பதிவிடுகிறவர் நண்பர் ஞானசேகர். நன்றி!
The first in line is tied to a tree and the last is being eaten by ants.
-------------------------------------------------------------------------------------------
புத்தகம் : One Hundred Years of Solitude (புதினம்)
ஆசிரியர் : Gabriel Garcia Marquez
மொழி : ஸ்பானிஷில் இருந்து ஆங்கிலம்
வெளியீடு : Penguin Books
முதற்பதிப்பு : 1967
விலை : 299 ரூபாய்
பக்கங்கள் : 422 (தோராயமாக 35 வரிகள் / பக்கம்)
-------------------------------------------------------------------------------------------இலத்தீன் அமெரிக்க நாடுகளின் இலக்கியம் படிக்க வேண்டும் என்ற ஆவலில் நான் தேர்ந்தெடுத்த சில புத்தகங்களில் ஒன்று - நூறாண்டுத் தனிமை. 1982ம் ஆண்டில் இலக்கியத்துக்கான நோபல் பரிசு பெற்ற கேப்ரியேல் கார்சியா மார்க்வெஸ் அவர்கள்தான் ஆசிரியர். கொலம்பியா என்ற ஒரு நாடே விவிலியத்திற்கு அடுத்தபடியாக இப்புதினத்தைத்தான் அதிகமாகப் படிக்கிறது. 37 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு 2 கோடிக்கும் அதிகமான பிரதிகள் விற்பனையாகி உள்ளன. அதிகாரப்பூர்வமற்ற கள்ளப் பிரதிகளாக ஒரு கோடிக்கும் மேல் விற்றிருக்கும் என்கிறார் எஸ்.ராமகிருஷ்ணன், தனது 'விழித்திருப்பவனின் இரவு' புத்தகத்தில்! கொலம்பியா நாட்டில் ப்யூன்டியா (Buendia) குடும்பத்தின் ஏழு தலைமுறைகளின் கதையை 20 அத்தியாயங்களில் சொல்கிறது இப்புதினம். இரண்டாம் அத்தியாயத்தின் கதை கொஞ்சம் சொல்கிறேன். இல்லையேல் நான் சொல்லப் போவது எதுவுமே புரியாது.
அந்த இரண்டு மனித இனங்களுக்குள் மணம் முடித்தால் பன்றி வாலுடன் குழந்தை பிறக்கும் என்ற நம்பிக்கையையும் மீறி தன் காதலியைக் கைப்பிடிக்கிறான் கதாநாயகன். அதே நம்பிக்கையைப் பல கடந்தகால உதாரணங்களுடன் உறுதிப்படுத்தி, கதாநாயகியைப் பயமுறுத்தி, கசாமுசா எதுவும் நடந்துவிடாமல் இருக்க, பாய்மரத்துணியில் தோல்நாருடன் ஒரு பெட்டி செய்து, இரும்பால் பூட்டி, தினமும் படுக்கைக்கு அனுப்புகிறாள் கதாநாயகியின் தாய். பகல்வேளைகளில் சேவற்சண்டையில் கதாநாயகனும் கூடைபின்னி கதாநாயகியும், இரவு வேளைகளில் வாய்ச்சண்டையிலும் ஒரு வருடத்தை ஓட்டிவிடுகிறார்கள்.
இன்னமும் கதைநாயகி கன்னியாகவே இருக்கிறாள் என்று தெரிந்தவுடன், ஊர்வாய் கதாநாயகனின் ஆண்மையைக் கிசுகிசுக்கிறது. கதாநாயகனிடம் சேவற்சண்டையில் தோற்றுப்போன ஒருவன் வாயை வைத்துக் கொண்டு சும்மா இருக்காமல், கதாநாயகனின் சேவலைக் குழந்தைவரம் கொடுக்க கதாநாயகியிடம் அனுப்பச் சொல்கிறான். கடுப்பான கதாநாயகனின் ஈட்டி அவன் தொண்டை கிழிக்கிறது. செத்தும் கெடுத்த கதையாய் அவன் கதாநாயகிக்குப் பிரம்மையாக அடிக்கடி தோன்றி, தொண்டைக் காயத்தைப் புல்லால் அடைப்பது போல் பாசாங்கு செய்கிறான். பிடுங்கல் தாங்கமாட்டாத கதாநாயகன் இன்னும் சிலருடன் சேர்ந்து, கண்காணாத தேசத்திற்குச் செல்லும் நோக்கில் ஆண்டிஸ் மலைகளைத் தாண்டி கடல் தேடித்தேடி 26 மாதங்கள் கழித்து ஒரு சதுப்புநிலத்தில் மகன்டோ (Macondo) என்ற நகரத்தை உருவாக்குகிறான். 300 பேர்களுடன் ஆரம்பமாகும் அச்சிற்றூர் 30 ஆண்டுகளாகியும் இறப்பென்பது இல்லாமல் கல்லறைகூட இல்லாமல் வெளியுலகத் தொடர்பில்லாமல் மர்மமாக வாழ்ந்து வருகிறது. அதன் கதையை, அக்குடும்பத்தின் அடுத்த அறுதலைமுறைக் கதையைக் கொஞ்சம் கொலம்பிய உள்நாட்டுப் புரட்சி சேர்த்து சொல்வதுதான் இப்புதினம்.
ஒவ்வொரு வருடமும் மார்ச் மாதம் மட்டும் அவ்வூருக்கு வந்துபோகும், ஜிப்ஸி (Gypsy) என்ற வித்தைக்காரர்கள்தான் அவ்வூர் வைத்திருக்கும் ஒரே வெளியுலகத் தொடர்பு. மகன்டோ நகரத்தையும் அதன் மனிதர்களையும் ஜிப்ஸிகளையும் மாயமாகவே சித்தரிக்கிறார் ஆசிரியர். வெளியுலகத் தொடர்பற்று இருக்கும் அந்நகரின் மக்கள் மிகவும் புதிராகவே பின்னப்படுகிறார்கள். தூங்கினால் நினைவுகள் அழிந்துவிடுமென நம்பி நாட்கணக்கில் தூங்காமல் தவிப்பது முதல், உள்நாட்டுப் புரட்சி, பிரளயம், சூறைக்காற்று என்று பல்வேறு இன்னல்களைத் தன்னந்தனியே எதிர்கொள்கிறது அவ்வூர். அஃறிணைப் பொருட்களையும் உயிர்கொண்டு நகரவைக்கும் எட்டாவது உலக அதிசயமென்று காந்தத்தை அறிமுகப்படுத்துவது முதல் பனிக்கட்டி, மின்சாரம், சினிமா, இரயில்வண்டி என்று வெளியுலகக் கண்டுபிடிப்புகளை ஒவ்வொன்றாக ஜிப்ஸிகள்தான் மகன்டோ நகரத்திற்கு அறிமுகப் படுத்துகிறார்கள். ஜிப்ஸிகளிடம் ஈர்ப்பு கொண்ட ஒரே ஜீவனாக வலம்வரும் கதாநாயகன் சொந்தமாக ஆய்வுக்கூடமெல்லாம் அமைக்கிறான். ஆரஞ்சு பழத்தைப் போல பூமியும் உருண்டையானதென கதாநாயகன் கண்டுபிடிக்கும் நாளில், ஜிப்ஸிகளுடன் சேர்ந்தால் இப்படித்தான் பைத்தியம் மாதிரி பேசத்தோன்றுமென நகைக்கிறாள் கதாநாயகி.
நீண்ட வரலாறுடைய குடும்பம் என்பதால் முன்னோர்களின் பெயர்களையே வாரிசுகளுக்கும் வைத்துவிடுவதால் பல பெயர்களை நினைவில் வைத்துக் கொள்ளும் சுமை வாசகனுக்கு இல்லை. ஒத்த பெயர் உடையவர்கள் ஒரே மாதிரியான குணம் கொண்டிருப்பதைப் புத்தகம் முடித்தவுடன்தான் கவனித்தேன். புரட்சிக்காரர்களின் படுக்கைக்குத் தன் கன்னிமகள்களை அனுப்புவதைத் தேசபக்தியாகக் கருதிய காலத்தில், ஒருவன் 17 பெண்கள் மூலம் 17 ஆண் குழந்தைகளுக்குத் தந்தையாகிறான். 17 பெயருக்கும் ஒரே பெயராக அப்பனின் பெயர். வித்தியாசம் காண தாயின் பெயரையும் கடைசியில் சேர்த்துக் கொள்கிறார்கள். இதுபோல பாத்திரங்களுக்குப் பெயர் சூட்டிய முறையில் தனித்து நிற்கிறார் ஆசிரியர்; ரசிக்கவும் வைக்கிறார்.
காலம் ஒரே வட்டத்திற்குள் சுற்றிச் சுற்றி, ஒரு தலைமுறை செய்த தவறுகளை இன்னொரு தலைமுறையையும் செய்ய வைக்கிறது; ஒன்று செய்யாமல் விட்டதை இன்னொன்றையும் செய்யவிடாமல் செய்து விடுகிறது; ஒன்று செய்ய முடிந்ததை இன்னொன்றால் செய்ய முடியாமல் செய்கிறது. ஜிப்ஸிகளின் மூலம் தன்னிறைவு பெற்ற ஊரை ஒருகால கட்டத்தில் அவர்கள் கைவிடுகிறார்கள். போப்பாக, அரசியாக, புதையலைக்கவர என புதினம் முழுவதும் பற்பல ஆசைகளைச் சுமக்கிறார்கள். 65 முறைகள் ஒருவன் உலகைச் சுற்றி வருகிறான். வீட்டுச் சுவர்களைப் பணத்தால் மறைக்கிறான் ஒருவன். கண்ணுக்குத் தெரியாத மருத்துவர்களுடன் பேசி சிகிச்சை பெறுகிறாள் ஒருத்தி. உலகப் புத்தகங்களை எல்லாம், படிப்பதற்கு அல்லாமல், தனது அறிவைச் சரிபார்த்துக் கொள்ள உபயோகிக்கிறான் ஒருவன். சொந்தக் குடும்பத்திற்குள்ளே கூடாக்கலவியில் சிலர். ஊருக்கே தெரிந்த 7214 தங்கக்காசுகள் குடும்பப் புதையலின் மறைவிடத்தை வாரிசுகளுக்குச் சொல்ல மறுக்கிறார்கள். மர்மங்கள் நிறைந்த தனது சொந்த ஊரின் வரலாற்றையே நம்ப மறுக்கிறார்கள். எந்தக் கதாப்பாத்திரத்திற்கும் உண்மை அன்பே இல்லாமல் போவது அந்நகரின் சாபமாகிப் போகிறது.
கொலம்பியாவின் உள்நாட்டு அரசியலையும் புரட்சியையும் பற்றிப் புத்தகம் மேலோட்டமாகச் சொல்கிறது. ஆங்கிலேயர்களிடம் இருந்து விடுதலை கிடைத்தபின் மலை மற்றும் கடல்வாழ் மக்களின் வாழ்வாதாரங்களைச் சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் தனியார் தொழில்மயம் என்ற பெயரில் பறித்துக் கொள்ளும் நாம் கண்ட அரசுகள் போல், ஸ்பெயினிடமிருந்து விடுதலை கிடைத்தபின் வீடுகளுக்கு எல்லாம் நீலநிற வண்ணம் பூசச் சொல்கிறது சுதந்திர அரசு. வெள்ளைநிற வண்ணத்தை நீக்க மறுக்கும் கதாநாயகனின் முதல் எதிர்ப்பு தான் மகன்டோ நகரத்தின் தலையெழுத்தையே மாற்றி அமைக்கிறது. நம்நாட்டு ஜாலியன் வாலா பாக் போல, 3408 பேரைத் துச்சமாகச் சுட்டுக் கொன்று 200 தொடர்வண்டிகளில் பிணங்களைக் கடல்பக்கம் கொண்டுபோன கொடூரங்களையும் புதினம் பதிவுசெய்கிறது.
சுதந்திரக் கொலம்பியா பற்றி ஆசிரியர் சொல்லும் பின்வரும் வரிகளை மிகவும் ரசித்தேன்: The only difference today between Liberals and Conservatives is that the Liberals go to mass at five o' clock and the Conservatives at eight.
இப்புதினம் பற்றி மிகப் பரவலாகப் பேசப்படும் ஒரு விசயம் - மாய எதார்த்தம் (Magical Realism); மாய நிகழ்வுகளை உண்மை நிகழ்வுகளுடன் கைகோர்த்து நடக்கவிடும் கதையாடல். உதாரணமாக, ஜிப்ஸிகளில் ஒருவன் சிங்கப்பூரில் இறந்த பின்னும் கூட மகன்டோ நகரத்தில் சிலருக்கு மட்டும் தோன்றுகிறான்; உயிருடனேயே ஒருத்தி வானத்திற்கு எடுத்துக் கொள்ளப் படுகிறாள்; 4 வருடங்கள் 11 மாதங்கள் 2 நாட்கள் தொடர்மழை. இவை முறையே இயேசு, மேரிமாதா, நோவா என்று விவிலியத்தில் சாத்தியம் எனும்போது இப்புதினத்திலும் சாத்தியமே. இப்புதினத்தின் ஒரு கதாப்பாத்திரம் கர்ணன் போல பேழையில்தான் தண்ணீரிலேயே மிதந்து வருகிறான். மாய எதார்த்தம் என்ற ஒரு சித்தாந்தம் இருப்பது தெரியாமலேயே Midnight's Children படித்திருக்கிறேன். One Hundred Years of Solitude விட Midnight's Children இல் மாய எதார்த்தம் அதிகம்.
இப்புதினத்தில் தனித்துக் கவனிக்கப்பட வேண்டிய இன்னொன்று தனிமை (Solitude) என்ற நிலை. பெரும்பாலான கதாப்பாத்திரங்கள் கடைசியில் தனிமையை வேண்டி விரும்பி ஏற்றுக் கொள்கிறார்கள். அந்நிலைக்குப் போகாதவர்கள் கொடூரமாகவோ அல்லது மர்மமாகவோ மரணிக்கிறார்கள். தனிமை என்ற இந்நிலையே கதாப்பாத்திரங்களின் உச்சக்கட்ட சுயநலத்தைக் காட்டினாலும், தனிமை என்பதே கொலம்பிய பொருளாதாரத்தைச் சொல்லும் ஒரு குறியீடே என்கிறார்கள் சில படித்தவர்கள். ஜிப்ஸிகள் கூட இந்தியர்களுக்கான குறியீடோ என்று என் சிற்றறிவு சந்தேகிக்கிறது. யாராவது படித்தால் கவனித்துச் சொல்லுங்கள்.
இனிவரும் புதினங்களில் நான் ரசித்த சில விசயங்களைக் குறிப்பிட்டுச் சொல்ல முடிவு செய்திருக்கிறேன்.
பாத்திரம் : நீண்ட நாட்கள் உயிருடன் இருந்து, தலைமுறைகளின் மாற்றத்தை ஏக்கத்தோடு பார்த்துக் கொண்டு, புதையல் ரகசியத்துடனேயே வலம்வரும் கதாநாயகி Ursula Iguaran.
பகுதி : ஐந்தாம் தலைமுறையில் வரும் இரட்டையர்களின் பிறப்பும், குறுநகைதரும் மழலைப் பருவமும், சோகம்தரும் இறப்பும், இவருக்கும் வைப்பாட்டியாக இருப்பவளின் உறவும்.
குறியீடு : நான்காம் தலைமுறையில் வரும் 17 குழந்தைகளின் நெற்றிகளில் ஒரு பாதிரியார் இட்டுப்போகும் நிரந்தர சிலுவைக்குறி.
வரி : கருணை காட்ட மறுக்கும் காலத்தின் சாரமாக வரும் புத்தகத்தின் கடைசி இருவரிகள்.
ஒரு சராசரி வாசகனால் உட்கிரகித்துக் கொள்ள முடியாத அளவுக்கு இப்புதினம் ஒவ்வொரு பக்கத்திலும் உயிரோட்டமுள்ள கதை கொண்டிருப்பதாக ஒரு பரவலான கருத்து இருக்கிறது. ஒவ்வொரு வரியிலும் கதையின் மெல்லிழை பின்னப்பட்டிருக்கிறது என்பது உண்மையே! நான் மிகக் குறுகிய காலத்தில் படித்து முடித்த ஆங்கிலப் புதினம் இதுதான். எனது விருப்ப ஆங்கிலப் புதினங்களில் மூன்றாவது இடம் தந்துள்ளேன்.
காலம் ஒரு வித்தியாசமான ஆசான்; பரீட்சைக்குப் பின் பாடங்கள் போதிக்கிறது!
அனுபந்தம்:
ஜிப்ஸிகளில் ஒருவன் மரணப்படுக்கையில் முனகும் ஒருபெயர், புதினத்தில் ஒரேயொரு இடத்தில் வந்துபோகும் ஒருபெயர், நான் படித்துக் கொண்டிருந்த இன்னொரு புத்தகத்தில் மிகப்பெரிய திருப்புமுனை. அவர் அலெக்சாண்டர் ஃபொன் ஹும்போல்ட் (Alexander von Humboldt); உயிர்ப் புவியியலின் தந்தை. அட்லாண்டிக் பெருங்கடல் உருவாவதற்கு முன் தென்னமெரிக்காவும் ஆப்பிரிக்காவும் ஒரே நிலப்பகுதியாக இணைந்திருந்ததாக முதலில் சொன்னவர்.
- ஞானசேகர்
(http://jssekar.blogspot.com/)
No comments:
Post a Comment