Tuesday, July 04, 2006

11. THE OLD MAN AND HIS GOD

விமர்சனம் செய்பவர் நண்பர் ஞானசேகர். நன்றி!
------------------------------------------------------------
புத்தகம் : The Old Man and His God
ஆசிரியர் : சுதா மூர்த்தி (Infosys Founder நாராயண மூர்த்தி அவர்களின் மனைவி)
விலை : 150 ரூபாய்
------------------------------------------------------------
புத்தகத்தின் அட்டைப்படமும், Discovering the Spirit of India என்ற sub-titleலும், இந்தியாவின் மூன்றாம் பணக்காரரின் மனைவி சமுதாயத்தைப் பற்றி எழுதி இருக்கும் புத்தகம் என்பதாலும் இப்புத்தகத்தைப் படிக்கத் தூண்டப்பட்டேன்.











ஆசிரியரின் இளம்வயதில் இருந்து, இன்றைய நாள்வரை அவர் சந்தித்த பல வித்தியாசமான மனிதர்களைப் பற்றியும், அவர்கள் மூலம் ஆசிரியருக்கு ஏற்பட்ட அனுபவங்கள் பற்றியும் 25 சிறுகதைகளாக விளக்குவதே இப்புத்தகம்.

பெரும்பாலான கதைகளை நான் ஏற்கனவே அனுபவித்தும், கேள்விப்பட்டும் இருந்ததால், எனக்கு வித்தியாசமாய்த் தெரிந்தவை சில கதைகள் மட்டுமே. அவற்றில் சிலவற்றைப் பற்றி சொல்கிறேன்.

The Journey : நாராயண மூர்த்தி (ஆசிரியரின் கணவர்) கம்யூனிஸத்தின் மேல் நம்பிக்கை கண்டவராக ஒரு காலத்தில் இருந்தாரம். அவர் ஒரு கம்யூனிஸ நாட்டில் சுதந்திரமாகப் பேசியதற்காக சிறையில் வைக்கப்பட்டு, சில நாட்கள் உணவில்லாமல், இந்தியர் என்ற ஒரே காரணத்தினால் விடுதலை செய்யப்படுவார். கம்யூனிஸம் என்பது, வெளியில் இருந்து பார்ப்பவர்களுக்குத்தான் அற்புதமாகத் தெரியும்; வாழ்ந்து பார்த்தால் கஷ்டம் என்கிறார் ஆசிரியர்.

The Line of Separation : பாகிஸ்தானில் பிறந்த ஒரு பெண், பாரதப் பிரிவினையின் போது, சென்னையில் குடியேறுகிறாள். அவள் தனது பூர்வீக வீட்டைப் பார்ப்பதற்காக ராவல்பிண்டிக்குச் செல்லும்போது, ஆசிரியரும் உடன் செல்கிறார். சிமெண்ட் அச்சில் அவள் கால் பதித்திருந்த அந்த வீட்டின் அடித்தளத்தில், இப்போது ஒரு நட்சத்திர ஓட்டலை எதிர்கொள்ளப் போகும் ஒரு நிலையை அருமையாக் எழுதி இருந்தார் ஆசிரியர்.

India, the Holy Land : கர்நாடக மாநிலத்தின் ஒரு பகுதியில் நடக்கும் நிகழ்ச்சியையும், தனது திபெத் பயணத்தின் போது நடந்த ஒரு நிகழ்ச்சியையும் வைத்து, திபெத் நாட்டவர்கள் இந்தியர்களை எப்படி தெய்வமாக மதிக்கிறார்கள் என்பதை ஒரே நிகழ்வில் விளக்கி இருக்கிறார் ஆசிரியர்.

இவற்றைத் தவிர A tale of two brothers, Mother's love என்ற கதைகளும் எனக்கு மிகவும் பிடித்து இருந்தன.

மொழியை அழகுபடுத்தப்போய், உண்மையை ஒதுக்கிவைக்கும் வழக்கமான வார இதழ் கதைகள் போல் அல்லாமல், தனக்கு பெரிய விஷயங்களாகத் தெரிந்தவைகளை உள்ளது உள்ளபடி சொல்லி இருக்கிறார் ஆசிரியர். தாய்லாந்து பிரதமரின் IT ஆலோசகரின் மனைவி, தன்னை ஒரு பெரிய ஆளாகக் காட்டிக் கொள்ள விருப்பாதத் தன்மையைக் கண்டிப்பாகப் பாராட்டியே ஆக வேண்டும். பொதுவாக, பணக்காரர்கள் காலம் போன கடைசியில் சும்மா பொதுத்தொண்டு செய்கிறேன் பேர்வழி என்று சுயதம்பட்டம் அடித்துக் கொள்வதுண்டு. ஆனால், தான் செய்யும் தொண்டுகளையே விமர்சனம் செய்து இருக்கும் ஆசிரியரின், வார்த்தைகள் இல்லாத அந்த ஒரு நல்ல பண்பையும் பாராட்டியே ஆக வேண்டும்.

மொத்தத்தில் Discovering the Spirit of India என்று சொல்லி இருந்தாலும், இந்தியாவிற்கு வெளியே சொல்லப்பட்ட கதைகள்தான் என்னை மிகவும் பாதித்தன.

அடுத்ததாக, அலெக்ஸாண்டர் முதல் இன்றைய தேதி தேசிய அரசியல்வாதிகள் வரை பலபேரை கதாப்பாத்திரங்களாக்கி எழுதப்பட்ட ஒரு சர்ச்சைக்குறிய புத்தகத்துடன் வருகிறேன்.

-ஞானசேகர்

10. SHALIMAR THE CLOWN

விமர்சனம் செய்பவர் நண்பர் ஞானசேகர். நன்றி!
------------------------------------------------------------
புத்தகம் : Shalimar the clown
ஆசிரியர் : சென்னையை மணந்த மும்பைக்காரர் சல்மான் ருஷ்டி (Salman Rushdie)
மொழி : ஆங்கிலம்
விலை : ரூ.395/ல் இருந்து

-------------------------------------------------------------


















புத்தகத்தின் பெயரைப் பார்த்தவுடன், காஷ்மீரைப் பற்றிய கதை என்று சிலர் சற்றே யூகிக்கலாம். அதுவும் சரியே. இதைப் படித்துவிட்டு, புத்தகத்தை எவரேனும் படிக்க தூண்டப்பட்டால், சுவாரஸ்யம் குறைந்துவிடும் என்பதற்காக கதையை ஒரமாக ஒதுக்கி வைத்துவிட்டு, நான் ரசித்த கதைக்களத்தைப் பற்றி மட்டும் கொஞ்சம் சொல்கிறேன்.




















மொகலாய மன்னர் ஜஹாங்கீரால் காஷ்மீரில் அமைக்கப்பட்ட சாலிமார் (Shalimar) தோட்டத்தில் பிறந்த ஒரு கழைக்கூத்தாடியின் கதைதான் இப்புத்தகம். வாழ்க்கைத்துணை தனக்கு செய்த துரோகத்திற்காகப் பழிவாங்கும் சாதாரண கதைதான். முதல் நாற்பது பக்கங்கள் படித்து விட்டாலே, மீதி கதையின் போக்கை உங்களாலேயே யூகிக்க முடியும். கிட்டத்தட்ட ஜெனரல் டயரின் கதைமாதிரி என்று ஆசிரியரே சொல்கிறார்.

ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கும் பெயர் வைத்ததில் ஆசிரியர் பிரமிக்க வைக்கிறார். ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கும் 'அன்பே சிவம்' பாணியில் இரண்டு பெயர்கள். உதாரணமாக, ஒரு கதாபாத்திரத்தின் ஒரு பெயர் காஷ்மிரா, மற்றொரு பெயர் இந்தியா. ஓர் இடத்தில் அவளைப் பற்றி சொல்லும்போது, "இந்தியாவைப் போல் விரிந்த, துணையாக, அளவுக்கு அதிகமாக, குரூரமாக, அதிர்வாக, கும்பலாக, பழைமையாக, இரைச்சலாக, புராணமாக, எந்த வையிலும் மூன்றாவது உலகமாக இருக்க விரும்பாத அவள் காஷ்மீராவாகவே இருக்கிறாள்" என்கிறார் ஆசிரியர். இதற்குமேல் என்ன வேண்டும், இந்தியாவையும், காஷ்மீரையும் ஒப்பிட?

ஓரிடத்தில் வரும் உரையாடல் இது : "Freedom is not a tea party India, freedom is a war". இங்கு இந்தியா எனக் குறிப்பிடப்படுவது அப்பெண்ணின் கதாபாத்திரம். என்ன ஒரு வார்த்தை விளையாட்டு!
கதாப்பாத்திரங்களின் பின்னணியிலும் ஆசிரியர் என்னைப் பிரமிக்க வைத்துவிட்டார். தட்டச்சு கண்டுபிடித்த குட்டன்பர்க்கின் அச்சகத்தில் அவருடன் வேலை பார்த்த ஒருவரின் வழித்தோன்றல் ஒரு கதாபாத்திரம். அலெக்ஸாண்டர் இந்தியாவில் படையெடுத்தபோது, அவரின் படை காஷ்மீரில் செய்த சில்மிஷங்களின் வழித்தோன்றல் இன்னொரு கதாபாத்திரம். உச்சக்கட்ட பிரமிப்பு, இந்தியாவின் அமெரிக்கத் தூதராக வரும் அந்த ஒரு கதாப்பாத்திரம்தான். ராதாகிருஷ்ணன், வி.வி.கிரி, இந்திராகாந்தி போன்றவர்களுடன் அத்தூதர் பேசுவதாகக் காட்டப்படும் நிகழ்ச்சிகளும், வியட்நாம் போரைக் காரணம் காட்டி அவரைப் பதவியில் இருந்து அமெரிக்கா நீக்காமல் இருந்தது என்று சொல்வதில் இருந்தும், இப்படி ஒரு தூதர் உண்மையிலேயே இந்தியாவில் இருந்தாரா என என்னை கூகிளில் தேடவைத்துவிட்டன.

பழங்கால கற்பனை கதாபாத்திரமான மேலைநாட்டுக் கும்பகர்ணன் ரிப் வேன் விங்கிளையும், வரலாற்றின் தந்தை எனப் போற்றப்படும் ஹிப்போகிரேட்டஸையும், இன்னும் சிலரையும் ஆங்காங்கே உவமைகளாக அருமையாகக் கையாண்டு இருக்கிறார் ஆசிரியர். அலெக்ஸாண்டரின் படை கிரேக்க நாடு திரும்பி, "இந்தியர்களின் உயிரணுக்கள் கருப்பு நிறமுடையவை" என்று சொன்னார்களாம். ஒரு நிமிடம் இடைவெளி எடுத்துக்கொண்டு, அதை யோசித்துப் பாருங்கள். விளையாட்டு வினையாய்ப் போனது?

தொலைக்காட்சி அறிமுகமான ஒரு முஸ்லீம் கிராமத்தில் வரும் சண்டைகளும், தலிபான் பற்றிய சில நிகழ்ச்சிகளும், கதையின் முடிவின்மையும், உலகப் போர்கள்-வியட்நாம் போர்-இந்திய பாகிஸ்தான் போர் என பல போர்கள் கதை பயணிக்கக் காரணமாக அமைக்கப்பட்டு இருந்தாலும் காஷ்மீரும், சுவாரஸ்யமும் கொஞ்சம் குறைவே.

-ஞானசேகர்