Monday, July 27, 2009

40. மெளனியின் கதைகள்

என் வேண்டுகோளை ஏற்று இந்த வலைப்பூவில் புத்தகங்கள் குறித்தான தன் பார்வைகளை எழுதத் தொடங்கி இருக்கும் அன்புத்தம்பி Bee'morganகு நன்றிகள் பல. ஒத்த சிந்தனையும், நோக்கமும் கொண்டவர்கள் சேர்ந்து செயலாற்றுவது மிக அற்புதமான விஷயம். ஒரு கல் வைக்க முடிகிற நேரத்தில், இரண்டு கற்களைச் செம்மையாக வைக்க முடிந்தால் கட்டிடம் விரைவில் எழும் தானே!

தொடிற்சுடின் அல்லது காமநோய் போல
விடிற்சுடல் ஆற்றுமோ தீ. (குறள் எண் : 1159)

நெருப்பு, தன்னைத் தொட்டால் சுடுமே அல்லாமல் காதல்நோய் போல் தன்னை விட்டு நீங்கிய பொழுது சுடவல்லதாகுமோ.


-----------------------------------------
நூல்: மெளனியின் கதைகள்
ஆசிரியர்: மெளனி
பக்கங்கள்: 328
விலை: ரூ.185
பதிப்பகம்: பீகாக் பதிப்பகம்

-----------------------------------------

என்றோ ஒருநாள் நீங்கள் கதறி அழவேண்டும் போல் உணர்ந்த ஒரு கணத்தில் உங்கள் மனதில் எழுந்த எண்ண்ங்கள் நினைவிருக்கிறதா? காரணமற்ற விரக்தியில் வெற்றுச்சுவரைப் பார்த்தபடியே ஒரு நாள் முழுவதும் அமர்ந்திருக்கிறீர்களா? பூவை விட மெல்லிய காதல் பூக்கும் கணங்களின் ஸ்பரிசங்களை உணர்ந்திருக்கிறீர்களா? தூக்கம் தொலைத்த பின்னிரவொன்றில் எங்கிருந்தோ கசியும் சங்கீதமொன்று உங்களை அமைதியில்லாமல் அலைக்கழித்திருக்கிறதா?

இவையனைத்தும் உங்களுக்காகக் காத்திருக்கின்றன மெளனியின் கதைகளில். பிரிவையும் வலியையும் உயிரென மதித்த உறவின் மரணத்தையும் இவ்வளவு அழகாகச் சொல்லமுடியுமா? ஆழ்ந்த துக்கத்தைக் கூட இப்படி அனுபவிக்க முடியுமா? மெளனியால் முடிந்திருக்கிறது.

மொத்தம் 24 கதைகள்தான். அனைத்திற்கும் அடிநாதமாக ஒரே ஒரு உணர்ச்சிதான். களங்களும், பாத்திரங்களும் அவை ஏற்படுத்தும் எண்ண அலைகளும் மட்டுமே மாறுபடுகின்றன.

சொல்லப்போனால், அனைத்து கதைகளையும் ஒருவித வாய்ப்பாட்டுக்குள் அடைத்துவிடலாம். ஆனால் இது எந்தவொரு கதையையும் கொஞ்சமும் பாதிப்பதில்லை. மாறாக, முடிவைத் தெரிந்துகொண்டே முடிவை நோக்கிப் பயணிக்கும் ஒரு அனுபவத்தைத் தருகிறது.

ஏறக்குறைய எல்லாக் கதைகளுமே பாலை (அ) பாலையை நினைவுபடுத்தும் ஒரு குறிப்புடனேயே தொடங்கி அவ்வாறே முடிவடைகின்றன. அனைத்திலும் அழுத்தமானதொரு காதல் இழையோடுகிறது.

இக்கதைகள் நிகழ்ச்சிகளைப் பின்தொடராமல், குளத்தில் விழும் சிறு கல்லென ஒரு நிகழ்வைச் சொல்லிவிட்டு அதன் பின்பாக பாத்திரங்களின் மனதில் எழும் எண்ண அலைகளையே பின்தொடர்கின்றன. தன்னிலையில் கதை சொல்லும் உத்தியே பெரும்பாலும் பயன்படுத்தப்பட்டுள்ளது. மெளனிக்கு நட்சத்திரங்களை மிகவும் பிடிக்கும் போல. நட்சத்திரங்களைப் பற்றிய சிலாகிப்பும் தவறாமல் எல்லா கதைகளிலும் இடம்பெறுகிறது.

இந்தக் கதைகள் ஏறக்குறைய 50 லிருந்து 70 வருடங்களுக்கு முன்னால் எழுதப்பட்டவை. அந்த மொழிநடைதான் கொஞ்சம் அசெளகரியப்படுத்துகிறது. அதே போன்று எல்லா வரிகளுக்கும் அர்த்தம் காணமுயல்வதும் தலைச்சுற்றலையே கொடுக்கும். ஒரு சில பத்திகள், உண்மையிலேயே மனம் பிறழ்ந்த நிலையில் எழுதப்பட்டவையோ என்ற மயக்கம் தருகின்றன. ஆனால் உண்மையில், கடைசியில் அவை ஏற்படுத்தும் பிம்பமே அந்தப் பாத்திரத்திற்கு உயிரளிக்கிறது. இந்த வகையில், சில கதைகளைப் படித்து முடிப்பதற்கே ரொம்பவும் கஷ்டப்பட்டேன்.

அழியாச்சுடர், பிரபஞ்சகானம் போன்ற கதைகளைப் படித்து முடிக்கையில் சொல்லவொணாத வெறுமை வந்து அப்பிக்கொள்கிறது மனதில். படித்து முடித்த சிலமணி நேரங்களுக்கு யாருடனும் பேசப் பிடிக்காத வெறுமை அது.

மிக அவசியப்பட்டாலொழிய நாயகனுக்கோ, நாயகிக்கோ பெயர்கள் இடப்படவில்லை. எல்லா கதைகளிலும் 'நானு'ம் 'அவளு'ம் உண்டு. சிலவற்றில் 'அவனு'ம் உண்டு. அவ்வளவுதான். இந்த மூன்று திசைகளில் எத்தனை சாத்தியங்களென்று இக்கதைகளில் பாருங்கள்.

காதலை ஏன் இந்த மனிதர் இப்படிக் கொண்டாடுகிறார் என்று சிற்சில இடங்களில் சலிப்பைத் தரலாம். ஆனாலும் தவறவிடக்கூடாத வாசிப்பனுபவம் தருபவை இந்தக் கதைகள். சில கதைகளுக்கு நிச்சயம் ஒருமுறை போதாது. குறைந்தபட்சம் இருமுறையாவது அவசியமாகிறது. திரும்ப திரும்ப மீள் வாசிப்பில், புதியதொரு பிம்பம் கொண்டு நம்மை வியப்பிலாழ்த்துகின்றன இந்தக் கதைகள்.

பெரும்பாலும் 'மணிக்கொடி' இதழிலும் சிலவை, 'சிவாஜி','கிராம ஊழியன்', 'தினமணி தீபாவளி மலர்-1937' போன்றவற்றிலும் வெளியானவை. மெளனி தனக்கென ஒரு மாய உலகத்தை சிருஷ்டித்துக்கொண்டு அதற்குண்டான கதைகளாகவே அனைத்தையும் எழுதியிருக்கிறார். கிட்டத்தட்ட 20 வருட கால இடைவெளியில் இவர் எழுதிய இரு கதைகளுக்கிடையே கூட அந்த ஒற்றுமையை தெளிவாக உணரமுடியும்.

எனக்குத் தெரிந்த வரையில் 'அத்துவான வெளி' மட்டும் இணையத்தில் கிடைக்கிறது. படித்துப் பாருங்கள்.
http://dystocia.weblogs.us/archives/84

பெரிய எதிர்பார்ப்புகள் இல்லாமல் படிக்கத்தொடங்குங்கள். ஏமாற்றத்தின் அழகியல் காட்டும் மாயக்கண்ணாடி உங்களுக்காக காத்திருக்கிறது மெளனியின் கதைகளில்.

மெளனியும் நானும்
-----------------------------
நான் முதன்முதலில் மெளனியைப் பற்றி அறிந்து கொண்டது கல்லூரி காலத்தில் ஆ.வி யில் வந்த எஸ்ராவின் ஒரு கட்டுரை மூலம்தான். பெயர் நினைவிலில்லை. ஆனால், மெளனியைப் பற்றி அவர் கொடுத்திரு்ந்த அறிமுகமே ஆச்சரியமூட்டுவதாக இருந்தது. 24 கதைகள் மட்டுமே எழுதிய ஒருவர் 'சிறுகதைகளின் திருமூலர்' என்று போற்றப்படுகிறார் என்றால் அவர் கதைகள் எப்படி இருக்கக்கூடும் என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தின. அதன் பின் மெளனியைப் பற்றித் தேடித் தேடி வாசிக்கத்தொடங்கினேன். மேலும் மேலும் மெளனியைப் பற்றி அறிந்து கொள்ள முடிந்ததே தவிர அவரின் தொகுப்பைப் பற்றியோ கிடைக்குமிடம் பற்றியோ எங்கும் தகவலில்லை.

ஏறக்குறைய 3 வருட காலம் இப்புத்தகத்தைத் தேடி அலைந்திருக்கிறேன்(றோம்). அந்த 'றோம்' க்கு சொந்தக்காரன் நண்பன் ரெஜோ. சென்னை, மதுரை, திருச்சி, கோவை, தஞ்சாவூர் என்று கடைகடையாக அலைந்திருக்கிறோம். கட்டக்கடைசியாக ரெஜோவிடமிருந்து கலர் காகிதத்தில் சுற்றப்பட்ட இன்ப அதிர்ச்சியாக என்னை வந்தடைந்தது இப்புத்தகம்.

இந்த இடத்தில் இன்னொரு விஷயத்தைச் சொல்லியே ஆக வேண்டும். மெளனியின் பிறந்த ஊரான தஞ்சையில் எந்தவொரு புத்தகக்கடையிலும் அப்படி ஒருத்தர் இருந்தார் என்பது கூட யாருக்கும் தெரியவில்லை.

முரசு புத்தக நிலையத்தில் மட்டும்,
"மெளனி கதையெல்லாம் இப்போ யார் சார் வாங்கறாங்க.. எல்லாம் பதிப்பிலிருந்தே போயிடுச்சு சார்.. வேணும்னா, ரயில்வே ஸ்டேஷன் பக்கம் போனீங்கனா, பழைய புத்தக கடையில் தேடிப்பாருங்க" என்றார்.

என்ன செய்து கொண்டிருக்கிறோம் நாம்?

ஒரு தலைமுறையின் அடையாளமாக சொல்லப்பட்ட, சொல்லப்படும் ஒரு எழுத்தாளரைப்பற்றி அடிப்படை அறிமுகம் கூட அடுத்த தலைமுறைக்கு கடத்தப்படுவதில்லையோ?

தவறு யாருடையது?

-Bee'morgan
(http://beemorgan.blogspot.com/)

7 comments:

கே.என்.சிவராமன் said...

அன்பின் சேரல்,

நண்பர் Bee'morgan நன்றாகவே மெளனி குறித்து எழுதியிருக்கிறார். உங்கள் தளத்தில் இப்படி நண்பரை எழுத வைத்திருப்பதை பார்க்க சந்தோஷமாக இருக்கிறது. தொடருங்கள்.

தோழமையுடன்
பைத்தியக்காரன்

அக்னி பார்வை said...

அருமை அருமை... நல்ல பதிவு உடனே வாங்கி படிக்க வேண்டும் என ஆவலை தூண்டிவிட்டீர்கள்

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

மௌனி ஒரு முக்கியமான எழுத்தாளர்தாம். அதே சமயம் அவரைப் பற்றிய விமர்சனங்களையும் நாம் கணக்கில் எடுத்துக் கொள்வது நல்லது. அ.மார்க்ஸ் ஒரு நீண்ட பிரதியியல் ஆய்வு செய்திருக்கிறார் - முடிந்தால் அதையும் படித்துப் பார்க்கவும்.

சேரலாதன் பாலசுப்பிரமணியன் said...

@பைத்தியக்காரன்,
மிக்க நன்றி

@அக்னிப்பார்வை
கருத்துக்கும், வருகைக்கும் நன்றி

@ஜ்யோவ்ராம் சுந்தர்,
வருகைக்கும், கருத்துக்கும் நன்றி

-ப்ரியமுடன்
சேரல்

Unknown said...

/--ஏறக்குறைய 3 வருட காலம் இப்புத்தகத்தைத் தேடி அலைந்திருக்கிறேன்(றோம்). --/

வருந்தப்பட வேண்டிய ஒன்று. நான் கூட கோணங்கியின் சிறுகதைகளைத் தேடித்தேடி இப்பொழுதுதான் வாங்க முடிந்தது.

Bee'morgan உங்களுடைய விமர்சன நடை அழகாக இருக்கிறது. தொடருங்கள்...

செல்வநாயகி said...

இப்புத்தகம் வலைப்பக்கம் அருமையான முயற்சி சேரல். சத்தமில்லாமல் நல்ல எழுத்துக்கான தவமாய்த் தொடர்கின்றன உங்கள் முயற்சிகள். மௌனி குறித்த இவ்விடுகைக்கு நன்றி உங்கள் நண்பருக்கும்.

சேரலாதன் பாலசுப்பிரமணியன் said...

நன்றி கிருஷ்ணபிரபு

நன்றி செல்வநாயகி

-ப்ரியமுடன்
சேரல்