-------------------------------------------------------------
புத்தகம் : பதினெட்டாம் நூற்றாண்டின் மழை
ஆசிரியர் : எஸ்.ராமகிருஷ்ணன்
வெளியிட்டோர் : உயிர்மை பதிப்பகம்
வெளியான ஆண்டு : 2008
விலை : ரூ180
-------------------------------------------------------------
நம் பக்கத்து வீட்டுக்காரரின் ஒரு நாள் அலுவல்களை ஓய்வான ஒரு நாளில் அவதானித்திருப்போமா? பெருங்கோபம் கொண்டு பின் அடங்கிப்போய்விடுகிற மனைவி அல்லது அம்மாவின் எண்ணங்களின் வீச்சுகளை எப்போதேனும் அளந்திருப்போமா? தெருவில் கடந்துபோய்விடுகிற யாரோ ஒருவரின் மனதில் எழும் நம்மைப் பற்றிய கேள்விகளை அனுமானித்திருப்போமா? பதில்கள் தீர்ந்துபோன தேர்வறையில் பால்யத்தில் சண்டையிட்ட நண்பனின் நினைவு ஏன் வருகிறதென்று யோசித்திருப்போமா? கால்களை இடுக்கிக்கொண்டு பேருந்து நிலையத்தில் படுத்துறங்கும் பிச்சைக்காரனின் சொந்த ஊருக்குப் போகும் பேருந்து எத்தனை மணிக்குப் புறப்படும் என்று அறிந்திருப்போமா?
இந்தக் கேள்விகள் எதையும் எஸ்ரா இந்தப் புத்தகத்தில் எழுப்பவில்லை. ஆனால், படித்துக்கொண்டிருக்கும்போது நம் மனதில் இவை எழும். இவைகளையொத்த பல கேள்விகளை அடுக்கி வைத்திருக்கிறார் கதைகளெங்கும்.
'கதை என்பது ஒரு ரகசியமான புதிர் விளையாட்டு. நாம் அந்த விளையாட்டில் பாதியில் கலந்துகொள்கிறோம். பாதியில் விலகியும் விடுகிறோம். அதற்குள் என்ன நடக்கிறது. ஏதோவொரு சம்பவத்தையோ, நிகழ்வையோ, கதாபாத்திரத்தினையோ பின்தொடர்ந்து செல்கிறோம். சம்பவங்கள், நினைவுகள், சமிக்ஞைகள், உணர்வெழுச்சிகள், அறிந்த அறியாத நிலக்காட்சிகள் தோன்றி மறைகின்றன.'
கதைகளைப் பற்றிய எஸ்ராவின் வார்த்தைகள் இவை. எஸ்ரா ஆடுகிற புதிர் விளையாட்டுகளும், அவர் பின் தொடர்ந்து செல்லும் பாத்திரங்களும் நம்மை நிச்சயமாக வியப்பில் ஆழ்த்த வல்லனவாக இருக்கின்றன. நகரத்தில் கரையொதுங்கிப் பிழைக்கும் மனிதர்களையும், புலம்பெயரும் திராணியற்று கிராமங்களில் உழலும் மனிதர்களையும் நுண்ணிய கண்கள் கொண்டு பின்தொடர்கின்றன இவரின் எழுத்துகள்.
மிகச்சாதாரணமாக கடந்து போய், மறந்து போகக்கூடிய கணங்களை வருஷங்களென வாழ்ந்து பார்க்கிறார் இவர். நிகழ்வுகள் நாட்குறிப்புகளை நிரப்பும் வெறும் செய்திகள் என்றில்லாமல் அதில் இருக்கும் அழகியலையும், அற்புதங்களையும், துன்பியலையும் அருமையாக சிலாகிக்கிறார்.
ஆழ்மனத்தின் வக்கிரங்களை, சுயபச்சாதாபங்களை, ஒருவித கிண்டலுடன் சொல்லும் பாணி இந்தக் கதைகளெங்கும் விரவியிருக்கிறது.
இந்தக் கதைகள், வெக்கை படிந்த வீதிகளில் நம்மை வழிநடத்திச் செல்கின்றன. வீடுகளின் உள் புகுந்து, வாசல் கடந்து, படுக்கையறை நுழைந்து, சமையலறை பார்த்து வெளியேறுகின்றன. சிரிக்கும் குழந்தைகளைக் கை பிடித்து நடை பழகுகின்றன. இருட்டறைகளில் விளக்கடித்து ஒளிபரப்புகின்றன. அலுவலக நேரத்தில் பேருந்து பிடித்து ஊர் சுற்றுகின்றன. இரவுகளில் தொலைத்த கனவுகளைத் தேட நம்மைத் துணைக்கழைத்துப் போகின்றன.
இச்சிறுகதைகள் அனைத்தும் சமீப காலங்களில் எஸ்ரா எழுதியிருப்பவை. எஸ்ராவைத் தொடர்ந்து வாசிப்பவர்களுக்கு இது இன்னுமொரு வித்தியாசமான வாசிப்பானுபவமாக இருக்கும். நாம் அதிகம் அறிந்த, அறிந்திராத பல்வேறு தளங்களில் இயங்குகின்றன இந்தக் கதைகள்.
'சௌந்தரவல்லியின் மீசை' என்றொரு சிறுகதை. ஏழாம் வகுப்பு படிக்கும் பெண்ணுக்கு மீசை முளைக்கிறது. அவளின் மன ஓட்டங்களையும், அது சார்ந்த நிகழ்வுகளையும் விவரிக்கிறது இச்சிறுகதை. ஒரு விடலைப்பெண்ணின் உடலளவிலும், மனதளவிலும் நிகழும் மாற்றங்களைச் சொல்கிறது.
ஒரு தாய்க்கும், மகளுக்குமான அந்தரங்கத்தை ஆராய்கிறது 'ஆண்கள் தெருவில் ஒரு வீடு' சிறுகதை. தன்னைத்தானே விற்றுக்கொள்ள விளம்பரம் செய்யும் ஒரு மனிதனைப் பின் தொடர்கிறது 'நம்மில் ஒருவன்'. இன்னும் சில சிறுகதைகளின் தலைப்புகளே நம்மைக் கட்டிபோட்டுவிடுகின்றன. என்னை மிகக்கவர்ந்த சிறுகதைகளின் பெயர்களை மட்டும் இங்கே தருகிறேன். அதை மீறிய எந்த ஒரு செய்தியும் படிப்பதின் மீதொரு சலிப்பை உங்களுக்கு ஏற்படுத்திவிடும் அபாயம் இருக்கிறது.
பதினெட்டாம் நூற்றாண்டின் மழை, எல்லா நாட்களையும் போல, புத்தன் இறங்காத குளம், இந்த ஊரிலும் பறவைகள் இருக்கின்றன, அப்பா புகைக்கிறார், விசித்ரி, ஆகிய சிறுகதைகள் நான் சொன்ன அந்தப் பட்டியலில் அடங்குகின்றன. சொல்லாதவையும் சிறந்தவையே.
இச்சிறுகதைத் தொகுப்பில் பெண்ணியம் பேசும் கதைகள் அதிகமாய் இருப்பதை உணர முடிகிறது. மழைக்காலத்தில் நமக்கும் தெரியாமல் நம் வீடுகளில் அடைக்கலமாகும் பூச்சிகளைப் போல எல்லாக் கதைகளிலும் தெரிந்தோ தெரியாமலோ ஒளிந்து வாழ்ந்துகொண்டிருக்கின்றன பெண்ணியச்சிந்தனைகள். ஒதுக்கப்பட்டவர்கள், தவிர்க்கப்பட்டவர்களின் மன ஓலத்தை மொழிபெயர்ப்பதாகவும் சில கதைகள் அமைந்திருக்கின்றன.
'சௌந்தரவல்லியின் மீசை' சிறுகதையைப் படித்துவிட்டு, ஒரு பகல் முழுவதும் அமைதி கொள்ளாமல் திரிந்தேன். நான்கு நண்பர்களிடம் அலைபேசியிலும், நேரிலும் இக்கதையைப் பற்றிச் சிலாகித்த பிறகே கொஞ்சம் அமைதி கிடைத்தது. படித்து முடித்து வெகு நாட்களுக்குப் பிறகும் நம்மை அமைதியிழக்கச்செய்யும் வலு கொண்ட இன்னுமொரு சிறுகதை இது.
எஸ்ராவின் கதைகள் எந்த மாய உலகுக்குள்ளும் நம்மை இட்டுச் செல்வதில்லை. நாம் வாழும் உலகின் மாயங்களையும், மாயைகளையும் சொல்கின்றன. கவனமின்றித் தொலைந்துபோகும் விஷயங்களை ஊடறுத்து கண் முன் வைக்கின்றன. வாழ்க்கை மீதான பார்வையையும், சிறுகதைகள் குறித்தான பார்வையையும் இன்னும் தெளிவு படுத்துவதாக அமைந்திருக்கின்றன இச்சிறுகதைகள்.
-சேரல்
1 comment:
நானும் படித்தேன்
//எஸ்ராவைத் தொடர்ந்து வாசிப்பவர்களுக்கு இது இன்னுமொரு வித்தியாசமான வாசிப்பானுபவமாக இருக்கும்//
உண்மை தான்
உங்களின் புத்தக பார்வை
மீண்டும் புரட்டிப்பார்க்க தோன்றுகிறது .
Post a Comment