ளைப் பருவத்தின் ஏமாற்றங்கள். துர்கா இறந்தபின் மழையில் நனைய மறுக்கும் அப்புவின் குழந்தைப்பருவ மரண அனுபவம். முகத்தை அறுப்பதுபோல் நாணலின் ஊடே ஓடும் காற்றின் இசை (இசையமைப்பாளர் பண்டித் ரவிஷங்கர்). மனிதப்புழக்கம் இல்லாமல்போக பாம்படையும் வீடு. யாரும் அதிகம் பேசுவதில்லை; அழுவதுமில்லை. இந்தியக் கிராமங்கள் நகரம் நோக்கி நகர்வதை உணர்வுப்பூர்வமாக சொல்லும் ஓர் அற்புதத் திரைப்படம். தவறாமல் பார்க்கலாம்.

எஸ்ராவின் இப்புத்தகத்தைச் சென்ற மாதம்தான் படித்தேன். ஒரு பார்வையாளன் என்ற நிலைக்கு அடுத்தக் கட்டத்திற்குக் கூட்டிப் போனது இப்புத்தகம். இதைப் பால்யத்தின் திரைப்படம் என்கிறார் எஸ்ரா. துர்கா என்ற சிறுமி ஏன் இத்தனை நெருக்கமாகிப் போகிறாள்? ஒவ்வொருவர் வாழ்விலும் சிறுவயதில் பார்த்த யாரோ ஒரு சிறுமியை நினைவுபடுத்துகிறாள் துர்கா. துர்காவைப் போல தம்பிகளை நேசிக்கும் அக்காக்களை நாம் அனைவரும் பார்த்திருப்போம். அக்கா இல்லாமல் இருக்கிறோமே என்று சிறுவயதில் கவலைப்பட்டு அழுதிருக்கிறார் எஸ்ரா. நானும்தான். (அக்கா Complex பற்றி எனது தளத்தில் ஒரு சிறுகதை எழுத ஒருவருடமாக முயன்றுகொண்டிருக்கிறேன். விரைவில் நீங்கள் படிக்கலாம்)

துர்கா இறந்த துக்கத்தில் இருக்கும் ஓர் எளிய பார்வையாளனைத்தாண்டி, அவள் உயிரோடிருந்தால் என்னவாயிருக்கும்? அப்புவின் உலகம் எப்படி மாறியிருக்கும்? இவையாவையும்விட ஊரைவிட்டு வெளியேறிச் சென்ற குடும்பங்கள் யாவின் பின்னாலும் ஒரு துர்மரணம் இருந்திருக்கிறது என்பதை அழுத்தமாகச் சொல்கிறார் எஸ்ரா. கண்ணுக்குத் தெரியாத ஏதோ காரணங்களை நினைவுபடுத்துவது மட்டுமல்லாது, ஓர் இரவே வாழ்ந்தாலும் மின்மினிப்பு காட்டிச் செல்லும் மின்மினிப்பூச்சி போல வாழ்வின் வசீகரத்தைத் துர்கா என்பவள் வெளிப்படுத்துவதை எஸ்ரா சொல்லித்தான் கலையின் அழகியல் புரிகிறது.



எஸ்ராவின் தேடுதல் திரையோடு முடிந்துவிடவில்லை. படத்தின் மூலநாவலான விபூதிபூசணின் பதேர் பாஞ்சாலியையும் படித்திருக்கிறார்! நாவலைத் திரைப்படுத்தும்போது செய்யப்பட சமரசங்களையும் சொல்லியிருக்கிறார். எந்த இடங்களில் காகிதம் சிறப்பானதென்றும், எந்த இடங்களில் திரை சிறப்பானதென்றும் இரண்டிலும் சம்மந்தப்பட்ட ஆசிரியர் அழகாக சொல்லியிருக்கிறார். தங்கர் பச்சானின் கல்வெட்டை அழகியோடும், ஒன்பது ரூபாய் நோட்டுகளையும் நான் ஒப்பிட்டுப் பார்த்திருக்கிறேன். ச.தமிழ்ச்செல்வனின் 'வெயிலோடு போய்', சசியின் 'பூ'வானதை நண்பர் சேரலாதன் பலமுறை என்னிடம் சொல்லியிருக்கிறார்.

நாணலை மாடுகள் மேய்ந்துவிட மாதக்கணக்கில் படப்பிடிப்பு ஒத்திப்போடப்பட்ட - ஒரிஜினல் பிரிண்ட் தீவிபத்தில் அழிந்துபோக நகலில் வலம்வந்துகொண்டிருக்கும் - துர்கா பெரிய பெண் ஆவதற்குள்ளும் ஆதரவற்ற பாட்டி இறப்பதற்குள்ளும் படத்தை முடிக்கப் பாடுபட்ட - ஒருபடத்தைத் திரைக்குப்பின் ரசித்துப் பார்க்க எஸ்ராவின் இப்புத்தகம் உதவும்.

'இந்தியாவின் வறுமையைக் காசாக்குகிறார் சத்யசித் ரே' என்ற கருத்து பரவலாக உண்டு. படம்பார்த்துவிட்டு சொல்லுங்கள். இப்படத்தில் பணியாற்றியவர்கள் பெரும்பாலும் புதியவர்கள் என்பதால், சினிமாவின் நுட்பம் பரிட்சயமாக நாட்கள் ஆனதாகவும் படத்தின் ஆரம்பக் காட்சிகள் மெதுநடைக்கு அதுதான் காரணம் எனவும் ஒருமுறை இயக்குனர் சொல்லியிருக்கிறார்.

படம் பாருங்கள். புத்தகம் படியுங்கள். எஸ்ரா கேட்டதை, நான் கேட்டதை, நீங்களும் கேட்பீர்கள் - "எங்கே இருக்கிறாய் துர்கா?".

-ஞானசேகர்
(http://jssekar.blogspot.com/)

No comments: