வெற்றிக்கு ஆயிரம் தகப்பன்கள்; தோல்வி ஓர் அநாதை.
- மேலை நாட்டுப் பழமொழி
----------------------------------------------------------------------------------------------------------------------------------
புத்தகம்: The Story of a Shipwrecked Sailor (புதினம்)
ஆசிரியர்: Gabriel Garcia Marquez
ஸ்பானிஷில் இருந்து ஆங்கிலப்படுத்தியவர்: Randolph Hogan
வெளியீடு: Penguin Books
முதல் ஈடு: 1970
பக்கங்கள்: 106
விலை: 199 ரூபாய்
வாங்கிய இடம்: Landmark
----------------------------------------------------------------------------------------------------------------------------------
1955 பிப்ரவரியில் கொலம்பிய நாட்டுக் கப்பல் ஒன்றில் பயணம் செய்த 8 மாலுமிகள், கரீபியக் கடலில் புயலில் சிக்கிக் காணாமல் போகிறார்கள். சில நாட்களுக்குப் பின், அவர்கள் அனைவரும் இறந்துவிட்டதாகச் சொல்லி தேடுதலை நிறுத்துகிறார்கள். 10 நாட்களுக்குக் பிறகு, கொலம்பியக் கடற்கரைப் பகுதி ஒன்றில், கிட்டத்தட்ட இறந்துவிட்ட நிலையில் அவர்களில் ஒரு மாலுமி கரை ஒதுங்குகிறார். அந்தப் 10 நாட்கள் கடலில் உணவும் குடிநீரும் இல்லாமல் பிழைத்து வந்த அம்மாலுமியின் உயிர்ப் போராட்டக் கதைதான் இப்புதினம். 'நீ எத்தனை புயல்களைக் கடந்தாய்? அது பற்றி இவ்வுலகிற்குக் கவலை இல்லை. கப்பலைப் பத்திரமாகக் கரை சேர்த்தாயா?' என்றொரு சொல்லாடல் மேலை நாடுகளில் உண்டு. புயலைக் கடந்து கப்பலை இழந்து தன்னைக் கரை சேர்த்த ஒரு ஹீரோவின் கதையிது. தேசிய ஹீரோவாகப் புகழப்பட்டு, அழகு நங்கையர்களால் முத்தமிடப்பட்டு, பிரபலம் என்ற முத்திரையுடன் பொருள் திரட்டி, அதன்பிறகு அரசால் கைவிடப்பட்டு, எப்போதைக்கும் மறக்கப்பட்ட ஒரு முன்னாள் மாலுமியின் கதையிது.
(http://www.penguin.com.au) |
சக மாலுமிகள் 7 பேரும் தன் கண்முன்னேயே காணாமல் போனபின், ஒரு தெப்பத்துடனும் இரு துடுப்புகளுடனும் நடுக்கடலில் அம்மாலுமி. நீர்வழிப் படூவும் தெப்பம் கரை நோக்கி நகர்கிறதா, நடுக்கடலை நோக்கி நகர்கிறதா, செங்குத்துப்பாறை நோக்கி நகரும் நீரோட்டத்தில் பயணிக்கிறதா, இவ்வழி கப்பல்கள் போகும் வழியா என்று திக்குத் தெரியாமல் தன் உயிரைப் பயணப்பட வைக்கிறார். அவர் சட்டையைக் காற்றில் அசைத்துக் காட்டுவது தெரியாமல், தூரத்தில் விமானம் ஒன்று கடந்து போய்விடுகிறது. வெகு தூரத்தில் கப்பல் ஒன்றும் கடந்து போய்விடுகிறது. வாழ வேண்டும் என்ற ஆசை மட்டும் அவரைத் தொடர்ந்து பயணப்பட வைக்கிறது. அவர் கனவிலும் நனவிலும் சந்திக்கும் ஒவ்வொரு பொருளும் கரைசேரும் நம்பிக்கைகளையும் அவநம்பிக்கைகளையும் ஒரே நேரத்தில் தருகின்றன. நரமாமிசம் சாப்பிடும் மனிதர்கள் வாழும் விசித்திர தீவுகள் பற்றி கேள்விப்பட்டிருந்த கதைகள் ஞாபகத்தில் வந்து அச்சமூட்டுகின்றன. சக மாலுமிகளுடன் பிரமையில் பேசுகிறார். மஞ்சளாக 4 மீட்டர் நீளத்தில் தான் பார்த்த இராட்சத ஆமை, உண்மையா பிரமையா என்று அவருக்கே தெரியவில்லை. உப்புத் தன்மையால் காயங்கள் உறுத்தவில்லை.
கைக்கடிகாரம் மட்டும் எந்தப் பிரச்சனை இல்லாமல் சரியான நேரத்திற்கு வேலை செய்கிறது. சட்டைப் பையில் இருந்த ஒன்றிரண்டு காகிதங்களை உண்கிறார். காலணிகளை உண்ண முற்பட்டால் கிழிக்க முடியவில்லை. பத்தையும் பறந்து போகச் செய்யும் பசி, அவ்வழியே பறந்து போகும் நீர்ப்பறவைகளைக் கவரச் செய்கிறது. கரையில் இருந்து கப்பல்களைத் துரத்திக் கொண்டே வரும் பழக்கமுடைய நீர்ப்பறவைகள், கரைகள் பக்கம் என்று அர்த்தம் சொல்வதால் எந்த மாலுமியும் அவற்றைத் துன்புறுத்துவதில்லை. பக்கத்தில் கரை என்ற மகிழ்ச்சியிலும், பசியாலும் மாலுமிகளின் தர்மம் மீறுகிறார். கரை வரவில்லை. நீர்ப்பறவைகள் மட்டும் வந்து போகின்றன. கரை காட்ட கப்பல்களைத் தேடும் வழிதவறிய பறவைகளோ, நீண்ட தூரம் வந்துவிட்ட இளஞ்சிட்டுகளோ என்ற சந்தேகம். சின்ன மீனைப் போட்டு பெரிய மீனைப் பிடித்த கதையாய், நீர்ப்பறவைகளின் இரத்த வாடைக்குச் சுறாக்கள் சுற்றிவிடுகின்றன!
பெரும் பிரளயக் காலத்தில், கப்பலில் இருந்து பக்கத்தில் நிலம் இருக்கிறாதவென அறிய நோவா தனது புறாவை அனுப்பினார். ஆலிவ் இலையுடன் திரும்பி வந்து அருகில் நிலம் இருப்பதைச் சொன்னது அப்புறா. அதே போல் காலில் மாட்டிய ஏதோவொரு செடியின் வேரைப் பார்த்து, பக்கத்தில் கரை என்ற சந்தோசப் படுகிறார், உடைந்து போன கப்பலின் மாலுமி. நீல நிறத்தில் இருக்கும் கடலில் இருந்து பச்சை நிறத்தில் இருக்கும் கடலுக்குள் நுழைகிறார். கரை பக்கம் என ஆறுதல் படுத்திக் கொள்கிறார். 10 நாட்கள் கடல் வாழ்வுக்குப் பிறகு ஏதோவொரு கரையொதுங்கும் அவருக்கு மருத்துவரின் மேற்பார்வை இல்லாமல் உணவு தர மறுக்கிறார்கள். 600 மனிதர்கள் புடைசூழ அவரை மருத்துவரிடம் தூக்கிச் செல்கிறார்கள்.
10 நாட்கள் உணவும் குடிநீரும் இல்லாமல் உயிருடன் இருந்த அவரைத் தன் தேசத்தின் நாயகனாக கொலம்பியா கொண்டாடுகிறது. சர்வாதிகார ஆட்சியில் இருந்த கொலம்பிய அரசு, அவர் என்ன பேச வேண்டுமென நிர்ணயிக்கிறது. அவரைப் பேட்டி கண்ட ஆசிரியர், 15 ஆண்டுகளுக்குப் பின் புத்தகமாக்கியதே இப்புதினம். புயலிலும் சரியான நேரத்தைக் காட்டிய கைக்காடிகாரக் கம்பெனிக்காரர்கள், அவரை மாடலாக வைத்து விளம்பரப் படுத்தினார்கள். 10 நாட்கள் கடலில் ஊறிக்கிடந்தும் கிழிபடாத காலணியின் கம்பெனிக்காரர்களும் கூட. அலங்கரிக்கப்பட்டு வானொலியில் வீர உரையாற்றுகிறார். வருங்கால தலைமுறைகளுக்கு வழிகாட்டியாக தொலைக்காட்சிகளில் காட்டப்படுகிறார். நாடு முழுவதும் சுற்றுப்பயணம் செய்கிறார். ஆட்டோகிராப்கள். முத்தங்கள். எல்லாம் கரை சேர்ந்த 14 நாட்கள் வரைதான். அதன்பிறகு தான் உண்மைகள் வெளிவருகின்றன.
பக்கத்து ஊரில் ஒருவன் முதலமைச்சரிடம் வீரதீர செயல்களுக்காக பணப்பரிசு பெற்றதைப் பார்த்து, குடிநீர்க் கிணற்றில் தானே விசம் கலந்துவிட்டு, விசம் இருப்பதாக ஊருக்குச் சொல்லி, பலபேர் உயிரைக் காப்பாற்றியமைக்குச் சமீபத்தில் முதலமைச்சரிடம் பணப்பரிசு வாங்கிய ஒருவன் கதையைச் செய்தித்தாள்களில் படித்திருப்பீர்கள். 1955 பிப்ரவரியில் அவர்கள் பயணித்த நாளில் கரீபியன் கடலில் புயல் வரவேயில்லை என்று வானிலை ஆராய்ச்சி மையம் அடித்துச் சொல்கிறது. அதுமட்டுமில்லாமல் அக்கப்பலில் விதிமுறைகளை மீறி அதிக எடையுள்ள அனுமதியில்லாத பொருட்கள் ஏற்றப்பட்டு இருக்கின்றன. கொலம்பிய கதாநாயகனாகப் போற்றப்பட்ட அவரின் கருத்துகளை அரசு மறுக்கிறது. அதன்பிறகு அவர் என்னவானார் என்றே தெரியவில்லை.
ஆசிரியர் எழுதிய One Hundred Years of Solitude, Love in the time of cholera, Of love and other demons போன்ற புத்தகங்கள் பற்றி ஏற்கனெவே இதே தளத்தில் எழுதி இருக்கிறேன். மற்ற புதினங்கள் போலவே இதற்கும், இக்கதை தோன்றிய கதையைத் தன் முன்னுரையிலேயே ஆசிரியர் சொல்லிவிடுகிறார். அதனால் தான் நானும் முழுதாகச் சொன்னேன். அம்மாலுமி சொன்னவை உண்மையா பொய்யா என்பதையும் தாண்டி, அந்தப் 10 நாட்கள் அவர் கடலில் தனியாக என்னதான் செய்தார் என்பதற்காகவேனும் இப்புதினம் படிக்கலாம்.
அனுபந்தம்:
------------------
1. சுறாவின் வாயை உடலுக்குக் கீழ் ஏன் இயற்கை செய்திருக்கிறது?
2. நுரையீரலைப் பாதுகாக்க வேண்டுமென முதுகுப்புறத்தைச் சூரியனுக்குக் காட்டாமலே அலைகிறார். நுரையீரல்-முதுகு தொடர்பு எனக்குப் புரியவில்லை? தெரிந்தால் சொல்லுங்கள்.
- ஞானசேகர்
No comments:
Post a Comment