Thursday, December 22, 2011

81. தமிழகத்தின் மரபுக் கலைகள்

பதிவிடுகிறவர் நண்பர் ஞானசேகர். நன்றி!

வெள்ளத்தின் பெருக்கைப் போல் கவிப்பெருக்கும்
கலைப்பெருக்கும் மேவுமாயின்
பள்ளத்தில் வீழ்ந்திருக்கும் குருடரெல்லாம்
விழிபெற்றுப் பதவிகொள்வார்
- மகாகவி

போலச்செய்யும் மனித மனப்பாங்குதான் கலைகள் தோன்றக் காரணம்.
- அரிஸ்டாடில்
-------------------------------------------------------
புத்தகம் : தமிழகத்தின் மரபுக் கலைகள் - களப்பணியும் ஆவணமும் கைகோர்க்கும் பதிவுகள்
ஆசிரிய‌ர் : எழிலவன் (வையம் கவிதைக் காலாண்டிதழ் ஆசிரியர்)
வெளியீடு : பிளாக்ஹோல் மீடியா (http://blackholemedia.in/)
முதற்பதிப்பு : ஆகஸ்ட் 2010
விலை : 160 ரூபாய்
பக்கங்கள் : 204 (32 தோராயமாக வரிகள் / பக்கம்)

-------------------------------------------------------
சில புத்தகங்களின் அட்டைப்படத்தை மட்டுமே பார்த்துவிட்டு வாங்கிவிடத் தோன்றும். அப்படிப்பட்ட நல்ல கருசுமக்கும் புத்தகங்களில் ஒன்று, எழிலவன் அவர்களின் 'தமிழகத்தின் மரபுக்கலைகள்'. தமிழகத்தில் இத்தனைக் கைவினைக் கலைகளும் நிகழ்த்துக் கலைகளும் இருக்கின்றனவா என வியக்க வைக்கும் வகையில் அந்தந்தக் கலைஞர்களைச் சந்தித்து விரிவாகப் பதிவு செய்யப்பட்ட அரிய நூல் என்கிறது முன்னட்டை.

நிகழ்த்துக் கலைகள், கைவினைக் கலைகள் என இருபெரும் பிரிவுகளாகத் தொகுக்கப்பட்டிருக்கும் கட்டுரைகளே இப்புத்தகம். இக்கட்டுரைகள் யாவும் மே 2008 முதல் தமிழ் இசை நாளேட்டில் 50 வாரங்கள் தொடர்ந்து வெளிவந்திருக்கின்றன. இரட்டை இலக்கத்தில் சில சொந்த ஆயிரம் ரூபாய்களைச் செலவுசெய்து, 50 ஊர்களுக்கு 50 வாரங்களில் பயணம்செய்து, தகவலாளர்களைச் சந்தித்து, தொகுத்து இக்கட்டுரைகளை வரைந்திருக்கிறார்.

முதலில் நிகழ்த்துக் கலைகள். கும்மி வில்லுப்பாட்டு பொம்மலாட்டம் சிலம்பம் மயிலாட்டம் காவடி கரகம் தோற்பாவைக்கூத்து என்று நமக்கெல்லாம் நன்கு பரிட்சயப்பட்ட கலைகள், குடமுழவமிசைப்பு பாகவதர்மேளா இலாவணி என்று அதிகம் பரிட்சயமில்லாத கலைகள் என மொத்தம் 24 நிகழ்த்துக் கலைகள் பற்றிய கட்டுரைகள். அடுத்ததாகக் கைவினைக் கலைகள். மட்பாண்டம் பாய் நாதசுவரம் தஞ்சையோவியம் வீணை சிற்பம் என மொத்தம் 14 கைவினைக் கலைகள் பற்றிய கட்டுரைகள்.

ஒவ்வொரு கட்டுரையிலும் அக்கலையின் பூர்வீகத்தையும், தொன்மையையும், காலம் செய்யும் மாற்றங்களையும், புராணங்களிலும் இலக்கியங்களிலும் அவற்றின் உபயோகங்களையும் முடிந்தவரை ஆவணப்படுத்தியிருக்கிறார் ஆசிரியர். ஓவ்வொரு கலை குறித்துச் சந்தித்த நபர்களின் பெயர்கள் இடம் வயது படிப்பு பற்றிய தகவல்களும், சந்தித்த தேதிகளையும், சேகரித்த சேதிகளையும், எடுத்த புகைப்படங்களையும் தந்திருக்கிறார். பெரும்பாலான கலைகள் திருவாரூர் தஞ்சை நாகை பகுதிகளையே சுற்றி அமைந்திருந்தாலும், எங்களூர் புதுக்கோட்டை புத்தகத்தின் ஒரு கலையில் வந்ததும் மகிழ்ச்சி.

ஒரே கலையின் பல்வேறு பெயர்களையும், அவற்றுள் பாரம்பரியமாகத் தொடர்ந்துவரும் மரபுகளையும், ஆண்-பெண் பாலினத் தாக்கங்களையும், சாதீய மதத் தாக்கங்களையும், இயந்திரப் பயன்பாட்டின் ஆதிக்கத்தையும், குறிப்பிட்ட விசேச கால‌ங்களில் மட்டுமே நிகழ்த்தப்படும் கலைகளை நம்பிவாழும் கலைஞர்களின் மற்ற தொழில்களையும் ஆவணப்படுத்தியிருப்பது அருமை. உதாரணமாக, பெண்களையும் காலணிகளையும் பயன்படுத்தாத பக‌ல்வேடக்கலை, பாடல்களே இல்லாத புலியாட்டம், வலங்கைமான் பகுதியில் சங்கூதி இறந்தவர்களைத் தூக்கிச் செல்வதுபோல் நடத்தப்படும் பாடைக்காவடி, மண்ணையுருட்டி பொம்மைகள் செய்த மண்ணுருட்டி என்ற ஊர் மரூவி பண்ருட்டியானது.

நம்மால் தவறாகத் தெரிந்து கொள்ளப்பட்ட சில கலைகள் பற்றிய தகவல்களையும் சுட்டிக்காட்டுவதில் ஆசிரியர் தவறவில்லை. உதாரணமாக, பெண்களையே காளியாட்டத்தில் திரைப்படங்களில் பார்த்திருந்த நமக்கெல்லாம், நடைமுறையில் ஆடவர் மட்டுமே காளியாடுவதாகக் கூறுகிறார். சில கலைகளின் நுட்பங்களைப் பார்த்து ஆச்சரியப்படாமல் இருக்கமுடியவில்லை. மண்பொம்மைகள் செய்பவர்கள் தூசுதுடைப்பதற்குப் பயன்படுத்தும் தூரிகைகள், பன்றி முடியொன்றினை நான்காகக் கிழித்துச் செய்யப்படுபவையாம். ஒரே மாதிரி தோன்றும் சிலகலைகளை ஒப்பிட்டு, அவற்றிக்கிடையேயான நுட்பமான வித்தியாசங்களைச் சொல்லியிருப்பதும் அருமை.

கட்டுரைச் சிமிழுக்குள் அடங்க மறுக்கும் கலைகளின் அறிமுக நிலையில் அடியெடுத்து வைத்து ஆழமான ஆய்விற்குத் திசைகாட்டும் முயற்சியே இக்கட்டுரைகள் என்கிறார் ஆசிரியர். பெரும்பாலான கலைகள், கலைஞனைப் பின்வைத்து கலையினை முன்னிலைப் படுத்துவதாகத்தான் அமைந்திருக்கின்றன. கலைஞனே யாரென்று தெரியாமல் நடக்கும் மாடாட்டம் போன்ற கலைகள், அறிவுத்திருட்டுவரை வந்துவிட்ட இன்றைய மனிதனுக்குச் சொல்லித்தரும் பாடங்கள் ஏராளம். இக்கலைகளில் ஈடுபடும் கலைஞர்களுக்கு இச்சமூகம் தரும் வருவாயும், சமூகமதிப்பும் மிகக்குறைவாய்ப் போனதால் பெரும்பாலான கலைகள் குற்றுயிருடன் தவித்துக் கொண்டிருக்கின்றன. அவற்றைக் காப்பாற்றும் நோக்குடன் அழகுதமிழில் இருக்கும் இந்நூல் பலரைச் சென்றடைய வேண்டும். வெ.நீலகண்டன் அவர்களின் ஊர்க்கதைகள், யுகபாரதியின் தெருவாசகம் வரிசையில் வீதிமனிதர்களின் புழுதியைப் புத்தகத்தில் ஒட்டவைக்கும் இதுபோன்ற முயற்சிகளை ஊக்குவிக்கும் ஆரோக்கியமான நிலை உருவாக வேண்டும்.

கலையும் மொழியும் இனத்தின் அடையாளங்கள். அவற்றைத் தொலைத்துவிட்டு தானும் தொலைந்துபோன இனங்கள், பாபிலோனில் தொங்கும் தோட்டம் அமைத்த அன்றுமுதல், எண்ணெய்க்காக பாபிலோனே எரிக்கப்படும் இன்றுவரை வரலாற்றில் ஏராளம். கலையையும் மொழியையும் மீட்டெடுப்பதும் காப்பதும் இனக்கடமை!

- ஞானசேகர்
(http://jssekar.blogspot.com/)

No comments: