Wednesday, January 15, 2014

118. ISTANBUL - MEMORIES AND THE CITY

தூங்காத நகரங்கள்
விடிகிற பொழுதின்
எந்தப் பரவசத்தையும் காண்பதில்லை
அதற்குத் தன் செயல்களை
எங்கே நிறுத்தி
எங்கே தொடங்க வேண்டுமென‌
புரிவதேயில்லை
- மனுஷ்யபுத்திரன்
----------------------------------------------------------------------------------------------------------------------------------
புத்தகம்: Istanbul - Memories and the City
ஆசிரியர்: Orhan Pamuk (http://www.orhanpamuk.net/)
ஆங்கிலப்படுத்தியவர்: Maureen Freely
வெளியீடு: faber and faber
முதல் ஈடு: 2005
பக்கங்கள்: 336
விலை: ரூபாய் 450 
வாங்கிய இடம்: Landmark
----------------------------------------------------------------------------------------------------------------------------------
மனிதகுல வரலாற்றில் மிகப்பெரிய திருப்புமுனையாக 500 ஆண்டுகளுக்கு முன் ஐரோப்பியர்கள் கடல் புகுந்து பல நாடுகளைக் கண்டுபிடித்ததை, 10ம் வகுப்பிற்கு முன் வரலாற்றுப் பாடத்தில் படித்தேன். இந்தியாவிற்குக் கடல்வழி தேடப் புறப்பட்டது தான் அடிப்படை காரணம் என்றும் படித்தேன். ஒட்டாமன் அரசர்கள் கான்ஸ்டான்டிநோபிளைக் கைப்பற்றியதால், இந்தியாவிற்குக் கடல்வழி கண்டுபிடிக்க வேண்டிய கட்டாயம் ஐரோப்பியர்களுக்கு ஏற்பட்டதாகவும் படித்தேன். இந்தியாவிற்கு வெளியே வரலாறு என்று சொல்லப்படுபவை எல்லாம், ஐரோப்பிய வல்லரசுகள் வரலாறு என்பதால் ஒட்டாமன் யாதென்றும், கான்ஸ்டான்டிநோபிள் எதென்றும், அப்போதைய இந்தியாவிற்கு என்ன தொடர்பு என்றும் வரலாற்றுப் பாடங்கள் சொல்லவில்லை. விஜயநகர, மொகலாயப் பேரரசுகள் உடைந்த காரணங்களை அடுக்கியடுக்கிச் சொன்ன பாடங்கள், ஒட்டாமன் பேரரசு உடைந்து போனதென்று முதல் உலகப் போரின் விளைவுகளாகக் கடைசி ஒருவரியில் முடிந்து போயின. மதிப்பெண் வாங்க மட்டுமே 10ம் வகுப்பு இருந்ததாலும், ஐரோப்பிய வல்லரசுகளுடன் இந்திய ஆளுங்கட்சிகளின் தாக்கமும் இருந்ததாலும், அமெரிக்கப் பங்குச் சந்தை வீழ்ச்சியும் டென்னசி பள்ளத்தாக்குத் திட்டமும் கசடறக் கற்கப்போய், ஒட்டாமன் கான்ஸ்டான்டிநோபிள் ஆசியமைனர் துருக்கி என்று படித்திருந்த பதங்கள் கற்றபின் அதற்குத்தக நிற்காமல் போயின. ஐரோப்பாவின் நோயாளி யாரென்றால், பெரும்பாலும் துருக்கி என்று சரியான பதில் கிடைக்கும். துருக்கியின் தலைநகர் யாதென்றால், பெரும்பாலும் இஸ்தான்புல் என்று தவறான பதில் கிடைக்கும். இங்ங‌னம் என்னைப் போலவே அல்லது என்னைவிட சோகமான வரலாறு, வரலாறு படித்த என் சக இந்தியத் தமிழர்களுக்கு உண்டென்பதால் வழக்கம்போல் கொஞ்சம் வரலாறு சொல்ல நான் கடமைப்பட்டு இருக்கிறேன்.

ஒட்டாமன் கான்ஸ்டான்டிநோபிள் போன்ற சொற்கள் ஏதோ முழுமை அடையாமல் தொக்கிப் போய் என் ஆழ்மனதில் பதிந்து கிடந்தன. வெகுகாலம் மண்ணில் புதைந்து கிடக்கும் கிழங்குகள் ஒரு தருணத்தில் முட்டி முளைப்பது போல என் ஒட்டாமனை வெளிக்கொணர்ந்தது, நோபல் பரிசு பெற்ற முதல் துருக்கிய எழுத்தாளர் ஓரன் பமூக் (Orhan Pamuk) அவர்களின் 'என் பெயர் சிவப்பு' (My name is Red) என்ற‌ புதினம். எந்த அறிமுகமும் இல்லாமல் நானாகவே தேர்ந்தெடுத்து படித்த பல நல்ல புத்தகங்களில் அதுவும் ஒன்று. அடுத்த மாதம் ஒரு திருமணத்தில் பரிசளிக்க வேண்டும். இஸ்ரேல்‍-அரபு பிரச்சனை படிக்க ஆரம்பித்து, ஜெருசலேம் நகரம் படித்தேன். கான்ஸ்டான்டிநோபிள் படிக்கச் சொல்லி ஜெருசலேம் தான் சொன்னது. ஜெருசலேமுடன் ஒப்பிட நம் சமகாலத்து அம்சங்கள் நிறைய உண்டு. உதாரணமாக, 8 ஆண்டுகள் கோமா நிலையில் இருந்து சமீபத்தில் இறந்து போன இஸ்ரேலின் முன்னாள் பிரதமர் ஏரியல் சரோனுடன் ஒப்பிட இந்திய மண்ணில் தலைவர்கள் இன்றும் உண்டு; நாளையும் வருவார்கள். ஆனால் ஜெருசலேம் சம்மந்தப்பட்ட எந்தவொரு ஒப்பிடலும் மதங்களைக் குறிக்கும் என்பதால், நான் என்றுமே எனது கருத்துகளை வெளிப்படையாக‌ எழுதியதில்லை. ஈழத்தமிழர்களை யூதர்களுடன் பலர் ஒப்பிடுவது பற்றி கூட நான் ஒன்றும் சொல்ல‌வில்லை. ஆனால் கான்ஸ்டான்டிநோபிள் அப்படியில்லை. அதனுடன் ஒப்பிட நிறைய விடயங்கள் நம்மில் உண்டு. மதங்களின் தடையில்லை. புத்தகத்திற்குள் நுழையும் முன் கான்ஸ்டான்டிநோபிள் முதல் இஸ்தான்புல் வரை ஒரு சுருக்கமான வரலாறு இதோ!
(http://www.worldatlas.com)
ரோம் நகரைத் தலைமையாகக் கொண்ட ரோமானியப் பேரரசின் மன்னன் முதலாம் கான்ஸ்டன்டைன் (325CE), எதிர்பாரா வகையில் கிழக்கே ஒரு போரில் வென்று ஆசியக் கண்டத்தில் கால்பதித்த போது, அவ்வெற்றிக்குக் காரணம் இயேசு கிறித்து தான் என்று அவனுக்குத் தோன்றுகிறது. இயேசு கிறித்து முதல் அந்நாள் வரையிலான அனைத்துக் கிறித்தவர்களையும் கொன்று கொண்டிருந்த தன் முந்தைய பேரரசர்களில் இருந்து விலகி கிறித்தவ மதத்தைத் தழுவுகிறான். அதுவரை ரகசியமாகத் தூரத்துத் தேசங்களில் கடைபிடிக்கப்பட்டு வந்த கிறித்தவ மதம், மன்னன் எவ்வழியோ குடிமக்கள் அவ்வழி என ரோமானிய தேசமெங்கும் பரவுகிறது. மன்னனே கடவுள் என்று மன்னர்களின் மற்றும் அவர்களின் ஒருபால் காதலர்களின் நிர்வாணச் சிலைகளை வழிபட்டு வந்த ரோமானிய மக்கள் கிறித்தவர்கள் ஆனார்கள். தான் அப்படி வென்ற பைசாந்திய (கிரேக்க‌) நாடுகளில், தன் பெயரிலிருந்து கான்ஸ்டான்டிநோபிள் என்ற புதிய தலைநகரையும் உருவாக்குகிறான். ரோமின் மொழி இலத்தின். இரண்டாம் ரோம் என அழைக்கப்பட்ட கான்ஸ்டான்டிநோபிளின் மொழி கிரேக்கம். ரோம் மேற்கு; கான்ஸ்டான்டிநோபிள் கிழக்கு. அதாவது ரோமானியப் பேரரசின் மேற்கு மற்றும் கிழக்குச் சாம்ராச்சியங்கள் மொழியாலும் கலாச்சாரத்தாலும் இருவேறு இனங்கள். ரோமானியப் பேரரசிற்குக் கிழக்கே இருந்த நம்மைப் போன்றவர்களுக்கு, மொத்த ரோமானியப் பேரரசும் மேற்கு. மேற்கத்திய கிழக்கத்திய நாடுகள் என்ற நமது அன்றாட சொல்லாடல்களில் இப்படித்தான் மறைமுகமாக இருக்கிறது கான்ஸ்டான்டிநோபிள். 

ரோமில் அப்போதிருந்த குழப்பங்களால் அடுத்தடுத்து வந்தவர்கள் எல்லாம் கான்ஸ்டான்டிநோபிளையே அதிகம் வளர்த்தனர். ஒரு காலத்தில் ஜெருசலேமில் இருந்த யூதர்களின் சாலமன் தேவாலயத்திற்குப் போட்டியாக ஹேகியா சோபியா (Hagia Sophia) என்ற கிறித்தவ தேவாலயத்தை ரோமானியர்கள் கட்டினர். இப்படி 1000 ஆண்டுகளாக மிக முக்கிய நகரமாக நீடித்து வந்த கான்ஸ்டான்டிநோபிளை, 1453ல் துருக்கிய சுல்தான்களான ஒட்டாமன்கள் கைப்பற்றுகிறார்கள். கான்ஸ்டான்டிநோபிள் இஸ்தான்புல் ஆனது. ஹேகியா சோபியா மசூதி ஆனது. இந்த ஒட்டாமன் பேரரசுதான் முதல் உலகப் போரில் உடைந்து, பாலஸ்தீன் தவிர மற்ற‌ அரபு நாடுகளை உண்டாக்கப் போகிறது. ஹேகியா சோபியா அருங்காட்சியம் ஆகப்போகிறது.

புவியியல் ரீதியில் ஆசியாவையும் ஐரோப்பாவையும் இணைக்கும் பாலமாக இருக்கும் துருக்கி. இரு கண்டங்களில் பரவியிருக்கும் இஸ்தான்புல் நகரம். இஸ்தான்புலை இரு துண்டுகளாக்கி கருங்கடலை மற்ற கடல்களுடன் இணைக்கும் போஸ்பொரஸ் நீரிணை. ஹேகியா சோபியா. இந்நிலப்பரப்பின் ஆழமான வரலாறு. இவைதான் இஸ்தான்புல் பற்றி என்னைப் படிக்கத் தூண்டியவை. ஓரன் பமூக் எழுதி இருப்பதால் வாங்கிவிட்டேன். புத்தகத்திற்குள் போகலாம்.
(http://www.faber.co.uk)
உலகம் என் வீட்டு வாசல்படியில் இருந்துதான் துவங்குகிறது.
- எஸ்.ராமகிருஷ்ணன்

Istanbul - Memories and the city. இஸ்தான்புல் நகரமும் அதன் நினைவுகளும். ஆசிரியரின் 16 வயது வரையிலான வாழ்க்கையில் இஸ்தான்புல் நகருடன் கொண்டிருந்த சிநேகிதமே இப்புத்தகம். எவ்வயதில் இஸ்தான்புல் என்னில் தங்கியதோ அதுவரை புத்தகம் பேசுவதால், மிகவும் நெருக்கமாக உணர்ந்தேன். பரம்பரைச் சொத்துகளைப் படிப்படியாக இழந்து வரும் தன் குடும்பம், மேற்கத்தியவர்கள் போல் பழகச் சொல்லும் பாட்டி, முதல் காதல், ஓவியத்திறமை என தன் சொந்தக் கதை கொஞ்சம் பேசுகிறார். எல்லாக் கதைகளும் அவர் வாழ்ந்த வீடுகளையும், வீதிகளையும், போஸ்பரஸ் நீரிணையையும் சுற்றிச் சுற்றி வருகின்றன. ஓவியம் என்ற திறமையை வைத்துக் கொண்டு பணம் செய்ய முடியாதென்றும், கல்யாணம் கட்டிக் கொண்டால், பணம் இல்லாக் காலத்தில் மனைவியை வைத்து நிர்வாண ஓவியங்கள் வரைய வேண்டிய நிலைக்குத் தள்ளப்படலாம் என்றும் முத்தமெல்லாம் கொடுத்த முதல் காதல் நிராகரித்துவிடுகிறது. காதலைத் துறந்து தன் மனம் சொல்லும் வழியைத் தொடர்ந்த ஆசிரியர் தனியனாய் உணர்ந்த பொழுதுகளிலும், திறமைகள் நிராகரிக்கப்பட்ட சமயங்களிலும், இருண்ட இஸ்தான்புல் தெருக்களில் இறங்கி சுற்றித் திரிந்ததையும், போஸ்பரஸ் வழியே கடந்து போகும் கப்பல்களையும் அதன் கரைகளை ஆக்கிரமித்திருக்கும் யாலி (yali) என்ற குடியிருப்புகளையும் வீட்டு மாடியில் இருந்து மணிக்கணக்கில் பார்த்துக் கொண்டிருந்ததையும் சொல்கிறார். Life can't be that much bad; Whatever happens, I can always take a walk along the Bosphorus என்கிறார். ஆசிரியரின் சொந்த வாழ்க்கைச் சம்பவங்கள் இப்படி ஆங்காங்கே சொல்லப்பட்டாலும், 'என் பெயர் சிவப்பு' புதினத்தின் கடைசிப் பக்கங்கள் போல மனதில் நிற்கும்படி அழகாக முடிக்கிறார். 

நான் ஆரம்பத்தில் சொன்ன வரலாறு எல்லாம், இப்புத்தகத்திற்கு முன்னரே நான் அறிந்தவை. நான் இப்புத்தகம் படித்த காலத்தில், புத்தகம் தவிர வேறெதும் இணையத்தில் தேடி அறிந்து கொள்ளவில்லை. அதாவது இப்புத்தகம் இஸ்தான்புல் நகரின் வரலாற்றைக் காலக்கோடு போட்டு விளக்கவில்லை. அரசியல் புத்தகமும் அல்ல. பிறகு என்னதான் சொல்கிறது இப்புராதன நகரம் பற்றி இப்புத்தகம்?

The beauty of a landscape resides in its melancholy.
- Ahmed Rasim

ஆசிரியர் இஸ்தான்புலில் பிறந்த வருடம் 1952; ஒட்டாமன் வெற்றி பெற்ற 500வது வருடம்; ஒட்டாமன் சிதறிப் போய் 30 ஆண்டுகள் கழித்து. தனது ஒட்டாமன் பாரம்பரியத்தைப் படிப்படியாக இழந்து, நவீன உலகத்தோடு ஒட்டிக் கொள்ள இஸ்தான்புல் தடுமாறிக் கொண்டிருந்த காலம். தோற்றுப்போன, சிதிலமடைந்த, துயரமிக்க இடமாக இஸ்தான்புல் இருந்த காலம். பாஷாக்களின் மேன்சன்கள், ஒட்டாமன் பிரத்யேகக் காவலர்கள் (Janissary), அடிமைச் சந்தைகள், சுஃபி சாதுக்கள் (Dervish), ஒட்டாமன் காலத்து ஆடைகள், அந்தப்புரம் போன்றவை மேற்கத்திய ஒழுக்கத்திற்கு எதிரானவை என முற்றிலும் ஒழிக்கப்பட்ட காலம். துருக்கிய மொழி தேசிய மொழியானபின் அரபு வனப்பெழுத்து (Calligraphy) முறையும், நகர்மயமாக்கல் என்ற பெயரில் தோட்டங்களும் கல்லறைகளும் மயானங்களும் அழிக்கப்பட்ட காலம். யாராவது கிரேக்கம் அல்லது ஆர்மேனியம் அல்லது அரபு அல்லது குர்திஷ் மொழியில் பேசினால், 'தயவு செய்து நமது தேசிய மொழியான துருக்கியில் பேசுங்கள் குடிமக்களே' என திடீரென ஒருவர் கூட்டத்தில் இருந்து கத்திய காலம். தெருநாய்கள் தவிர மற்ற எல்லா விசயங்களையும் அவசரமாக மேற்கத்தியமயமாக்கிக் கொண்டிருந்த ethnic cleansing காலம். அடிக்கடி தீ விபத்துகள், போஸ்பரஸ் கடக்கும் கப்பல்களில் சேதங்கள், நகரெங்கும் பரவிக் கிடக்கும் வறுமை. இஃதுதான் கரு என்று ஓரெல்லைக்குள் அடங்கி இல்லாமல், இஸ்தான்புல் நகருக்குள் இருக்கும் எண்ணற்ற கதைகளில் ஒன்றாக தன்னையும் உணரும் ஆசிரியரின் கதையிது. அக்காலத்தைய இஸ்தான்புல் நகரின் நிசப்தமான துயரமே இப்புத்தகம். Nothing good can come out a place like this என்று உணரப்படும் ஒரு நகரத்தில் இருந்து வந்த நல்ல புத்தகம் இது.
(http://www.faber.co.uk)
ஆசிரியர் இஸ்தான்புல் இருவருக்கும் தனிப்பட்ட சோகங்கள் இருந்தாலும், அந்நகரை நேசிப்பதன் மூலம் தன் சோகம் மறக்கிறார் ஆசிரியர்.  To be unhappy is to hate oneself and one's city. இஸ்தான்புல் பற்றி தபால்தலைகளையும், சொற்களஞ்சியங்களையும் (encyclopedia), ஓவியங்களையும் தேடித் தேடி சேகரிக்கிறார். தான் சேகரித்த பல அரிய புகைப்படங்களையும் ஓவியங்களையும் புத்தகம் முழுவதும் கொடுத்திருக்கிறார். ஆசிரியர் உணர்ந்த இஸ்தான்புல் நகரத்தின் துயரை ஏற்கனவே தங்கள் எழுத்துக்களில் பதிவு செய்த நான்கு துயரமிகு எழுத்தாளர்களைப் பற்றி விவரிக்கிறார். அந்நால்வரின் எழுத்துகளும் வாழ்ந்த காலத்தில் நிராகரிக்கப்பட்டதும், அவர்களில் ஒருவர் கடைசி வரை எப்புத்தகத்தையும் அச்சிட்டு வெளியிட முன்வராத துயரத்தையும் பதிவு செய்கிறார். இஸ்தான்புல் பற்றி 130 ஆண்டுகளில் செய்தித்தாள்களில் பத்திகளைப் படித்து, ஆவண‌ப்படுத்திய சில நல்ல பத்திரிக்கையாளர்கள் பற்றி குறிப்பிடுகிறார். அப்போது அவருக்குத் தென்பட்ட சில வேடிக்கையான பத்திகளில் ஒன்று இது:
It is our hope that both drivers and passengers will make full use of the new taxi meters installed by the military authorities and that our city will never again see the sort of haggling, arguments, and trips to the police station that plagued our city twenty years ago, when the last taxi meters were installed and our city's drivers took to saying, 'Brother, give us as much as you can' - 1983
Whenever a contagious disease breaks out in any part of the city, our council throws lime here and there but piles of filth are everywhere ... - 1910
இன்று நம்மூர் நிலைமை உங்களுக்கே தெரியும்!

நவீனமயமாகும் அவசரத்தில் ஒரு நகரம் எப்படி விளம்பரம் மற்றும் அறிவிப்புப் பலகைகளின் குப்பையாகிறது எனப் பேசுகிறது ஒரு கட்டுரை. நம்மூர் கூவம் போல் ஆகிப் போன தங்க முகடு (Golden Horn) பற்றி பேசுகிறது. இஸ்தான்புல் நகரைக் கருப்பு வெள்ளையாக மட்டுமே பார்க்கும் ஆசிரியரின் உருவகம், அவன் அவள் அது இது என்ற நான்கு பொருள்களுக்கும் ஒரே வார்த்தை கொண்ட துருக்கிய மொழியில் கடவுளைப் பெண்ணாக (She) விளிப்பது என அழகான பல விசயங்கள் புத்தகத்தில் நிறைய உள்ளன. மிடுக்காக வலம்வரும் மேல்தட்டு மக்கள் பற்றி ஒரு கட்டுரை பேசுகிறது. நம்மூரில் உள்ளது போலவே, அவர்களுக்கென பிரத்யேகமாக‌ கிசுகிசுக்கள் சொல்லும் செய்தித்தாள் பத்திகளில் ஒன்று: Her Bebek house has been robbed, but no one seems to know what's missing. Let's see if the police manage to solve this riddle. அவர்களைப் பற்றி ஆசிரியர், An interest in society gossip is a sign of personal weakness என்கிறார்.
(Hagia Sophia - http://www.wikipedia.org)
All civilisations are as transitory as the people now in cemeteries. And just as we must die, so too must we accept that there is no return to a civilisation whose time has come and gone.
அற்ற குளத்தின் அறுநீர்ப் பறவைபோல், எல்லா நகரங்களும் வாழத் தகுதி இழக்கும் வரை, மனிதனின் நுகர்வுப் பசி தீர்வதேயில்லை. இந்த வேட்டையில் மனிதன் தன் வாழுமிடத்தைச் சரியாகப் புரிந்து வைத்திருக்கிறானா? இன்னொருவன் நகரை மதிக்கிறானா? என் சொந்த அனுபவங்கள் சொல்கிறேன். நான் சென்னை வந்த புதிதில், பிரபலமான ஒருவர் கோட்டூர்புரம் அருகில் ஆற்றில் குதித்து மாண்டார். பெரும்பாலான பத்திரிக்கைகள் கூவம் ஆறு என்று எழுதின. சென்னை நகரில் கூவம், அடையாறு என்ற இரு தனித்தனி ஆறுகளைக் கூவம் என்ற ஒரே ஆறாகச் சொல்லும் பலர் இருப்பதை அன்றுதான் அறிந்தேன். தமிழ்த்தாய்க் கோயில் என்று பலரிடம் வழிகேட்டு, யாருக்கும் தெரியாமல், கடைசியில் தமிழன்னைக் கோயில் என்று ஒரேயொரு முறை கேட்டு வழிபெற்ற அனுபவம் காரைக்குடியில் கிடைத்தது. வீரபாண்டிய கட்டபொம்மன், குமரி விவேகானந்தர் பாறை பற்றி அவ்வூர் அடித்தட்டு மக்களிடம் விசாரித்து இருக்கிறீர்களா? எங்கள் ஊர் இரயில் நிலையத்தில் சித்தன்னவாசல் பற்றி அறிவிப்புப் பலகை இருக்கும். எங்கள் ஊருக்குப் பக்கத்தில் இருக்கும் சில ஊர்கள் சிலப்பதிகாரத்தில் உள்ளன. இவை பற்றி ஏதொன்றும் எம்மக்கள் அறியிலர். வழக்கம் போல எங்கள் புத்தகங்கள் எங்களைப் பற்றி எங்களுக்குச் சொல்லித் தரவில்லை!

ஊரறிய உலகறிய படித்தறிவோம்!

அனுபந்தம்:
-------------------
1. சமீபத்தில் 'புதிய தலைமுறை' தொலைக்காட்சியில் ஆர்மீனியா நாடு பற்றி ஒரு செய்தித் தொகுப்பு பார்த்தேன். முதல் உலகப் போரில் ஒட்டாமன்கள் கை ஓங்கி இருந்த காலத்தில் அவர்களால் இனவழிப்பு செய்யப்பட்ட ஆர்மேனியர்களுக்கு இன்னும் நீதி கிடைக்கவில்லை. மனுஷ்யபுத்திரன் சொல்வ‌து போல், வரலாறு ஈழத்திற்கு முன்பும் இப்படித்தான் இருந்திருக்கிறது.

- ஞானசேகர்
(http://jssekar.blogspot.in/)

No comments: