Thursday, December 22, 2011

80. A TALE OF TWO CITIES

பதிவிடுகிறவர் நண்பர் ஞானசேகர். நன்றி!
-----------------------------------------------------
புத்தகம் : A Tale of Two Cities (புதினம்)
ஆசிரிய‌ர் : Charles Dickens (சார்லஸ் டிக்கின்ஸ்)
மொழி: ஆங்கிலம்
வெளியீடு : Vintage
முதற்பதிப்பு : 1859ம் ஆண்டு
விலை : 225 ரூபாய்
பக்கங்கள் : 404 (தோராயமாக 38 வரிகள் / பக்கம்)

-----------------------------------------------------

முடியாட்சி, நிலப்பிரபுத்துவம், கிறித்தவ திருச்சபை என்ற மும்முனைக் கொடூரங்களை எதிர்த்து, சிலுவைப்போருக்குப் பின் இங்கிலாந்திடமிருந்து பாதுகாத்துக்கொள்ள பாரீஸில் கட்டப்பட்ட பாஸ்டைல் சிறையை 1789ம் ஆண்டு ஜூலை 4ம் நாள் தகர்க்கின்றனர் பிரெஞ்சு மக்கள். இதைப் பிரெஞ்சுப் புரட்சி என்றும் ஜூலைப் புரட்சி என்றும் வரலாற்றுப் புத்தகங்களில் படித்திருப்போம். அதேவருடம் மேமாதம் போடப்பட்ட அப்புரட்சிக்கான வித்து, மேலும் பத்து வருடங்கள் நீடித்து, பிரான்ஸ் மட்டுமல்லாமல் ஐரோப்பாவையும் தாண்டி உலக நாடுகளையே திரும்பிப் பார்க்க வைத்தது. அக்காலக்கட்டத்தில் அரசரையும் அரசியையும் நிலப்பிரபுக்களையும் அறுபதாயிரத்திற்கு மேற்பட்ட மக்களையும் கொன்றுகுவித்து இரத்தபூமியாய் இருந்திருக்கிறது பிரான்ஸ். இயல்புநிலை திரும்பியபின் நெப்போலியன் ஆட்சியமைத்தது வரலாறு.

பத்து மைல்களுக்கு அப்பால் பாஸ்டைல் தகர்க்கப்பட்டது தெரியாமல், பாரீஸில் பதினாறாம் லூயி தனது நாட்குறிப்பில் 'Nothing' என்று எழுதிவிட்டு அப்பாவியாகத் தூங்கிப்போனதாக எங்கோ படித்தது இன்னும் நினைவிலிருக்கிறது. அவரின் தாயோ அல்லது மனைவியோ, யாரோ ஒருவர் பிரசவ சமயத்தில் இருக்கும்போது, பிரசவிக்கும் நேரம்பற்றி அரசர் கேட்கும்போது, வைத்தியர் சொன்னாராம்: 'அரசர் உத்தரவிடும்போது'. அந்த அளவிற்கு ஆளும்வர்க்கத்தின் கொடுங்கோல் பிரான்ஸில் மேலோங்கி இருந்ததாகவும் கேள்விப்பட்டிருக்கிறேன்.

பிரெஞ்சுப் புரட்சி பற்றி படிக்க வேண்டும், கிலாசிக் நூலொன்று படிக்க வேண்டும் என்ற எனது இரட்டை ஆசைகளை ஒருசேர நிவர்த்திசெய்ய நான் தேர்ந்தெடுத்த புத்தகம் - இரு நகரங்களின் கதை. மேனிலை வகுப்பில் ஆங்கிலத் துணைப்பாடத்தில் ஆலிவர் ட்விஸ்ட் மூலம் கிட்டத்தட்ட 30 மதிப்பெண்களை ஆக்கிரமித்துக்கொண்ட ஆசிரியர் பற்றி அறிமுகம் தேவையில்லை.

சுமார் 150 அடி தொலைவில் ஊர்வலம் போகும் கிறித்தவ பாதிரியார்களைக் கண்டும், மழையால் மண்டியிட்டு வணங்காமல் இருக்கிறான் ஒருவன். கடவுளிடம் பேசி மனித பாவங்களை மன்னிக்கும் அப்பாதிரியார்கள், அப்பாவத்திற்காக அவன் கைகளையும் நாக்கையும் வெட்டி உயிருடன் எரிக்கிறார்கள். இதுதான் அன்றைய பிரான்ஸில் மதத்தின் ஆதிக்கம். நிலப்பிரபுக்கள் தூக்கம் கெடாமல் இருக்க, தவளைகளின் சத்தத்தை அமைதிப்படுத்த விவசாயிகளை இரவு முழுதும் பனியில் காவலுக்கு அமர்த்துகிறார்கள். தனது குதிரைவண்டியின் கீழ் மாட்டி நசுங்கி இறந்துபோன ஒரு விவசாயியின் மகனின் இழப்பிற்காக, ஒரேயொரு காசை விட்டெறிகிறான் ஒரு நிலப்பிரபு. இதுதான் அன்றைய இங்கிலாந்தில் பணம்படைத்தவர்களின் ஆதிக்கம். கொடுங்கோல் அவ்வாறு தலைவிரித்தாடிய அக்காலத்தில், தனது சகோதரியை மானபங்கப்படுத்திக் கொன்ற நிலப்பிரபு ஒருவனின் மொத்த வம்சத்தையே அழிக்கத் துணியுமொரு தனியாளின் போராட்டத்தைப் பிரெஞ்சுப் புரட்சியினூடே இலண்டன் பாரீஸ் நகரங்களில் சொல்லியிருப்பதே கதைச்சுருக்கம். கதைபற்றி புத்தகத்தின் முடிவில்தான் ஒருமுடிவுக்கே வரமுடியும்!

1757 முதல் 1792 வரை. கிட்டத்தட்ட இக்காலத்தில்தான் மொத்தக்கதையும் நக‌ர்கிறது. 3 அத்தியாயங்களில் 45 தலைப்புகளின்கீழ் கதை சொல்கிறார். லூசி (Lucie) என்ற இங்கிலாந்து அழகு யுவதிதான் மொத்தக்கதையின் மையமாகவும், எல்லாரையும் எங்கோ இணைக்கும் மெல்லிய இழையாகவும் இருக்கிறாள். சங்கர் படங்களின் அப்பாவி பெற்றோர் போல், 18 வருடங்கள் பாஸ்டைல் சிறையில் தனிமையில்வாடி பித்தாகிப் போகிறார் லூசியின் தந்தை. பிரான்ஸ் போய் தந்தையை மீட்கிறாள். அவள்மேல் காதல் கொள்ளும் இருவர். அவளின் காதல் - திருமணம் - குழந்தை. இயல்பான குடும்பக்கதையாகப் போய்க்கொண்டிருக்கும் லூசியின் குடும்பம், பாஸ்டைல் தகர்க்கப்பட்டபின், பழிவாங்கத் துடிக்கும் புரட்சியாளர்களின் பிடியில் மாட்டிக்கொள்கிறது. பாரீஸிற்கும் இலண்டனுக்கும் மாறிமாறிப் பயணிக்கும் இவள் குடும்பம், பிரெஞ்சுப் புரட்சியில் தத்தளிப்பதே கடைசி அத்தியாயம்.

பதினைந்தாம் லூயியைக் கொல்ல முயலும் ஒருவனைக் கொதிக்கும் எண்ணெய் - ஈயம் - மெழுகு ஆகியவற்றில் குளிப்பாட்டி, 4 குதிரைகளை வைத்து மூட்டுமூட்டாகப் பிய்த்துக் கொல்லும் ஒரு குறிப்பைத்தவிர வேறெந்த இடத்திலும் உண்மையான மனிதர்களின் பெயர்கள் நேரடியாகக் குறிப்பிடப்பட்டதாக நினைவில்லை. பிரெஞ்சுப் புரட்சி என்றாலே நினைவில்வரும் வால்டேரும் ரூசோவும் எங்குமே இல்லை. புரட்சிக்கு 60 வருடங்களுக்குப்பின் இப்புத்தகம் வெளியிடப்பட்டு இருப்பதால், பரிட்சய‌மான விசயங்கள் என்று ஆசிரியர் தவிர்த்திருக்கலாம்.

முன்பின் தாவாமல் ஒரே நேர்க்கோட்டில் போகும் கதை. சில உளவாளிகளைத் தவிர மற்ற மாந்தர்கள் அதிகம் குழப்புவதில்லை. கதையின் பெரும்பான்மையை நீதிமன்ற வாதங்களும், ஒயின் ஷாப்பும் ஆக்கிரமிக்கின்றன‌. பிரான்ஸ் இங்கிலாந்து என்ற இரு எதிரிநாடுகளுக்கும் மாறிமாறி உளவு செய்யும் சிலர். கதையின் போக்கையே இரண்டு இடங்களில் புரட்டிப் போடும் இருவரின் உருவ ஒற்றுமை. அடையாளங்களை மறைப்பதற்காக ஒரே பெயரிலேயே நான்கு புரட்சியாளர்கள். 'அன்பே சிவம்' திரைப்படம் போல் பெயர்களும் கதை சொல்கின்றன. உதாரணமாக, புரட்சிக்குக் காரணமான காபேல் என்ற உப்புவரியைக் குறிக்கும் வகையில் காபேல் (Gabelle) என்று ஒரு தபால்காரன் உண்டு.

200 ஆண்டுகள் மற்றும் ஐந்தரை மணிநேரத் தொலைவில் இருக்கும் எனக்கு, ஆசிரியர் குறிப்பால் உணர்த்தும் சிலவிசயங்களும் அக்கால நடைமுறைகளும் சரியாகப் புரிந்துகொள்ள முடியவில்லை. 70 வயது மதிக்கத்தக்க ஒரு வங்கி ஊழியன் தனது வாடிக்கையாளர் ஒருவரின் குடும்ப விவகாரங்களில் அலுவல் நிமித்தம் இந்த அளவுக்குத் தலையிட அன்றைய இங்கிலாந்து அனுமதித்திருக்கிறது என்பதை இன்னும் என்னால் கற்பனைகூட செய்யமுடியவில்லை. பெரும்பாலான முக்கிய நிகழ்வுகளில் ஒருத்தி எண்ணிக்கொண்டே ஏதோ பின்னுவதைக் (knit) குறிப்பாகச் சொல்கிறார். அவள் பின்னுவது கூடையா துணியா வேறெதுமா என்று படமொன்று இருந்தும்கூட யூகிக்க முடியவில்லை.

பிரெஞ்சுப் புரட்சியென்றால் மனிதத்தலைகளைக் கொய்யும் கில்லட்டின் (Guillotine) என்ற பிரம்மாண்ட கருவிபற்றி கேள்விப்பட்டிருப்போம். இப்புத்தகத்தின் முக்கிய நபர் ஒருவர் அதில் கொல்லப்படும் நாளொன்றில், 52 (வருடத்தின் வாரங்கள்) பேர் தலையிழந்ததாக ஒரு செய்தியுண்டு. இன்று கொல்லப்படுபவனின் இரத்தம், நேற்று கொல்லப்பட்டவனின் இரத்தத்துடன் கலப்பதற்குள், நாளை கொல்லப்படுபவர்கள் தயாராக இருப்பார்களாம்! இந்த வீதத்தில் இயக்கப்பட்ட கில்லட்டின் பற்றி ஆசிரியர் சொல்கிறார்:
"தலைவலிக்கு மிகச்சிறந்த மருந்து. தலைமுடி உதிர்வதையும் நிறமாறுவதையும் முழுதும் தடுக்கிறது. மனிதயினத்தைப் புதுப்பிக்கப் போகும் அடையாளமிது. மனித மார்புகளில் தொங்கிக் கொண்டிருக்கும் இயேசுவின் சிலுவைக்கு மாற்றுச்சின்னமிது. சிலுவைகள் மறுக்கப்பட்ட இடங்களிலும் தன்னைத் தலைவணங்கச் செய்கிறது. ஒரு குட்டிப்பிசாசின் புதிரான‌ பொம்மைபோல், பாகம் பாகமாகப் பிரிக்கப்பட்டு அரங்கேற்றத்தின்போது மீண்டும் உண்டாக்கப்படுகிறது. வலிமையை வீழ்த்துகிறது. அழகையும் நன்மையையும் அழிக்கிறது".

இப்புத்தகம் படித்த அனைவரும் கண்டிப்பாக மேற்கோள்படுத்தும் ஒருபத்தி உண்டு. நான் இப்புத்தகத்தைப் படிக்க தேர்ந்தெடுத்தத‌ற்கு, மேலோட்டமாக வாசித்துப் பார்த்த அப்பத்தியும் ஒருகாரணம். 1775ம் ஆண்டை ஆசிரியர் அறிமுகப்படுத்தும் புத்தகத்தின் ஆரம்பவரிகள் இவை:
It was the best of times, it was the worst of times, it was the age of wisdom, it was the age of foolishness, it was the epoch of belief, it was the epoch of incredulity, it was the season of Light, it was the season of Darkness, it was the spring of hope, it was the winter of despair, we had everything before us, we had nothing before us, we were all going direct to Heaven, we were all going direct the other way—in short, the period was so far like the present period, that some of its noisiest authorities insisted on its being received, for good or for evil, in the superlative degree of comparison only. There were a king with a large jaw and a queen with a plain face, on the throne of England; there were a king with a large jaw and a queen with a fair face, on the throne of France. In both countries it was clearer than crystal to the lords of the State preserves of loaves and fishes, that things in general were settled for ever.

நிலப்பிரபுக்களின் கொடுமை தாங்காமல் தன்குலப்பெண்களை மலடாகச் சொல்லிப் புலம்பும் ஒரு பிரெஞ்சு விவசாயியின் வார்த்தைகள் என்னைப் பாதித்த வரிகள்:
We were so robbed by that man who stands there, as an we common dogs are by those superior Beings taxed by him without mercy, obliged to work for him without pay, obliged to grind our corn at his mill, obliged to feed scores of his tame birds on our wretched crops, and forbidden for our lives to keep a single tame bird of our own, pillaged and plundered to that degree that when we chanced to have a bit of meat, we ate it in fear, with the door barred and the shutters closed, that his people should not see it and take it from us I say, we were so robbed, and hunted, and were made so poor, that our father told us it was a dreadful thing to bring a child into the world, and that what we should most pray for, was, that our women might be barren and our miserable race die out!

நமக்கும் இவ்விரு நகரங்களுக்கும் இடையேயுள்ள கலாச்சார இடைவெளி; கதைநடக்கும் காலத்தைய உலக அறிவு; பிரெஞ்சு வசனங்களை நேரடியாக ஆங்கிலப்படுத்தி இருப்பதால் சில இடங்களில் புரியாமல்போகும் வசனங்கள். இச்சிறு தடைகளைக் கொஞ்சம் பொறுத்துக் கொண்டால், சார்லஸ் டிக்கின்ஸின் உலகப்புகழ்பெற்ற வரலாற்றுப் புதினம் உங்களுக்கும் பிடிக்கும்!

அனுபந்தம்:

புத்தகத்திற்கு அப்பால்,

1. BBC தேர்வு செய்த சிறந்த 100 ஆங்கில நாவல்களில் ஒன்று.

2. A tale of two cities, War and Peace, The god of small things - தனிப்பட்ட முறையில் இம்மூன்று புத்தகங்களிலும் எனக்கு ஒரு வித்தியாசமான‌ அனுபவம் உண்டு. இம்மூன்று புத்தகங்களையும் முதன்முதலில் படிக்க ஆரம்பித்து, நூறு பக்கங்கள் தாண்டியபிறகு கதாப்பாத்திரங்களில் குழம்பிப்போய் அப்படியே படிக்காமல் கைவிட்டிருக்கிறேன். மற்ற இரண்டு புத்தகங்களையும் மறுபடியும் தொடவேயில்லை. விரைவில் படிக்கவேண்டும்.

3. மதுரை காந்தி அருங்காட்சியகத்தில், மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி அவர்கள் படித்த சில புத்தகங்கள் பார்வைக்கு வைக்கப்பட்டிருக்கும். அவற்றில் ஒன்று பிரெஞ்சுப் புரட்சி ப‌ற்றியது. அதுதானா இதுவென்று எனக்குச் சரியாக நினைவில்லை.

- ஞானசேகர்
(http://jssekar.blogspot.com/)

No comments: