Sunday, January 26, 2014

119. விலங்குப் பண்ணை

உறங்கையிலே பானைகளை
உருட்டுவது பூனை குணம் 

காண்பதற்கே உருப்படியாய் இருப்பதையும் 
கெடுப்பதுவே குரங்கு குணம் 
ஆற்றில் இறங்குவோரை கொன்று
இரையாக்கல் முதலை குணம்
ஆனால் இத்தனையும் மனிதனிடம்
மொத்தமாய் வாழுதடா!

- பட்டுக்கோட்டை கலியாணசுந்தரம்

----------------------------------------------------------------------------------------------------------------------------------
புத்தகம்: விலங்குப் பண்ணை (புதினம்)
ஆங்கிலத்தில்: Animal Farm
ஆசிரியர்: ஜார்ஜ் ஆர்வெல் (George Orwell)
தமிழில்: பி.வி.ராமஸ்வாமி
வெளியீடு: கிழக்கு பதிப்பகம்
முதல் ஈடு: சனவரி 2012
பக்கங்கள்: 141
விலை: ரூபாய் 85
வாங்கிய இடம்: இந்த வருட சென்னைப் புத்தகக் காட்சி
----------------------------------------------------------------------------------------------------------------------------------
ஓநாயும் ஆட்டுக்குட்டியும். முடியும் முன். தங்கமீங்கள். ஹரிதாஸ். திரையரங்குகளில் மட்டுமே புதிய திரைப்படங்கள் பார்க்கும் வழக்கம் உடைய நான், இத்திரைப்படங்களைத் தான் சென்றாண்டில் நான் பார்த்த சிறந்த தமிழ்ப்படங்களாக ஞாபகம் வைத்திருக்கிறேன். ஆளவந்தான் அழகி என நீண்ட இடைவெளிக்குப் பின் அதிகமுறை திரையில் நான் பார்த்தது, ஓநாயும் ஆட்டுக்குட்டியும். மிருகக் குணங்கள் மனிதக் கதாப்பாத்திரங்களாக திரைக்காட்டில் உலவும் கதையது. கிட்டத்தட்ட அதன் நேரெதிரான கதைக்களம் உடைய புத்தகத்துடன் இம்முறை வந்திருக்கிறேன். அதாவது, மனிதக் குணங்கள் மிருகக் கதாப்பாத்திரங்களாக உலவும் புதினமிது. விலங்குப் பண்ணை. 1947ல் இங்கிலாந்தில் ஜார்ஜ் ஆர்வெல் வெளியிட்ட இப்புதினம், டைம் இதழ் தேந்தெடுத்த சென்ற நூற்றான்டின் சிறந்த 100 புதினங்களில் ஒன்று.

இங்கிலாந்தில் உள்ள பல பண்ணைகளில் ஒன்று, மேனார் பண்ணை. அப்பண்ணையில் உள்ள, பாலூட்டிகளிலேயே அதிக எடையுள்ள மூளையுடைய வெண்பன்றி ஒன்றிக்குப் புரட்சிகரமான சிந்தனை ஒன்று தோன்றுகிறது. விலங்குகளிலேயே இன்னொரு விலங்கின் பாலைக் குடிப்பது மனிதன் மட்டும்தானே! (தவிர கள்ளிப்பால் விஞ்ஞானம் தெரிந்தவனும் மனிதம் மட்டும் தானே) மனிதர்கள் விலங்குகளின் உழைப்பை உறிஞ்சி கொத்தடிமைகளாக நடத்துவதை உணர்ந்த அவ்வெண்பன்றி, அப்பண்ணையில் உள்ள மற்ற விலங்குகளை ஒன்று கூட்டி, மனிதர்களுக்கு எதிராக வலிமை, புத்தி பேதங்கள் நீங்கி விலங்குகள் எல்லாம் ஒன்று திரள வேண்டுமென பேருரையாற்றுகிறது. அவ்வுரையின் ஒரு பகுதி இதோ: 

மனிதன் தான் நமக்கெல்லாம் உண்மையான எதிரி. இப்போதுள்ள காட்சியிலிருந்து மனிதனை மட்டும் விலக்கி விட்டுப் பாருங்கள். நம்முடைய மிகக் கடுமையான அதீத உழைப்புக்கும் கொடிய பசிக்கும் மூலகாரணம் முழுவதுமாக ஒழிந்துவிடும். இந்த உலகத்தில் உள்ள ஜீவராசிகளில் மனிதகுலம் மட்டுமே எதையுமே உண்டாக்காமல் எல்லாவற்றையுமே உட்கொள்கிறது. மனிதன் பால் சுரப்பதோ கொடுப்பதோ கிடையாது. அவன் முட்டையிடுவது கிடையாது. நிலத்தை ஆழ உழுவதற்கு அவன் உடம்பில் தெம்பு கிடையாது. அட, வேகமாக ஓடி ஒரு முயலைக் கூட அவனால் பிடிக்க முடியாது. ஆனால், அவன் நமக்கெல்லாம் எசமான். அவன் நம்மை வேலை செய்ய வைப்பான். வரும் விளைச்சலிலிருந்து குறைந்த தீனியைக் கொடுத்துவிட்டு, அதுவும் நம்மிடையே பட்டினிச் சாவு நடப்பதைத் தடுக்கத் தேவையான அளவில் மட்டுமே கொடுத்து விட்டு, மிச்சம் முழுவதையும் தானே வைத்துக் கொள்கிறான்..... இந்த மனிதனை மட்டும் நீக்கிவிடுங்கள். நம் உழைப்பின் பலன்கள் முழுவதும் நமக்கே சொந்தமாகிவிடும். ஓரிரு நாட்களில்
 நாம் சுதந்திரம் பெற்றுப் பணக்காரர்கள் ஆகிவிடுவோம். எனவே, இரவும் பகலும் உடலாலும் உள்ளத்தாலும் இந்த மானுட இனத்தை விரட்டியடிக்க உழைப்போம். கிளர்ச்சி செய்வோம்.
(http://www.badriseshadri.in/)
ஆரம்பத்தில் சில விலங்குகள் மற்ற‌ விலங்குகளுக்கு இரையாகிவிடும் பயத்தில் வெளிவராமல் இருந்தாலும், சில விலங்குகளுக்கு அவ்வுரையைப் புரிந்துகொள்ளும் அளவிற்குப் புத்தி இல்லாமல் இருந்தாலும் வெண்பன்றி சொல்வதில் உண்மை இருப்பதை உணர்ந்து எல்லா விலங்குகளும் சமமாகின்றன. முயல் எலி பூனை நாய் வாத்து என எதிரிகளின் பயமில்லாமல் எல்லா விலங்குகளும் சமமாக அமர்ந்து வெண்பன்றியின் உரையைக் கேட்கின்றன. அக்கூட்டத்திலேயே அவைகளுக்கான புரட்சிப் பாடல் ஒன்று தயாராகிறது. குளம்பு கொம்புடன் கொடி (புத்தகத்தின் முன்னட்டையில் சிவப்பு நிறத்தில்) தயாராகிறது. இப்புதிய சித்தாந்தத்திற்கு விலங்கியம் எனப் பெயரிடப்படுகிறது. மூன்று இரவுகளுக்குப் பின் அவ்வெண்பன்றி இறந்து போக, புத்திசாலிகள் என்று பரவலாக அறியப்பட்ட இரண்டு காட்டுப்பன்றிகள் புரட்சிக்குத் தலைமை ஏற்கின்றன. திட்டமிட்டபடி பண்ணையின் உரிமையாளரான மனிதனைத் தாக்கி விரட்டிவிட்டு, பண்ணையைக் கைப்பற்றுகின்றன. விலங்குப் பண்ணை என பெயர் மாறுகிறது மேனார் பண்ணை. அவைகளுக்கென ஏழு கட்டளைகள் உருவாக்கப்படுகின்றன.
1. எதெல்லாம் இரண்டு கால்களால் போகிறதோ, அதெல்லாம் எதிரி.
2. எதெல்லாம் நான்கு கால்களாலோ அல்லது இறக்கைகளாலோ போகிறதோ, அது நண்பன்.
3. எந்த விலங்கும் உடை உடுத்திக்கொள்ளக் கூடாது.
4. எந்த விலங்கும் படுக்கையில் உறங்காது.
5. எந்த விலங்கும் சாராய வகைகள் குடிக்காது.
6. எந்த விலங்கும் வேறொரு விலங்கைக் கொல்லாது.
7. எல்லா விலங்குகளும் சமமே.
மனிதர்களை எதிர்த்து உருவான இவ்விலங்குப் பண்ணையால் நிலைக்க முடிந்ததா? தங்கள் கொள்கைகளை நிறைவேற்ற முடிந்ததா? அதுதான் மீதிக்கதை.

எல்லா மனிதர்களும் சமம் என கடவுளுக்குப் போட்டியாக மனிதர்கள் பாபிலோனில் கோபுரம் கட்டியது போல, எல்லா விலங்குகளும் சமம் என மனிதர்களுக்குப் போட்டியாக‌ விலங்குகள் காற்றாலை கட்டுகின்றன. ஒவ்வொரு மிருகத்திற்கும் ஓய்வு வயது, ஓய்வூதியமும் நிர்ணயிக்கப் படுகின்றன. புதினத்தின் ஆரம்பப் பக்கங்களை மனித வரலாற்றுடன் இணைத்துப் பார்க்க எனக்குத் தோன்றவே இல்லை. ஆனால் சில விடயங்கள், ஆசிரியர் மறைமுகமாக ஏதோ உருவகம் செய்கிறார் என யோசிக்க வைத்தன. எல்லா விலங்குகளின் சொத்துரிமைப் பத்திரங்களும் வெண்பன்றிகளின் கட்டுப்பாட்டில் இருக்கின்றன. விலங்குப் பண்ணையைச் சுற்றி வேலிகளே இல்லாமல் இருந்தாலும், உள்ளே நடப்பது வெளி உலகிற்குத் தெரியாது. சமீபத்தில் டெல்லி அரசு தனது முதல் மக்கள் குறைதீர்ப்புக் கூட்டத்தைப் பாதியிலேயே விட்டுவிட்டு, பிறகு நிரந்தரமாக நிறுத்தியது போல, விலங்குகள் ஞாயிற்றுக்கிழமைகளில் நடத்திவந்த காலைநேரக் கூட்டங்கள் திடீரென நிறுத்தப்படுகின்றன. புரட்சிப் பாடல் இனி தேவையில்லை என நிறுத்தப்படுகிறது. விலங்குகள் தங்களைச் சரிசமமாகத் தோழரே என அழைத்துக் கொள்வது மடத்தனம் எனக் காலப்போக்கில் சொல்லப்படுகிறது. ஆம், ஆசிரியர் உருவகப்படுத்தியது இரும்புக் கோட்டையான‌ கம்யூனிச இரஷ்யாவைத் தான். குறிப்பாக 1910 முதல் 1940 வரையான கால கட்டத்தில் ரஷ்ய புரட்சியாளர்கள் மற்றும் ஆட்சியாளர்களின் சிந்தனை மாற்றங்களைச் சித்தரிக்கிறார். ஒரு மிகப் பெரிய புரட்சி, கடைசியில் தனிமனிதத் துதியாக முடிந்து போன துயரத்தை ஒரு கோழியின் வார்த்தைகளில் அழகாக உணர்த்துகிறார் ஆசிரியர்: 'நமது நேசமிகு தலைவரின் வழிகாட்டுதலால் நான் கடந்த ஆறு நாளில் ஐந்து முட்டை இட்டேன்'.

எனக்குள்ள அரைகுறை வரலாற்று அறிவின்படி எனக்கு ஸ்டாலின் மீது நல்ல அபிப்ராயம் இல்லை. அதனால் மேற்கொண்டு எழுதாமல், உங்களின் வாசிப்பிற்கே விட்டுவிடுகிறேன்.

- ஞானசேகர்
(http://jssekar.blogspot.in/)

No comments: